ஒரே உரையாடலை ஆணும் பெண்ணும் வெவ்வேறு விதமாக அர்த்தம் செய்துகொள்வதால்தான் குழப்பம் ஏற்படுகிறது.
ரயில் ஓடிக்கொண்டிருந்தது. எனக்கு எதிரேயிருந்த இருக்கையில் கணவனும் மனைவியும் அமர்ந் திருந்தனர். இரண்டு பேருக்கும் வயது நாற்பதுக்குள் இருக்கும். ஒரு இளைஞர் ‘காபி… காபி’ என்று குரல்கொடுத்தவாறு காபி டிரம்முடன் வந்தார்.
“காபி சாப்பிடுகிறீர்களா?’’ என்று மனைவி கேட்டார்.
“வேண்டாம்” என்று தலையசைத்தார் கணவர்.
உடனே கோபத்துடன் திரும்பி உட்கார்ந்துகொண்டார் மனைவி. அதைப் பார்த்த கணவர், இவள் எதற்கு முகத்தைத் தூக்கிவைத்துக்கொண்டாள் என்று புரியாமல் விழித்தார்.
எனக்குப் புரிந்தது. மனைவி காபி குடிக்க விரும் பினார். எனக்குக் காபி வாங்கிக்கொடுங்கள் என்று நேரடியாகச் சொல்லத் தோன்றாமல், இருவரும் காபி குடிப்போம் எனப் பொருள்படும்படியாக, காபி சாப்பிடுகிறீர்களா என்று கணவரிடம் கேட்டார். அவருக்குத் தேவையில்லை என்றாலும், தனக்காக அவரும் சேர்ந்து குடிப்பார் என்று நினைத்திருப்பார். அல்லது உனக்கு வேண்டுமென்றால் குடி என்று பரிவாவது காட்டுவார் என்று எதிர்பார்த்திருக்கக்கூடும். இரண்டும் நடக்கவில்லை. அதனால் ஏமாற்றமும் எரிச்சலும் அடைந்தார்.
ஆணறியாப் பெண் மொழி
பெண் மொழியைப் புரிந்துகொள்ளும் திறமை கணவருக்கு இல்லை. மனைவியும், கணவர் தனக்குத் தான் வேண்டாம் என்று சொன்னார், நமக்கும் சேர்த்துச் சொல்லவில்லை என்பதைப் புரிந்துகொள்ளவில்லை. எனக்கு காபி வேண்டும் என்று அந்தப் பெண் கேட்டிருந் தால் நிச்சயம் கணவர் வாங்கித் தந்திருப்பார்.
ஒரே உரையாடலை ஆணும் பெண்ணும் வெவ் வேறு விதமாக அர்த்தம் செய்துகொள்வதால்தான் குடும்பங்களில் குழப்பம் ஏற்படுகிறது. அத்துடன் ஒரே விஷயத்தை அவர்கள் வெவ்வேறு பாணிகளில் சொல்கிறார்கள். அதன் காரணமாக, கணவன் சுயநலவாதி என்று மனைவியும், மனைவி அசட்டுப் பிடிவாதம் பிடிக்கிறாள் எனக் கணவனும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டிக்கொள்கிறார்கள்.
அமெரிக்க ஆய்வு
ஆண்களும் பெண்களும் பேசுகிறபோது வெவ்வேறு உரையாடல் விதிகளைப் பின்பற்றுகிறார்கள் என்று அமெரிக்க ஆய்வுக்குழு ஒன்று கண்டறிந்துள்ளது. இந்த உரையாடல் வேறுபாட்டை கணவன், மனைவி புரிந்துகொண்டுவிட்டால் குடும்பத்தில் சண்டையே வராது.
ஓர் ஆண் உரையாடுவதற்கு, எதிராளியைவிடத் தான் மேலானவன் என நிறுவுவதும், எதிராளி தன்னைவிட மேலானவன் அல்லன் என நிறுவுவதுமே முதன்மையான காரணங்கள். அவனுடைய பேச்சுகள் அந்த நோக்கிலேயே வெளிப்படும். ஆனால், பெரும்பாலான பெண்கள், எதிராளியுடன் சமத்துவத்தை நிறுவி - பரஸ்பரம் இசைந்த கருத்துகளையும் ஆதரவுகளையும் பரிமாறிக்கொள்கிற விதமாகவே பேசுகிறார்கள்.
கணவனும் மனைவியும் வெவ்வேறு ஊர்களில் பணியாற்ற வேண்டிய நிலை. அப்போது வேண்டப்பட்ட ஒருவர், “எப்படிச் சமாளிக்கிறீர்கள்... ரொம்பக் கஷ்டமாயிருக்குமே?” என்று கேட்டால், பெண் நன்றியுடன் அந்தப் பரிவையும் அனுதாபத்தையும் அங்கீகரித்து ஏற்றுக்கொள்வாள். ஆனால் அதையே ஆணிடம் சொன்னால், “அதில் என்ன கஷ்டம், இந்தக் காலத்தில் இரண்டு பேரும் சம்பாதித்தால்தான் குடும்பம் நடத்த முடியும். நான் வாரா வாரம் சனி, ஞாயிறுகளில் ஊருக்குச் சென்று விடுகிறேன். அவசர, அவசியத்துக்கு லீவு போட்டுவிட்டு குடும்பத்துக்கு உதவி செய்துவிட்டு வருவேன்” என்பான்.
அவர் சொல்வதெல்லாம் உண்மைதான். எல்லா ஆண்களுமே வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ளவே விரும்புவார்கள். ஓர் ஆணிடம் போய், “நீயும் உன் மனைவியும் பிரிந்திருப்பது கஷ்டமாயில்லையா?” என்று யாராவது கேட்டால், அதில் ஓர் உள்ளர்த்தம் இருப்பதாக அவருக்குத் தோன்றுகிறது. “நீ திருமணம் செய்துகொண்டதில் அர்த்தமே இல்லை. என்னைப் பார், நானும் என் மனைவியும் ஒரே ஊரில் இருக்கிறோம். நான் உன்னைவிடச் சந்தோஷமாயிருக்கிறேன். ஆகவே, நான் உன்னைவிட மேலானவன்!” என்று குத்திக் காட்டுவதாகவே அவன் உணர்வான். “அப்படியில்லை, நான்தான் உன்னைவிட மேலானவன்” என்று நிறுவ முயற்சி செய்யத் தொடங்குவான்.
முடிச்சுகளால் இணைந்த உலகம்
உலகத்தை ஒரு வலையமைப்பாகவே பார்க்கிறார்கள் பெண்கள். வலையிலுள்ள ஒவ்வொரு முடிச்சும் அடுத்துள்ள முடிச்சுகளுடன் இணைந்திருப்பதைப் போலச் சக மனிதர்களும் ஒருவருக்கொருவர் பல வகையான உறவுகளால் பிணைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் எல்லோரும் இணக்கமாயிருந்தால்தான் வாழ்க்கை சீரானதாயிருக்கும் என்பதையும் அவர்கள் அறிந்திருக்கிறார்கள். அவர்களுக்கு உறவுகளும் நட்புகளும் தாங்கல்களும் முக்கியமானவை. உறவுகளின் நெருக்கத்தைப் பராமரிக்கவே பெண்கள் முயல்வார்கள். மகாபாரதத்தில்கூடப் பெண் பாத்திரங்கள் கடைசிவரை ஒருவருக்கொருவர் அனுசரணையாக இருக்கிறார்கள். ஆண்கள்தான் மற்றவருடன் ஒட்டாத சுயேச்சைத் தன்மையை அடைய முயல்கிறார்கள். இந்த வேறுபட்ட அணுகுமுறைகளும் கண்ணோட்டமும் ஒரே சந்தர்ப்ப சூழ்நிலையை ஆணும் பெண்ணும் வெவ்வேறுவிதமாகப் பார்க்க வைக்கின்றன.
ஒரு கணவன் தன் நண்பர்களிடம், “எதுக்கும் என் மனைவியின் கருத்தைக் கேட்டுவிடுகிறேன்” என்று வெளிப்படையாகச் சொல்ல வெட்கப்படுகிறான். ஆனால் மனைவி, “அய்யோ! அவரைக் கேட்காமல் ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போட மாட்டேன்!” என்று சொல்வதைப் பெருமையாக நினைக்கிறாள்.
இணக்கம் முக்கியம்
குடும்பத்தில் பேச்சுகளை - கோரிக்கை, ஆலோசனை, உத்தரவு என - மூன்று வகையாகப் பிரிக்கலாம். வீட்டுக்கு பெயின்ட் அடிக்க வேண்டும் என்பது கோரிக்கை. “என்ன நிற வண்ணம் பூசலாம், நீல வண்ணம் நல்லாயிருக்குமில்லையா?” என்பது ஆலோசனை. நீல வண்ணம்தான் அடிக்கணும் என்பது உத்தரவு. மூன்றுக்கும் நோக்கம் ஒன்றுதான். ஆனால், சில பெண்கள், கோரிக்கையை உத்தரவாகத் தப்பர்த்தம் கொண்டுவிடுவார்களோ என்று அஞ்சி, அதை ஆலோசனையைப் போல வெளியிடுவார்கள். “என்ன நிறம் வேண்டும் என்று நேரடியாகச் சொல்லிவிடு” என்று கணவர் சிடுசிடுப்பார். நீல வண்ணம்தான் அடிக்க வேண்டும் என்று உத்தரவு போட்டிருந்தால்கூட அவ்வளவு கோபம் வந்திருக்காது. பெரும்பாலான கணவர்கள் இதுபோன்ற சின்ன விஷயங்களில் மனைவிக்கு விட்டுக்கொடுத்துவிடுகிறார்கள். நிறத்தைவிடக் குடும்பத்தின் இணக்கம் அதிக முக்கியம் வாய்ந்தது என்பதே அவர்களுடைய கொள்கை.
பெரும்பாலான ஆண்களிடம் ஒரு பிரச்சினையைச் சொன்னால், அவர்கள் உடனே அதற்குத் தீர்வு காண முயல்வார்கள். “நான் ரொம்பக் குண்டாயிட்டேனா?’ என்று மனைவி கேட்டால் உடனே கணவன், “டாக்டரிடம் போய்ப் பரிசோதித்துக்கொள்கிறாயா?” என்று கேட்கிறார்.
மனைவிக்குக் கோபம் வருகிறது. ‘‘எதற்காக டாக்டரிடம் போகணும்? இது என்ன வியாதியா? நான் குண்டாயிருந்தால் உங்களுக்குப் பிடிக்காதா?” என்று சீறுகிறாள். கணவன் குழம்புகிறான். “நீ ஒன்றும் குண்டோடு சேர்த்தியில்லை, கொஞ்சம் பூசினாற்போல இருக்கிறாய், அவ்வளவுதான்” என்று அவன் சொல்லியிருக்க வேண்டும். “முன்னைவிட அழகு கூடியிருக்கிறது” என்றுகூடச் சேர்த்துக்கொண்டிருக்கலாம்.
பெண்களுக்கு மற்றவர்களுடன் பேசப் பிடிக்கும். தன் மனதிலிருப்பதை உரத்த சிந்தனையாகவாவது பக்கத்தில் இருப்பவர்களிடம் சொல்லிவிட வேண்டும். பேச விஷயமில்லாவிட்டால்கூட, “என்ன இப்படிப் புழுங்குகிறது!” என்று ஆரம்பிப்பார்கள். உடனே கணவன், “ஆமாமா, ரெண்டு நாளாகவே வெயில் அதிகம்தான்” என்று ஏதாவது பதிலைச் சொல்லிவிட்டு, தான் செய்துகொண்டிருக்கும் வேலையைத் தொடர வேண்டும். பல ஆண்கள், உரையாடல் என்பது உருப்படியான தகவல் பரிமாற்றமாக மட்டுமே இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். மனதில் தோன்றுவதையெல்லாம் வெளியில் சொல்லிக்கொண்டிருப்பது அவசியமில்லை, “புழுங்குகிறது என்பது எல்லோருக்கும் தெரிகிறதே, அதை வாய்விட்டுச் சொல்லிக்கொண்டிருக்க வேண்டுமா” என்று அவர்கள் சும்மாயிருந்துவிடுவார்கள்.
- கே.என். ராமசந்திரன், பேராசிரியர் (ஓய்வு).
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago