கேள்விக்கென்ன பதில், வாட்சன்?

By இரா.முருகன்

செயற்கை அறிவு மேன்மைப்படும்போது, கணினிகள் மனிதர்களை விட அறிவில் சிறந்திருக்கும்!

போன நூற்றாண்டில் அசுரப் பாய்ச்சலில் முன்னேறிய கணினித் தொழில்நுட்பம், கம்ப்யூட்டர்களைக் கணக்குப் போட வைத்தது. தொலைபேசிக்கான மாதாந்திரக் கட்டணத்தைச் செலுத்தவும், ரயில் பயணச் சீட்டு வாங்கவும் என அன்றாட வாழ்க்கை இதனால் சற்றே எளிதானது. செயற்கைக் கோள்களை வானத்தில் ஏவுவது, ‘கடவுள் துகள்’ எனும் அணுத் திரள் ஆய்வு போன்ற அறிவியல் தேடலுக்கும் கணினியைச் சிறப்பாகப் பயன்படுத்த இது வழி செய்தது.

ஆதியில் ஈனியாக் கம்ப்யூட்டர் உருவானதிலிருந்து நிலவும் நடைமுறை என்ன? தேவையான பணிக்கான நிரலி (புரொகிராம்) எழுதி கணினி அமைப்பில் இட்டு அதன்படி கம்ப்யூட்டரை இயக்குவதுதான். கம்ப்யூட்டரே தன்னை இயக்க வடிவமைத்துக்கொள்வது எப்படி? கேள்வி பிறந்தது அன்று. செயற்கை அறிவு என்ற பதிலும் அப்போதே கிடைத்துவிட்டது.

கம்ப்யூட்டரில் மேதைமை அமைப்பு

காரண காரியங்களைப் பற்றிய பகுத்தறிவு, பட்டறிவு, திட்டமிட்டுச் செயல்படுவது, பேச்சு மொழியைப் புரிந்துகொண்டு மற்றவர்களோடு தொடர்புகொள்வது இவையெல்லாம் அறிவுத் திறனின் அடிப்படையான காரணிகள். இயல்பாக நமக்கு ஏற்படும் அறிவைக் கணினியும் பெற்றுத் தன்னைச் சுற்றி நடப்பதைக் கவனித்து சுயமாகச் செயல்படுவதே செயற்கை அறிவின் அடிப்படை என்று சொல்லலாம். செயற்கை அறிவு மேன்மைப் படும்போது, கணினிகள் மனிதர்களை விட அறிவில் சிறந்திருக்க வாய்ப்பு உண்டு.

செயற்கை அறிவுத் தேடல் 30 வருடங்களுக்கு முன், மேதைமை அமைப்புகளை (Expert Systems) வடிவமைப் பதில் தொடங்கியது. இந்த அமைப்புகளில் ஏதாவது ஒரு துறை சார்ந்த தகவல் இருக்கும். அதோடு கூட, இருக்கும் தகவலையும் நிலவும் சூழ்நிலையையும் பொருத்திப் பார்த்து என்ன முடிவு எடுக்கப்பட வேண்டும் என்று சொல்லும் ஆற்றலும் மேதைமை அமைப்புக்கு உண்டு.

உதாரணமாக, விவசாயம் பற்றிய மேதைமை அமைப்பில் மண் வகை, பயிர் வகை, உரங்கள், சாகுபடியைப் பாதிக்கும் பூச்சிகள், நோய்கள் என்று வேளாண்மை சார்ந்த தகவல் இருக்கும். நெற்பயிர் நாற்றங்காலில் பூச்சித் தாக்குதல் ஏற்பட்டால், தகவலைக் கணினியில் பதிந்ததும், எந்த பூச்சிக்கொல்லியை, எவ்வளவு வீரியமுள்ளதாக, எப்படிப் பயன்படுத்தி பூச்சிகளை ஒழிக்கலாம் என்று மேதைமை அமைப்பு கூறும். அதோடு, இந்தப் பிரதேசத்தில், இந்தக் காலத்தில், இந்தப் பயிரில் பூச்சித் தாக்குதல் ஏற்பட்டால் சமாளிக்கும் முறை என்று பட்டறிவு மூலம் பெற்ற புதிய தகவலையும் அறிவுப் பரப்பில் சேர்த்துக்கொள்ளும். பிறகு, எப்போது தேவை ஏற்பட்டாலும், தேர்ந்த விவசாயி போல் இந்த அனுபவம் பேசும்.

கேஸ்பரோவை வென்ற ‘டீப் ப்ளூ’

மேதைமை அமைப்புகளுக்கு அடுத்த படி, மனிதர்களோடு ஊடாடுவதே. முக்கியமாக, சதுரங்கம் போன்ற மூளைக்கு வேலை தரும் விளையாட்டுகளில் கணினி அமைப்பு பங்கு பெறுவதே இது. இதற்காக 1977-ல் ஐ.பி.எம். நிறுவனம் ஏற்படுத்திய டீப் ப்ளூ என்ற கணினி அப்போதைய உலக சதுரங்க வெற்றி வீரர் கேரி கேஸ்பரோவை ஒரு பந்தயத்தில் தோற்கடித்தது. பகுத்தறிவதிலும், காய் நகர்த்துவதிலும் டீப் ப்ளூவை மேலும் வல்லமையுள்ளதாக்கி, அடுத்த வருடம் காஸ்பரோவை மறு பந்தயத்துக்கு அழைத்தார்கள். அதிலும் அவர் தோற்றார். இன்னொரு முறை விளையாடலாம் என்றார் காஸ்பரோ. கமுக்கமாக, டீப் ப்ளூ கம்ப்யூட்டருக்கு ஓய்வு கொடுத்து ஓரமாகக் கிடத்திவிட்டது ஐ.பி.எம்.

காஸ்பரோ விவகாரத்தில் இப்படி முன்னே பின்னே என்றாலும், செயற்கை அறிவு ஆராய்ச்சியில் ஐ.பி.எம். முன் வைத்த காலைப் பின் வைக்கவே இல்லை.

மகத்தான கணினி வாட்சன்

ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஐ.பி.எம். ஆய்வுக் கூடத்தில் உருவாக்கப்பட்ட செயற்கை அறிவு செறிந்த ‘மகத்தான கணினி’க்கு (சூப்பர் கம்ப்யூட்டர்) வாட்சன் என்று பெயர். ஐ.பி.எம். நிறுவனத்தின் முதல் தலைவரான ஜேம்ஸ் வாட்சன் நினைவைப் போற்றும் வகையில் சூட்டப்பட்ட பெயர் இது.

சூப்பர் கம்ப்யூட்டராக விளம்பரப் படுத்தாமல், ‘கேள்விகளுக்கு மறுமொழி தரும் அமைப்பு’ என்று வாட்சன் அறிமுகப்படுத்தப்பட்டது. 2011-ல் அமெரிக்கத் தொலைக்காட்சி வினா-விடை நிகழ்ச்சியான ‘ஜியோபார்டி’யில் பங்குபெற வாட்சனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

சற்று யோசித்தால், கேள்விக்குப் பதில் சொல்வது என்பது அத்தனை எளிய செயல் இல்லை என்பது புலனாகும். போட்டியாளர் மனிதராக இருக்கும்பட்சத்தில் அவருக்கு விடை தெரிந்திருந்தால் போதும். புரிதல் இயல்பாக நிகழும். ஆனால், சூப்பர் கம்ப்யூட்டர் வாட்சனுக்கு முதலில் மொழி புரிய வேண்டும். அடுத்து கேட்கும் விதம். ஒரு கேள்வியை ஒன்றுக்கு மேற்பட்ட வடிவில் கேட்க வாய்ப்பு உண்டு. எல்லாம் ஒரே விடையைத்தான் எதிர்பார்க்கின்றன என்ற அறிவு வேண்டும். பிறகு, அதற்கான மறுமொழியைத் தகவல் பரப்பில் தேடுவது. வினா-விடை நிகழ்ச்சியில் விடையாக மூன்று அல்லது நான்கு துப்புகளைக் கொடுத்து, அதில் சரியானது எது என்று தேர்ந்தெடுக்கச் சொல்வது வழக்கம்தானே. ஆக, கேள்வியைப் புரிந்துகொள்வது மட்டுமில்லை, இந்த நான்கு விடைகளையும் கூட அதேபடி ஆய்வு செய்து சரியானதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மணி ஒலித்ததும், சில நொடிகளுக்குள் விடை சொல்லியாக வேண்டும்.

வாட்சனை எப்படிப் போட்டிக்கு ஆயத்தமாக்கினார்கள்?

இது பெருந் தரவின் (Big Data) காலம். கலை, இலக்கியம், அறிவியல், மருத்துவம், அரசியல், மனிதர்கள் என மலை மலையாகத் தகவல் இங்கே உண்டு. முறையாக வடிவமைக்கப்பட்டும், அல்லாமலும் உள்ள இப்படியான தகவலில் ஒரு பகுதி கிட்டத்தட்ட 200 கோடிப் பக்கங்கள் உள்ள புத்தகமாக வாட்சனுக்குப் புகட்டப்பட்டது. 100-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப உத்திகள் மூலம் மொழி புரிதல், கேள்வியைச் சரியாகப் பொருள் உணர்தல், பதில்களாக வரும் துப்புகளை அலசி ஆராய்ந்து, பெருந் தரவோடு பொருத்திச் சரியானதைச் சில விநாடிகளில் அறிவிப்பது ஆகிய திறமைகள் போதிக்கப்பட்டன. ஒரு விநாடியில் 10 லட்சம் பக்கங்களில் விடை தேடும் திறமையும் இதில் அடக்கம்.

‘வாட்ச’னின் வெற்றி

இதற்கு முன் வெற்றி பெற்ற இருவரோடு, ஜியாபார்டி வினா-விடை நிகழ்ச்சியில் மோதி வாட்சன் வெற்றியடைந்தது. ஒரு மில்லியன் டாலர் பரிசு பெற்ற முதல் கணினி வாட்சன்தான்.

சிறப்பாகச் செயல்பட்டாலும், வாட்சனில் சில குறைகளை ஐ.பி.எம். பொறியாளார்கள் கண்டுபிடித்தார்கள். நீளமான கேள்விகளை எளிதில் புரிந்துகொள்ளும் சூப்பர் கம்ப்யூட்டர், நறுக்கென்று ஒரு சில சொற்கள் மட்டும் கொண்ட கேள்விகளை எதிர்கொள்ளச் சிரமப்பட்டது.

வாட்சன் தற்போது அமெரிக்காவில், ஸ்லோன் கேடரிங் நினைவு புற்றுநோய் மைய மருத்துவமனைகளில் ஒவ்வொரு நுரையீரல் புற்றுநோய் நோயாளிக்கும் அளிக்க வேண்டிய தனிப்பட்ட மருத்துவப் பணிவிடை பற்றி ஆலோசனை வழங்கி வருகிறது. இதற்காக மருத்துவமும், புற்றுநோய் சிகிச்சை பற்றிய சிறப்பு அறிவும் வாட்சனுக்குப் புகப்பட்டுள்ளன.

குரல் வளத்தால் பிரபலமான நடிகர் ஜெஃப் உட்மனின் குரலில் வாட்சன் பேசுகிறது. இதன் தமிழ்ப் பதிப்பு வெளியாகும்போது, எந்திரன் ரஜினியின் குரலிலும் வரும் என்று எதிர்பார்க்கலாம்.

- இரா.முருகன்,

‘விஸ்வரூபம்’ உள்ளிட்ட நாவல்களின் ஆசிரியர்.

தொடர்புக்கு: eramurukan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்