சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களிலில் அமைந்துள்ள 1,300 ஏரிகளைப் பற்றிய ஆய்வினை மேற்கொண்டு அறிக்கையைத் தயாரித்திருப்பவர் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராரிசியர் எஸ்.ஜனகராஜன். அவரிடம், சென்னையின் குடிநீர்ப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுக்கான வழிமுறைகளைக் கேட்டபோது, நம்மிடம் அவர் பகிர்ந்துகொண்டதாவது:-
'தி இந்து'-வில் வெளியாகிவரும் கிருஷ்ணா பயணத் தொடரைப் படித்துவருகிறேன். சென்னைக்கு தெலுங்கு கங்கைத் திட்டம் உதவிகரமாக இருந்தாலும், அது நிரந்தரத்தீர்வாகாது. அக்கால்வாய் வரும்வழிநெடுகிலும் ஆந்திரப் பகுதிகளுக்குப் பெரும்பயன் கிடைக்கிறது. எஞ்சிய நீர் (Residual), சென்னைக்குக் கிடைக்கிறது. அதனால், சென்னையின் எதிர்காலக் குடிநீர்த்தேவையைக் கருத்தில் கொண்டு, நீடித்த ஒரு தீர்வினைக் காண்பது அவசியம்.
சென்னை நகரம், நதிநீர்ப்படுகையில் இல்லாததே குடிநீர்த்தட்டுப்பாடுக்குக் காரணம் என சிலர் கூறுகின்றனர்.
நாமென்ன ராஜஸ்தான் போன்ற இடத்திலா இருக்கிறோம்?
சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்த்து மொத்தமாக ஆண்டுக்கு 1250 மி.மீ. மழை சராசரியாகக் கிடைக்கிறது. இதில் கணிசமான நீர் வீணாகிவிடுகிறது. நம்மால் சேமிக்கமுடியவில்லை. இது முக்கியமான விஷயம்.
அதைப்போல், ஏரிகள் மிக, மிக முக்கியமான ஆதாரங்கள். சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் மட்டும் 3,600 ஏரிகள் இருந்தன என்று 1900-ல் வெளியிடப்பட்ட 'தமிழ் நினைவுக்குறிப்புகளில்' (Tamil Memoir) கூறப்பட்டுள்ளது. அவற்றில் தற்போது, ஆக்கிரமிப்பு, வீட்டு வசதிவாரிய வீடுகள், குப்பைகள், ஆலைக்கழிவுகள், ரியல் எஸ்டேட் ஆகியவை போக மீதம் 3 ஆயிரம் ஏரிகள் நம் கைவசம் உள்ளன. அவற்றின் வடிகால்களைத் தூர்வாரி மழைநீரை ஏரிகளில் சேமிக்க வேண்டும்.
3 ஆயிரம் ஏரிகள் இணைப்பு…
சென்னைக்கு வடக்கே கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், காட்டூர் போன்ற இடங்களிலும், கிழக்கு கடற்கரைச் சாலையில் சிறுதாவூர் போன்ற ஏரிகளும், மற்றும் பழைய மகாபலிபுரம் சாலைப் பகுதிகளில் மிகப்பெரிய ஏரிகள் இருக்கின்றன.
சென்னையைச் சுற்றியுள்ள 1300 ஏரிகளில் சமீபத்தில் ஆய்வுகளை மேற்கொண்டேன். அது தொடர்பான 12 தொகுப்புகளைத் தயாரித்திருக்கிறோம். அவற்றில் பெரும்பாலான ஏரிகள் சீரமைக்கப்படவேண்டிய நிலையில் உள்ளன. தவிரவும், அந்த ஏரிகளை முழுவதுமாக இணைக்கவேண்டும்.
2011 கணக்கெடுப்பின்படி, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் பகுதிகளில் 80 சதவீதம் நகரமயமாகிவிட்டது. இன்னும் கொஞ்ச காலம் போனால் மீதமிருக்கும் 20 சதவீதப்பகுதிகளையும், விலக்கு அளித்து, அதையும் நகரமயமாக்கிவிடுவார்கள். அதனால், மீதமிருக்கும் நிலபரப்பையும், அதிலிருக்கும் நீராதாரங்களையும் காக்கவேண்டும்.
ஏரிகளுக்குத் தண்ணீர் வரும் வரத்துக்கால்வாய்களைத் தூர்வாரி, ஏரிகளை ஆழப்படுத்தி, கரைகளைப் பலப்படுத்தவேண்டும். இதைச் செய்தாலே சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சி மாவட்டங்களில் குடிநீர்ப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாணமுடியும்.
சென்னையில் தற்போது குடிநீர்த்தேவை நாளொன்றுக்கு 1200 மில்லியன் லிட்டராக உள்ளது. ஆனால், குடிநீர் வாரியம் 600 மில்லியன் லிட்டரை மட்டுமே தருகிறது. மீதத்தேவைகளுக்கு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு தனியாரால் சப்ளை செய்யப்படுகிறது. நகரில் குடிநீரின் தேவை அடுத்த பத்தாண்டுகளில் இது இருமடங்காக அதிகரிக்கும்.
எனவே, குடிநீர் வாரியம் தாங்கள் சப்ளை செய்யும் நீரை மறுசுழற்சி செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
சென்னை மற்றும் சுற்றுப்பகுதிகளில் குடிநீர்ப்பிரச்சினையைப் போக்க பன்முக மேலாண்மை அவசியம். அதாவது ஏரிகள் சீரமைப்பு, நீர் மறுசுழற்சி முறை, குடிநீர் விநியோகக் குழாய்களில் மூலம் நீர் கசிவைத்தடுப்பது போன்ற பன்முக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
பல நூறு கோடி ரூபாய் செலவு செய்து கொஞ்சம் கிருஷ்ணா நீரைப் பெறும் அதே தொகையில், உள்ளூரில் அத்தொகையைச் செலவிட்டால் நிரந்தரத் தீர்வை உருவாக்கமுடியும்.
கோயில் குளங்களை….
சென்னையைப் பொருத்தவரையில் வடசென்னையில் எண்ணெய்க் கழிவுகளால் பல இடங்களில் நிலத்தடி நீர் மாசுபட்டுவிட்டது. தவிரவும், கூவம், பக்கிங்காம், அடையாறு, ஓட்டேரி நல்லா போன்றவற்றின் இருபுறக் கரைகளில் இருந்து 2 கி.மீ. தொலைவு வரை கழிவுநீர் புகுந்து நிலத்தடி நீர்பாழாகிவிட்டது. கடலோரப்பகுதிகளில் நிலத்தடி நீரில் உப்புநீர் புகுந்துவிட்டது. சென்னை முழுவதும் நிலத்தடி நீர் நச்சுத்தன்மை, உப்புத்தன்மை, மற்றும் மாசுக்களால் பாதிக்கப்பட்டுவிட்டது.
புறநகர்ப்பகுதிகளிலோ கழிப்பறை செப்டிக் டேங்குகளால் நிலத்தடி நீர் பாழாகிவிட்டது. ஆயினும், சென்னையின் 50 சதவீதத் தேவையை நிலத்தடி நீரே பூர்த்திசெய்கிறது. எனவே, நிலத்தடி நீரின் தரத்தை உயர்த்தவும், நீர்மட்டத்தை அதிகரிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டியது அவசியம்.
சென்னையில் ஒவ்வோராண்டும் நிலத்தடி நீர்மட்டம் அரைமீட்டருக்குக் கீழே போய்க்கொண்டிருக்கிறது. இதைத்தடுத்து நிறுத்த சென்னையைச் சுற்றியுள்ள கோவில் குளங்கள், இதர குளங்கள் மற்றும் குட்டைகளை தூர் வாரி நன்கு பராமரித்தாலே போதும். அதன்பின், சுற்றுப்பகுதிகளில் உள்ள நிலத்தடி நீரின் தரமும், நீர்மட்டமும் உயரும். வீடுளின் மழைநீர் சேகரிப்பை முன்பு போல் தீவிரமாக அமல்படுத்தவேண்டும். இதுபோன்ற பன்முக நடவடிக்கைகளை மேற்கொண்டால்தான் சென்னைக்குடிநீர்ப் பிரச்சினை நிரந்தரமாகத் தீரும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago