சூரிய மின் உற்பத்தி: இன்னொரு சுரண்டல்!

By டி.எல்.சஞ்சீவி குமார்

தமிழக மின்வாரியத்தின் நஷ்டம் 75 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது என்கிறார்கள்; மின்கட்டணம் உயரலாம் என்று அச்சுறுத்துகின்றன செய்திகள். இன்னொரு பக்கம் சமீபத்திய நீதிமன்ற வழக்குகளால், தமிழகம் சூரிய மின் உற்பத்தியில் சாதனை படைக்க வாய்ப்பு இல்லை என்று செய்திகள் அடிபடுகின்றன. உண்மையில் சூரிய மின் உற்பத்தி என்பது ஒரு மாயைதான் என்று கிடைக்கின்றன தகவல்கள்.

சூரிய மின் உற்பத்தித் திட்டத்துக்குப் பின்னால் இருக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் பசி நிறைந்த நுண் அரசியலைப் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. தமிழகத்தில் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டைக் கொண்டுவர முனைந்த வால்மார்ட்டும், மரபணு மாற்றப் பயிர்களை இந்தியாவுக்குள் புகுத்திய மான்சாண்டோவும் இதன் பின்னணியில் இருக்கின்றன.

பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டல் உத்தி

தாராளமயக் கொள்கையின் நோக்கங்களில் ஒன்று, மின்சாரத்தைத் தனியார்மயமாக்குவது. அதன் ஓர் அம்சமே சூரிய மின் உற்பத்தித் திட்டத்தை இந்தியாவில் புகுத்தியது. 1980-களின் இறுதியில் அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, ஜப்பான், சீனா, தென் கொரியா, இத்தாலி, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் தொடங்கிய சூரிய மின் உற்பத்தித் திட்டம், 2000-ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் தோல்வி யடைந்தன. தொழிலில் முன்னணி யில் இருந்த வால்மார்ட் - ஃபர்ஸ்ட் சோலார் நிறுவனம், மான்சாண்டோ எலெக்ட்ரானிக் மெட்டீரியல்ஸ் நிறுவனம் உள்ளிட்டவை கடும் பின்னடைவைச் சந்தித்தன.

ஆனால், ஏற்கெனவே வாங்கிப்போட்ட மூலப் பொருட்களையும் வேதிப் பொருட்களையும் என்ன செய்வது? பூச்சிக்கொல்லி மருந்து தொடங்கி மரபணு மாற்றப் பயிர்கள் வரை உள்ளே தள்ளிவிடத் தோதான நாடு, பசுமைப் புரட்சி தொடங்கி, வெண்மைப் புரட்சி வரை அழிவை நோக்கித்தான் என்பதை உணர்ந்தும் உணராத நாடு இந்தியா; கூடவே, கேள்வி ஏதும் கேட்காத அரசியல்வாதிகளைக் கொண்ட நாடு; அது அந்த நிறுவனங்களின் இலக்கானதில் வியப்பேதும் இல்லை. முதலில் அதை இறுகப் பற்றிக்கொண்டவர் மோடி. பின்பு, 2010-ல் மத்திய அரசும் இந்தக் கொள்கையைக் கொண்டுவந்தது. அடுத்தடுத்து ராஜஸ்தான், ஆந்திரம் உள்ளிட்ட சில மாநிலங்கள் இந்த வலையில் விழுந்தன. இப்போது தமிழகம்.

இதில் என்ன பொருளாதாரச் சிக்கல்?

தமிழக அரசின் சூரிய ஒளி மின்சக்திக் கொள்கையின் இலக்கு 2015-ம் ஆண்டுக்குள் 3,000 மெகா வாட் சூரிய மின்சக்தியை உற்பத்திசெய்வது. ஒரு மெகா வாட் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்திசெய்யும் நிலையம் அமைக்க சுமார் எட்டுக் கோடி ரூபாய் தேவை. 1,000 மெகா வாட்டுக்கு 8,000 ஆயிரம் கோடி ரூபாய். இதில் நஷ்டம் மட்டுமே அரசுக்கு 7,00 கோடி ஏற்படும். மேற்கண்ட கணக்குகளை தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பின் தலைவர் காந்தி, திட்டம் தொடங்கப்பட்டபோதே ஆதாரங்களுடன் எடுத்து வைத்தார். ஆனால், பலன் இல்லை.

தமிழக மின்வாரியமோ, மின்சாரப் பயனீட்டாளர்களான தொழில்துறையினரிடம் சூரிய மின்சாரத்தை விற்று லாபம் ஈட்டுவோம் என்றது. அதாவது, கட்டாய விற்பனை. உயர் அழுத்த, தாழ் அழுத்த மின்சாரத்தைப் பயன்படுத்தும் நிறுவனங்கள், தாங்கள் பயன்படுத்தும் மின்சாரத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை சூரிய மின்சாரமாக வாங்க வேண்டும். ஆனால், சாதாரண மின்சாரத்தின் விலை யூனிட் 5 முதல் 7 ரூபாய் வரை எனில், சூரிய மின்சாரத்தின் விலை 15 முதல் 17 ரூபாய் வரை. ஆனால், ‘தமிழ்நாடு ஸ்பின்னிங் மில்ஸ் அசோசியேஷன்' உள்ளிட்ட சில அமைப்புகள் மின்வாரியத்துக்கு எதிராக மின்சார மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் மனுத் தாக்கல்செய்தன. பயனீட்டாளர்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்துள்ள சூழலில், மின்வாரியத்துக்கு இது கூடுதல் நஷ்டம்.

வளைத்துப்போட்ட நிலங்கள்

சூரிய ஒளி மின் உற்பத்திக்கான பாலி சிலிக்கான் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் மான்சாண்டோ எலெக்ட்ரானிக் மெட்டீரியல்ஸ் நிறுவனம், தனது துணை நிறுவனமான சன் எடிசன் மூலம் தமிழகத்தில் கால்பதித்துள்ளது. அது கடந்த 2012-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னையின் ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு பன்னாட்டு வங்கியின் கூரையில் 100 கிலோ வாட் சூரிய ஒளி மின் உற்பத்தித் திட்டத்தைச் சோதனை ஓட்டமாகச் செயல்படுத்தியுள்ளது. தொடர்ந்து அந்த நிறுவனம் 2014, பிப்ரவரி மாதம் திருநெல்வேலியில் 18 மெகாவாட் சூரிய மின் உற்பத்தித் திட்டத்தைத் தொடங்கியிருக்கிறது. திருநெல்வேலி அருகில் முனஞ்சிப்பட்டியில் 80 ஏக்கரில் மற்றுமொரு சூரிய மின் உற்பத்தி நிலையத்தையும் அந்த நிறுவனம் விரைவில் தொடங்கவிருக்கிறது.

சூரிய மின் உற்பத்திக்கான செல்கள் மற்றும் மாட்யூல் களை உற்பத்திசெய்வதில் உலக அளவில் முன்னணியில் இருக்கிறது அமெரிக்காவின் வால்மார்ட்டின் - ஃபர்ஸ்ட் சோலார் நிறுவனம். கடந்த நான்கு ஆண்டுகளில் சந்தை கடுமையாக வீழ்ச்சியடைந்ததால் ஜெர்மனியில் அது தனது தொழிற்சாலையை மூடிவிட்டது. அந்த நிறுவனமும் தமிழகத்தில் கால்பதிக்கப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியிருக்கிறது. மேற்கண்ட நிறுவனங்கள் உட்பட வேறுசில பன்னாட்டு நிறுவனங்களும் ராமநாதபுரம், கடலாடி, தூத்துக்குடி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 15,000 ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்தியுள்ளன.

பயனீட்டாளர்களிடம் சூரிய மின்சாரத்தைக் கட்டாயப் படுத்தி, அதிக விலைக்கு விற்க முடியாது என்று நீதிமன்றத் தீர்ப்பு வந்துவிட்ட பிறகும், மேற்கண்ட நிறுவனங்கள் இங்கு தொழில் செய்ய ஆர்வம் காட்டுகின்றன என்றால், அவர்களின் திட்டம் என்ன?

கொள்ளை லாபமே குறிக்கோள்

உற்பத்தி செய்யும் மின்சாரத்தை அதிக விலைக்கு தமிழக மின்வாரியத்தின் தலையில் கட்டிவிடலாம் என்பது திட்டம். உதாரணத்துக்கு, மதுரை பேரையூரில் இயங்கிவரும் ஸ்பெயின் நாட்டின் நிறுவனம், ஒரு யூனிட் மின்சாரத்தை மின்வாரியத்துக்கு ரூ.18.45-க்கு விற்க ஒப்பந்தம் போட்டுள்ளது. கொள்ளை லாபம் இல்லையா?

சுற்றுச்சூழல் சிக்கல்கள் என்ன?

தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பின் தலைவர் சா. காந்தி சொல்கிறார், “சூரிய ஒளி மின் உற்பத்தி வேண்டாம் என்று சொல்ல வில்லை. தற்போதைய சூரிய மின் உற்பத்தித் தொழில் நுட்பம் ஆபத்தானது. மேலும், அது 2020-க்குள் காலாவதியாகிவிடும். ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள், சூரிய ஒளியிலிருந்து ஒரு தாவரம் சக்தியைப் பெறும் இயற்கையான தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான சூரிய மின் உற்பத்தி குறித்து ஆராய்ச்சிகள் செய்து வருகின்றன. ஆனால், இங்கு பழைய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இன்னும் 20 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போட்டுவருகின்றனர். இது நஷ்டத்தையே ஏற்படுத்தும். சூரிய ஒளியில் மின்சாரம் உற்பத்தி செய்யப் பயன்படும் வேதிப் பொருளான கேட்மியம் டெல்லுரைடு வெளிப்படுத்தும் கதிர்வீச்சால் காசநோய், சில வகைப் புற்றுநோய்கள், சிறுநீரகம் மற்றும் நுரையீரல் நோய்கள் ஏற்படும். பல்வேறு மேற்கத்திய நாடுகள் சூரிய மின் உற்பத்திக்குத் தடைவிதித்துவிட்டன. ஜெர்மனியில் கேட்மியம் டெல்லுரைடைப் பயன்படுத்தக் கடுமையான கட்டுப்பாடுகள் உண்டு. ஜப்பானில் பெரும் பாதிப்பை உண்டாக்கிய ‘இட்டாய் இட்டாய்' நோய்க்குக் காரணம் கேட்மியம். மெல்லிய ஃபிலிம் தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படும் செலினியம் என்னும் வேதிப் பொருள் புற்றுநோய்களை உருவாக்கும். இதனைப் பல நாடுகள் தடைசெய்துள்ளன.”

பற்றாக்குறை நிலவும் இந்த நேரத்தில், கூடுதல் மின் உற்பத்தி மிகவும் அத்தியாவசியம்தான். ஆனால், பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு அது பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைந்துவிடக் கூடாது. என்ன செய்யப்போகிறோம் நாம்?

- டி.எல்.சஞ்சீவிகுமார், தொடர்புக்கு: sanjeevikumar.tl@kslmedia.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 hour ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

6 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்