திருவனந்தபுரம் கல் அறைகளின் ரகசியங்கள்!

By ஆர்.கிருஷ்ணகுமார்

திருவனந்தபுரம் கோயில் நிர்வாக தில்லுமுல்லுகளை அம்பலமாக்குகிறது கோபால் சுப்ரமணியம் அறிக்கை

திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாப சுவாமி ஆலயத்தின் ரகசிய அறைகளில் வைக்கப் பட்டுள்ள தங்க, வைர, வெள்ளி நகைகள், பாத்திரங்கள், நவரத்தினங்கள், பணம் உள்ளிட்டவற்றைக் கணக்கெடுக்க விரைவில் வினோத் ராய் வரவிருக்கிறார். முன்பு, தலைமைக் கணக்குத் தணிக்கையாளராக (சி.ஏ.ஜி.) இருந்தபோது, அலைக்கற்றை ஊழலை அம்பலப்படுத்தியவர்தான் வினோத் ராய். அவருடைய தலைமையில் உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள தணிக்கையாளர்கள் குழு தனது பணிகளைத் தொடங்கும் வரை திருவனந்தபுரம் மாவட்ட நீதிபதி தலைமையிலான குழுவிடம் ஆலய நிர்வாகப் பணிகளை ஒப்படைத்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.

முடிவுக்கு வரும் அதிகாரம்

ஸ்ரீ மூலம் திருநாள் ராம வர்மா என்பவர்தான் அரச குடும்பத்தின் சார்பில் முழு நிர்வாகப் பொறுப்பை வகித்துவந்தார். புதிய ஆணையின்படி ஆலயத்தின் முக்கிய ரகசிய அறைகளின் சாவிகள் புதிய குழுவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். ஆலயத்தின் அன்றாட பூஜைகளுக்கான பாத்திரங்கள், சாதனங்கள் உள்ள அறைகளின் சாவிகள் மட்டும் அரச குடும்பத்தைச் சேர்ந்த  ராம வர்மாவிடமே இருக்கும். உச்ச நீதிமன்ற இந்த உத்தரவின் மூலம், இந்த ஆலயத்தின் அறங்காவலர்களாகச் செயல்பட்டுவந்த திருவனந்தபுரம் அரசக் குடும்பத்தின் 300 ஆண்டு பாரம்பரியம் கடந்த ஏப்ரல் 25-ம் தேதியோடு முடிவுக்குவந்துள்ளது.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கடைசி மன்னராக இருந்த சித்திரைத் திருநாள் பலராம வர்மாவின் சகோதரர் உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா, தனது காலத்தில் ஆலயத்தின் சொத்துகளைச் சொந்தமாகக் கருதி, அனைத்தையும் கட்டுப்படுத்தியதையும், நிர்வகித்ததையும் எதிர்த்து கீழ் நீதிமன்றங்களில் பொதுமக்களால் தாக்கல்செய்யப்பட்ட பல்வேறு மனுக்களுக்குப் பதில் அளிக்கும் வகையில் உச்ச நீதிமன்றத்தின் இப்போதைய நடவடிக்கை அமைந்திருக்கிறது.

கல் அறைகளின் பின் சங்கதிகள்

ரகசிய அறைகளை மலையாளத்தில் 'கல்லறா' என்று அழைக்கின்றனர். அதாவது, கல் அறை. 2012 தொடங்கி, உச்ச நீதிமன்றம் நியமித்திருந்த இன்னொரு கமிட்டி ஆறு அறைகளில் ஐந்து அறைகளைத் திறந்து அவற்றிலிருந்தவற்றைக் கணக்கெடுக்க முற்பட்டது. இந்த அறைகள் ஆலயத்தின் கருவறையைச் சுற்றி இருக்கின்றன. அந்தக் குழுவுக்கு ஆலயத்தின் நகைகளையும் இதரச் சொத்துகளையும் கணக்கெடுப்பதுடன் மதிப்பை நிர்ணயிக்கும் கடினமான பணியும் வழங்கப்பட்டிருந்தது.

ஆலயத்தின் விலைமதிப்புமிக்க சொத்துகள் அதிகம் இருப்பதாகக் கருதப்படும் கல் அறை 'பி' பாதுகாப்பு கருதியும் சில தொழில்நுட்பக் காரணங்களாலும் திறக்கப்படவில்லை. இந்த அறையைத் திறந்தால் அது பல கெடுதல்களை ஏற்படுத்தும் என்று புரளியும் கிளப்பப்பட்டிருக்கிறது.

அம்பலத்து ஊழலை அம்பலப்படுத்திய அறிக்கை

ஆலயத்தின் நிர்வாக நிலை குறித்து ஆராய முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம் நியமிக்கப்பட்டிருந்தார். ஆலயத்தையும் அதன் உள்பகுதிகளையும் 34 நாள்கள் சுற்றிச்சுற்றி ஆய்வுசெய்து அவர் தயாரித்த 575 பக்க அறிக்கையை அடுத்தே, ஆலய நிர்வாகத்துக்கென ஒரு குழுவையும் நகைகளை மதிப்பிட ஒரு குழுவையும் உச்ச நீதிமன்றம் நியமிக்க நேர்ந்தது.

கோபால் சுப்ரமணியத்தின் இந்த அறிக்கை திருவனந்தபுரம் கோயில் கல் அறைகளின் ரகசியங்களை மட்டுமல்லாமல், அதன் பின்னே நடக்கும் களவுகளையும் ஒளிந்திருக்கும் ஊழலையும் அம்பலப்படுத்துகிறது.

கணக்கும் இல்லை வழக்கும் இல்லை!

“கோயிலைத் தங்களுடைய சொந்தச் சொத்துப்போலப் பாவித்து அதற்கு வந்த வருமானத்தையும் காணிக்கைகளையும் முறையாகக் கணக்கு வைக்காமலும் பராமரிக்காமலும் அலட்சியப்படுத்தியிருக்கின்றனர். சொந்த அனுபோகத்துக்கு அவற்றைப் பயன்படுத்தியுள்ளனர். கடந்த 30 ஆண்டுகளாக ஆலயத்துக்குத் தரப்பட்ட தங்கம், வெள்ளி, ரொக்கம் ஆகிய காணிக்கைகளுக்குக் கணக்கே வைக்கப்படவில்லை. கல் அறை 'பி' திறக்கப்படக் கூடாது என்று நிர்வாகிகள் பலமாக ஆட்சேபித்திருந்தாலும், சில ஆண்டுகளுக்கு முன்னால் அந்த அறையை ஆலய அறங்காவலரும் சில அதிகாரிகளும் திறந்து உள்ளே போனதைப் பார்த்த சாட்சிகள் பலர் இருக்கின்றனர். அந்த அறை ஒரு முறை அல்ல பலமுறை இப்படித் திறக்கப்பட்டிருக்கிறது. அந்த அறையில் இருந்த அரச குடும்பத்தாரின் நகைகள் புகைப்படமும் எடுக்கப்பட்டிருக்கிறது. இவற்றையெல்லாம் பாதுகாக்கும் நோக்கில் இப்படிச் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. அவர்கள் எதையோ மறைக்கிறார்கள் என்பது நிச்சயமாகிறது.”

பூட்டே இல்லாத பணப்பெட்டி

“நிதிநிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையே இல்லை. ஆலயத்தில் அன்றாடம் வசூலான பணத்துக்கும் முறையான கணக்கு வைக்கப்படவில்லை. ஆலயத்தின் உண்டியலில் சேரும் சில்லறைகள்கூட எண்ணப்பட்டு திருச்சியிலிருந்து வரும் வியாபாரி ஒருவரிடம் கொடுக்கப்பட்டுவிடும் என்றுதான் ஆலயத்தின் அகத் தணிக்கையாளர் தெரிவிக்கிறார். இதைவிட அதிசயம் ரூபாய் வைத்திருக்கும் பணப் பெட்டிக்கு பூட்டே கிடையாது!”

“ஆலயத்தின் மதிப்புமிக்க சொத்துகள், நகைகள், அணிகலன்கள், பாத்திரங்கள் போன்றவை பல கல் அறைகளைத் தவிர ஆலயத்தின் பிற பகுதிகளிலும் ஏராளமாக இருக்கின்றன. அவையும் கணக்கெடுக்கப்படவில்லை. அதாவது கல் அறைகளில் இருப்பதற்கும் கணக்கு கிடையாது, கல் அறைகளுக்கு வெளியே பிற இடங்களில் இருப்பவற்றுக்கும் கணக்கு கிடையாது!”

- இப்படித் திருவனந்தபுரம் கோயிலில் நடந்த தில்லுமுல்லுகளை விரிவாகப் பட்டியல் போடுகிறது அந்த அறிக்கை.

கூட்டுக் களவாணிகள்

மேலும், இந்த விவகாரத்தில் ஆலய நிர்வாகத்துக்கு, அரசாங்கமும் காவல் துறையும் எப்படியெல்லாம் உடந்தையாக இருந்தன என்பதையும் அறிக்கை அம்பலப்படுத்துகிறது.

“இந்தத் தில்லுமுல்லுகளைத் தட்டிக்கேட்டவர்களும் கண்டித்தவர்களும் கடுமையாகப் பழிவாங்கப்பட்டனர். ஒரு ஊழியர் மீது திராவகம் வீசப்பட்டது. மற்றொரு சம்பவத்தில் ஆட்டோ டிரைவர் ஒருவர் கோயிலுக்கு எதிரில் உள்ள திருக்குளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ஆலய நிர்வாகம் தொடர்பான விசாரணைக்கு மாநில அரசு நிர்வாகம் சரியாக உதவவில்லை. ஒருசில சந்தர்ப்பங்களில் மறைமுக எதிர்ப்பும் இருந்திருக்கிறது. மாநில அரசுக்கும் ஆலய நிர்வாகிகளுக்கும் இடையே அன்னியோன்னியமான உறவு நிலவுகிறது. எனவே, நீதிமன்றத்தைத் தவறாக வழிநடத்தும் போக்கு தென்படுகிறது.”

“காணிக்கைகளும் விலை மதிக்க முடியாத பொருள்களும் இருப்பதாகக் கருதப்படும் கல் அறையை உடனடியாகத் திறந்து அவற்றில் இருப்பவற்றைப் பட்டியலிட்டு மதிப்பிட வேண்டும். இந்த அறையைத் திறக்க பக்தர்களிடையேயும் எதிர்ப்பு இருப்பதால் 'தேவ பிரஸ்னம்' பார்த்து ஒப்புதல் பெற்று இந்தப் பணியை மேற்கொள்ள வேண்டும்.”

“இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டுத் தடையாணையைப் பிறப்பிக்க வேண்டும் என்று கோரும் மன்னர் குடும்பத்தினர், ஆலயத்தை ஒழுங்காக நிர்வகித்திருக்க வேண்டியவர்கள். கடமை தவறிய அவர்கள் ஆலயத்தை நிர்வகிக்கும் உரிமையை இழக்க வேண்டும்.”

- இப்படித் தன் அறிக்கையில் சொல்கிறார் கோபால் சுப்ரமணியம்.

வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் இந்த வழக்கில் அடுத்த விசாரணை நடைபெறவுள்ளது. கோயில் நிர்வாகத்தின் எதிர்காலத்தை இந்த வழக்குத்தான் முடிவுசெய்யும். வழக்கு முடியும்போது இன்னும் ரகசியங்கள் வெளியே வரும்!

© ஃப்ரண்ட்லைன், தமிழில்: சாரி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்