தேவை திருப்பி அடிக்கும் மனோபாவம்!

By பிரவீன் சுவாமி

அது ஒரு கோடைக்காலம். இளங்காலைப் பொழுது. ஆப்கானிஸ்தானத்தின் தலைநகரம் காபூலில் இந்தியத் தூதரகம் இருக்கும் கட்டிடத்துக்குப் பக்கத்தில், பழைய டொயோட்டா கார் ஒன்று வந்து நிற்கிறது. அதிலிருந்து யாரோ இறங்கப்போகிறார்கள் என்று எதிர்பார்த்திருந்த நேரத்தில், திடீரென மின்னல் வெட்டியதைப் போலப் பளிச்சென்று ஒரு ஒளியும் டமாரென்று ஓசையும் ஒரே சமயத்தில் வெளிப்பட்டது. அதையடுத்து 58 பேர் உயிரிழந்தனர், 141 பேர் காயம் அடைந்தனர். இறந்தவர்கள், காயமடைந்தவர்களின் உடல்கள் அழுத்தமான காற்றில் தூக்கி வீசப்பட்டதைப் போல நாலாபுறங்களிலும் சிதறின. ரசாயனமும் இரும்புத் துண்டுகளும், கண்ணாடித் தூளும் அனைவருடைய உடல்களிலும் பாய்ந்து, ஊடுருவி, குத்திக்கிழித்து சதைகளைத் துளைத்து, ரத்த நாளங்களை அறுத்து, எலும்புகளை நொறுக்கி கோரதாண்டவம் ஆடிவிட்டன. எரிச்சல், வலி, வேதனையுடன் நினைவிழந்தவர்கள் ஒருபக்கம், நிலைகுலைந்தவர்கள் மறுபக்கம் என்று அந்த இடமே குருக்ஷேத்திரம்போலத் தலையற்ற உடல்கள், பிய்த்து எறியப்பட்ட அங்கங்கள், ரத்தச் சேறு, சதைக்குப்பை என்று பயங்கரவாதத்தின் கோரமுகத்தைத் தோலுரித்துக் காட்டியது. இந்தப் படுபாதகச் செயல்களைச் செய்தவர்களை, தாக்குதல் நடந்த சில விநாடிகளுக்கெல்லாம் பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ-யின் அதிகாரிகள் தொலைபேசிகளில் அழைத்துப் பாராட்டி, குலாவியதை மேற்கத்திய நாடுகளின் உளவுப்பிரிவு அதிகாரிகள் ஒட்டுக்கேட்டுப் பதிவுசெய்தனர்.

இந்த நாசவேலைகுறித்த தகவல் டெல்லியை எட்டியதும், அப்போது இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராகப் பதவிவகித்த எம்.கே. நாராயணன் கோபத்தில் கொதித்தார். “சண்டை வேண்டாம், பேசியே தீர்த்துக்கொள்ளலாம் என்ற பேச்செல்லாம் இனி எடுபடாது, அவர்களுக்குப் புரிகிற விதத்தில் இதற்குப் பதிலடி கொடுத்தே தீர வேண்டும்” என்று முழங்கினார்.

இந்தியத் தூதரகத்துக்குப் பெருஞ்சேதம் விளைவித்தவர் களையும் இதே முறையிலேயே தண்டித்துவிட வேண்டும் என்று ‘ரா' (ரிசர்ச் அண்ட் அனலிசிஸ் விங்) அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆப்கானிஸ்தானின் தேசியப் பாதுகாப்பு இயக்குநரகத் தலைமை அதிகாரி அம்ருல்லா சாலேவுடன் இது தொடர்பாகப் பேசியபோது, அவரும் உதவுவதாக ஒப்புக்கொண்டார். பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிரான ஜிஹாதி குழுக்களைக் கொண்டு லஷ்கர்-இ-தொய்பா தலைவன் ஹஃபீஸ் முகம்மது சய்யீதின் தலைக்குக்கூட குறி வைக்கப்பட்டது. இவ்வளவு விரைவாக இந்திய உளவுப்பிரிவுத் தலைவர் போட்ட திட்டம் நடக்கவில்லை. நாராயணன் விரும்பியபடிச் செயல்பட இந்தியாவின் ‘அரசியல் தலைமை’ அனுமதிக்கவில்லை. “குண்டுக்குக் குண்டு என்ற ரீதியில் நாம் பதிலடி கொடுத்தால் வன்முறைதான் அதிகமாகும். எனவே, நாம் பேச்சுவார்த்தை நடத்துவோம்” என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறிவிட்டார்.

2010-ன் தொடக்கத்தில் நாராயணனின் பதவிக்கு வெளியுறவுத் துறை அதிகாரி சிவசங்கர் மேனன் நியமிக்கப் பட்டார். கொள்கை முடிவுகளை எடுக்கும் இடத்தில் ‘சமாதானப் புறா’க்கள் அமர்த்தப்பட்டன.

மோடியின் வழிமுறையே வேறு

“பயங்கரவாதத்துக்கு முடிவுகட்ட, பயங்கரவாதிகளுக்குப் புரிகிற மொழியில் பேச வேண்டும்” என்று பிரதமர் பதவிக்கான வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள நரேந்திர மோடி கடந்த வாரம் பேசியிருக்கிறார். அடுத்து ஆட்சிக்கு வரும் அரசு இந்த விவகாரத்துக்கு முடிவுகட்டத் துணிச்சலான முடிவுகளை எடுத்தாக வேண்டும். கராச்சியில் பதுங்கியிருப்பதாகச் சொல்லப்படும் தாவூத் இப்ராஹிமைப் பிடிக்க முயற்சிக்காமல் இன்னமும் தயங்கிக்கொண்டிருப்பது ஏன் என்று மோடி கேட்டது அர்த்தம் பொதிந்தது. பயங்கரவாதத்தை ஒடுக்கு வதில் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் உள்ள வேற்று மையை அவர் பட்டவர்த்தனமாகத் தோலுரித்துக் காட்டினார். பயங்கரவாதிகளைப் பிடிக்க அமெரிக்காவுடன் இந்தியா கூட்டு முயற்சிகள் மேற்கொள்ளவிருப்பதாகக் கூறிய உள்துறை அமைச்சர் சுசீல்குமார் ஷிண்டேவை அவர் கடுமையாகச் சாடினார். “பயங்கரவாதிகளை என்ன செய்யப்போகிறோம் என்று எந்த நாடாவது முன்கூட்டியே தெரிவிக்குமா?” என்று கேட்டார்.

“சர்வதேசப் பயங்கரவாதி ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானில்தான் பதுங்கியிருக்கிறார் என்று திட்டவட்ட மாகத் தெரிந்த பிறகு, பாகிஸ்தான் அரசிடம் அனுமதி கேட்டுக்கொண்டா அமெரிக்கா அந்த நாட்டுக்குள் நுழைந்து அவரைச் சுட்டுக்கொன்றது? பின் லேடனைக் கொல் வதற்கு முன்னால் அமெரிக்கா எல்லாப் பத்திரிகை நிறுவனங் களுக்கும் செய்திக்குறிப்பு அனுப்பியா தமுக்கடித்தது? பத்திரிகைகளுக்குச் சொல்லிவிட்டா பயங்கரவாதிகள்மீது நடவடிக்கை எடுப்பார்கள்?” என்று மோடி அடுக்கடுக்காகக் கேட்டிருக்கிறார்.

மக்களவைப் பொதுத்தேர்தலில் வாக்காளர்களைக் கவர்வதற்காகத்தான் மோடி அப்படிப் பேசினார் என்று கூறிவிட முடியாது. மோடிக்கு ஆலோசகர்களாக இருப்பவர்கள் சொல் லித்தான் அவர் அப்படிப் பேசினார் என்றாலும்கூட, அடுத்து ஆட்சிக்கு வருகிறவர்கள் இப்படிப்பட்ட மனநிலை உள்ளவர்களாக இருப்பது அவசியம். பயங்கரவாதிகள் விஷயத்தில் இந்தியாவின் மொழி, இனியும் ‘மென்மொழியாக’ இருக்காமல், ‘வன்மொழியாக’ மாற வேண்டும் என்றே பாது காப்புத் துறை வட்டாரங்களும் உளவு அமைப்புகளும் விரும்புகின்றன.

அமெரிக்க ஆதரவு?

1999 கார்கில் போருக்குப் பிறகு, இந்தியாவுக்கு எதிராக யார் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடுத்தாலும், அமெரிக்கா நமக்குச் சாதகமாகவே இருக்கும் என்ற அனுமானத்திலேயே பாதுகாப்புகுறித்த நிலைப்பாட்டை அரசு வகுக்கிறது. இந்த நம்பிக்கை சரியானதே என்று நிரூபிக்கும் வகையில் சில புள்ளிவிவரங்களும் இருக்கின்றன. 2002 முதல் 2013 வரையிலான காலத்தில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வன்செயல்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்திருக்கிறது. மும்பை மீது நடந்த பயங்கரவாதிகளின் தாக்கு தலுக்குப் பின்னணியில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ-தான் இருந்தது என்பது சர்வதேசச் சமூகத்துக்கே சந்தேகமறத் தெரிந்து விட்டதால், ஜிகாதிகளை இந்தியாவுக்கு எதிராக ஏவிவிடுவதை அது குறைத்துக்கொண்டிருக்கிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலைமை மாறிவிட்டது. இந்தியா மீது தாக்குதல்கள் மீண்டும் தொடங்கிவிட்டன. ஜிகாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் எடுத்துவரும் நடவடிக்கைகளும் தோற்றுவருகின்றன. ஜிகாதிகளில் ஒரு பிரிவினரிடம் பாகிஸ்தான் ராணுவத்துக்கு இருந்த செல்வாக்கு சரிந்துவிட்டது. ஜிகாதிகளின் எண்ணிக்கை பெருகிவருவதால், பாகிஸ்தானின் அரசியல் கட்சிகள் அவர்களைத் திருப்திப்படுத்த நினைக்கின்றன. பாகிஸ்தான் அரசு ஆதரிக்கும் லஷ்கர்-இ-தொய்பா போன்ற அமைப்புகளில் உள்ள பஞ்சாபிய முஸ்லிம்களைத் தங்கள் பக்கம் ஈர்க்க தலிபான்கள் முயற்சி செய்துவருகின்றனர்.

“பாகிஸ்தானில் ஷாரியா அமைப்பு முறையை ஏற்படுத்த நாங்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகளை நாளை காஷ்மீரத்துக்கு விரிவுபடுத்துவோம். பிறகு, இந்தியாவுக்கும் கொண்டுசெல்வோம்” என்று தேரிக்-இ-தலிபான் தலைவர் வாலி-உர்-ரெஹ்மான் எச்சரித்திருக்கிறார்.

இனி என்ன நடக்கும்?

இந்தியாவின் மேற்கு எல்லைப் பகுதியில் இனி என்ன நடக்கும் என்று ஊகிக்க பெரிய புத்திசாலியாகத்தான் இருந்தாக வேண்டும் என்ற அவசியம் இல்லை. அணுகுண்டைத் தயாரித் துக் கையில் வைத்துள்ளது பாகிஸ்தான் அரசு; அந்த அரசின் செல்வாக்கு சரிந்துவருகிறது. போட்டிபோடும் மதத் தீவிரவாதக் குழுக்களின் கட்டுப்பாட்டில் பாகிஸ்தான் அரசு இருக்கிறது.

“(இந்தியாவுக்கு எதிராக) தண்ணீர் எப்போதும் உலையில் சரியான சூட்டில் கொதித்துக்கொண்டே இருக்க வேண்டும்” என்று பாகிஸ்தானின் ராணுவ ஆட்சி யாளர் ஜெனரல் முகம்மது ஜியா-உல்-ஹக் தன்னுடைய உளவுத் துறை தலைமை அதிகாரி ஜெனரல் அக்தர் மாலிக் குக்கு 1979 டிசம்பரில் கட்டளையிட்டார் இப்போது ‘அந்தத் தண்ணீர்’ அதிகபட்சக் கொதிநிலையை எட்டிக் கொதித்துக்கொண்டிருக்கிறது.

ஆப்கானிஸ்தானும் இந்தியாவுக்குள்ள அதே பிரச்சினைகளைத்தான் சந்தித்துவருகிறது. எனவே, அதன் தேசியப் பாதுகாப்பு இயக்குநரகம் தனக்குச் சரியான வழி எது என்று தேர்ந்தெடுத்துவிட்டது. பாகிஸ்தானின் தலிபான் தளபதி லத்தீஃப் மெசூதை, ஆப்கானிஸ்தான் உளவுப்படைப் பிரிவின் காவலிலிருந்து அமெரிக்க ராணுவம் எடுத்துக்கொள்ள அனுமதித்துவிட்டது. ஆப்கானிஸ்தானத்து தலிபான் தலைவர் சிராஜுதீன் ஹக்கானிக்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. ஆதரவு தெரிவித்துவருவதால், அதற்குப் பதிலடி யாகத்தான் லத்தீஃப் மெசூதை அமெரிக்க ராணுவத்திடம் பிடித்துக் கொடுத்தது ஆப்கானிஸ்தான். பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. தங்கள் நாட்டில் நடத்தும் தாக்குதல்களுக்கெல்லாம் அவ்வப்போது பதிலடி கொடுத்துவிடுவதாக தேசியப் பாது காப்பு இயக்குநரக அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் பேசும்போது தெரிவித்தனர்.

ஒரே கேள்வி

இப்போதைய எளிய கேள்வி இதுதான்: பாகிஸ்தான் ஜிகாதிகள் மேற்கொள்ளும் தாக்குதல்களுக்கெல்லாம் இந்தி யாவும் இனி இதே போலப் பதிலடி தருமா?

1980-களின் தொடக்கத்தில் காலிஸ்தான் பயங்கரவாதி களுக்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. இயக்குநரகம் ஆயுதங் களையும் தளவாடங்களையும் அளித்தது. அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி உடனே பதிலடி தருமாறு உத்தர விட்டார். இந்த வேலைக்காக ‘டீம்-எக்ஸ்’, ‘டீம்-ஜே’ என்ற இரண்டு குழுக்களை ‘ரா’ ஏற்படுத்தியது. முதல் குழு பாகிஸ்தானைக் குறிவைத்தும், இரண்டாவது காலிஸ் தானிகளைக் குறிவைத்தும் செயல்பட்டன. இந்திய நகரங் களைக் குறிவைத்து காலிஸ்தானிகள் நடத்திய ஒவ்வொரு தாக்குதலுக்கும் லாகூரிலும் கராச்சியிலும் பதிலடி தரப்பட்டது. “இப்படிப் பதிலடி தர நாம் நிறைய விலைகொடுக்க வேண்டியிருந்தது” என்று ‘ரா’ அமைப்பின் முன்னாள் அதிகாரி பி. ராமன் 2002-ல் தனது நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.

இப்படி உளவு அமைப்புகளின் வேலைகளுக்கு எதிர்வேலை பார்க்கும் வழிமுறையில் இந்தியா மிகத் தாமதமாகத்தான் இறங்கியது.

1947-ல் இந்தியாவை விட்டு வெளியேறிய பிரிட்டன், எதிர் உளவு வேலையில் புதிய அரசு ஈடுபடாதவாறு தடுக்க, முக்கியமான ஆவணங்களையெல்லாம் தன்னோடு எடுத்துச் சென்றுவிட்டது. எந்தவிதத் தடயமும் இல்லாமல் அழித்துவிட்டது. இந்திய அரசு உதித்தபோது, அதன் உளவுப்பிரிவுக்குக் கிடைத்ததெல்லாம் காலி மர பீரோக்களும், வெற்று ரேக்குகளும்தான்!

உளவுப்பிரிவில் பிரிட்டிஷ்-இந்திய அதிகாரியாகப் பணி யாற்றிய குர்பான் அலி கான், பாகிஸ்தானில் உளவுப்பிரிவு அதிகாரியாகப் பணிசெய்யப் போனபோது, பிரிட்டிஷ் அதிகாரிகள் அழிக்கத் தவறிய மிச்சமிருந்த ரகசிய ஆவணங் களையும் தன்னோடு எடுத்துச் சென்றுவிட்டார். “காலி பீரோக்களையும் வெற்று ரேக்குகளையும் வைத்துக்கொண்டு இந்திய உளவுத் துறை செயல்படத் தொடங்கியது ஒரு வகையில் சோகமாகவும் ஒரு வகையில் நகைச்சுவையாகவும் இருந்தது” என்று உளவுப்பிரிவுத் தலைவராக இருந்த லெப்டினென்ட் ஜெனரல் எல்.பி. சிங் பதிவுசெய்திருக்கிறார். டெல்லியில் இருந்த ராணுவ உளவுப்பிரிவு இயக்குநரகத்தில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைக் காட்டும் ஒரு வரைபடம்கூட மிச்சம் இல்லாமல் துடைத்து வைக்கப்பட்டிருந்தது. 1947-48-ல் பாகிஸ்தான் படைகள் ஊடுருவுவதை அவர்களுடைய வானொலித் தகவல்களை இடைமறித்துக் கேட்டபோது உறுதிசெய்துகொள்ளவும், இந்தியத் துருப்புகளை எங்கிருந்து எங்கே அனுப்ப வேண்டும் என்று தீர்மானிக்கவும் கைவசம் வரைபடம்கூட இல்லாமல் திண்டாட நேர்ந்தது!

பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்தது முதலே இந்தியாவுக்கு எதிராக அவ்வப்போது நாசவேலைகளை ரகசியமாகச் செய்து முடிப்பதே அதன் போர்த் தந்திரமாக இருந்துவருகிறது. உளவுத் துறை மூலம் சேதத்தை ஏற்படுத்துவதை அது பலமான ஆயுதமாகவே இன்னமும் பயன்படுத்திக்கொண்டிருக்கிறது. ஆயுதங்களிலும் ஆள்பலத்திலும் தன்னைவிடப் பெரிதான இந்திய ராணுவத்தைக் களத்தில் எதிர்கொண்டு வெற்றிபெற முடியாது என்பதால், அவ்வப்போது திடீர்த் தாக்குதல்களை நடத்தி, கடும்சேதத்தை விளைவிப்பதையே சிறந்த தற்காப்பு உத்தியாகத் தொடர்ந்து கடைப்பிடிக்கிறது. இந்தத் தாக்கு தல்களை ‘வழக்கமற்ற போர்’ என்று பிரதமர் நேரு வர்ணித்தார்.

சீனாவுடன் மோதல் ஏற்பட்ட 1962-ம் ஆண்டுக்குப் பிறகுதான் இந்தியாவும் ‘இப்படி எதிர்த் தாக்குதல்’ நடத்தும் உத்தியில் திறனை வளர்த்துக்கொண்டது. அமெரிக்கா அதற்குப் பயிற்சி தந்தது. சீனத்தின் உள்ளே வெகுதூரம் ஊடுருவிச் சென்று உளவு பார்க்க ‘ரா’ அப்போதுதான் ஏற்படுத்தப்பட்டது.

எஸ்டாப்ளிஷ்மெண்ட்-22

1971-ல் பாகிஸ்தானுக்கு எதிராக இந்த உத்தியை இந்தியா கையாண்டது. மேஜர் ஜெனரல் சுர்ஜீத் சிங் ஊபன் தலை மையில் ஏற்படுத்தப்பட்ட 'எஸ்டாப்ளிஷ்மெண்ட்-22' என்று சங்கேதப் பெயரிடப்பட்ட படைப்பிரிவு, வங்கதேசம் என்று இப்போது அழைக்கப்படும் அன்றைய கிழக்கு பாகிஸ்தானில் வெற்றிகரமாகச் செயல்பட்டது. இந்திய யூனியனில் சிக்கிம் சேர அப்பிரிவு காரணமாக இருந்தது. இலங்கையைச் சேர்ந்த சில தமிழ் குழுக்களுக்குப் பயிற்சி அளித்தது. மியான்மரில் சீன ஆதரவு அரசுக்கு எதிராகப் போரிட்ட சில ஆயுதக் குழுக்களுக்கும் பயிற்சியளித்தது.

குஜ்ரால், ராவ் காலத்தில்…

‘ரா' அமைப்பு இதுபோலப் பதில் தாக்குதல் நடவடிக் கைகளில் இனி ஈடுபடக் கூடாது என்று கூறி பிரதமர் ஐ.கே. குஜ்ரால் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது, “நாட்டின் கிழக்குப் பகுதியில் இனி ‘ரா' செயல்பட வேண்டாம்” என்று உத்தரவிட்டார். 1999 கார்கில் போருக்குப் பிறகு உளவுத் துறை அதிகாரிகள் அப்போதைய பிரதமர் வாஜ்பாயிடம், “உளவுப்பிரிவின் கைகள் கட்டிப்போடப்பட்டுள்ளன, அதை அவிழ்த்துவிட வேண்டும்” என்று மன்றாடினர். வாஜ்பாய், வேண்டாம் என்றும் மறுக்கவில்லை, சரி என்றும் அனுமதிக்கவில்லை. மூன்றாண்டுகளுக்குப் பிறகு, இந்திய நாடாளுமன்றத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது, அவர்களுக்குப் பாடம்புகட்ட இந்தியாவிடம் எந்த ஆயுதமும் இல்லை. “போர் தொடுக்க நேரும்” என்று பாகிஸ்தானை வெட்டியாக மிரட்டினார் வாஜ்பாய். போர் என்பது செலவு அதிகம் பிடிக்கும், உயிர்ச்சேதம் அதிகம் ஏற்படும் பெரிய நடவடிக்கை. உளவுப்பிரிவின் பதிலடி அப்படிப்பட்டதல்ல.

உளவுப்பிரிவு பதிலடி நடவடிக்கைகளில் ஈடுபட வாஜ்பாய் அனுமதிக்காததற்குக் காரணம் கோழைத்தனம் என்றும் கூறிவிட முடியாது. அப்படித் தாக்குதல் நடத்தினால், அது சர்வதேசக் கவனத்தை ஈர்க்கும், இந்தியாவும் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுகிறது என்று பாகிஸ்தான் புகார் சொல்ல ஏதுவாகும் என்பதாகவும் இருக்கலாம். ஆனால், இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் தங்களுடைய நாட்டுக்கு எதிராகப் பயங்கரவாதக் குழுக்கள் தாக்குதல் நடத்தினால், ராணுவத்தைக் கொண்டு போர் நடத்தாமல், உளவுப்பிரிவைக் கொண்டு உடனடியாக -ஆனால் வலுவாக - பதில் தாக்குதலைத் தொடுக்கின்றன. இதனால், எதிரிகள் அஞ்சி தங்களுடைய செயல்களைக் கைவிட்டுவிடுவதில்லை என்றாலும், வாங்கிய அறை உறைத்துக்கொண்டிருக்கும் வரையில் சீண்டாமல் இருக்கிறார்கள்.

உளவுப் பிரிவைக் கொண்டு பதிலடி கொடுத்தாலும் ராணுவத்தைத் திரட்டிப் போரிட்டாலும் உயிரிழப்புகள் நேரத்தான் செய்யும். ஆனால், அந்தந்த நேரத்துக்கு வம்புக்கு வருபவர்களுக்குப் பலமான அடி கொடுத்துக் கொண்டிருந்தால்தான் வாலாட்ட யோசிப்பார்கள். அடுத்து ஆட்சிக்கு வரும் ஆட்சியாளர்களும் உளவுப்பிரிவுத் தலை வர்களும் உட்கார்ந்து பேசி முடிவெடுக்க வேண்டிய விஷயம் இது.

© ‘தி இந்து’, தமிழில்: சாரி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்