ஆசிரியர்களான பிறகுதான் சிலர் மாணவர்களாக இருக்கக் கற்றுக்கொள்கிறார்கள். மொழி ஆசிரியர்களுக்கு இது நன்றாகவே பொருந்தும். நானும் அப்படித்தான்.
அச்சக உரிமையாளரிடமிருந்தும், அச்சுக் கோர்ப்பவரிடமிருந்தும் சுருக்கமாக எழுத நான் கற்றேன். விண்ணப்பம் எழுதிக்கொடுங்கள் என்று ஒரு சமூக ஆர்வலர் அடிக்கடி என்னிடம் கேட்பார். “அரசின் உயரதிகாரி அரைப் பக்கத்துக்கு மேல் படிக்க மாட்டார். அதற்குள் அடங்குமாறு எல்லாவற்றையும் சொல்ல வேண்டும்” என்பார். ஒரு பொருளைச் சொல்லி, விவாதத்தை முன்வைத்து, அதிலிருந்து கோரிக்கையை வடிவமைக்க அவரிடமிருந்து கற்றுக்கொண்டேன். ஒரு வைணவப் பெரியாரின் சமயச் சொற்பொழிவிலிருந்து தமிழ் இலக்கிய மரபுகள் சிலவற்றைக் கற்றேன்.
அறிவு என்று நாம் கண்டவற்றைக் கொண்டு, மாணவர்களின் நேரத்தைச் செருமச் செரும நிரப்பிவிடுகிறோம். அவற்றுக்கு அப்பால் அவர்கள் எதையுமே கற்பதற்கு அனுமதிப்பதில்லை. வேலைவாய்ப்பைப் பெற படிப்பு அவசியம் என்பது மறுக்க முடியாதது. ஆனால், அதற்காக மட்டுமே படிக்க வேண்டும் என்ற நம்முடைய எண்ணம் பெரிய குறைபாடு. கல்வி முறையிலும், பள்ளிகளிலும், பாடத்திட்டத்திலும், தேர்வு முறையிலும்தான் கோளாறு என்பதில்லை; கல்வியைப் பற்றிய நமது சமூகத்தின் அணுகுமுறையிலும் இருக்கிறது.
ஓ… அது அந்தக் காலம்
நான் படித்த கிறிஸ்துவப் பள்ளிக்கூடம் ஒழுங்கு போன்றவற்றில் கொஞ்சம் கெடுபிடி காட்டும். பிரிட்டனிலிருந்த பொதுப் பள்ளிக்கூடங்களையொத்த சட்டதிட்டங்கள். புதுடெல்லியில் இருந்தவர்கள்கூடத் தங்கள் பிள்ளைகளை இங்கே படிக்கட்டும் என்று விட்டிருந்தார்கள். வகுப்புக்குச் சட்டாம்பிள்ளை, ஒழுங்கீனத்துக்குக் கருப்பு மதிபெண்கள், அவை ஒரு எல்லையைத் தாண்டினால் சிவப்பு மதிப்பெண், அதையும் தாண்டினால் வீட்டுக்குச் செல்லும் சிவப்பு அட்டை எல்லாம் உண்டு. வகுப்புக்கு வராவிட்டால் தண்டம். கட்டாவிட்டால் இரட்டிப்புத் தண்டம். ஆனாலும், நாங்கள் கடுமையை உணராதவாறுதான் இவை அமலானது.
எங்களுக்கு ஆறாம் வகுப்பில்தான் ஆங்கிலம் அறிமுகமானது. மெத்தப் படித்தவர்கள் ஆங்கிலத்தை காலனிய ஆதிக்கத்தின் எச்சம் என்று சொன்னார்கள். மற்றவர்கள் நமது மொழிக்கும் பண்பாட்டுக்கும் அது எதிரி என்று சித்தரித்தார்கள். ஆனாலும், அதை விட்டுவிட முடியாத சிக்கல் இருந்தது. எட்டாம் வகுப்பில் இருந்தபோது ஆங்கிலம் ஒரு நெருடலான மொழியல்ல என்று தமிழாசிரியர் எங்களுக்குத் தெளிவுபடுத்தினார். பிரதிப்பெயர்ச் சொற்களோடு வினைச் சொற்கள் சேரும்போது அவற்றின் கால வடிவங்கள் வெவ்வேறாக இருக்கும். இதனைக் கற்றுக்கொண்டால் ஆங்கிலத்தை வசப்படுத்திவிடலாம் என்று காட்டினார். அந்த ஆண்டு முடிவதற்குள் எங்களுக்கான ஆங்கிலக் கட்டுரைகளை நாங்களே சொந்தமாக எழுதிக்கொள்ள முடிந்தது.
எங்கள் பள்ளி நூலகத்தில் இன்ன புத்தகம் என்றில்லாமல் மாணவர்கள் எந்தப் புத்தகம் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். பொதுத்தேர்வில் நாங்கள் அனைவருமே தேர்ச்சிபெற்றுப் பள்ளிக்கு 100% பெற்றுக்கொடுத்தோம். மாணவர்கள் பல சமூகப் பின்னணிகளைச் சேர்ந்தவர்கள். மனனம் செய்வதைப் பள்ளி ஊக்குவித்ததில்லை. கட்டுரைகளை ஆசிரியர்கள் எழுதிக் கொடுத்ததில்லை. யாராவது நோட்ஸ் வைத்திருப்பதைக் கண்டால் பிடுங்கிக் கிழித்து எறிந்துவிடுவார்கள். பெற்றோர்கள் பள்ளியின் மீது வைத்திருந்த நம்பிக்கையளவுக்குப் பள்ளியும் மாணவர்களை நம்பியது. பெற்றோர்கள் உட்பட, யாருமே இப்போது மாணவர்களின் அறிவுத்திறனை நம்புவது இல்லை என்பதுதான் பெரும் பிரச்சினை.
ஆங்கில அரசியல்
ஆங்கில ஆசிரியராகக் கல்லூரியில் வேலையில் சேர்ந்த பிறகு, ஒரு மொழியைக் கற்பிப்பதிலும் கற்பதிலும் உள்ள சமூக உளவியல் சிக்கல்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் பிடிபட்டன. வகுப்பில் ஆங்கிலத்தில் பேசினால், “தமிழில் பேசுங்கள்” என்று மாணவர்கள் கூச்சலிடுவார்கள். ஆரம்பத்தில் ஆங்கிலம் புரியவில்லையோ என்று நினைப்பேன். ஆங்கிலத்தில் பேசத்தானே எனக்குச் சம்பளம் தருகிறார்கள் என்று தர்க்கம் செய்து மேலும்மேலும் எளிமையாகப் பேசிப்பார்ப்பேன். புரியாமலில்லை. அது ஒரு வகையான எதிர்ப்பு என்று எனக்கு அப்போது தெரியவில்லை. அவர்கள் அறியாமல் அது மனத்தளவிலும் இருந்திருக்கலாம். இந்த எதிர்ப்பைச் சமாளிக்க முடியாமல் வகுப்பறையில் அழுதிருக்கிறேன்.
ஆங்கிலேயர்களின் உச்சரிப்பில் உள்ளவாறே ஏற்ற இறக்கம், அழுத்தத்தோடு பேசினாலோ பிரச்சினை இன்னும் சிக்கலானது. கல்லூரி ஆசிரியராகத் தரிக்க வேண்டும் என்றால், இந்த உச்சரிப்பை மறக்க வேண்டும் என்று ஆகிவிட்டது.
“ஒரு குக்கிராமத்திலிருந்து வந்தவன் நான். வீட்டில் யாருக்கும் ஆங்கிலம் தெரியாது. தமிழ் வழியில்தான் பயின்றேன். ஆறாம் வகுப்பில்தான் ஆங்கில எழுத்துகளைக் கற்றேன். இன்றைக்கு ஆங்கிலப் பேராசிரியராகவில்லையா?” என்றெல்லாம் சொல்லி அவர்களைத் தேற்ற முயல்வேன். இது போதாதென்று ஆங்கிலேயர்களுக்கு நிகராக உச்சரிப்புத் திருத்தம் உடைய எனது ஆசிரியரை எடுத்துக்காட்டாகக் கூறுவேன்.
என்னுடைய ஆசிரியரிடம், “எங்கே ஆங்கிலம் பயின்றீர்கள்?” என்று கேட்டபோது இன்றைக்கும் பிற்பட்ட ஊராக இருக்கும் திருத்துறைப்பூண்டியைத்தான் குறிப்பிடுவார். அவரது ஆசிரியர் வானொலியில் வரும் ஆங்கிலச் செய்தி அறிக்கையைக் கேட்பதை நாள்தோறும் பாடமாக வைத்திருந்தாராம். இதைத் தெரிந்துகொள்வதற்கு முன்பே நானும் ஒரு வானொலிப் பெட்டியை வைத்துக்கொண்டு சிற்றலையின் ஆங்கில நிகழ்ச்சிகளைத் தூங்காமல் கேட்டுக்கொண்டிருப்பேன்.
பிபிசியின் ஆங்கிலத்தில் கொஞ்சம்கூடப் பயின்றுவந்த தன்மையோ, பாசாங்கோ இல்லாமலிருக்கும். முதலில் சப்பென்று இருந்தாலும், பின்னர் நமது ஆங்கிலத்தில் வெகுவாகப் பாசாங்குத்தனம் இருப்பதை அது மிக எளிதாக உணரவைத்தது. இந்திய வானொலியில் அப்போது லாதிகா ரத்னம் மிகச் சிறந்த செய்தி வாசிப்பாளர். மாணவர்களாக இருந்தபோது அவர் வாசிக்கும் செய்திகளைப் போட்டி போட்டுக்கொண்டு உச்சரிப்புக் குறியீட்டில் எழுதிக்கொள்வோம். மாணவர்களிடம் இதையெல்லாம் சொல்வேன். ஆனாலும், நான் வகுப்பறையில் தமிழில் பேச வேண்டும் என்று விரும்பிய மாணவர்களே அதிகம்.
மொழியில் மெய்மை இல்லை
இன்றைய சூழ்நிலையோ தலைகீழாகிவிட்டது. தமிழையே தொட மாட்டேன் என்ற உத்தரவாதம் இருந்தால்தான் பெற்றோர்கள் அந்தப் பள்ளியில் பிள்ளைகளைச் சேர்க்கிறார்கள். ஆங்கிலம் பயிற்றுவிக்கும் முயற்சியில் தாய்மொழி குறுக்கிடுகிறது என்ற ‘கண்டுபிடிப்பு’ ஒன்று நிகழ்ந்திருக்கிறது. எதிரெதிரான இந்த இரண்டு நிலைகளுமே தவறானவை.
தமிழானாலும், ஆங்கிலமானாலும், மொழியைப் பற்றிய புரிதல் இங்கு மிகவும் சொற்பம். பெரும்பாலான மாணவர்களுக்கு இரண்டு மொழிகளிலுமே போதிய பயிற்சி இருப்பதில்லை. சூத்திரத்தைக் கற்று ஒப்பிப்பதுபோல் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள். மொழியில் மெய்மையே இல்லை.
இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு குழந்தைகளின் வரலாற்று நூலைப் பார்த்தேன். அந்தந்த மொழியில் எழுதியதாக இல்லாமல் ஆங்கிலத்திலிருந்து தமிழிலும், தமிழிலிருந்து ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்ததுபோல் இருந்தன. விவரச்செறிவோ, கருத்தாக்கமோ இல்லாமல் கழுநீராக, வெற்றுச் சொற்களைத் தொடுத்து வைத்ததாக இருந்தன. சில ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலப் புத்தகத்தின் தடிமனைப் பார்த்துப் பயந்துபோனோம். ஆசிரியரின், மாணவர்களின் கற்பனைக்கு இடமே கொடுக்காத நூல்கள். இருவருக்கும் கற்பனை உண்டு என்று நூலாசிரியர்கள் நம்பியதாகத் தெரியவில்லை.
ஒருமுறை என் மாணவர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது சொன்னார்: “சார், எவ்வளவுதான் படித்தாலும் ஒரு மொழியைப் பேசப் பேச, கேட்கக் கேட்கத்தானே நன்றாகக் கற்றுத் தேற முடியும்? நான் நாற்றுப் பறிக்கச் சென்றால்தான் என் குடும்பம் சாப்பிடலாம். கல்லூரியில் படித்துக்கொண்டே பாதி நாள் வயல் வேலைக்குப் போகிறேன். வயல் வேலை இல்லாதபோது கட்டிட வேலைக்குப் போகிறேன். இப்படியெல்லாமும் கஷ்டப்பட்டுக்கொண்டேதான் படிக்கிறோம் நிறைய பேர். ஆனால், நகரத்தில் எடுத்த எடுப்பில் ஆங்கில அறிவை மட்டுமே அளவுகோலாகக் கொண்டு ஒருவரை அளவிடுவதும் நிராகரிப்பதும் எந்த வகை நியாயம் சார்?”
ஒரு மாணவரின் கேள்வி மட்டும் அல்ல இது. ஒரு கல்வி அமைப்பின், சமூகத்தின் இயல்பே திசை மாறியிருப்பதை நோக்கிய முறையீடு; ஆங்கிலம் மட்டும்தான் உங்களுக்குத் தெரிந்த அளவுகோலா என்ற மாணவ சமுதாயத்தின் முறையீடு. எத்தனை தலைமுறைகளை இந்த ஒரே அளவுகோலால் அளந்து, கழித்து, ஒதுக்கிக்கொண்டிருக்கிறோம்!
இந்த ஆங்கிலம் எந்த ஆங்கிலம்?
ஆங்கிலம் ஆங்கிலம் என்றுதான் பிள்ளைகளை விரட்டுகிறோம். ஆனால், எந்த மாதிரி ஆங்கிலத்தை அவர்களுக்குக் கொடுக்கிறோம்? ஷேக்ஸ்பியர், மில்டன் எல்லாம் அவர்களுக்குச் சரிவராது என்று முடிவெடுத்துவிட்டோம். மொழியை அவர்களுக்கு ஒரு பண்பாட்டுச் சாதனமாகச் சொல்லித் தரக் கூடாது என்று முடிவெடுத்துவிட்டோம். ஆங்கிலம் அவர்களுக்கு ஒரு தொடர்புச் சாதனமாக மட்டும் பயன்பட்டால் போதும். உள்ளீடில்லாத கருக்காய் வார்த்தைகளாக ஒரு மொழியைக் கற்பதைப் போல / கற்பிப்பதைப் போல ஒரு அவலம் உண்டா?
இதையெல்லாம் இன்றைக்குப் பேச முடியாது. உலக மயமாக்கலில் ஆங்கிலத்துக்கு இன்றைக்கு வந்துள்ள கீர்த்தி, நமது கல்விக் கொள்கை, மொழித்திட்டம், பாடத்திட்டம், கல்விச் சாலைகளின் இலக்கு, எல்லாமாகச் சேர்ந்து ஆங்கிலத்தை ஒரு வகையான வர்க்கபேதக் கருவியாக்கிவிட்டது. மாணவர்களுக்கு எப்போது விடுதலையோ?!
- தங்க. ஜெயராமன், மத்திய பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத்துறைத் தலைவர், ஒமர் கய்யாமின் ‘ருபாயியத்’ புத்தகத்தைத்
தமிழில் மொழிபெயர்த்தவர், தொடர்புக்கு: profjayaraman@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago