கட்டை வண்டியோடு சமுதாயத்துக்கு இருந்த நெருக்கம் வேறு சாதனங்களில் இருக்காது.
வண்டி ஓடம் ஏறும், ஓடமும் வண்டி ஏறும் என்பார்கள். இரண்டுமே இப்போது இல்லை. மூன்றாவதான ஆறு சொல்லும் கதை வேறு. சில வீடுகளில் கட்டை வண்டி என்ற பார வண்டியோடு சேர்ந்தே காணப்பட்ட பொட்டுவண்டியும் இல்லை. காவிரிப் படுகையில் ஆறெல்லாம் காவிரிதான். ஆற்றின் கரையே சாலை. கரையில் நடக்கும் போக்குவரத்தை எங்கிருந்தாலும் காணலாம். நீர் ஓடும் நிதானத்தை நின்று ரசிக்கலாம். சீராகவே நகரும் வண்டி. பூட்டிய மாட்டின் பரபரப்பு அறியாத நடை. வானில் மாலையாகத் துவளும் மடையான் வரிசை. நழுவி இறங்கும் பொழுதின் அந்தி வண்ணம். எல்லாம் சலனமில்லாச் சலனத்தில் லயித்துக் கிடக்கும் மோனம். மோனத்தின் ஆழத்தைக் காட்ட பிறந்ததுபோல் ஆரக்காலின் ‘கடக்’… ‘கடக்’ ஓசை. காவிரிக் கரையில் கட்டை வண்டிப் பயணம்!
மோகனச் சித்திரம்
கிராமம் என்ற சித்திரச் சேலையில் கட்டை வண்டியும் பொட்டுவண்டியும் கெட்டிச்சாய இழைகள் அல்லவா! விழுது இறங்கிய ஆலமரத்தை வண்டி ஒன்று மாலையில் நெருங்கி வரும். வண்டியில் கட்டுக் கட்டாக நெற்கதிர். உச்சியில் ஒய்யாரமாக உழவர்குடிப் பெண். கை உயர்த்தி ஓட்டும் குடியானவர். வீடு திரும்பும் மாடுகளின் விரைந்த நடை. வண்டியின் குத்துக்கழியில் கவிழ்த்திருக்கும் கஞ்சிக்கலயம். பொங்கல் வாழ்த்து அட்டைகளில் மாதவன், கொண்டயராஜு போன்ற சித்திரக்காரர்களின் கைவண்ணம் இது! கல்கியின் நாவலான ‘கள்வனின் காதலி ’ கொள்ளிடக் கரையில் கூண்டுவண்டி குடைசாய்ந்ததை பரபரப்பாக விவரிக்கும். தன்னந்தனியாக ஒரு பெண் பொட்டுவண்டியில் பயணிப்பார். வழிமறித்து நிற்கும் திருடனின் இதயத்தை அந்தப் பெண்தான் திருடிக்கொள்வார். இப்படி ஒரு திரைப்படம். கிராமத்தை மோகனச் சித்திரமாகத் தீட்டிக் காட்டுபவர்கள் கட்டை வண்டியையும் பொட்டுவண்டியையும் விட்டுவிட முடியாது.
கட்டை வண்டியின் கலாச்சாரத் தடயம்
சில ஆண்டுகளுக்கு முன் தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையத்தில் பொட்டுவண்டியை அருங்காட்சிப் பொருளாகப் பார்த்தேன். கட்டை வண்டியையும் அங்கே வைத்திருக்கலாம் என்று தோன்றியது. நடுத்தர வர்க்கத்திலும், மேல்தட்டிலும் புழக்கத்தில் இருந்தவற்றை மட்டுமே கலாச்சார அடையாளமாக அங்கீகரிக்கும் கண்கள், அந்த மட்டத்துக்குக் கீழேயும் புழங்கிய கட்டை வண்டியைப் பார்க்கப் பழகவில்லை. தானே வடிவமைத்துப் புழங்கியவற்றுள் கட்டை வண்டியோடு சமுதாயத்துக்கு இருந்த நெருக்கம் வேறு சாதனங்களில் இருக்காது. கலாச்சாரத் தடயம் இதன் மேல் ஆழமாகவே பதிந்திருக்கும். முரட்டுக் காளைகளைச் சோடித்துப் பூட்டிய கட்டை வண்டியில் தஞ்சை அரச குடும்பத்தினர் பயணிப்பதாகச் சித்திரங்களைப் பார்த்திருக்கிறேன்.
கட்டை வண்டி ஒரு வளர்ச்சியடைந்த தொழில்நுட்பமாக இருக்க வேண்டும். பழைய கோயில் தேர்களில் மரமே அச்சாக இருக்கும். பெரும் மரத்தைப் பிளந்தவாறே இணைத்துப் பதுங்கலான சக்கரமாகச் செதுக்கியிருக்கும் தேர்க்கால்கள். கட்டை வண்டிக்கு இரும்பு அச்சு. மையத்திலிருக்கும் குடத்தோடு கோர்த்த ஆரங்கள். ஆரங்களின் மறு நுனியை வட்டாவில் இணைத்துச் சக்கரமாக்குவார்கள். இந்த அமைப்பை இறுக்கி ஒரு இரும்புக் கட்டு. அச்சுக்கும் குடத்துக்கும் இடையில் இரும்பாலான உள்ளாளி. இப்படிச் சிறு சிறு அங்கங்களாகச் செய்து நுணுக்கமாக இணைத்திருப்பார்கள். இதைச் செய்வதற்கு உள்ளூரிலேயே திறமையான ஆசாரி இருந்தார்.
சூழலின் வலைப் பின்னல்
எங்கள் மணி ஆசாரி ஆரக்கால் கோர்த்துவிட்டால், அந்த வட்டத்தின் செம்மையில் கணித ஆசிரியர்கூடக் குறை காண முடியாது. அச்சுத்திரட்ட, உள்ளாளி வைக்க, கட்டுப்போட என்று அங்கேயே கொல்லுப் பட்டறை. மாட்டுக் கழுத்துக்கு லேசாக இருக்க வேண்டும் என்று நுகத்தடியை நுணா மரத்தில் செய்வார்கள். முதிரை மரத்தில் குடம். ஆலமரத்தில் இருசுக்கட்டை. இருந்து ஓடாமல் மிதந்து ஓடுவதற்காக தேக்கு மரத்தில் ஆரக்கால். இப்படிச் சூழலே உருவாக்கும் கட்டை வண்டியில் மற்ற சாதனங்களில் நம்மை நெருடும் அந்நியம் தென்படாது. வண்டியில் பூட்டும் மாடுகளும் தலைமுறை தலைமுறையாக அந்தந்த வீடுகளிலேயேகூடப் பிறந்திருக்கும். எரு, நாற்று, நெல், வைக்கோல், மண், மணல் என்று பாரம் சுமந்து கிராமத்தின் சூழலில் தன்னைப் பின்னி வைத்திருந்தது இந்தக் கட்டை வண்டி. இந்த வலைப் பின்னல் குலைந்துபோனதே!
மேலக்கோடியின் திருச்சிப் பட்டறைகளிலிருந்து கீழக்கோடி ஊர்களுக்கு கோட்டக்கால் வண்டி கோர்த்து வரும். மூக்கனையில் இணைந்த கொய்யாக்கட்டையைப் பிடித்து வண்டியை நெஞ்சுக்கு நேராகக் கிடை மட்டத்தில் நிறுத்தினால் முன்னோ, பின்னோ சாயாமல், தராசு முனையாக அப்படியே நிற்கும். ஒற்றை விரலைக் கொண்டு வண்டியை இழுத்துவிடலாம். ஒரே ஆளாக நூறு மைல் கையில் பிடித்தவாறே வண்டியைத் தன்போக்கில் ஓடவிட்டு ஊருக்குக் கொண்டுவந்து சேர்ப்பார்கள்.
மாடுகளோடு வந்த உறவு
வீட்டுப் பசு ஈனும் காளைக் கன்றுக்கு ஒரு சலுகை உண்டு. பால் கறக்கும்போது பசுவின் மடியில் ஒரு காம்பைக் கறந்து மூன்று காம்புகளைக் கறக்காமல் கன்றுக்காக விட்டுவிடுவார்கள். கிடேரிக்கன்றுக்கு இரண்டு காம்புகளைத்தான் கறக்காமல் விடுவார்கள். பாலினப் பாகுபாடு பெண் குழந்தைகளுக்குத் தரும் உணவிலும் தெரியும். வளர்ந்த காளைக் கன்றுக்குச் சோடி சேர்த்து வண்டிக்குத் தயாராகும். விளையாட்டு ஆர்வத்தோடு புது மாடுகளை வண்டிக்குப் பழக்குவார்கள். பற்களை எண்ணி, தேய்மானத்தைப் பார்த்து காளைமாடுகளின் வயதைக் காணலாம். இரண்டு, நான்கு, ஆறு, கடைப்பல் ஒத்தது என்றும், முக்கால் பல், அரைப் பல் என்றும் வயது உண்டு. நாலு பல் கண்டுவிட்டால் பொட்டு வண்டியில் கட்டிப் பொதி மணலில் விரட்டிப் பழக்குவோம். புது மாடுகளை வண்டியில் கட்டி கடைத்தெருவுக்கோ, நெடுஞ்சாலைக்கோ ஓட்டினால் வெறித்துத் துள்ளும், அல்லது பயத்தில் உறைந்து நின்றுவிடும். நுகத்தடியைக் கழுத்தில் வைத்தாலே சில மாடுகள் சண்டித்தனம் செய்து படுத்துக்கொள்ளும். ஒன்றுக்கு ஒன்று விட்டோட்டமாக இருக்கும் மாடுகளைச் சோடி பிரித்துச் சேர்ப்பார்கள். ஒரே பக்கத்தில் கட்டிப் பழக்கிய மாடுகளை இடவலம் மாற்றிக் கட்டினால் அடியெடுத்து வைக்காது. சூட்டிப்பான மாடுகள் விரைவாகவே சோடுபிடித்து நடக்கப் பழகிவிடும்.
சுள்ளாப்பானது என்று உம்பளச்சேரி மாடுகளையே வண்டிக்கு வாங்குவார்கள். மயிலை நிறத்தில், நெற்றிப் பொட்டு, வெடுவால், வெள்ளைக் குளம்போடு இவை வெள்ளிச் செப்பாக வரும். வில்வண்டிக்காகவே மயிலாடுதுறை பகுதியில் மைசூர் மாடுகளை வைத்திருப்பார்கள். கயிறு போன்ற உடம்பும், கொம்புக் குப்பியும், கழுத்துச் சலங்கையுமாக இவை ஊரே நிரக்க நடக்கும்.
திருமண விருந்தாளிகளுக்கு வண்டி கட்ட வேண்டும். இந்த வண்டிகள் ஆற்றங்கரைச் சாலையில் பத்தி பிடித்து விரையும். அப்போது அக்கம் பக்கத்திலிருந்து ஐந்தாறு வண்டிகளை மாட்டோடு இரவல் வாங்கிக்கொள்வார்கள். போதாது என்றால் கட்டை வண்டிகளில் கூண்டு கட்டித் தயாரிப்பார்கள். நான் முந்தி, நீ முந்தி என்று விருந்தாளிகளைச் சுமந்து இரைக்க இரைக்க வீடு திரும்பும் மாடுகளைத் தட்டிக்கொடுத்து அவிழ்த்து விடுவார்கள். சக உழைப்பாளிகள் அல்லவா! வைக்கோலைச் சுருணையாகப் பிடித்து முள்ளந்தண்டு நெளிய நெளிய அத்தனை சோடிகளையும் தேய்த்துவிட்டு, தீனிவைத்து, தண்ணீர்காட்டிக் கொட்டிலில் கட்ட வேண்டும். கல்யாண வீடு பிறகு எப்படிக் களைகட்டியிருக்கும்?
காலம் விழுங்கிய கட்டை வண்டி
கல் வண்டியும், நெல்வண்டியும் இப்படியே பத்தி பிடித்துச் செல்லும். கூண்டுக்குள் ஏற்றிய வாழைத்தார்களோடு ஆடுதுறையிலிருந்து பத்தி பத்தியாக வண்டிகள் வரும். இரண்டு காளைகளுக்கும் இடையில் இருட்டைக் கலைக்க மருகிச் சிணுங்கிக்கொண்டு ஒரு லாந்தர். விட்டு விட்டுக் குலுங்கும் சலங்கை கோர்த்த கடையாணி. இந்தப் பத்தியையும் வெளி ஒன்றே தனக்குள் வாங்கி, கண்பார்த்திருக்கக் கரைத்துப் புள்ளியாக்கி மறைத்துக்கொண்டது. வெளியும் காலமும் ஒன்றுதானே! மண் சாலையின் உளையில் சிக்கிக்கொள்ளும் ஆரக்காலை எடுத்துவிட்டால் அது சாகசம். அறுத்தோடியில் இறங்கி ஏறும் ஆரக்கால் அடுத்துவரும் ஆச்சலில் சருக்கி நொறுங்கிவிட்டால் அதிலிருந்து மீள்வதும் சாகசம். காவிரிக் கரையின் கட்டை வண்டிப் பயணக் கிளர்ச்சியெல்லாம் இனி கதாபாத்திரங்களுக்காவது கிட்டுமா? அந்தக் கிளர்ச்சியைப் பகிர்ந்துகொள்ள நமது கற்பனையாவது துணைவருமா?
- தங்க. ஜெயராமன்,
ஆங்கிலப் பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர்,
தொடர்புக்கு: profjayaraman@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago