கடந்த ஆண்டின் டிசம்பர் மாதத்தோடு முடிந்த மூன்று மாத கால அளவில் ரூ. 1,238.08 கோடி நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக யுனைடெட் வங்கி இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தெரிவித்தது. முந்தைய ஆண்டில் ரூ. 42.2 கோடி லாபம் ஈட்டிய வங்கி, இவ்வளவு பெரிய நஷ்டத்தைச் சந்தித்ததற்கு ரூ. 4,545 கோடி வாராக்கடன்களே முக்கியக் காரணம் என்று கூறப்பட்டது. இந்தியாவில் உள்ள வங்கிகளுக்கு நான்கு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக வாராக்கடன்கள் உள்ளதாக ஒரு செய்தி தெரிவிக்கிறது.
வங்கித் துறை முழுவதையும் இன்று ஆட்டிப்படைக்கும் மிகப் பெரிய அரக்கன் இந்த வாராக்கடன்தான். இதன் அளவைக் குறைத்தால் மட்டுமே பொருளாதார வளர்ச்சிக்கான போதுமான தொழில், விவசாயக் கடன்களை இனிமேல் வங்கிகள் குறைந்த வட்டியில் கொடுக்க முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது.
வாராக்கடன்
வங்கிகளின் பெரிய சொத்தே அவற்றின் கடன்கள்தான். கடன் கொடுத்தால் மட்டுமே வங்கிகள் வட்டி வருவாய் ஈட்ட முடியும். வருவாய் ஈட்டாத எந்த ஒரு கடனும் வாராக்கடன் எனப்படும். ஒரு கடனை வாங்கியவர் அதன் வட்டி அல்லது முதலின் தவணை அல்லது இரண்டையும் கடந்த 90 நாட்களாகக் கொடுக்கவில்லை என்றால், அவருடைய கடன் வாராக்கடன் என்ற வகையில் சேர்க்கப்படும் என்ற பொதுவான வரைமுறை உள்ளது.
இந்திய வங்கிகளின் மொத்த வாராக்கடன் அவற்றின் மொத்தக் கடன் தொகையில் 4.2% முதல் 4.5% இருக்கும் எனவும், பொதுத்துறை வங்கிகளில் இது 4.8% முதல் 5% வரை இருக்கும் எனவும் ஐ.சி.ஆர்.ஏ. என்ற கடன் தரநிர்ணய நிறுவனம் கூறுகிறது. இவ்வாறு வாராக்கடன்கள் கூடிக்கொண்டே போனால், இந்த வங்கிகளுடைய முதலின் அளவை ரூ. 45,000 கோடி வரை கூடுதலாக உயர்த்த வேண்டும். எல்லாக் கடன் தரநிர்ணய நிறுவனங்களும் திரும்பத் திரும்பக் கூறுவது, அடுத்த ஒன்றிரண்டு ஆண்டுகள் இந்திய வங்கிகளுக்குச் சிரமமான நேரம், அவற்றின் வளர்ச்சி குறைந்து, நிதிநிலை மோசமடையும் என்பதாகும்.
கண்காணிப்பு
மத்திய நிதி அமைச்சகமும் மத்திய ரிசர்வ் வங்கியும் இப்போது வங்கிகளின் வாராக்கடன் பற்றிய கண்காணிப்பையும் மேலாண்மையையும் அதிகரித் துள்ளன.
பெரிய தொகையைக் கடனாக வாங்கியுள்ள கணக்குகளைக் கண்காணிக்கும் பொறுப்பை ஒரு குழுவிடம் மத்திய நிதி அமைச்சகம் வழங்கியுள்ளது. இக்குழுவில், மத்திய நிதி அமைச்சக அதிகாரிகள் மட்டுமல்லாமல், மத்திய ரிசர்வ் வங்கியையும் மற்ற வங்கிகளையும் சேர்ந்த அதிகாரிகளும் இடம் பெற்றுள்ளனர். கடன் வாங்கிய பெரிய நிறுவனங்கள், வங்கிகளில் உள்ள நடைமுறைகளைப் பயன்படுத்திக் கடனை உரிய காலத்தில் திரும்பச் செலுத்தாமல் இருப்பதையும், ஏமாற்றும் நோக்கத்தோடு கடன் வாங்கியதையும், கடன் கொடுப்பதற்கான நடைமுறைகளை வங்கிகள் சரியாகப் பின்பற்றியுள்ளனவா என்பதையும் இந்தக் குழு கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கும். ஒவ்வொரு பொதுத்துறை வங்கியிலும் உள்ள பெரிய முதல் 30 வாராக்கடன்களில் சில சி.பி.ஐ. இடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்திய வங்கிகளிடம் பெரிய அளவில் கடன்களைப் பெற்றுள்ள நிறுவனங்களின் கணக்குகளை ‘தடயவியல் தணிக்கை' (forensic audit) என்ற சிறப்புத் தணிக்கை செய்ய மத்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு பெரிய வாராக்கடன்களை ஆராய்ந்து அவற்றைத் திரும்பப் பெற முயற்சிகள் நடைபெறுகின்றன.
வாராக்கடனுக்கான காரணங்கள்
வாராக்கடனுக்கான காரணங்களாகச் சொல்லப் படுபவை: வாராக்கடன்களில் பெரும்பாலானவை சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களிடமிருந்து வர வேண்டியவையும், விவசாயக் கடன்களும் ஆகும்.
பொதுத்துறை வங்கிகளெல்லாம் பெரும்பாலும் உள்கட்டமைப்பு நிறுவனங்களுக்கு அதிகக் கடன் கொடுத்துள்ளன. ஆனால், தனியார் வங்கிகள் இத்துறைக்கு மிகவும் குறைவான கடனை அளித்துள்ளன. உள்கட்டமைப்புத் துறையில் நிலவும் கொள்கைச் சிக்கல்களும், போதிய முன்னேற்றம் இல்லாமல் இருப்பதும்தான் வாராக்கடனுக்கான காரணம் என்று கூறப்படுகிறது.
வங்கிகள் எல்லாமே ஒரே வழிமுறையைப் பின்பற்றியே கடன்களைக் கொடுக்கின்றன. ஆனால், பொதுவாக, பொருளாதாரம் மந்தநிலையில் உள்ள தாலும், குறிப்பிட்ட சில துறைகளில் கூடுதலாகச் சில சிக்கல்கள் இருப்பதாலும் வாராக்கடன்கள் பொதுத்துறை நிறுவனங்களில் அதிகம் உள்ளதாகச் சிலர் கூறுகின்றனர். எனவே, பொருளாதாரம் மீண்டும் வேகமான வளர்ச்சியை அடையும்போதும், குறிப்பாக, கட்டுமானத் துறை, விவசாயத் துறை வளரும்போதும் வாராக்கடன் அளவு குறையும் என்று நம்பப்படுகிறது.
வாராக்கடனை நீக்குவது
வங்கியின் நஷ்டத்தை வாராக்கடன் உயர்த்தும் என்பதால், அதனைத் தங்களின் இருப்புநிலையிலிருந்து (பேலன்ஸ் ஷீட்) நீக்குவது வங்கிகளுக்கு அவசியம். இதற்காக வங்கிகள் தங்களின் வாராக்கடனை ஏ.ஆர்.சி. (அஸெட் ரீகன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி) நிறுவனங்களுக்கு விற்றுவிடுகின்றன.
கடன் என்பது ஒரு சொத்து என்று பார்த்தோம். கடனைத் திரும்பச் செலுத்தாத நிறுவனங்களுக்குச் சில சொத்துக்கள் இருக்கும்; அல்லது கடனை எதிர்காலத்தில் திரும்பச் செலுத்தக்கூடிய வாய்ப்புகளும் அந்நிறுவனங்களுக்கு இருக்கும். அவ்வாறான கடன்களை ஏ.ஆர்.சி. ஏற்றுக்கொண்டு, அந்தக் கடன்களை வசூலிக்கும். வாராக்கடனை ஏ.ஆர்.சி. ஏற்றுக்கொள்ளும்போது வங்கிகளுக்கு அது பணத்தை அளிப்பதால், வங்கிகளின் இருப்புநிலையில் கடன்கள் இருக்காது. அதற்குப் பதில் வரவுகள் இருக்கும். இந்த வரவுகள் போதுமானதாக இல்லாவிடிலும், கடன் அளவைக் குறைப்பதால், வங்கிகள் வாராக்கடனை ஏ.ஆர்.சி. நிறுவனங்களுக்கு விற்றுவிடுகின்றன.
ரூ 40,000 கோடிக்கும் மேலான கடன்களை வாங்கிக்கொள்ள ஏ.ஆர்.சி. நிறுவனங்களிடமிருது வங்கிகள் ஒப்பந்தப் புள்ளிகளைக் கேட்டுள்ளன. கடந்த வருடம் பாரத ஸ்டேட் வங்கி, ரூ. 3,500 கோடிக்கான கடன்களை ஏ.ஆர்.சி-க்கு விற்றுள்ளது. இதேபோல் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ரூ. 1,000 கோடிக்கான கடன்களை விற்றுள்ளது.
வாராக்கடனை நீக்குவதற்காக அந்தக் கடன்களை மறுசீரமைப்புச் செய்வது ஒரு முறை. அதாவது, வாராக்கடன் உள்ள வங்கி, கடன் வாங்கிய நிறுவனம் எதிர்காலத்தில் கடனைத் திரும்பச் செலுத்த முடியும் என்றால், ஏற்கெனவே உள்ள கடனைத் திரும்பச் செலுத்துவதற்கான கால அளவை அதிகப்படுத்துவது, வட்டியைக் குறைப்பது, புதிய கடனை அளிப்பது போன்ற நடவடிக்கைகளால் வாராக்கடனை மறுசீரமைக்க முடியும். வெளி பொருளாதாரக் காரணங்களால் ஒரு நிறுவனத்துக்கு வியாபாரச் சிக்கல் ஏற்படும். அல்லது சரியான வியாபார ஆலோசனையும், கூடுதல் முதலீடும் இருந்தால் அந்நிறுவனம் சிக்கலிலிருந்து வெளிவரலாம். இந்தச் சூழலில் வாராக்கடனைச் சீரமைப்புச் செய்வது அவசியம். இதற்காக மத்திய ரிசர்வ் வங்கி ‘பெருநிறுவனக் கடன் மறுசீரமைப்பு' முறைகளை வடிவமைத்துள்ளது. அதன்படி, வங்கிகள் பெரிய நிறுவனங்களின் வாராக்கடனை மறுசீரமைப்புச் செய்யும். இது மட்டுமல்லாது, வங்கிகளும் ஒவ்வொரு கடனையும் ஆராய்ந்து மறுசீரமைப்புச் செய்யலாம்.
கடந்த நிதியாண்டு (2013-14) முடிவில் ரூ. 3.3 லட்சம் கோடி மதிப்புள்ள கடன்கள் மறுசீரமைப்புச் செய்யப்பட்டுள்ளன. இது, அதற்கு முந்தைய ஆண்டின் மறுசீரமைப்பு அளவைவிட ஒரு லட்சம் கோடி அதிகம். இவ்வாறும் வங்கிகள் தங்களின் வாராக்கடனைக் குறைத்தும்கூட, வாராக்கடனின் அளவு உயர்ந்துகொண்டே போவது சிக்கலின் ஆழத்தை வெளிப்படுத்துகிறது.
அது பாதிக்கும்
இது மட்டுமல்லாமல், கடன் வாங்கும் நிறுவனங்கள் வெளிநாடுகளில் மேலும் கடன் வாங்குவதற்கு வங்கிகள் உதவுகின்றன. இதன் மூலம் தங்கள் கடன் உடனடியாகத் திரும்பக் கிடைக்கும் என்று வங்கிகள் நம்புகின்றன. ஆனால், எதிர்காலத்தில் அந்நிறுவனங்கள் வெளிநாட்டுக் கடனைத் திரும்பக் கொடுக்கவில்லை என்றால், துணைநின்ற வங்கிகளை அது பாதிக்கும்.
ஆகமொத்தத்தில், இந்திய வங்கிகளின் வாராக்கடனைக் குறைப்பதும், அவற்றுக்குத் தேவையான முதலீடுகளை உயர்த்துவதும் புதிய அரசுக்குச் சவால்களாக இருக்கப் போகின்றன.
- இராம. சீனுவாசன், இணைப் பேராசிரியர், சென்னைப் பல்கலைக்கழகம்,
தொடர்புக்கு: seenu242@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
13 days ago
கருத்துப் பேழை
15 days ago