நாற்காலிக்கும் சக்கர நாற்காலிக்கும் இடையே...

By மனுஷ்ய புத்திரன்

புத்திசாலித்தனத்தோடு மட்டும் சம்பந்தப்பட்டதல்ல அறிவியல்; சக மனிதர்கள் மீதான அக்கறையோடும் சம்பந்தப்பட்டது!

இந்தியாவில் சக்கர நாற்காலியைப் பயன்படுத்துகிறவர்கள் அடையக் கூடிய துன்பங்களுக்கு எல்லையே இல்லை. பயணங்களிலேயே சவுகரியமான பயணமாகக் கருத்தப்படும் விமானப் பயணங்களும் (இந்தியாவில்) இதற்கு விதிவிலக்கு இல்லை.

நான் விமானத்தில் பயணம் செய்யும்போது உள்ளே நுழைந்ததும் எனது சக்கர நாற்காலியை வாங்கி லக்கேஜில் போட்டுவிட்டு, அவர்கள் சக்கர நாற்காலியில் அழைத்துச் செல்வார்கள். அது விமானத்தில் நுழையத்தக்க வகையில் சிறியதாக இருக்க வேண்டும். பயணியை அவரது இருக்கை வரை அழைத்துச் செல்ல வேண்டும் என்பது விதி. ஆனால், நடைமுறை வேறு. சாதாரணமாக வீடுகளில் பயன்படுத்தும் பெரிய சக்கர நாற்காலியையே எடுத்து வருவார்கள். அதுவும் ஏதாவது பாகம் உடைந்த நிலையில்தான் இருக்கும். சில விமான நிலையங்களில் சில விமானங்கள் மட்டுமே ஏரோ ப்ரிட்ஜ்ஜோடு இணைக்கப்படும். நாம் நேரடியாக விமானத்துக்குள் சென்றுவிடலாம். பெரும்பாலான விமானங்களுக்கு அந்த வசதி இருக்காது. விமான ஓடுபாதையின் நீண்ட தூரத்துக்குத் தடதடவென அந்தச் சக்கர நாற்காலியைத் தள்ளிக்கொண்டே செல்வார்கள். கொட்டும் பனியிலும் கடும் வெயிலிலும் பலமுறை அப்படி அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறேன். சரி, விமானத்தின் அருகில் சென்றாகிவிட்டது. விமானத்தில் ஏறுவது எப்படி?

பார்த்தே பல வருடங்கள் ஆகிவிட்டன

முன்பெல்லாம் சென்னை விமான நிலையத்தில் ஹைட்ராலிக் லிப்ஃட் ஒன்றைப் பயன்படுத்துவார்கள். ஒரு சிறிய லாரி போன்ற வாகனம். அதில் சக்கர நாற்காலி பயணிகளைத் தனியே அழைத்துச் செல்வார்கள். அந்த லாரியில் ஒரு சிறிய லிஃப்ட் இருக்கும். அது விமானத்தின் நுழைவாயில் வரை உயரும். உள்ளே சென்றுவிடலாம். ஆனால், இப்போது அந்த ஹைட்ராலிக் லிஃப்ட்டை நான் கண்ணால் கண்டே பல வருடங்கள் ஆகிவிட்டன.

விமானத்தின் அருகே சக்கர நாற்காலி நிறுத்தப்பட்டதும் உடன் வந்த ஊழியர் ‘‘சார், கொஞ்சம் நடந்து மேலே போக முடியுமா?’’ என்று கேட்பார். என்னால் நடக்க முடியாது என்ற மகத்தான உண்மையை அவரிடம் அவருக்குப் புரிகிற விதமாகச் சொல்ல வேண்டும். பிறகு, ஊழியர்கள் பின்புறம் இருவர், முன்புறம் இருவர் என நம்மை அந்தச் சக்கர நாற்காலியோடு விமானத்தின் குறுகலான படிகளில் தூக்கிச் செல்வார்கள். இது உண்மையில் ஒரு மரண அவஸ்தை. எந்த நேரமும் நாம் கீழே விழுவதற்கான எல்லா வாய்ப்புகளும் இதில் உண்டு. உள்ளே நுழைந்ததும் வேறொரு முக்கியமான பிரச்சினை ஆரம்பமாகும். நம்முடைய சீட் எங்கோ பின்னால் இருக்கும். வீல் சேர் உள்ளே போகாது. அதே ஊழியர் மறுபடியும் “சார் கொஞ்சம் மெதுவா நடந்து போயிடுறீங்ளா?’’ என்பார். இந்த முறை நான் அவர்களுக்குப் பதில் அழகான ஏர் ஹோஸ்டஸிடம், “எனக்கு நடக்க முடியாது” என்ற மகத்தான உண்மையை இன்னொரு முறை சொல்வேன். அவர் திரும்பத் திரும்ப ‘‘ஸாரி’’ கேட்பாரே ஒழிய, எந்தத் தீர்வும் காண முடியாமல் தவிப்பார். ஊழியர்கள் யதார்த்தமான தீர்வுக்கு வர முயற்சிப்பார்கள். “சார், உங்களை அப்படியே தூக்கி அங்கே வச்சிடட்டுமா?’’ என்பார்கள். “என்னை யாரும் தொட அனுமதிக்க மாட்டேன்” என்பேன் உறுதியான குரலில். இந்தத் தகராறு ஒவ்வொரு முறையும் சுமார் அரை மணி நேரம் நடக்கும்.

அது உங்கள் பொறுப்பு

சில தினங்களுக்கு முன்பு விமானத்தில் மதுரை சென்றேன். சென்னை விமான நிலையத்தின் டிக்கெட் கவுன்ட்டரில் ‘‘என்னால் நடக்க முடியாது’’என்ற மகத்தான உண்மையைச் சொல்லி, எனக்கு முன்புறம் இருக்கையை அளிக்க வேண்டும் என்று கேட்டேன். ‘‘உங்களுக்கு ப்ரீமியம் சீட் அளிக்க முடியும். ஆனால், அதற்கு ரூ. 750 கூடுதலாகச் செலுத்த வேண்டும்” என்றார்கள். நான், “அவ்வாறு செலுத்த முடியாது” என்று சொல்லி “அதேசமயம், எனது இருக்கைக்குச் சக்கர நாற்காலியில் என்னை அழைத்துச் செல்வது உங்கள் பொறுப்பு” என்று அவர்களுடைய கடமையை நினைவூட்டினேன். டிக்கெட் கொடுப்பவர் என்ன நினைத்தார் என்று தெரியவில்லை. “சரி, உங்களுக்கு இரண்டாவது வரிசையில் உள்ள ப்ரீமியம் சீட்டை காப்ளிமெண்ட்டாகத் தருகிறேன்” என்றார் பெருந்தன்மையாக (ப்ரீமியம் சீட் என்றால் பிஸினஸ் க்ளாஸ் என்று நினைத்துவிடாதீர்கள். முன்புறம் உள்ள இருக்கையைத்தான் அப்படி அழைக்கிறார்கள்). ஆனால், அந்த இரண்டாம் வரிசை இருக்கையையும் வழக்கமான எல்லாக் கொடுமைகளையும் அனுபவித்துதான் அடைய வேண்டி இருந்தது.

அடுத்த சித்திரவதை

மதுரையில் விமானம் தரையிறங்கியது. அடுத்த சித்திரவதை ஆரம்பமானது. சக்கர நாற்காலிக்காக எல்லாப் பயணிகளும் இறங்கி முடிக்கும் வரை சுமார் 20 நிமிடங்கள் அங்கேயே உட்கார்ந்திருந்தேன். பிறகு. கொண்டுவந்த சக்கர நாற்காலியும் இருக்கை வரை வரவில்லை. மறுபடி சண்டை. இந்தச் சண்டையில் வழக்கம்போலத் தோல்வியடைந்து தட்டுத்தடுமாறி சக்கர நாற்காலிக்கு வந்து சேர்ந்தேன். அதே மரண அவஸ்தையுடன் சக்கர நாற்காலியைப் படிகளில் இறக்கிக் கொண்டுவந்தார்கள்.

மதுரையில் இருந்து சென்னை திரும்பும்போது அதே விமானம். மறுபடியும் அதே கொடுமைகள். சென்னை விமான நிலையம் வந்தடைந்ததும் எல்லோரும் இறங்கிவிட்டார்கள். நான் மட்டும் காத்திருக்கிறேன் சக்கர நாற்காலிக்காக. விமானத்தில் ஏறுவதற்காக ஆட்கள் க்யூவில் நின்றுகொண்டிருக்கும் சமயத்தில் சக்கர நாற்காலி கொண்டுவந்தார்கள். அது இருக்கைக்கு வராது. நான்தான் அதனிடம் போக வேண்டும். வெளியே பார்த்தேன். பிரம்மாண்டமான ஓடுபாதையில் மின்விளக்குகள் மாயாஜாலம்போல ஒளிர்ந்துகொண்டிருந்தன. மனிதனின் கண்டுபிடிப்புகளில் விமானப் பயணம் எத்தனை அற்புதம்! 25 நிமிடங்களில் மதுரையிலிருந்து சென்னைக்கு வந்துவிட்டேன். ஆனால், என் இருக்கையிலிருந்து ஒரு சக்கர நாற்காலிக்கு மாற 35 நிமிடங்கள் நான் காத்திருக்க வேண்டியிருக்கிறது. மீண்டும் சக்கர நாற்காலியை நோக்கி ஒரு போராட்டம். விமான நிலையத்திலிருந்து வெளியேறும் போது எங்கும் கசப்பு சூழ்ந்திருப்பதாகத் தோன்றுகிறது.

ஏமாற்றும் விமான நிறுவனங்கள்

அறிவியல் என்பது புத்திசாலித்தனத்தோடு மட்டும் சம்பந்தப்பட்டதல்ல. அது மனித இதயத்தோடும் சக மனிதர்கள் மீதான அக்கறையோடும் சம்பந்தப்பட்டது. லாப வெறியும் அக்கறையின்மையும் எந்த அறிவியலையும் எந்த ஏற்பாட்டையும் பயனற்றதாக்கிவிடும். சர்வதேசப் பயண விதிமுறைகளை ஏமாற்றுவதற்காக மட்டுமே விமான நிறுவனங்கள் சக்கர நாற்காலிகளை வைத்திருக்கின்றன. அவை மனிதர்களின் இயலாமை என்ற காயத்தை இன்னும் ஆழமாக்குகின்றன.

மனுஷ்ய புத்திரன், கவிஞர், உயிர்மை இதழின் ஆசிரியர், அரசியல் விமர்சகர்.

தொடர்புக்கு: manushyaputhiran@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 hour ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்