நேருவும் மாவோவும் சந்தித்தபோது...

By அமித் பரூவா

அரிய வரலாற்றுச் சந்திப்பொன்று 1954-ன் இலையுதிர் காலத்தில் நிகழ்ந்தது. இந்தியப் பிரதமர் நேருவும் சீன அதிபர் மாவோவும் பெய்ஜிங்கில் தனியாகச் சந்தித்து சுமார் நாலரை மணி நேரம் பேசியிருக்கின்றனர்.

நேருவைச் சந்தித்த சில விநாடிகளுக்கெல்லாம் சகஜமாகப் பேசத் தொடங்கியிருக்கிறார் மாவோ. “சீனத்தின் பொருளாதார வளர்ச்சி இந்திய வளர்ச்சியைவிடக் குறைவாக இருக்கிறது. இன்னும் 10 அல்லது 20 ஆண்டுகள் ஆகும் தொழில்துறையில் வளர்ச்சியை எட்டுவதற்கு” என்று குறிப்பிடும் மாவோ, “அமெரிக்காவின் ராணுவ நீட்சி தென் கொரியா, தைவான், இந்தோ- சீனா வரை இருப்பதால் தங்களால் நிம்மதியாகத் தூங்க முடிவதில்லை” என்கிறார்.

நேரு, “உலக மக்கள்தொகையில் சுமார் 100 கோடியைக் கொண்டிருக்கும் இந்தியாவும் சீனாவும் ஆசியாவில் முக்கியப் பங்காற்ற வேண்டும்” என்கிறார். “ஆனால், அமெரிக்கா நம்மிரு நாடுகளைப் பெரிய சக்தியாகத் தன்னைக் கருதிக்கொள்ளவேயில்லையே” என்று கேட்கும் மாவோவிடம் நேரு சொல்கிறார்: “பிற நாடுகளை அளக்க அமெரிக்கா இப்போது வைத்திருக்கும் அளவுகோல் எதிர்காலத்தில் பயன்படாது. அமெரிக்கா வலுவாக, அதே சமயம் (பிற நாடுகள் தங்களைத் தாக்கக்கூடும் என்று) அச்சப்பட்ட நிலையில் இருக்கிறது.”

அமெரிக்க முன்முயற்சியில் ‘தென்கிழக்கு ஆசிய நாடுகளின் ஒப்பந்த ஸ்தாபனம்’ (சீட்டோ) என்ற புதிய அமைப்பு உருவான சமயத்தில் இரு தலைவர்களும் சந்தித்தனர். இதைக் கருத்தில் கொண்டு பேசிய மாவோ, இந்த அமைப்பில் சேர வேண்டும் என்று அமெரிக்காவிடமிருந்து அழைப்பு வந்தபோதும்கூட இந்தியா அதை ஏற்காமல் தவிர்த்ததைப் பாராட்டினார். “நாங்கள் மிகவும் சக்திவாய்ந்தவர்கள் அல்ல என்றாலும் யாரையும் பார்த்து அஞ்சுவது கிடையாது; எனவே, இதுபோன்ற ராணுவக் கூட்டு ஒப்பந்தங்களில் சேர வேண்டிய அவசியம் எங்களுக்குக் கிடையாது” என்று மாவோவுக்குப் பதிலளிக்கிறார் நேரு.

உலகப் போர்களின் விளைவுகள் குறித்து இரு தலைவர்களும் நீண்ட நேரம் பேசியிருக்கின்றனர். “இரு உலகப் போர்களின் விளைவாகவே கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தேசியவாதக் கட்சிகளுக்கும் வெற்றி கிட்டியது. மூன்றாவது உலகப் போர் வந்தால் உயிரிழப்போர் எண்ணிக்கை முன்பை விடப் பல கோடிக் கணக்கில் இருக்கும். சீனத்திடம் இதுவரை அணுகுண்டு ஏதும் இல்லை; இப்போதுதான் அணுசக்தி ஆராய்ச்சியைத் தொடங்கியிருக்கிறோம்” என்று வெளிப்படையாகப் பேசுகிறார் மாவோ.

சீனா தன்னுடைய முதல் அணுகுண்டை 1964 செப்டம்பரில் வெடித்துச் சோதனை நடத்தியது. அதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே நேருவிடம் இதுபற்றி அவர் தெரிவித்திருப்பது வியப்பளிக்கிறது.

முதலாவது உலகப் போர் ரஷ்யாவில் போல்ஷ்விக்குகளுக்கு வெற்றியைக் கொடுத்ததுபோல, இரண்டாவது உலகப் போர் சீன விடுதலைக்கு வழிவகுத்தது என்று மாவோ நம்பினார். “சீனத்தில் நாங்கள் 22 ஆண்டுகள் போர் செய்தோம். எந்த முடிவும் ஏற்படவில்லை. இரண்டாவது உலகப் போர் முடிவுக்கு வந்தது, நாங்களும் எழுந்து நிற்க வாய்ப்பு கிடைத்தது” என்கிறார் மாவோ.

நேருவும் இந்திய விடுதலைபற்றிப் பேசுகிறார். “இரண்டாவது உலகப் போர் வராமலே இருந்திருந்தால்கூட இந்தியா விடுதலை அடைந்திருக்கும்; உண்மையில் இரண்டாவது உலகப் போர் தொடங்கிய நேரத்திலேயே இந்தியா விடுதலையடைந்த நிலையை எட்டிவிட்டது. அந்தப் போர் காரணமாகத்தான் ஆட்சியை மேலும் சில ஆண்டுகளுக்கு பிரிட்டன் நீடித்தது” என்கிறார் நேரு.

இன்னொரு உலகப் போர் வருவதற்கான சாத்தியம் இருக்கிறதா என்று இருவரும் பேசியபோது, ஆண்டுகள் செல்லச் செல்ல மூன்றாவது உலகப் போர் வரும் வாய்ப்புகள் குறைந்துவிடும் என்கிறார் நேரு. “இன்னும் 15 ஆண்டுகள் இப்படியே பெரிய போர் இல்லாமல் கடந்துவிட்டால் மூன்றாவது உலகப் போர் வருவதற்கு வாய்ப்பு மிகமிகக் குறைவு என்பது என் ஊகம். இனி தயாராகும் ஆயுதங்கள் பெருந்தொகையில் உயிரைப் பறிப்பவையாக இருக்கும். அவற்றைப் பயன்படுத்த ஏற்படும் அச்சத்தாலேயே மூன்றாவது உலகப் போர் தவிர்க்கப்படும்” என்கிறார் நேரு.

திபெத் தொடர்பான ஒப்பந்தம் குறித்து மாவோ குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். அதிலிருந்து அது தன்னுடைய மனதைவிட்டு அகலவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி யிருக்கிறார். வேண்டாதவர்களைத் தண்டிப்பதை சீனத்தில் ‘பன்றியின் வாலைப் பிடித்தல்’ என்பார்களாம். இதைக் குறிப்பிடும் மாவோ, “நாம் இருவரும் பன்றியின் வாலைப் பிடிக்க மாட்டோம்” என்கிறார் நகைச்சுவையாக. இதற்குப் பதிலளிக்கும் நேரு, “நம்மிடையே சில கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன; அதற்காகப் பூசலில் ஈடுபட வேண்டிய அவசியமில்லை” என்கிறார்.

இருவரும் இப்படிப் பேசிய அடுத்த 8 ஆண்டுகளில் இந்தோ - சீனப் போர் வெடித்தது. இப்படியான மனம் திறந்த உரையாடலில் ஈடுபட்ட இருவரால், இந்த மோதலைத் தவிர்க்க முடியாமல் போனது துரதிர்ஷ்டவசமானது.

- © ‘தி இந்து’ (ஆங்கிலம்),
சுருக்கமாகத் தமிழில்: சாரி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்