நாம் ஏன் மர்மங்களினூடே நேதாஜியைப் பார்க்கிறோம்?

By சமஸ்

சுபாஷ் சந்திர போஸ் மரணம் தொடர்பான கோப்புகளை இந்தியா பகிரங்கப்படுத்துகிறதோ இல்லையோ, கூடிய சீக்கிரம் உக்ரைன் மூலம் ரகசியம் வெளியே வந்துவிடும் என்று சொன்னார் ஒரு நண்பர். சோவியத் ஒன்றிய காலத்திய 8 லட்சத்துக்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்களைப் பொதுப் பார்வைக்கு வெளியிடுவது என்று உக்ரைன் அரசு சமீபத்தில் முடிவெடுத்தது. ‘சுபாஷ் விமான விபத்தில் இறக்கவில்லை; அவர் ஸ்டாலின் காலத்தில் யாகுட்ஸ்க் சிறையில் அடைக்கப் பட்டிருந்தார்’ என்று நம்புபவர்களில் ஒருவர் அவர். ஸ்டாலின் அரசால் சுபாஷ் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சுப்பிரமணியன் சுவாமிபோலச் சந்தேகிப் பவர். ஆகையால், உக்ரைன் அரசு வெளியிடும் ஆவணங்களில் சுபாஷைப் பற்றிய குறிப்புகளும் வெளியே வரும் என்பது அவர் கணிப்பு.

இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றிய பெரியவர் ஒருவரிடம் சின்ன வயதில் சுபாஷின் மரணம்பற்றிப் பேசப்போய் அறை வாங்கியது நினைக்குவருகிறது. ஓங்கி அறைந்துவிட்டுத் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார் அந்தப் பெரியவர். சுபாஷ் இறந்துவிட்டார் என்பது இந்தியாவில் பலரால் ஏற்றுக்கொள்ள முடியாதது. கடந்த ஆண்டு கொல்கத்தா போனபோது, சுபாஷ் நினைவு இல்லத்தில் வங்காளிகள் சிலருடன் பேசிக்கொண்டிருந்தேன். இன்னமும் துர்கா பூஜையின்போது சுபாஷ் திரும்புவார் எனும் நம்பிக்கை அங்கு செத்துவிடவில்லை. ஒருவேளை சுபாஷ் இப்போது திரும்பினால் அவருக்கு 118 வயதாகி இருக்கும்.

சுபாஷின் விமானம் விபத்துக்குள்ளானதாகச் சொல்லப்படும் 1945-க்குப் பிந்தைய இந்த ஏழு தசாப்தங்களில் அவரது மரணம்பற்றிப் பேசப்படாத ஆட்சிக் காலம் ஒன்று இல்லை. நேரு காலத்தில் சுபாஷின் உறவினர்கள் கண்காணிக்கப்பட்டதாக இப்போது எழுந்திருக்கும் சர்ச்சையை ஊடகங்கள் ஊதிப்பெருக்குவது வியப்பளிக்கிறது. “ஒவ்வொருவருக்கும் மூன்று வாழ்க்கைகள் இருக்கின்றன. பொது வாழ்க்கை, தனி வாழ்க்கை, ரகசிய வாழ்க்கை” என்று சொல்வார் காப்ரியேல் கார்சியா மார்க்வெஸ். வாய்ப்பிருந்தால் நம் ஒவ்வொருவரின் மூன்று வாழ்க்கைகளையும் புகுந்து பார்க்கும் ஆர்வமுடையவை அரசு அமைப்புகள். வாய்ப்பில்லாததால், அவை சந்தேகப்படுவர்களை மட்டும் கண்காணிக்கின்றன. தன்னுடைய மருமகள் மேனகா காந்தியையும் அவருடைய உறவினர்களையும்கூட உளவு அமைப்புகள் மூலம் இந்திரா காந்தி கண்காணித்தார் என்று சொல்லப்படுவது உண்டு. பத்திரிகையாளர்கள் பலர் கண்காணிப்பில் இருக்கிறோம்; எங்கள் செல்பேசி உரையாடல்கள் பதிவுசெய்யப்படுகின்றன என்றே நம்புகிறோம். ஆக, இதில் ஆச்சரியப்பட ஏதும் இல்லை.

சுபாஷ் உறவினர்கள் கண்காணிக்கப்பட்டிருப் பார்களா? கண்காணிக்கப்படாமல் இருந்திருந் தால்தான் ஆச்சரியம்! வரலாறு தெரிந்தவர்களுக்குத் தெரியும், சுதந்திர இந்தியாவின் ஆரம்பக் காலத்தில், ‘நாடு பிளவுபட்டுவிடும் / அந்நிய கைகளால் ஆட்டுவிக்கப்படும்’ என்ற பயம் நம் தலைவர்களை எந்த அளவுக்கு ஆட்டிப்படைத்தது என்று. அந்த அச்சத்தில் நியாயம் உண்டு. கொஞ்ச காலத்துக்கு முன்தான் கிட்டத்தட்ட 5 லட்சம் உயிர்களைப் பறிகொடுத்து ரத்த வெள்ளத்தின் நடுவே ஒரு பிரிவினையை நாடு சந்தித்திருந்தது.

சுபாஷ், அவருடைய சகோதரர் சரத் சந்திர போஸ் இருவருமே ஆயுதப் போராட்டத்தை ஆதரித்தவர்கள். சுபாஷ் ஒரு ராணுவ அமைப்பை உருவாக்கியவர். அவர் குடும்பத்தினருக்கு ஏராளமான வெளிநாட்டுத் தொடர்புகள் இருந்தன. தேசியவாதத்தின் பெயரால் நாஸிஸம், பாஸிஸம், சர்வாதிகாரம் எல்லாவற்றையும் நியாயப்படுத்திக்கொண்டு வல்லரசு கனவுகண்டவர் சுபாஷ். அவருடைய மரணத்தில் எல்லோருக்குமே சந்தேகம் இருந்தது. இப்படிப்பட்ட சூழலில், சுபாஷ் உறவினர்களை அரசு கண்காணித்திருக்காது என்று எண்ண முடியுமா?

சுபாஷ் தொடர்பான 87 ரகசிய ஆவணங்கள் அரசின் பாதுகாப்பில் மிச்சம் இருக்கின்றன. 30 ஆண்டுகளைக் கடந்த ரகசிய ஆவணங்களைப் பகிரங்கப்படுத்தலாம் எனும் விதி நடைமுறைக்கு வராத பல ஆவணங்களில் சுபாஷின் இந்த ஆவணங்களும் அடக்கம். எங்கே குட்டையைக் கண்டாலும் அரசியல் மீன் பிடிக்கும் வேட்கை கொண்ட பிரதமர் மோடி, தன்னுடைய ஜெர்மனி பயணத்தின்போது, சுபாஷின் பேரனை அங்கு சந்தித்திருக்கிறார். இதன் தொடர்ச்சியாக, சுபாஷ் தொடர்பான ஆவணங்கள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்ற அவர், இது தொடர்பாக ஆராய குழுவொன்றை அமைத்திருக் கிறார். பார்க்கலாம். இந்த ஆவணங்களெல்லாம் பொதுவெளிக்கு வந்தால் ஜனநாயகத்துக்கு நல்லது. ஆனால், சுபாஷ் தொடர்பான சர்ச்சைகள் அதற்குப் பிறகாவது அடங்குமா? தெரியவில்லை.

இந்தியர்கள் சுபாஷைக் கொண்டாடவும் அவருடைய மரணத்தை மர்மமாக்கிப் பேசவும் ரகசிய ஆவணங்களைத் தாண்டிய சில உளவியல் காரணங்கள் இருப்பதாகத் தோன்றுகிறது. மாவீர தியாக வழிபாட்டு அரசியலிலும் இந்த நாட்டின் ஆர்வங்களை விவரிக்கத் தேவையில்லை. சுய பெருமிதத்திலும் புராணங்களிலும் இந்த நாட்டவருக்கு உள்ள நம்பிக்கைகளையும் விவரிக்க வேண்டியதில்லை. எல்லாவற்றுக்கும் மேல் சுதந்திரம், ஜனநாயகம் என்றெல்லாம் வெளியே பேசினாலும், அடிப்படையில் ‘ஜனநாயக சர்வாதிகார’த்தை வரித்துக்கொண்டிருக்கும் நாடு இது. பாஜக என்றால் மோடி, காங்கிரஸ் என்றால் ராகுல், சமாஜ்வாதி என்றால் முலாயம், அதிமுக என்றால் ஜெயலலிதா, திரிணமூல் காங்கிரஸ் என்றால் மம்தா, தேசிய மாநாட்டுக் கட்சி என்றால் அப்துல்லா, ஆஆக என்றால் அர்விந்த் கேஜ்ரிவால்... இதெல்லாம் சொல்வதென்ன? இந்தியர்களின் ஆழ்மன சர்வாதிகார வல்லரசு ஆசையின் ஆழமான குறியீடு சுபாஷ். இந்தியர்களின் இந்த ஆர்வங்களுக்கும் நம்பிக்கைகளுக்கும் பிடிமானங்களுக்கும் சரியான அரசியல் தீனி சுபாஷ் கதை!

- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்