பொருளாதார வளர்ச்சி வீதத்தை எப்படி உயர்த்துவது என்பது எப்போதுமே ஒரு மர்ம முடிச்சுதான்.
குடியரசுக் கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் தேர்தலில் களமிறங்க விரும்பும் ஜெப் புஷ் - அவரே அழைத்துக் கொள்வதைப் போல என்றால் ஜெப்! (புஷ் என்ற குடும்பப் பெயருக்குப் பதிலாக ‘!’ போதும் என்று முடிவு செய்திருக்கிறார்!) - அவருடைய கொள்கைகள் என்ன, இலக்குகள் என்ன என்று கோடி காட்டியிருக்கிறார். (ஜார்ஜ் புஷ் குடும்பத்திலிருந்து அதிபர் தேர்தலில் போட்டியிடும் மூன்றாவது நபர். இவருடைய அப்பா, அண்ணன் இருவரும் அமெரிக்க அதிபராக இருந்தவர்கள்.)
முதலாவதாக, அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி வீதத்தை இரட்டிப்பாக்கி 4% ஆக உயர்த்திவிடுவேன் என்று கூறியிருக்கிறார். இரண்டாவதாக, தீனியைக் குறைக்காமலும், உடற்பயிற்சி ஏதும் இல்லாமலும் யார் எந்த அளவுக்கு உடல் எடையைக் குறைக்க நினைத்தாலும் அதைச் சாதித்துக் காட்டுவேன் என்று கூறியிருக்கிறார் (சரி சரி - அவர் அப்படிச் சொல்லவில்லைதான், அவருடைய முதல் வாக்குறுதியைக் கேட்ட பிறகு, இப்படிக்கூட வாக்குறுதி தந்திருக்கலாமே என்று தோன்றியதால் சேர்த்துக்கொண்டேன்).
என்னைக் கேட்டால், பொருளாதார வளர்ச்சி வீதத்தை 4% ஆக உயர்த்துவேன் என்பது எந்த அளவுக்கு ‘உணர்ச்சிபூர்வமான’வாக்குறுதியோ அந்த அளவுக்குப் ‘பொறுப்பற்ற’ அறிவிப்புமாகும். ஜெப் கூறியது எப்படிப் பொறுப்பில்லாத வாக்குறுதியாகும் என்று விளக்குவதற்கு முன், பொருளாதாரம் தொடர்பாக எனக்குத் தெரிந்த சில ரகசியங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
நீண்ட காலப் பொருளாதார வளர்ச்சி வீதத்தை எப்படி உயர்த்துவது என்பது எப்போதுமே ஒரு மர்ம முடிச்சுதான். இதை எல்லாப் பொருளாதார அறிஞர்களுக்கும்தான் சொல்கிறேன், என்னையும் உட்பட. தற்காலிகமாகப் பொருளாதாரத் தொய்வு ஏற்பட்டால் அதை எப்படிப் போக்குவது என்று - அரசியல் தலைவர்கள் அந்த ஆலோசனை களைக் கேட்க மறுத்தாலும் - சொல்ல எங்களால் முடியும். முழு அளவுக்கு வேலைவாய்ப்பு ஏற்பட்ட நிலையில், அது மேலும் வளர்வது என்பது தொழிலாளர்கள் தரும் உற்பத்தியைப் பொருத்துதான் இருக்கிறது. அப்படியே நடக்க சில வாய்ப்புகள் இருந்தாலும், பொருளாதார வளர்ச்சியை இரட்டிப்பாக்க என்ன செய்ய வேண்டும் என்று சொல்ல ஆலோசகர்களுக்கு அப்போதும் இயலாது.
ஜெப் புஷ் பேசியது ஏன்?
அப்படியானால், மற்றவர்களுக்குத் தெரியாத பொருளாதார நிர்வாக ரகசியம் தனக்கு மட்டும் தெரியும் என்று எந்த நம்பிக்கையில் ஜெப் புஷ் பேசினார்? அவர் ஃப்ளோரிடா மாநில ஆளுநராகப் பதவி வகித்தபோது அந்த மாநிலம் பொருளாதார வளர்ச்சி கண்டது. அந்த வளர்ச்சி தன்னுடைய நிர்வாகத் திறமையால்தான் என்று இன்னமும் நம்புவதால் அதையே அமெரிக்கா முழுவதற்கும் விரிவுபடுத்திவிட முடியும் என்று ஜெப் புஷ் நினைக்கிறார். இதில் வேடிக்கை என்னவென்றால், ஜெப் புஷ் கவர்னராகப் பதவி வகித்த காலத்தில் ஃப்ளோரிடா மாநிலத்தில் வீடுகளைக் கடன் வாங்கிக் கட்டும் நடவடிக்கைகள் மும்முரமாக இருந்தன. அவருடைய பதவிக் காலத்துக்குப் பிறகு, அதனாலேயே பல வங்கிகள் நொடித்துப் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது. இந்த உண்மையை ஜெப் புஷ்ஷைத் தவிர, மற்றவர்கள் அறிவார்கள். தேசிய அளவில் ஏற்பட்டதைவிட அதிகப் பொருளாதாரச் சரிவு ஃப்ளோரிடாவுக்குத்தான் ஏற்பட்டது!
நாங்கள் ஆட்சிக்கு வந்தால்…
அப்படியானால், ஜெப் புஷ்ஷுக்குத் திறமையே கிடையாதா? ஏன் கிடையாது, ஃப்ளோரிடா பிரச்சினையில் மூழ்கத் தொடங்குவதற்கு முன்னால், பதவியைவிட்டு சாமர்த்தியமாக விலகினாரே, அந்தத் திறமைக்கு ஈடு ஏது? அவருடைய பொருளாதாரத் திறமையைவிட ‘தான்’, ‘எனது’, ‘என்னால்…’ என்று தன்னிலை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் தன்மைதான் பேச்சில் அதிகம் வெளிப்படுகிறது. “நாங்கள் ஆட்சிக்கு வந்தால்தான் பொருளாதாரம் வளர்ச்சி பெறும், அமெரிக்காவுக்கு மரியாதை ஏற்படும், உலக அரங்கில் முன்னிலை வகிப்போம்” என்றெல்லாம் குடியரசுக் கட்சியினர் பீற்றிக்கொள்ளும் பாணியும் அதில் கலந்திருக்கிறது. ஆனால், அவர்கள் பெருமைப்பட்டுக்கொள்ளும் வகையில் எப்போதும் நடந்ததில்லை. சராசரி உயரத்தைவிடக் குள்ளமான மனிதன், “நான்தான் உயரமானவன் 6 அடி 2 அங்குலம்” என்று கூறிக்கொண்டு குதித்து குதித்து நடப்பதைப் போலத்தான் இந்தப் பேச்சுகளும்.
அடுத்த முறை யாராவது இப்படி, “பொருளாதார வளர்ச்சி வீதத்தை 4% ஆக்குவேன்” என்றெல்லாம் பேசினால், சமீபத்தில் பதவி வகித்த ஐந்து அதிபர்களின் பெயர்களையும் அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சிவீதத்தையும் தெரிவியுங்கள்: பில் கிளிண்டன் - 3.7%; ரொனால்டு ரீகன் - 3.4%; பராக் ஒபாமா - 2.1%; ஜார்ஜ் எச். டபிள்யூ புஷ் - 2.0%; ஜார்ஜ் டபிள்யூ புஷ் - 1.6%.
இந்த எண்களுக்குப் பின்னால் இருப்பதை இவற்றிலிருந்து புரிந்துகொண்டுவிட முடியாது. ஆனால், குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் காலத்தில் பொருளாதாரச் சுணக்கத்தைப் போக்கும் மந்திரக்கோல் எதுவும் இருந்ததில்லை என்று நிரூபிக்க இது உதவும். ஜெப்பிடம் ஒரு கேள்வி, பொருளாதார வளர்ச்சியை 4% ஆக்கும் ரகசியம் உங்களுக்குத் தெரிந்திருந்தால் உங்களுடைய தகப்பனார் ஆட்சி செய்தபோது அவருக்குச் சொல்லிக்கொடுத்திருக்கலாமே?
கான்சாஸ் இன்னொரு உதாரணம்
அமெரிக்காவின் கான்சாஸ் மாநில உதாரணத்தைப் பார்ப்போம். பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்காக அந்த மாநில ஆளுநர் சாம் பிரவுன்பேக் பணக்காரர்கள், தொழிலதிபர்கள் மீதான வரிகளைக் கடுமையாகக் குறைத்தார். “இது எப்படி வேலை செய்கிறது என்று பார்ப்போம், இது நமக்கு நேரடியான பரிசோதனைக் களம்” என்று அறிவிப்பும் வெளியிட்டார். அந்தச் சோதனையின் முடிவுகள் இவைதான்: எதிர்பார்த்தபடி பொருளாதாரம் பொங்கவில்லை; அரசுக்கு வரி வருவாய் குறைந்து; பற்றாக்குறை அதிகமானது. பள்ளிக்கூடங்களுக்கும், மக்கள் பயன்பாட்டுக்குமான ஒதுக்கீட்டை அதன் பிறகு பெருமளவுக்கு வெட்டியும் பற்றாக்குறை குறையவில்லை. பிறகு, மறுபடியும் வரிகளை - அதுவும் மறைமுக வரிகளை - உயர்த்த வேண்டியதாயிற்று. வரிச் சுமை முழுக்கக் குறைந்த வருவாய்ப் பிரிவினர் தலைமீதுதான் விழுந்தது.
பொருளாதார வளர்ச்சியா… ஓகே!
இவ்வளவு அனுபவப்பட்டும் பொருளாதார வளர்ச்சி குறித்துத் தம்பட்டம் அடிப்பானேன்? இப்படிச் சொன்னால்தான் பணக்காரர்கள், தொழிலதிபர்கள் மீதான வரியைக் குறைக்க முடியும். பணக்காரர்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் வரிக் குறைப்பும் வரிச் சலுகையும் நேரடியாக அளித்தால், அது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தும். பொருளாதார வளர்ச்சிக்காக என்று சொல்லிவிட்டால், பல்லைக் கடித்துக் கொண்டு சகித்துக்கொள்வார்கள். சரி, அரசுக்கு வருவாய் குறைந்தால் என்ன செய்வது? இருக்கவே இருக்கிறது ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினருக்குப் பயன்படக்கூடிய திட்டங்கள் - அவற்றுக்கான ஒதுக்கீட்டைக் குறைத்தால் போதும். எப்போதுமே பணக்காரர்கள், தொழிலதிபர்கள் மீதான வரிகளைக் குறைப்பதுதான் வலதுசாரிகளின் பொருளாதார வளர்ச்சி உத்தி! அதன் மூலம் அதிசயம் நிகழ்ந்து, பொருளாதாரம் வேகம் பிடித்து, அந்த வளர்ச்சியின் பலன் எல்லோருடைய தலையிலும் மழையாகப் பொழியும் என்று நம்பவைப்பார்கள்.
ஒரு தேசத்தின் தேர்தல் அறிக்கையிலேயே யாராவது இப்படி அப்பட்டமாக, தங்களுடைய சமூகத்துக்கு மட்டுமே பயன்படக்கூடிய திட்டங்களை அறிவிப்பார்களா, நம்ப முடியவில்லையே, என்ன மாதிரியான விஷமம் இது என்று கேட்கிறீர்களா? 1980-களில் ஜார்ஜ் புஷ், ரீகனுக்கு எதிராகக் குடியரசுக் கட்சியின் அதிபர் பதவிக்கான வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்படும் போட்டியில் அறிவித்தார், ‘மாயமந்திரப் பொருளாதாரக் கொள்கை’ என்னிடம் இருக்கிறது என்று. புஷ்ஷின் மகனைப் பற்றிக் குறிப்பிடும்போது மிதவாதி, நியாயவான், நல்ல புத்திசாலி என்பார்கள். அவரே இப்போது மாயமந்திரப் பொருளாதாரக் கொள்கையைப் பற்றிப் பேசுகிறார் - இது நல்லதற்கல்ல!
© ‘தி நியூயார்க் டைம்ஸ்’ தமிழில்: சாரி
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 hour ago
கருத்துப் பேழை
1 hour ago
கருத்துப் பேழை
1 hour ago
கருத்துப் பேழை
2 hours ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago