சுற்றுச்சூழலுக்கும் சூழல்சார்ந்து வாழும் மக்களுக்கும் 1980-களுக்குப் பின்பு மிக மோசமான காலகட்டமாக பாஜகவின் ஐந்து ஆண்டுகளும் இருக்கப்போகின்றன என்பதுதான் மோடி அரசின் ஓராண்டு நிறைவில் நமக்குத் தெரியும் அறிகுறி.
சுத்தமான காற்று, சுத்தமான நீர், வளமான மண், ஆரோக்கியமான வனங்கள், புல்வெளிகள் போன்றவற்றைப் பற்றி இதற்கு முந்தைய அரசுகள் எதுவுமே அக்கறை கொள்ளவில்லை என்பதை வைத்துப் பார்க்கும்போது, நமக்கு மேற்கண்ட அறிகுறி சொல்வது நிறைய. நம் அனைவரையும் தொடர்ந்து உயிர்வாழ வைக்கும் இவற்றையெல்லாம் எவ்வளவு பணம் கொடுத்தும் வாங்கிவிட முடியாது என்ற உண்மையைப் பார்க்க முடியாத வகையில் வளர்ச்சி மந்திரம் என்பது ஒவ்வொரு அரசின் கண்களையும் மறைத்திருக்கிறது. இந்தக் ‘கண்மூடித்தனமான’ நம்பிக்கையை மோடி அரசோ மேலும் ஒருபடி மேலே எடுத்துச்செல்கிறது.
நமது பொருளாதாரத்துக்கு ‘இந்தியாவில் தயாரியுங்கள்’ என்பது மிகவும் அத்தியாவசியமான உந்துசக்தியாகத் தோன்றக்கூடும். துரதிர்ஷ்டவசமாக, பெரும் தொழில்களுக்கான முதலீடுகள் மீதும், அடிப்படைக் கட்டுமானத்தின் மீதும்தான் இந்த முழக்கம் அக்கறை கொள்கிறது. இவற்றுக்கெல்லாம் நிலம், நீர், கனிமங்கள், மலிவான ஊதியத்தில் உழைக்கக்கூடிய தொழிலாளர்கள், வரிச்சலுகைகள் போன்றவை
அவசியம். ஆகவேதான், விவசாயிகள், மீனவ சமூகம், கைவினைஞர் சமூகம், தொழிலாளிகள், சுருக்கமாகச் சொல்வதானால் இந்திய மக்கள்தொகையில் பெரும்பாலானோரின் நலன்களைப் பாதுகாக்கும் சட்டங்கள், கொள்கைகள், திட்டங்கள் போன்றவற்றைத் திருத்தப்பார்க்கிறார்கள் அல்லது குறுக்குவழியில் மசோதாக்களை நிறைவேற்றப் பார்க்கிறார்கள். இதனால் நிலம் கையகப்படுத்தல் சட்டம், வன உரிமைகள் சட்டம் மற்றும் சுற்றுச்சூழல், தொழிலாளர் தொடர்பான பல சட்டங்கள் வலுவிழந்துவிடும்.
இதே நேரத்தில் சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவற்றுக்கான அமைச்சகத்துக்கான நிதி 2014, 2015-ம் ஆண்டுகளில் கடுமையாகக் குறைக்கப்பட்டன. அந்தத் துறைக்குப் பொறுப்பான அமைச்சர், தொழில் துறைக்கான ரப்பர் ஸ்டாம்பு முகமையாக அந்த அமைச்சகத்தை வெகு சீக்கிரமாக மாற்றிவிட்டார்.
சுற்றுச்சூழல் அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை ஒன்று, விரைவான தொழில்மயமாதலுக்கு இந்த அமைச்சகம் இடையூறாக இருக்காது என்ற நோக்கத்தையே பெரும்பாலும் வெளிப்படுத்துவதாக இருப்பதை எனது சகாக்களுள் ஒருவரான காஞ்சி கோலி சுட்டிக்காட்டுகிறார். “தொழில் தொடங்குவதை எளிதாக்குவதற்கும் முதலீட்டாளர்களுக்குச் சாதகமான சூழலை உருவாக்குவதற்கும் தேவையான எல்லா நடவடிக்கைகளையும் எடுப்பதாக” பாஜகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதை நிறைவேற்ற சுற்றுச்சூழல் அமைச்சகம் அதீத உற்சாகத்துடன் வேகவேகமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ‘பெருநிறுவனங்களுக்கான விரைவான அனுமதிகளை உறுதிப்படுத்தும் அமைச்சக’மாக சுற்றுச்சூழல் அமைச்சகம் தற்போது மாறிவிட்டிருக்கிறது.
சுற்றுச்சூழல் மீதான இந்தத் தாக்குதலுடன் மேலும் ஆபத்தான இன்னொரு தாக்குதலும் கைகோத்திருக்கிறது. இந்தியாவின் ஜனநாயக இழைவின் மீதான தாக்குதல்தான் அது. நில உரிமையாளர்களின் சம்மதம் என்ற விதியை நிலம் கையகப்படுத்தல் சட்டத்திலிருந்து நீக்குதல், வனப் பகுதியைக் கையகப்படுத்துவதில் கிராம சபைகளின் சம்மதம் என்ற விதியை வன உரிமைச் சட்டத்திலிருந்து நீக்குதல், சுற்றுச்சூழல்ரீதியாக அரசு ஈடுபடும் தற்கொலை முயற்சிகளை அம்பலப்படுத்தும் சமூக நலக் குழுக்களை மூர்க்கமாகக் குறிவைத்தல், பொதுமக்கள் நலன்களை விட பெருநிறுவனங்களின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுத்தல் போன்ற முயற்சிகளை ஜனநாயகம் மீதான தாக்குதலுக்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.
சட்டவிரோதம் என்ற சாக்குபோக்கைச் சொல்லி ‘கிரீன்பீஸ் இந்தியா’ சுற்றுச்சூழல் அமைப்பின் வங்கிக் கணக்குகளை அரசு முடக்கியது. அதுபோன்ற குழுக்களை ‘தேசவிரோத சக்திகள்’ என்று அழைப்பது போன்றவற்றின் மூலம் அதிகாரத்தை அரசு துஷ்பிரயோகம் செய்வது வெளிப்படையாகத் தெரிகிறது. எதிர்த்துக் கேள்விகேட்டால் அரசு தடுமாறுகிறது. அருணாச்சலப் பிரதேசத்தில் சுவன கீழணையைக் கட்டினால், அசாமின் நதியோட்டத்தில் சுற்றுச்சூழலில் பாதிப்பு ஏற்படும் என்பதால் அந்தத் திட்டத்தை எதிர்த்து 2010-ல் ஒரு போராட்டம் நடந்தது. அந்தப் போராட்டத்தில் பங்கேற்றவர்களில் இன்றைய உள்துறை அமைச்சரும் ஒருவர். ஆனால், இன்றைக்கு அதுபோன்ற கோரிக்கைகளை எழுப்புபவர்கள் ‘தேச விரோதிகள்’. என்ன கொடுமை இது! உள்துறை அமைச்சகம் என்பது ‘செயல்பாட்டாளர்களை வேட்டையாடும் அமைச்சக’மாக வெகு விரைவில் மாறிவிட்டிருக்கிறது.
எது எக்கேடு கெட்டாலும் வளர்ச்சிதான் முக்கியம் என்ற அணுகுமுறையால் கோடிக் கணக்கான மக்கள் வறுமையில் வாடுவது வசதியாக மறக்கப்பட்டிருக்கிறது (அத்தோடு விட்டுவிடாமல், அவர்களுடைய இயற்கையான பிழைப்பாதாரங்களையும் அவர்களிடமிருந்து பறித்துவிட்டு, மேலும் வறிய நிலைக்கு அவர்களைத் தள்ளிவிடுகிறார்கள்.) இப்போதைக்கு உள்ள ஒரே ஆறுதல், ‘வளர்ச்சி புல்டோசர்’ மூலம் வாழ்வாதாரங்களையும் வாழிடங்களையும் இழக்க நேரிடும் மக்கள் அதற்கு எதிராகத் துணிந்து அணிவகுத்து நிற்பதுதான்!
- ஆசிஷ் கோத்தாரி, ‘கல்பவிருக்ஷ்’ என்ற சுற்றுச்சூழல் அமைப்பைச் சேர்ந்தவர்.
© ‘தி இந்து’ (ஆங்கிலம்), சுருக்கமாகத் தமிழில்: ஆசை
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago