அதிமுக நினைத்தால், மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு பிரச்சினையை தேசிய விவகாரமாக்க முடியும்..
நரேந்திர மோடி அரசு பொறுப்பேற்றதிலிருந்து ஆக்கபூர்வமான சமிக்ஞைகள் அதிகம் வெளியான இடம் ‘நிதி ஆயோக்’ தொடர்பான கூட்டங்கள். சுதந்திர இந்தியாவின் வளர்ச்சியோடு பிரித்துப் பார்க்க முடியாதது திட்டக் குழுவின் பங்களிப்பு என்றாலும், அது ஒரு உளுத்துப்போன அமைப்பாகவே ஆகிவிட்டது. மாநிலங்களின் சுயமரியாதைக்கும் உரிமைகளுக்கும் எப்போதும் அது சவாலாக இருந்தது. பிற்காலத்தில் அரசியல்மயமான பின் மாநிலங்களை மேலும் அவமதித்தது. (மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநிலத்தின் முதல்வரை, நிதிக்காக ஒரு நியமன அதிகாரியின் முன் உட்காரவைப்பது எவ்வளவு மோசமான நடைமுறை!)
சிக்கலின் அடிப்படை எங்கே? நம்முடைய முதல்வர்களுக்கே தங்கள் பதவியின் உண்மையான மதிப்பு தெரிவதில்லை, அல்லது அற்பமான அரசியல் ஆட்டங்களைத் தாண்டி அவர்களுடைய பராக்கிரமங்கள் டெல்லியின் எல்லையைத் தொட்டதும் மாயமாகிவிடுகின்றன. பரப்பளவின்படி பார்த்தால், காங்கோவுக்கு இணையானது ராஜஸ்தான், இத்தாலிக்கு இணையானது மகாராஷ்டிரம். மக்கள்தொகை கணக்கின்படி பார்த்தால், கிட்டத்தட்ட பிரேசிலுக்கு இணையானது உத்தரப் பிரதேசம், பிரான்ஸைவிடப் பெரியது தமிழகம். சுதந்திர இந்தியாவின் 67 ஆண்டு வரலாறு நமக்குச் சொல்லும் உண்மை, நீங்களோ நானோ இதுவரையில் பெற்றிருக்கும் பெரும்பான்மை நலன்களுக்கும்/ தீமைகளுக்கும் காரணம் மாநில அரசுகளும் முதல்வர்களுமே; மத்திய அரசோ பிரதமரோ அல்ல. உண்மையான இந்தியா மாநிலங்களால்தான் ஆளப்படுகிறது. ஆனால், எத்தனை முதல்வர்கள் இதை உணர்ந்திருக்கிறார்கள்? ஆண்டுதோறும் மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு நடக்கும் சமயத்தில் மட்டும் மெல்ல முனகல்கள் கேட்கும். அந்தோ பரிதாபம், அதுவும் நிதி ஒதுக்கீட்டில் பற்றாக்குறைப் புலம்பலோடு முடிந்துபோகும்.
கவனம் ஈர்த்த 3 அறிவிப்புகள்
மோடி, திட்டக்குழுவை இழுத்து மூடியதன் நோக்கங்கள் வேறு என்றாலும், ‘நிதி ஆயோக்’ கூட்டங்களில் அவர் பேசிய 3 விஷயங்கள் கவனத்தை ஈர்த்தன. 1. இனி, திட்டமிடும் பணியை மத்தியிலிருந்து மாநிலங்களை நோக்கி நகர்த்துவது, 2. எல்லாப் பூட்டுகளுக்கும் ஒரே சாவி என்பதுபோல, எல்லா மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியான திட்டம்/ தீர்வு எனும் அணுகுமுறைக்கு முற்றுப்புள்ளி வைப்பது - மாநிலங்கள் தத்தமது தேவைகளுக்கேற்ற திட்டங்களைத் தாமே உருவாக்கிக்கொள்ள வழிவகுப்பது, 3. மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில், சிறப்பான நிர்வாகத்துக்கு ஊக்கம் அளிப்பது.
மூன்றுமே அருமையான விஷயங்கள். 1. காலங்காலமாக மேலிருந்து திட்டங்களைத் திணிக்கும் வேலையையே திட்டக்குழு செய்துவந்தது. மாநிலங்கள் சுயமாக, படைப்பூக்கத்துடன் புதிய திட்டங்களைச் சிந்திக்கும், பரிசோதித்துப் பார்க்கும் வாய்ப்பை அது வழங்கவில்லை. 2. ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு விதமான தேவைகள், பிரச்சினைகள் இருக்கும். தீர்வுகள் வேறுபடும். திட்டக்குழுவோ ஒட்டுமொத்த நாட்டுக்கும் ஒரே மாத்திரையை வழங்கியது. இதனால், தம் தேவைகள் ஒருபுறம் கவனிப்பற்றுக் கிடக்க, தேவையற்ற திட்டங்களை மாநிலங்கள் சுமந்தன. 3. மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டின்போது, தொலைநோக்கோடு சிறப்பாக நிர்வகிக்கப்படும் மாநிலங்களுக்கான ஊக்கம் கண்டுகொள்ளப்படவே இல்லை. ஆக, மாநிலங்களைப் பொறுத்த அளவில், இந்த அறிவிப்புகள் நல்ல நகர்வுகள். கூடவே, அவர்களுடைய நீண்ட நாள் கோரிக்கையை வலுவாக வலியுறுத்துவதற்கான புதிய சந்தர்ப்பங்கள்.
மாநிலங்களின் கூக்குரல்
நீண்ட காலமாக மத்திய அரசுடனான நிதிப் பகிர்வில், மாநிலங்கள் கூடுதல் ஒதுக்கீடு கேட்டுவருகின்றன. கல்வி, சுகாதாரம், அடிப்படைக் கட்டமைப்பு என நமக்கான பெரும் பாலான பொறுப்புகள் மாநில அரசுகளின் தலையில் இருந்தாலும், மாநிலங்களுக்கு வருவாய் தரும் வரி இனங் கள் குறைவு. மாறாக, பொறுப்புகள் அதிகம் அற்ற மத்திய அரசு நிறைய வரி இனங்களைத் தன்வசம் வைத்திருக் கிறது. ஆகையால், மத்திய அரசு அந்த வரி வருவாயிலிருந்து பகிர்ந்துகொள்ளும் தொகை மாநிலங்களுக்கு முக்கியமானது. இப்படி மத்திய அரசு தன்னுடைய வருவாயைப் பகிர்ந்துகொள்ளும்போது, மூன்றில் இரு பங்கு மாநிலங் களுக்கும், எஞ்சும் ஒரு பங்கு மத்திய அரசுக்குமாகப் பிரிக்கப்பட வேண்டும் என்ற குரல் நீண்ட காலமாக ஒலிக்கிறது (ஆனால், ஒதுக்கீடோ தலைகீழாக நடந்துவந்தது. மோடி அரசு இந்த ஒதுக்கீட்டை - ஒய்.வி.ரெட்டி தலைமையிலான நிதிக் குழுவின் பரிந்துரைப்படி - 42% ஆக உயர்த்தியிருக்கிறது).
இந்தத் தொகையை 29 மாநிலங்கள், 7 ஒன்றியப் பிரதேசங்களுக்கும் பிரித்துத் தர இந்த முறை 5 அளவுகோல்களைப் பரிந்துரைத்திருந்தது நிதிக் குழு. மாநிலத்தின் மக்கள்தொகை அடிப்படையில் 27.5%, மக்கள்தொகையில் ஏற்பட்டிருக்கும் மாறுபாடு அடிப்படையில் 10%, மாநிலத்தின் பரப்பளவு அடிப்படையில் 15%, மாநிலம் பெற்றிருக்கும் வனப்பரப்பு அடிப்படையில் 7.5%, வருவாய் இடைவெளி மதிப்பீடு அடிப்படையில் 50% என்பன இந்தப் பகிர்வுக்குக் கையாளப்பட்டிருக்கும் அந்த அளவுகோல்கள்.
இந்த அளவுகோல்கள்படி நடந்த ஒதுக்கீட்டில் ஆந்திரம், தெலங்கானா, அசாம், பிகார், இமாச்சலப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், தமிழகம் ஆகிய 9 மாநிலங்கள் இழப்பைச் சந்தித்திருக்கின்றன. அதாவது, மாநிலங்களுக்கான மொத்த ஒதுக்கீட்டை மத்திய அரசு இந்த முறை 10% உயர்த்தியும் கடந்த முறையைக் காட்டிலும் குறைவான ஒதுக்கீட்டையே இம்மாநிலங்கள் பெற்றிருக்கின்றன. தமிழகத்தைப் பொறுத்த அளவில் இழப்பின் மதிப்பு ரூ. 35,000 கோடி என்று சட்டப்பேரவையில் தெரிவித்திருக்கிறார் முதல்வர் பன்னீர்செல்வம். பிஹார் இழப்பின் மதிப்பு ரூ.50,000 கோடி என்கிறார், இது தொடர்பாக பிரதமரை நேரில் சந்தித்து முறையிட்ட பிஹார் முதல்வர் நிதிஷ்குமார். பெரும் இழப்பை எதிர்கொள்ளும் உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் பிரதமருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். ஏனைய மாநிலங்களிலிருந்தும் கேட்கின்றன புலம்பல்கள். எல்லோருமே நிதிப் பகிர்வில் நிதிக் குழு புதிதாகப் புகுத்தியிருக்கும் அளவுகோல்களான ‘மக்கள்தொகை வேறுபாடு மற்றும் வனப்பரப்பு அடிப்படையிலான பகிர்வு முறை’களைக் குறை கூறி முந்தைய அளவுகோல்கள்படி நிதி ஒதுக்கீடு அமைந்திருக்க வேண்டும் என்று கூறியிருக்கின்றனர்.
விதியை அல்ல; ஆட்டத்தையே மாற்றச் சொல்லுங்கள்
இந்தப் புலம்பல் அபத்தமானது. ஏதோ முந்தைய நிதிக் குழுக்கள் நியாயமானவை; இந்த நிதிக் குழு மோசம் என்ற பார்வையே தவறானது. உண்மையில் காலங்காலமாக ஏனைய நிதிக் குழுக்கள் பின்பற்றிய நடைமுறையையே கொஞ்சம் நீடித்திருக்கிறது இந்த நிதிக் குழு. மாநிலங்கள் எழுப்ப வேண்டிய சரியான கேள்வி எதுவென்றால், திட்டக்குழு அமைப்பே காலவதியாகிவிட்ட நிலையில், மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வு முறை மட்டும் ஏன் இன்னும் பழைய முறையிலேயே நீடிக்க வேண்டும் என்பதுதான்.
பிரதமர் மோடி ‘நிதி ஆயோக்’ கூட்டங்களில் பேசிய விஷயங்கள் நடைமுறைக்கு வர வேண்டும் என்றால், கூட்டாட்சித் தத்துவப்படி, மத்திய அரசும் மாநில அரசுகளும் எதிலும் சரிசமப் பங்காளிகள் எனும் அணுகுமுறைக்கு மத்திய அரசு மாற வேண்டும். மொத்த வருவாயில் மூன்றில் இரு பங்கு மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும். மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வுக்குப் பழைய நடைமுறைகள் ஒழித்துக்கட்டப்பட்டு, புதிய நடைமுறைகள், அளவுகோல்கள் கொண்டுவரப்பட வேண்டும். அரசியல் சாசனப்படி உருவாக்கப்பட்ட நிதிக்குழு நியமனத்தில் மாநிலங்களுக்கும் பங்கு இருக்க வேண்டும். மாநிலங்களிடையேயான நிதிப் பகிர்வுக்கான அளவுகோல்கள் நிர்ணயிக்கப்படும்போது, ஒரு மாநிலத்தின் வருவாய் தொலைவு மதிப்பீடு, மக்கள்தொகைக் கட்டுப்பாடு அமலாக்கத்துக்கு முந்தைய மக்கள்தொகை, மாநிலங்களின் நிலப்பரப்பு, மாநிலம் பெற்றிருக்கும் வனப்பரப்பு ஆகியவற்றோடு, ஒரு மாநிலம் நிதியை அவர்கள் நிர்வகிக்கும் முறை, அது செயல்படுத்தும் தொலைநோக்குத் திட்டங்கள், கல்வி சுகாதாரம் அடிப்படை ஆதாரத் துறைகளில் தொடர்ந்து செய்துகொண்டிருக்கும் முதலீடு, வேளாண் துறைக்கு அளிக்கும் முக்கியத்துவம், விளிம்புநிலை மக்கள் நலனுக்காகச் செயல்படுத்தும் உதவித் திட்டங்கள் / மானியங்கள் எனப் பல்வேறு காரணிகளையும் உள்ளடக்க வேண்டும். முக்கியமாக, சிறப்பாக நிர்வகிக்கப்படும் மாநிலங்கள் ஊக்கப்படுத்தப்படும் வகையில், அவற்றுக்கு 10% நிதி கூடுதல் நிதியாக ஒதுக்கப்பட வேண்டும்.
பின்தங்கிய மாநிலங்களை எப்படித் தேற்றுவது?
பின்தங்கிய மாநிலங்களுக்கு நாம் முக்கியத்துவம் அளிப்பது நிச்சயம் அவசியம். ஆனால், சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகளுக்குப் பின்னரும், ஒரு மாநிலம் கூடுதல் நிதியைப் பெறுவதற்கான தகுதிகளில் ஒன்றாக ‘பின்தங்குதல்’ தொடரக் கூடாது. ஏனென்றால், ‘பின்தங்கிய’ என்று நாம் இங்கு குறிப்பிடும் பல மாநிலங்கள் உண்மையில் நிர்வாகச் சீர்கேடுகளாலும் ஊழல்களாலும் செயல்படாதன்மையாலுமே அந்த நிலையை அடைந்தன. பின்தங்கிய மாநிலங்களுக்கான உதவியை நிதிப் பகிர்வுக்கான வழிமுறைகளில் ஒன்றாகக் கட்டமைப்பதற்குப் பதிலாக இரு வழிகளில் மத்திய அரசு அளிக்கலாம். 1. மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் அருணாசலப் பிரதேசத்துக்கு ரூ. 1000 கோடி அளிக்கப்பட்டதுபோல, சிறப்பு நிதியாக ஒரு பெரும் தொகையை அளிப்பது. 2. பின்தங்கிய மாநிலங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு இயல்பாகப் பெறும் ஒதுக்கீட்டுடன் 5% - 10% தொகையை நேரடி உதவித்தொகையாக கல்வி சுகாதாரத் துறைகளுக்கு வழங்குவது. இப்படிச் செய்யப்படும்போது சம்பந்தப்பட்ட மாநிலம் பின்தங்குவதற்குக் காரணமாக இருக்கும் அரசியல்வாதிகள் அந்த மாநில மக்களிடம் அம்பலப்படுத்தப்படுவதுடன் மாநில நிர்வாகத்தின் மோசமான நிலையும் அவர்களுக்கு உணர்த்தப்படும்.
வரலாற்று வாய்ப்பு
உண்மையாகவே இது வரலாற்று வாய்ப்பு. மாநிலங்களின் முக்கியத்துவம் பற்றி பேசும் ஒரு பிரதமர். திட்டக்குழு எனும் அமைப்பே இன்று இல்லை. இந்த முறை நிதி ஒதுக்கீட்டில் பாதிக்கப்பட்டிருப்பது எண்ணிக்கை அளவில் 9 மாநிலங்கள் என்றாலும், மக்கள்தொகை அடிப்படையில், 51.1% மக்கள் - சரிபாதி இந்தியா பாதிக்கப்பட்டிருக்கிறது (உத்தரப் பிரதேசம் 16.49%, பிஹார் 8.58%, தமிழகம் 5.96%, ராஜஸ்தான் 5.62%, ஆந்திரம் 4.08%, ஒடிசா 3.47%, தெலங்கானா 2.91%, அசாம் 2.58%, உத்தராகண்ட் 0.84%, இமாசலப் பிரதேசம் 0.57%). இந்த மாநிலங்கள் ஒருங்கிணைந்து குரல் எழுப்பினால், இதை ஒரு தேசியப் பிரச்சினையாக்க முடியும்.
தமிழகமே இதற்கான முயற்சிகளை முன்னெடுக்கலாம். அதிமுக இன்றைக்கு வெறும் மாநிலக் கட்சி அல்ல. மக்களவை யில் எண்ணிக்கை அடிப்படையில், அது மூன்றாவது பெரிய கட்சி. மாநிலங்களவையில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இருப்பது வெறும் 63 இடங்கள். ஐக்கிய முற் போக்குக் கூட்டணியின் 71 இடங்களையும் கழித்தால், ஏனைய இடங்கள் அனைத்தும் மாநிலக் கட்சிகள் வசமே இருக்கின்றன. மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வை மறுநிர்ணயம் செய்ய வேண்டும் என்ற முழக்கத்தை முன்வைத்தால், நாடாளுமன்றத்தையே அதிமுகவால் முடக்க முடியும்.
உத்தரப் பிரதேசத்தை ஆளும் சமாஜ்வாதி, பிஹாரை ஆளும் ஐக்கிய ஜனதா தளம் என இரு பெரும் மாநிலங்களின் ஆளுங்கட்சிகள் உட்பட 6 கட்சிகள் ‘சமாஜ்வாதி ஜனதா கட்சி’ என ஒரே கட்சியாக ஒன்றிணையும் சூழலில் அதிமுக அவர்களை இந்தப் போராட்டத்தின் கீழ் கொண்டுவர முடியும். மேற்கு வங்கத்தை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் இந்தப் போராட்டத்தில் இயல்பான கூட்டாளியாக அமையலாம். இடதுசாரிகளின் ஆதரவு கிடைக்கலாம். மேலும், பல மாநிலக் கட்சிகள் ஆதரிக்கலாம். காங்கிரஸேகூட பாஜகவை எதிர்க்க இதை ஒரு ஆயுதமாகக் கருதிப் பின் நிற்கலாம். இவ்வளவு பலம் வாய்ந்த வாய்ப்புள்ள இடத்தில் அதிமுக இருக்கும் நிலையில், அதன் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சென்னையில் உட்கார்ந்துகொண்டு தமிழகத்துக்கு நிதிக் குழு அநீதி இழைத்துவிட்டது என்று புலம்புவது ஏற்க முடியாதது.
சுதந்திர இந்தியாவின் ஆன்மா உறைந்திருக்கும் ‘பன்மையில் ஒருமை’ சூழலைக் கொண்டுவர, மாநிலங்களில் உண்மையான சுயாட்சியைக் கொண்டுவர தமிழகத்துக்கு மகத்தான வாய்ப்பை வரலாறு அளிக்கிறது. அதிமுக இப்போது எங்கு பேச வேண்டுமோ அங்கு பேச வேண்டும்!
- சமஸ்,
தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago