இயற்கையைப் பார்த்து அதன் அடிப்படையில் இயக்கத்தை வடிவமைத்துக்கொள்வது பயானிக்ஸ்
இயற்கையைப் பார்த்து அதன் அடிப்படையில் இயக்கத்தை வடிவமைத்துக்கொள்வது பயானிக்ஸ் துறை. சுருக்கமாகச் சொன்னால், கண்ணதாசன் பாடிய, ‘பறவையைக் கண்டான், விமானம் படைத்தான்’ ரகம். தமிழில் இதை உயிர் மின்னணுவியல் என்கிறார்கள்.
எறும்புகளின் உடல் இயக்கத்தை மாதிரியாகக் கொண்டு பயானிக் எறும்புகளின் தொகுதி அண்மையில் ஜெர்மனியில் உருவாகியிருக்கிறது. எறும்புகள்போல விரைவாக நகர, ஆறு கால்கள் கொண்ட உடலமைப்பு இது. ஒவ்வொரு எறும்பின் தலைப் பகுதியில் கேமராவும், என்ன மாதிரியான தரை என்று உணர உணரியும் (சென்சார்) உண்டு. பயானிக் எறும்பு செயல்பட வழி செய்யும் லித்தியம் மின்கலங்களை சார்ஜ் செய்யவும் இந்த அமைப்பு வழி செய்யும். அசல் எறும்புகள்போல, பொருட்களைப் பற்றி எடுத்துப் போக, பற்றுவான்களும் (க்ரிப்பர்) உண்டு. எந்தப் பளுவை நகர்த்த வேண்டுமோ அதை எப்படிப் பற்ற வேண்டும் என்று முடிவு செய்யும் ஆற்றல் மிகுந்தவை இந்த பயானிக் எறும்புகள்.
பயானிக்ஸ் எறும்பின் வேகம்
எறும்புகள் கூட்டாக வாழ்பவை. ஒற்றை எறும்பால் இழுத்துப் போக முடியாத உணவுத் துண்டைக்கூட, கூட்டமாக வந்து நகர்த்திப்போக அவற்றால் முடியும். பயானிக் எறும்புகளும் இதேபோல் ஒன்றோடு ஒன்று தொடர்புகொண்டு ஒருங்கிணைந்து பணிசெய்யும் ஆற்றல்கொண்டவை. இப்படியான தொடர்புக்கான ரேடியோ தொகுதி எறும்பின் வயிற்றுப் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த மாதம் ஹனோவரில் நடந்த உலகத் தொழில்நுட்பக் கண்காட்சியில் பயானிக் எறும்புகள் அறிமுகமாகியிருக்கின்றன.
பயானிக்ஸ் பார்வை
விபத்தில் கை உடைந்துபோவதோ, அலட்சியப் போக்கினால் நோய் முற்றிக் காலை அகற்ற வேண்டியிருப்பதோ சோகமானது மட்டுமில்ல; ஓடியாடிப் பரபரப்பாக நடத்திய வாழ்க்கையை முடக்கிவிடலாம் அது. முறிந்து விழுந்த உறுப்பை மறுபடி முளைக்க வைக்க முடியாது. ஆனால், அந்தக் குறை அநேகமாகத் தெரியாமல் வாழ்க்கை தொடர பயானிக்ஸ் தொழில்நுட்பம் கைகொடுக்கும். ‘பயானிக் பார்வை’ முன்னெடுத்துச் செல்லப்படும் ஒரு கட்டமைப்பாகும். பார்வை இழந்தவர்களின் விழியில் சிறு மின்முனைகள் (எலெக்ட்ரோடு) பதிக்கப்படும். உடலில் இணைத்த சிறு கேமராக்கள் அவர்களுக்கு முன்னால் விரியும் காட்சியைப் படம் பிடித்து, அந்தப் படத்தை மின்னணு அலைகளாக அனுப்பும். மின்முனைகள் அவற்றை வாங்கி நேரடியாக மின்தூண்டுதலாக மூளைக்கு அனுப்பும். மூளை அந்த மின்தூண்டலைப் பகுப்பாய்வு செய்து, விழி இழந்தவருக்குக் காட்சியை உணர்த்தும். ஏற்கெனவே பார்வை இருந்து, திடீரென்று பார்வை போனவர்கள் என்றால் மூளைக்கு இந்தப் பகுப்பாய்வு முன்பே பழக்கமாகியிருக்கும். புதிதாகக் கற்றுத்தர வேண்டியதில்லை.
பயானிக்ஸ் போதை
பயானிக் நாக்கு அடுத்தது. மிகச் சிறிய நானோ உணரிகள் இந்த நாக்கில் பதிக்கப்பட்டிருக்கும். திட உணவோ திரவமோ நாக்கில் படும்போது, உணரிகளால் அது பகுத்தறியப்படும். அந்த விவரம் ஒரு கணினிக்குப் போகும். ஒவ்வொரு வகை வேதியியல் அணுத் திரளுக்குமான ஒரு சுவை கணினியில் ஏற்கெனவே பதிவாகியிருக்கும். வந்த தகவலை அதோடு ஒப்பிட்டு, என்ன சுவை என்று கணினி உடனே சொல்லிவிடும்.
இது எங்கே பயன்படும்? ஒயின் போன்ற மது உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் சுவைஞர்கள் உண்டு. இவர்களின் வேலை, உற்பத்தியாகும் மதுவை அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம் என்று நாள் முழுக்க ருசி பார்ப்பது. தொடக்கத்தில் சந்தோஷமான வேலையாக இருந்தாலும், சீக்கிரமே வெறுக்க வைத்து விடும் இந்தப் பணிக்கு, பயானிக் நாக்கு சம்பளமில்லாத வேலைக்காரன். சொந்த நிறுவனத் தயாரிப்பைச் சுவைப்பதோடு நிறுத்தாமல், போட்டி நிறுவனங்களின் தயாரிப்புகளோடு சொந்தச் சரக்கைப் போதையின்றி ஒப்பிடவும் இதை ஏவலாம்.
பயானிக் கணையம் உடலில் பொருத்தப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை. இந்தச் செயற்கை உறுப்பு ரத்தத்தில் சர்க்கரை அளவை சதா கண்காணித்து, அதன் அடிப்படையில் இன்சுலின் சுரப்பைக் கூட்டும் அல்லது குறைக்கும். பயானிக் சிறுநீரகம் இது போன்றே இயற்கைச் சிறுநீரகத்துக்கு மாற்றாகலாம்.
பயானிக்ஸ் நடை
பயானிக் கையும் உண்டு. செயற்கைக் கரத்தில் மின்முனைகள் பதித்தது இது. இந்த மின்முனைகள் மூளையோடு பிணைக்கப்படும். கையை உயர்த்த வேண்டும் என்று தோன்றும்போது, அதற்கான நரம்பு அதிர்வுகளை மின்முனைகள் பெற்றுக் கையை இயக்கும். பயானிக் கால் நடக்க உதவுவதும் இது போன்ற ஒரு உயிர் மின்னணு அமைப்பே. காலில் பதித்த உணரிகள் எவ்விதமான தரையில் நிற்கிறோம் என்பதை உணர்ந்து மூளைக்கு அறிவிக்க, நடை சீராகும். இயற்கைக் கைகால் போல் பயானிக் கைகால்கள் இயல்பாகவும் நுட்பமாகவும் செயல்பட தொழில்நுட்பம் இன்னும் மேம்பட வேண்டியிருக்கிறது. குறைபட்ட அங்கத்தை மாற்றி வைக்க மட்டும் உடல் உறுப்பு அடிப்படையிலான பயானிக்ஸ் பயனாகும் என்றில்லை.
பயானிக் மூக்கு இந்த இனம். சகலவிதமான வாடைகளும் பல்லிழை இயற்பியல் (பாலிமர் ஃபிஸிக்ஸ்) அடிப்படையில் கணினியில் பதிந்து பயானிக் மூக்கோடு இணைக்கப்படும். காற்றில் மாசு, வாயு கசிவதால் எழும் நச்சுத் தன்மை போன்றவற்றை உடனடியாக இந்த மூக்கு கண்டுணர்ந்து எச்சரிப்பதால், நச்சு வாயுக் கசிவு போன்ற உயிர்க்கொல்லி விபத்துகள் நிகழாமல் தடுக்கலாம்.
உடல் பாகங்களை இயக்கக் கட்டளையிட, மனித மூளை, முதுகுத் தண்டின் ஒத்துழைப்பைப் பெரிதும் சார்ந்திருக்கிறது. சில விபத்துகளால் முதுகுத் தண்டு பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு. அப்போது மூளை கட்டளையிட முடியாமல் போய், அசைவு நின்றுவிடும். பேச்சும் வராது. முதுகு இப்படி பாதிக்கப்பட்டாலும், மகா மோசமான விபத்துகள் தவிர, மற்றவற்றில் நாக்கு சேதமின்றித் தப்பிவிடலாம். நேரடியாக மூளையோடு நரம்பு வழியாக இணைக்கப்பட்டிருக்கும் ஒரே மனித உறுப்பு நாக்கு. உடம்பே மரத்த நிலையிலும், நாக்கு அசையும்.
முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கை யானவரும் நடமாட தொழில்நுட்பம் துணைபுரிகிறது. நோயாளி நாக்கில் ஒரு சிலிக்கன் சில்லு பதித்து, அவர் அமர ஒரு சக்கர நாற்காலி ஏற்பாடு செய்யப்படும். நாக்கை மடித்தாலோ அல்லது இடம் வலமாக அசைத் தாலோ மட்டும் போதும். அசைவை நாக்கில் பதித்த சில்லு என்ன என்று பொருள் உணர்ந்து, அதை சக்கர நாற்காலியில் பொருத்திய சென்சாருக்குக் கட்டளையாக அனுப்பும். கட்டளைப்படி நாற்காலி நகரும்.
எல்லாம் சரி, பயானிக் மூளை? ரொம்ப கஷ்டம். தற்காலிகமான நினைவுகளைப் போட்டு வைத்துக் கொள்ளும் மூளையின் பாகத்தை சில்லில் வடித்திருப்ப தாகத் தெரிகிறது. ஒருவேளை, நூறு வருடம் சென்றபின் நம் சந்ததியினர் அவர்களுடைய பரம்பரை மூளையைத் தூர எறிந்துவிட்டு ஐன்ஸ்டைன் மூளையைப் பொருத்திக் கொள்ளலாம்.
- இரா. முருகன், ‘விஸ்வரூபம்’ உள்ளிட்ட நாவல்களின் ஆசிரியர்,
தொடர்புக்கு: eramurukan@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago