மோடியின் சீனப் பயண லட்சியம் என்ன?

By எம்.கே.நாராயணன்

போரிடாமலே வெற்றி பெறுவது என்ற சுன் சூவின் பாதையில் செல்கிறது சீனா!

பிரதமர் நரேந்திர மோடி மே 14 முதல் சீனத்தில் மேற்கொள்ளவிருக்கும் சுற்றுப் பயணம் இரு நாட்டு மக்களிடையே மட்டுமல்லாமல், உலகின் பல நாடுகளின் தலைவர்களிடையேயும் ராணுவத் தலைவர்களிடையேயும் ஆர்வத்தை ஏற்படுத்தி யிருக்கிறது.

சீனத்துடனான வர்த்தக, பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதும் மேம்படுத்துவதுமே தன்னுடைய முன்னுரிமை என்று மோடி கூறியிருக்கிறார். அவர் வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும், சீனத்துக்கு இந்தியப் பிரதமர் செல்வதில் பொருளாதாரக் காரணங்களைவிடப் பிற காரணங்களும் இருக்கின்றன. ‘போரிடாமலே வெற்றி பெறுவது’ என்ற சுன் சூவின் கொள்கைக்கு ஏற்ப, சீனா தன்னுடைய ராணுவ உத்தியை அமல்படுத்திக்கொண்டிருக்கிறது. தன்னுடைய நண்பர்கள் என்று கருதும் நாடுகளுக்குப் பரிசுகளை வழங்கியும் தனக்கு தடைக்கல்லாக இருக்கக்கூடிய நாடுகள் என்று கணிப்பவற்றை ஒதுக்கியும் செயல்படும் உத்தி அது.

பாதுகாப்பு முன்னுதாரணம்

பெய்ஜிங்கை உள்ளடக்கிய பாதுகாப்புக் கூட்டணியில் இடம் பெற விரும்பும் நாடுகள் அதில் சேர்ந்துகொள்ள ஒரு வாய்ப்பைத் தர விரும்புகிறது சீனா. சீன அதிபர், ஆசிய நாடுகளுக்கான ‘நடத்தை நெறிமுறையாக’ முன்னர் அறிவித்ததுதான் அந்த வாய்ப்பு. சீனத்துக்கு மாற்றாகத் திகழக்கூடிய நாடுகளுடன் கூட்டு சேர்ந்தால் கடும் விளைவுகள் ஏற்படும் என்ற எச்சரிக்கை அதில் ரகசியமாகப் பொதிந்திருந்தது.

‘தென் சீனக் கடலில் எல்லை தொடர்பாக தேவையில்லாமல் பிரச்சினைகள் கிளப்பப்படுகின்றன’ என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா புதுடெல்லிக்கு வந்திருந்தபோது மோடி கூறியதால், சீனத்துக்கு ஏற்பட்ட கசப்புணர்வைப் போக்க இப்போது ஏதாவது செய்தாக வேண்டும். சீனத்தின் நம்பிக்கையை வென்றாக வேண்டும். சீனத்துடன் பேசும்போது இதை இந்தியத் தரப்பு மனதில் கொண்டு பேச வேண்டும்.

அதிபர் ஹூ ஜின்டாவ், பிரதமர் வென் ஜியாபாவ் காலத்தில் சீனா பெரும்பாலும் சாதுவான முகத்தையே காட்டியது. அவர்கள் பதவி வகித்த 2008-ல்தான் இந்தியாவும் சீனாவும் 21-வது நூற்றாண்டுக்கான ‘கூட்டு ராணுவப் பார்வை’ பற்றிப் பேசின. அப்போதே, ‘இது வழக்கத்துக்கு மாறானதாக இருக்கிறதே!’ என்று வியப்பு தெரிவிக்கப்பட்டது. காரணம், சீனா எப்போதுமே பிற நாட்டுடன் சேர்ந்து எதிர்காலத்துக்கான பொதுப் பார்வையைப் பகிர்ந்துகொண்டதே இல்லை.

ஜி பதவிக்காலத்தில் டெங் சியோபிங்கின் சித்தாந்தத் திலிருந்து சீனா நகர்ந்துவிட்டது. “உரிய காலம் வரும்வரை நம்முடைய திறன்களை மறைத்துக் கொள் வோம், (உலக அரங்கில்) தலைமையைக் கோராமல் இருப்போம்” என்பதே டெங்கின் ஆலோசனை யாக இருந்தது. நீண்டகால நோக்கில் வகுத்துள்ள வெளியுறவுக் கொள்கைக்கு சீனத்தின் ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான் ராஜீய உறவுகளை ஒரு கருவியாக அது பயன்படுத்துகிறது.

எனவே, 2008-ல் அறிவிக்கப்பட்ட ‘பொதுப் பார்வையைப் பகிர்ந்துகொள்ளும் உத்தி’ கைவிடப்பட்டு, புதைக்கப்பட்டுவிட்டது. எனவே, அடுத்து என்ன என்று பார்க்க வேண்டும். ராணுவ உத்திகள் அல்லது உடன்பாடுகள் தொடர்பாக சீனா விரிக்கும் கண்ணியில் இந்தியா சிக்கிவிடக் கூடாது. மிகவும் சிக்கலான ராணுவ - ராஜீய உறவுகளின் வடிவத்தை, மேலோட்டமாகப் பார்க்கும்போது மிகவும் எளிதாகத் தோன்றும் வகையில் அமைத்துவிடுவார்கள்.

பல்வேறு விதமான அரசியல், ராணுவ மாற்றங்கள் இந்தப் பிராந்தியத்தில் நிகழ்ந்துகொண்டிருப்பதால், உண்மையான நடப்பு நிலை என்பது சிக்கலாகிக்கொண்டே வருகிறது. மேற்காசியாவில் ஏற்பட்டுவரும் புதிய ஆபத்துகள், ஆப்கானிஸ்தானில் நிலவும் நிச்சயமற்ற நிலை, தலிபான்களுடன் ஐ.எஸ். தீவிரவாதிகள் இணைந்து செயல்படுவது, தென்-கிழக்கு ஆசியாவிலும் கிழக்கு ஆசியாவிலும் வெவ்வேறு நாடுகளில் நிலவும் பதற்றம், நாளுக்குநாள் சீனா தன்னுடைய ஆதிக்கத்தை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் போன்றவை நாடுகளுக்கு இடையிலான பலத்தில், சமமற்ற நிலையை ஏற்படுத்தி வருகிறது.

வளர்ச்சியின் தாக்கங்கள்

சீனா, ‘கடல் பயணக்காலப் பட்டுப் பாதை’ என்ற பழைய வாணிபப் பாதையை மீண்டும் புதுப்பிக்க எடுத்துவரும் துணிச்சலான நடவடிக்கைகளால் 50-க்கும் மேற்பட்ட நாடுகளை இணைக்கப் பார்க்கிறது. நில வழியிலும் கடல் வழியிலும் இந் நாடுகள் அமைந்துள்ளன. இது வெறும் வாணிபப் பாதையை நினைவுபடுத்திக் கொண்டாடுவதற்காக மட்டுமல்ல. சீனத்தின் 2015-வது ஆண்டு பட்ஜெட்டில் ராணுவத்துக்கென்று சுமார் 8,50,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. 1989 முதல் 26-வது ஆண்டாக ராணுவ ஒதுக்கீடு தொடர்ந்து அதிகரிக்கப் பட்டு வருவதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தேடிவந்து உதவும் கொள்கை

தன் மீது நம்பிக்கை வைத்து உறவு கொள்ளும் நாடு களுக்குத் தேவைப்படும் உதவிகளை (கேட்காமலேயே, எதிர்பார்ப்புகளுக்கு மேல்) தானாகவே செய்வது என்ற கொள்கையை சீனா கடைப்பிடிக்கிறது. இது எத்தகைய தன்மையது என்பதை மோடி தனது பயணத்தின்போது நேரில் அறிந்துகொள்ளலாம். புதிய வளர்ச்சி வங்கி, ஆசிய அடித்தளக் கட்டமைப்பு முதலீட்டு வங்கி ஆகியவற்றை சீனா தொடங்கியிருப்பதே இப்போதுள்ள சர்வதேச நிதி அமைப்புகளுக்கு வலுவான மாற்று அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற அதன் முடிவைக் காட்டுகிறது. ‘ஒரே பிராந்தியம், ஒரே பாதை’ என்ற அதன் முன்முயற்சி சீனத்தின் மத்திய ஆசிய நாடுகளுடனான உறவையும் வாணிபத்தையும் மேலும் வலுப்படுத்திக்கொள்ளத்தான். பசிபிக் கடற் கரையிலிருந்து பால்டிக் கடல் பகுதி வரையில் யூரேஷிய நிலத் தாழ்வாரத்தை ஏற்படுத்தி ஆசியாவில் அமெரிக்காவின் செல்வாக்கைக் குறைக்க வேண்டும் என்று முயற்சிக்கிறது. சீனாவின் கடல் பயணக்காலப் பட்டுப் பாதை என்ற கொள்கையானது, இந்தியாவுக்குள் நுழையாமலேயே அதைச் சுற்றிச் செல்வதற்கும், இந்தியாவின் ராஜீய முயற்சிகளை ஒரு எல்லைக்குள் கட்டுப்படுத்தவும்கூட சீனத்துக்கு உதவக்கூடும்.

உலகின் 415 இடங்களில் (இந்தியாவில் 15) கன்ஃப்யூசியஸ் நிறுவனங்கள் மூலம் பொதுமக்களை அணுகும் ராஜீயக் கொள்கையை சீனா கடைப்பிடிக்கிறது. சீன மக்கள் குடியரசின் கல்வி அமைச்சகத்துடன் இணைக்கப்பட்டுள்ள இந்த நிறுவனங்கள் சீனமொழி, கலாச்சாரத்தை வெளிநாடுகளில் பரப்பும் வேலையைச் செய்கின்றன. இந்த நிறுவனங்களுக்கும் சீனத்தில் உள்ள அதிகாரிகளுக்குமான தொடர்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ராணுவத்தைப் பயன்படுத்தாமலே மென்மை யான சக்தியைப் பயன்படுத்தி பிற நாடுகளைத் தனக்குச் சாதகமாக வளைக்கும் உத்தி இது.

ராஜீயரீதியாக சீனா பல வெற்றிகளைப் பெற்று விட்டது. அவற்றில் சில இந்தியாவின் வெளியுறவு முயற்சிகளைக் கணிசமாகப் பாதிக்கக்கூடியவை. சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள மாற்றமும் அதிகரித்துவரும் நெருக்கமும் நல்ல உதாரணம். சுமார் 24 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள எரிவாயு விற்பனை ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன. நிரந்தர உலக அமைதிக்காகத் தங்களுக்கிடையே ராணுவ ரீதியிலான உறவை வலுப்படுத்திக்கொள்வது என்று சீனாவும் ரஷ்யாவும் முடிவெடுத்துள்ளன. ஈரானுடன் உள்ள நீண்டகால நட்பு காரணமாக அந்நாடு வழியாக கடலை அடையும் வசதியையும் சீனா பெற்றிருக்கிறது.

சீனா-பாகிஸ்தான் பொருளாதாரத் தாழ்வாரத்துக்குச் சுமார் 2,80,000 கோடி ரூபாயை சீனா ஒதுக்கியிருக்கிறது. இது மேற்கு சீனத்தை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரம் வழியாக க்வாதர் துறைமுகம் வரை இணைக்கக்கூடியது. இதன் மூலம் சீனத் துருப்புகளையும் படைக்கலன்களையும் அத்துறைமுகம் வழியாகக் கொண்டு சென்றுவிட முடியும். ஹூ-வென் காலத்துக்குப் பிறகு, சீனா-பாகிஸ்தான் உறவு இப்போது மேலும் நெருக்கமாகிக்கொண்டிருக்கிறது. இவையெல்லாம் நிச்சயம் இந்தியாவுக்கு அச்சுறுத்தல்தான். இந்தப் பயணத்தின்போது மோடி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தன்னுடைய ராணுவ பலத்தைச் சுயநலமின்றி பொது நலனுக்காகப் பயன்படுத்துவது சீனத்துக்கு வழக்கமில்லை. சீனம் மட்டுமல்ல, எந்த நாடும் அப்படி நடக்காது. எனவே, பாதுகாப்பு தொடர்பான இந்த அம்சங்கள்குறித்து இந்தியா எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும்.

மிதமிஞ்சிய தேசியவாதம், தான்மட்டும் விதிவிலக்கு என்ற எண்ணம், சீனத்தை மையமாகக் கொண்ட கொள்கைகள், நடவடிக்கைகள் போன்றவையே அதிபர் ஜி ஜின்பிங்கின் ஆட்சி முறையாக இருக்கிறது. இந்தியா போன்ற நாடுகள் இவற்றை அலட்சியம் செய்துவிட முடியாது. எனவே வர்த்தகம், பொருளாதாரம் ஆகிய வற்றைத் தாண்டியும் மோடி பேசியாக வேண்டும்!

- எம்.கே. நாராயணன்,

முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்,

©‘தி இந்து’, சுருக்கமாகத் தமிழில்: சாரி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்