திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘காக்கா முட்டை’ படத்தில் சுவாரசியமான காட்சிகள் நிறைய உண்டு. சிறுவர்கள், மரத்திலிருக்கும் காக்காவின் கவனத்தைத் திசை திருப்பிவிட்டு, கூட்டிலிருந்து காக்கா முட்டைகளை எடுத்துக் குடிப்பதும் அவற்றில் ஒன்று. அடுத்தடுத்த காட்சிகளில் அவர்கள் காக்கா முட்டைகளைக் குடிப்பதற்காகத் திட்டு வாங்கும்போது அவர்களுக்கு வக்காலத்துக்கு வரும் பாட்டி, “கோழி முட்டை விக்குற விலையில வாங்கிக் குடிக்க முடியுமா, காக்கா முட்டை குடிச்சா என்ன; அதுவும் பறவைதானே?” என்பார். இந்தக் காட்சியைப் பார்த்த உடன் வந்த நண்பர் அதிர்ச்சியடைந்தார். “இது யதார்த்தமாக இல்லை. கோழி முட்டைகூட வாங்க முடியாத குடும்பங்கள் இருக்கின்றனவா என்ன? காக்கா முட்டை குடிப்பதை நியாயப்படுத்திக் காட்டுவதற்கு இதெல்லாம் ஒரு சாக்கு” என்றார். உண்மையில், மிக யதார்த்தமான காட்சிதான் அது. எளிய மக்களின் உணவுப் பண்பாட்டின் நியாயத்தை இயல்பாகப் பேசும் காட்சியும்கூட!
சென்னை வந்த பிறகுதான் முதன்முதலில் ஈசல் விற்பவர்களையும் அதை வாங்கிச் சாப்பிடுபவர்களையும் பார்த்தேன். சைதாப்பேட்டை சந்தை வாசலில் ஒரு வயதான ஆயா கூடையில் வைத்து விற்றுக்கொண்டிருப்பார். ஒரு பொட்டலம் பத்து ரூபாய். அரைப்படி அளவுக்கு இருக்கும். ஆரம்பத்தில் ஏதோ ருசிக்காக வாங்கிச் சாப்பிடுகிறார்கள் என்று நினைத்திருக்கிறேன். அப்புறம் ஒரு நாள் அந்த ஆயாவிடம் பேசிக்கொண்டிருந்தேன். “ஏம்பா, கோலா மீன்ல ஆரம்பிச்சு வஞ்சிரம், சுறா வரைக்கும் உள்ள வெச்சிருக்கான். அதுல எல்லாம் இல்லாத ருசியா இந்த ஈசல்ல இருக்கு? இல்லாதப்பட்டவன் கவுச்சியை மோந்துக்க இதெல்லாம் ஒரு வழிப்பா. அப்படியே பழக்கிக்கிறது” என்றார் அந்த ஆயா.
மாட்டிறைச்சி தொடர்பான விவாதம் ஒன்றிலும் இதே நியாயத்தைக் கேட்டிருக்கிறேன். பாஜக அரசு கொண்டுவந்த மாட்டிறைச்சித் தடைக்கு எதிராகக் கடுமையாக வாதிட்டுக்கொண்டிருந்தார் அந்த இளைஞர். நம்முடைய ஆதி வரலாறு, உணவுக் கலாச்சாரம், சைவ மேட்டிமைவாதம் என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தவர் ஒருகட்டத்தில் உடைந்துபோய் சொன்னார்: “யோவ், மாட்டுக்கறி ஒண்ணும் ஆட்டுக்கறியவிட ருசி கிடையாது. ஆனா, ஆட்டுக்கறி கிலோ ஐநூறு ரூபா விக்கிது. மாட்டுக்கறி இருநூறு ரூபா. ஆட்டுக்கறி வாங்க எங்கெ போறது? நீங்க வாங்கித் தர்றீங்களா?”
அதுவரை எல்லாவற்றுக்கும் பதில் வாதம் பேசிக்கொண்டிருந்த எதிர்த்தரப்பு அப்படியே மௌனமானது.
ஒரு சமூகத்தின் உணவுப் பழக்கம் பின்னாளில் உணவுக் கலாச்சாரமாக உருவெடுப்பது வேறு விஷயம். ஆனால், தேவையும் கிடைப்பதும்தான் எல்லா உணவுப் பழக்கங்களையும் தீர்மானிக்கின்றன.
இந்தியாவில் 43 லட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் இருப்பதாகச் சொல்கிறது 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு. உண்மையான எண்ணிக்கை இதுபோல 10 மடங்கு இருக்கலாம். எனினும், அரசு தரும் குறைந்தபட்ச எண்ணிக்கையேகூட, உலகில் அதிகமான குழந்தைத் தொழிலாளர்களைக் கொண்ட நாடு என்ற இடத்தைப் பெற இந்தியாவுக்குப் போதுமானதாக இருக்கிறது.
இந்தக் குழந்தைத் தொழிலாளர்கள் நாளெல்லாம் உழைப்பது பத்துக்கும் இருபதுக்கும்தான். உள்ளபடி டீக்கடைகளிலோ, மளிகைக் கடைகளிலோ வேலை பார்ப்பவர்கள் இவர்களில் பாக்கியசாலிகள். பெரும்பாலானவர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேலைக்குச் செல்பவர்கள். நாடோடிகள்போல அலைபவர்கள். தலைநகர் டெல்லியில் மட்டும் 3 லட்சம் பேர் குப்பை பொறுக்குகிறார்கள். இவர்களில் பெரும் பகுதியினர் குழந்தைகள்தான். இப்படிப்பட்டவர்களில் இருவரின் வாழ்க்கையைத்தான் சொல்கிறது ‘காக்கா முட்டை’. ரயில் தடங்களின் ஓரத்தில் சிதறிக் கிடக்கும் நிலக்கரித் துண்டுகளைப் பொறுக்கித் தந்து, ஒரு கிலோவுக்கு மூன்று ரூபாய் வாங்கிக்கொள்ளும் சிறுவர்களுக்கு மூணரை ரூபாய்க்கு விற்கும் கோழி முட்டை ஆடம்பர உணவாக இருப்பதில் ஆச்சரியம் என்ன?
ஒருகாலத்தில் வாரத்தில் ஒரு நாள் மட்டும் விசேஷமாக அசைவ உணவைச் சாப்பிடும் ஒரு முதல்வர் தமிழகத்தில் இருந்தார். அந்த விசேஷ உணவை அவர் ஆடம்பரமானதாகவும்கூட நினைத்தார். அப்படி அவர் ஆடம்பர உணவாகச் சாப்பிட்ட அந்த அசைவ உணவு கோழி முட்டை. காமராஜருக்குப் பிந்தைய இந்த நான்கு தசாப்தங்களில் அரசியல்வாதிகள் எவ்வளவோ உயரத்துக்குப் போயிருக்கலாம். ஏழை மக்களின் நிலையை அப்படிச் சொல்வதற்கு இல்லை.
இரு வாரங்களுக்கு முன்புதான் பூமியிலேயே அதிகமான ஊட்டக்குறைபாடு உள்ளவர்களைக் கொண்ட நாடு என்ற ‘பெருமை’யை இந்தியாவுக்கு அளித்திருக்கிறது ஐ.நா. சபையின் உணவு மற்றும் விவசாயப் பிரிவு வெளியிட்ட உணவுப் பாதுகாப்பு அறிக்கை. ஐ.நா. சபையின் புத்தாயிரமாண்டு இலக்கு, உலக உணவு மாநாடு இலக்கு இரண்டிலுமே இந்தியா தோல்வியடைந்துவிட்டது. இந்த அறிக்கையின்படி, இந்தியாவில் ஊட்டக்குறைபாடுள்ளவர்களின் எண்ணிக்கை 19.4 கோடி. அதாவது, உலகின் ஊட்டக்குறைபாடு உள்ளவர்களில் நால்வரில் ஒருவர் இந்தியர். உலகிலேயே அதிகமான ஊட்டக்குறைபாடுள்ள குழந்தைகளைக் கொண்ட நாடும் இதுதான். ஒவ்வொரு ஆண்டும் ஊட்டக்குறைவால் பாதிக்கப்பட்ட 13 லட்சம் குழந்தைகளை மரணத்துக்குப் பறிகொடுக்கிறோம். தவிர, ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் ஆகப் பெரும்பாலான மரணங்களுக்கான அடிப்படைக் காரணமும் ஊட்டக்குறைவுதான்.
சுதந்திரத்துக்குப் பின் 67 ஆண்டுகள் கழித்தும் ‘மக்களால், மக்களுக்காக, மக்களின் அரசு’ நடப்பதாகச் சொல்லப்படும் நாட்டில், இப்படியான நிலை நீடிப்பது அவலம் மட்டும் அல்ல; அத்தனை ஆட்சியாளர்களுக்குமே அசிங்கம். ஆனால், எப்போதுமே வக்கற்ற நாட்டின் ஆட்சியாளர்களிடம்தானே வியாக்கியானங்கள் அதிகம் ஒலிக்கும்? நாட்டிலேயே ஊட்டக்குறைவுள்ள குழந்தைகளை அதிகம் (52%) கொண்ட மாநிலமான மத்தியப் பிரதேசத்தின் கதை இது. ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையங்களில் முட்டை வழங்கும் திட்டத்துக்கு மத்தியப் பிரதேசத்தில் தடை விதித்திருக்கிறார் பாஜக முதல்வர் சிவராஜ் சௌகான். மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சரான மேனகா காந்தியும் இதற்கு ஒத்தூதியிருக்கிறார். “முட்டையிலுள்ள புரதச்சத்து தொடர்பாக மிகையாகப் பேசுகிறார்கள்; முட்டைக்குப் பதில் காய்கறிகளையே கொடுக்கலாம்” என்பது அவருடைய யோசனை. எல்லாம் சைவ மேட்டிமைவாதத்திலிருந்து பிறக்கும் வார்த்தைகள்.
ஒரு குழந்தைக்குப் பலவித காய்கறிகள் மூலம் கிடைக்கும் சரிவிகித சத்துகளை ஒரேயொரு முட்டையால் நிச்சயம் கொடுக்க முடியாது. ஆனால், குழந்தைகளுக்குத் தேவைப்படும் காய்கறிகளைக் கொடுக்கும் திராணி நம்முடைய அரசாங்கத்துக்கு இருக்கிறதா?
ஒரு 5 வயதுச் சிறுவன் இருக்க வேண்டிய சராசரி உயரம் 109.9 செ.மீ.; எடை 18.7 கிலோ. இந்த வயதில் அவனுடைய ஒரு நாள் புரதச்சத்து தேவை தோராயமாக 16 கிராம். ஒரு முட்டை வெறும் 6 கிராம் புரதச்சத்தையே கொண்டிருக்கிறது. சரி. ஆனால், நம்முடைய அங்கன்வாடிகள் / சத்துணவுக் கூடங்களில் அதிகம் பயன்படுத்தும் காய்கறிகளில் உள்ள புரதம் எவ்வளவு? 100 கிராம் காய்/கனிகளில் உள்ள புரதத்தின் அளவு இது: கேரட் - 0.93 கிராம். முட்டைகோஸ் - 1.44 கிராம், பீட்ரூட் - 1.61 கிராம், உருளைக்கிழங்கு - 1.81 கிராம், வாழைப்பழம் 1.1 கிராம்.
நம்முடைய அங்கன்வாடிகள் / சத்துணவுக்கூடங்களில் ஒரு மாணவருக்கான அரசின் அதிகபட்ச காய்கறி, மளிகை ஒதுக்கீடு எவ்வளவு தெரியுமா? பருப்பு 15 கிராம், மளிகைக்கு 36 பைசா, காய்கறிக்கு 80 பைசா. இதிலும் பருப்பு பயன்படுத்தப்படும் நாட்களில் காய்கறிக்கான ஒதுக்கீட்டில் 10 பைசா குறைந்துவிடும். ஒரு கிலோ 40 ரூபாய்க்குக் குறையாமல் காய்கறிகள் விற்கும் காலத்தில் இந்த 80 பைசா ஒதுக்கீட்டில் ஊழல் போக குழந்தைகளுக்கு எத்தனை காய்கறித் துண்டுகள் கிடைக்கும். அதில் எவ்வளவு புரதம் இருக்கும்? தன்னுடைய குழந்தைகளுக்காக மதிய உணவுத் திட்டத்தில் ஒரு குழந்தைக்கு ஒரு ரூபாய்கூடக் காய்கறிக்கு ஒதுக்க முடியாத அரசாங்கம் அவர்களுக்குக் கிடைக்கும் முட்டைக்கும் தடை விதித்துவிட்டு வேதாந்தம் பேசுவது எவ்வளவு அராஜகம்?
அவர்களால் இதையெல்லாம் புரிந்துகொள்ள முடியாது. இப்படியான அற்ப மத அரசியல் விளையாட்டு பல்லாயிரக் கணக்கான உயிர்களுடனான விளையாட்டு என்பதைக் கூட அவர்களால் உணர முடியாது. அவர்கள் அறிந்திருக்கும் சைவம் அப்படி. நொறுக்குத்தீனி நேரத்திலும்கூட -100 கிராம் எடையில் 20 கிராமுக்குக் குறைவில்லாத புரதத்தைக் கொண்ட பருப்புகளில் புரளுபவர்கள் அவர்கள். பாதாம்கள், பிஸ்தாக்களின் உலகம் வேறு. காக்கா முட்டைகள், கோழி முட்டைகளின் உலகம் வேறு!
- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago