பசுமை வல்லரசாகிறது ஜெர்மனி

By தாமஸ் எல்.ஃப்ரைட்மேன்

புதுப்பிக்கவல்ல மின்சக்தியைப் பொறுத்தவரை ஜெர்மனிதான் இன்றைய நம்பிக்கை!

பெர்லினில் உள்ள அமெரிக்க அகாடமியில் நான் கழித்த ஒரு வாரம் எனக்கு இரண்டு நேரெதிரான உணர்வுகளை ஏற்படுத்தியது: முதலாவது, இன்றைய ஜெர்மனிக்கு சமாதானத்துக்கான நோபல் விருது வழங்கப்பட வேண்டும். இரண்டாவது, இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய சமாதான நிலைப்பாட்டிலிருந்து ஜெர்மனி மீண்டுவந்து, இன்னும் தீவிரமாகச் செயல்படக்கூடிய உலக சக்தியாக மாற வேண்டும். இரண்டையுமே நான் பாராட்டாகத்தான் சொல்கிறேன்.

முதல் விஷயத்தைப் பொறுத்தவரை ஜெர்மானியர்கள் தங்களின் மின்உற்பத்தியில் 30 சதவீதத்தைப் புதுப்பிக்கத்தக்க சக்தியாக மாற்றியிருக்கிறார்கள். 0% என்ற நிலையிலிருந்து கடந்த 15 ஆண்டுகளில் இந்த நிலையை அடைந்திருப்பது நமது பூமி, அதன் பருவநிலை ஆகியவற்றின் பாதுகாப்புக்குப் பெரும் பங்களிப்பு. ஜெர்மனின் எரிசக்தித் துறையின் இலக்கே ‘மாசற்ற எரிசக்திக்கான விலை’ என்பதுதான். இதன் அடிப்படையில் ஜெர்மானியர்கள் சூரிய சக்தி அல்லது காற்று மின்சக்தி சாதனங்களை மிக எளிதாகத் தங்கள் வீட்டில் நிறுவி, அவர்கள் தயாரிக்கும் மின்சாரத்துக்குத் தகுந்தபடி அதிக விலையை அவர்கள் பெறுவார்கள்.

இந்த முறையில் ஆரம்ப காலத்தில் மிகவும் செலவு பிடித்தது என்பது மறுப்பதற்கில்லை. அதற்கான மானியங்கள் கோடிக் கணக்கான யூரோக்களைத் தொட்டன. எல்லோருடைய மின்கட்டணத்தின் மூலமும் இந்த மானியம் சரிசெய்யப்பட்டது. புதுப்பிக்கத் தக்க மின்சக்தியை அதிக அளவில் உருவாக்குவது மட்டுமே அதன் இலக்கு அல்ல; இந்த வகையில் அதிக அளவில் உற்பத்தி செய்து இந்த உற்பத்தி முறைகளை மையநீரோட்டமாக மாற்றுவதன் மூலம் உற்பத்தி செலவைக் குறைப்பதும் எல்லோருக்கும் கட்டுப்படியாகக் கூடியதாக இவற்றை மாற்றுவதும்தான் அடிப்படை நோக்கம்.

தற்போது, சூரிய மின்சக்தியின் கட்டணம் 80% அளவுக்குக் குறைந்திருப்பதாலும், காற்று மின்சக்தி 55% அளவுக்குக் குறைந்திருப்பதாலும் எரிபொருள் கொண்டு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்துடன் போட்டியிடும் நிலைக்குக் கரிமமில்லா மின்சக்தி இப்போது வந்திருக்கிறது.

வருமானத்துக்கான புதிய வாசல்

“சீன சூரிய மின்தகடு தொழில்துறைக்கு ஏற்றம் கொடுத்திருப்பதைத்தான் ஜெர்மனியின் மின்சக்தியில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் பெரும் வெற்றி என்று சொல்வேன்” என்கிறார் ரால்ஃப் ஃபூக்ஸ். ஜெர்மனி பசுமைக் கட்சியைச் சேர்ந்தவர் இவர். “பேரளவிலான சந்தையை நாங்கள் உருவாக்கினோம். அதனால், உற்பத்தி அதிகரித்ததோடல்லாமல் செலவும் பெருமளவு குறைந்திருக்கிறது” என்கிறார் அவர்.

உலகைக் காப்பாற்றும் முயற்சியாகத்தான் இந்த சாதனையை நாம் கருத வேண்டும். விலை குறைந்தவுடன் சாதனங்களை நிறுவுவதற்கான மானியங்களும் குறைந்திருக்கின்றன. சூரிய மின்சக்தி சாதனங்களைத் தங்கள் வீடுகளில் பொருத்தியிருக்கும் ஜெர்மானியர்களுக்கு அவற்றால் இப்போது வருமானமும் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. அதனால்தான், நிலக்கரி கிடைக்கும் பிரதேசங்களைத் தவிர, மற்ற பகுதிகளில் இந்தத் திட்டத்துக்கு இவ்வளவு வரவேற்பு கிடைத்திருக்கிறது.

ஜெர்மனியில் இன்று, 14 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளும், கூட்டுறவு அமைப்புகளும் தங்கள் கட்டிடங்களிலேயே தங்களுக்குத் தேவையான சூரிய / காற்று மின்சக்தியை உற்பத்தி செய்துகொண்டிருக்கின்றன. “கிட்டத்தட்ட 1,000 மின்சக்திக் கூட்டுறவு அமைப்புகள் தனியாரால் தற்போது நடத்தப்படுகின்றன” என்கிறார் ஆற்றல் துறைப் பொருளியல் நிபுணர் கிளாடியா கெம்ஃபெர்ட்.

பசுமைக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவின் துணைத் தலைவர் ஒலிவியர் கிரிஷர் என்னிடம் இப்படிச் சொன்னார்: “என்னுடைய நண்பர் ஒருவர் தினமும் வீடு திரும்பும்போது வெயில் இல்லையென்றால், எனக்கு ‘ஹலோ’ கூடச் சொல்ல மாட்டார். நேராக அவர் வீட்டின் கீழ்த்தளத்துக்குச் சென்று மீட்டரைப் பார்த்து, அன்றைய தினத்தில் எவ்வளவு மின்சாரத்தைத் தான் தயாரித்திருக்கிறேன் என்பதை அவர் தெரிந்துகொண்டுதான் மறுவேலை. சொந்தமாகவே நீங்கள் உங்களுடைய மின்சாரத்தை உற்பத்திசெய்துகொள்ள முடியும் என்பதுதான் இதன் தாத்பரியமே. புதுவிதமான முன்னேற்றமில்லையா இது!” இதன் காரணமாக ஜெர்மனியின் நிலக்கரி உற்பத்தி/ அணுமின் உற்பத்தி நிறுவனங்களில் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. அவற்றில் ஒரு நிறுவனமான ‘ஈ.ஆன்’ தற்போது இரண்டாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.

நிலக்கரி, எண்ணெய், எரிவாயு, அணுசக்தி ஆகியவற்றிலிருந்து கிடைக்கக் கூடிய கடைசிக் கட்ட லாபத்தைப் பிழிந்தெடுப்பதற்கான ஒரு நிறுவனமாகவும், புதுப்பிக்கவல்ல எரிசக்தியின் மீது கவனம் செலுத்துவதற்கான ஒரு நிறுவனமாகவும் அது பிரிக்கப்பட்டிருக்கிறது. ஜெர்மானியர்கள், “ஈ.ஆஃப்’, ‘ஈ.ஆன்’ என்று அந்த நிறுவனங்களைக் கிண்டலடிக்கிறார்கள்.

ஜெர்மனியில் மலிவான, அசுத்தமான பழுப்பு நிலக்கரி டன் கணக்கில் இன்னும் இருக்கிறது. சூரிய/ காற்று மின்சக்தியில் ஏதேனும் தட்டுப்பாடு ஏற்பட்டால், மாற்று ஏற்பாடாக அது பயன்படுத்தப்படுகிறது. தூய்மையான இயற்கை எரிவாயு மிகவும் செலவு பிடிப்பது என்பதாலும் அணுசக்தி கொஞ்சம் கொஞ்சமாக விலக்கிக்கொள்ளப்படுவதாலும் இந்த நிலை. இதுதான் இப்போதைக்கு இருக்கும் பிரச்சினை.

தேச சக்தியின் நிலை

புதுப்பிக்கவல்ல ஆற்றலின் கதை இப்படியென்றால், தேச சக்தியின் நிலை எப்படி இருக்கிறது? இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான இரண்டு தலைமுறைகளுக்குப் பிறகு, தனது எல்லையைத் தாண்டி எந்த அதிகாரத்தையும் செலுத்துவதில் ஜெர்மனிக்குள்ள தயக்கம் அதன் அரசியல் மனநிலையில் ஆழமாகப் பதிந்திருப்பது. ஜெர்மனியின் கடந்த கால வரலாற்றை வைத்துப் பார்க்கும்போது அது நல்ல விஷயம்தான். ஆனால், அதை வைத்துக்கொண்டு தனது நிலையைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள முடியாது.

ஜெர்மனிக்கு இன்று கூடுதல் வலு சேர்ந்திருக்கிறது. அதன் ஆட்சி நிர்வாகத் திறன், சட்டத்தின் ஆட்சியைத் திறம்பட நடத்துவது, நடுத்தர அளவு தொழில்களால் உருவான அதன் பொருளாதார வல்லமை போன்றவற்றால்தான் ஜெர்மனிக்கு இந்த சிறப்பியல்புகள் கிடைத்திருக்கின்றன. ஐரோப்பிய நாடுகள் எதற்கும் இல்லாத தனித்துவம் இது.

ஐரோப்பா மீது அமெரிக்காவுக்கு அவ்வளவாக ஆர்வம் இல்லை. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்தும் உலகளாவிய ராணுவ சக்தி என்ற நிலையின் கடைசி எச்சங்களிலிருந்தும் பிரிட்டன் கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்கிச் செல்கிறது. பிரான்ஸும் இத்தாலியும் பொருளாதாரத்தில் தள்ளாடிக்கொண்டிருக்கின்றன. நேட்டோ உறுப்பினர்கள் பலர் தங்கள் நாடுகளின் ராணுவங்களுக்கான செலவைக் குறைத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், இன்னும் அதிக அளவிலான தலைமைப் பொறுப்பை ஜெர்மனி ஏன் தவிர்த்துக்கொண்டிருக்கிறது என்பது எனக்குப் புரியவில்லை.

உக்ரைன் மீதான ரஷ்ய ஊடுருவலுக்கு எதிரான முக்கியமான நடவடிக்கையாக ஜெர்மனியின் பொருளாதாரத் தடை அமைந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மத்தியத் தரைக்கடல் பிரதேசத்தில் அகதிகளின் வருகை வெள்ளம்போல் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இதற்கு ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து தகுந்த கடல் வழி நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு ஜெர்மனி வினையூக்கியாகச் செயல்பட வேண்டும்.

ஐரோப்பாவின் மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது ஜெர்மனியின் பலம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஆனால், இதையெல்லாம் வெளியில் சொல்ல முடியாது. ஜெர்மனியின் வெளியுறவுத் துறை அதிகாரி ஒருவர் இந்தப் பிரச்சினையை இப்படி முன்வைத்தார்: “பெரிய அளவில் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டிய நிலைக்கு நாங்கள் வந்திருக்கிறோம். அதே நேரத்தில் ஜெர்மனியின் தலைமையை ஏற்பதில் மற்ற நாடுகள் எந்த அளவுக்குத் தயக்கம் காட்டுகின்றன என்பதையும் நாங்கள் அறிந்திருக்கிறோம் - எனவே, இதை ஐரோப்பிய ஒன்றியத்தின் வழியாகத்தான் நாங்கள் நிறைவேற்றிக்கொள்ள வேண்டும்.”

எனது கணிப்பு இதுதான்: ஜெர்மனிதான் ஐரோப்பாவின் பசுமைமிகு, சூரியசக்தி சார்ந்த முதல் வல்லரசாக ஆகும். இந்த இரண்டு பண்புகளையும் ஒரே நாட்டுக்கு உரித்தாக்க முடியுமா என்று கேட்கிறீர்கள். அவர்கள் நிச்சயமாக இப்படித்தான் ஆகப்போகிறார்கள், பாருங்கள்!

- © ‘தி நியூயார்க் டைம்ஸ்’,
சுருக்கமாகத் தமிழில்: ஆசை

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்