நாடாளுமன்றத்தை நோக்கிப் போராட்ட முழக்கங்களுடன் முஷ்டியை முறுக்கிக்கொண்டிருக்கின்றனர் பிரேசில் மக்கள். எல்லாம் ‘வளர்ச்சி’ விவகாரம்தான். அரசாங்கத்தின் கண்கள் நிலத்தைப் பார்க்கிறது. பூர்வகுடிகள் கொந்தளிக்கிறார்கள். அரசின் கொள்கை தங்கள் வாழ்வாதாரத்தை நாசமாக்கிவிடும் என்றும் தங்களை வாழிடங்களிலிருந்து பிய்த்தெறிந்துவிடும் என்றும் அவர்கள் அஞ்சுகிறார்கள். இந்த அச்சத்தில் உள்ள நியாயத்தைப் புறக்கணிக்கவே முடியாது. ஏனென்றால், உலகம் முழுக்க அப்படித்தான் நடந்திருக்கிறது.
இந்தியாவில், இதுவரை நிலம் கையகப்படுத்தலால் துரத்தியடிக்கப்பட்டவர்களில் 40% பேர் பழங்குடிகள்; மூன்றில் இரு பங்கினர் இன்னமும் மறுகுடியமர்த்தப்படவில்லை. உள்நாட்டு அகதிகள் என்று அவர்களைச் சொல்ல முடியுமா? இந்தக் குடியமர்த்தல், உள்நாட்டு அகதிகள் இதெல்லாம் போலியான கவுரவ வார்த்தைகள். பிச்சை எடுப்பவர்களில் பெரும்பாலானவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என நினைக்கிறீர்கள்?
டெல்லியில், மும்பையில், கொல்கத்தாவில், சென்னையில்... பல பெருநகரங்களில் பார்த்திருக்கிறேன், அவர்களிடம் பேசியிருக்கிறேன். அவர்களுடைய கதைகளில் நிலத்துக்கு முக்கியமான பங்கு உண்டு. நிலத்தைத் தாண்டி அவர்கள் அதிகம் பேசக்கூடிய வார்த்தை துரோகம். நம்பிக்கைத் துரோகம்.
அடுத்தடுத்துக் காத்திருக்கின்றன அதிரடிகள்
மோடி அரசை ‘அவசரச் சட்டங்களின் அரசு’ என்று நாம் தாராளமாகச் சொல்லலாம். முதல் 7 மாதங்களில் மட்டும் 10 அவசரச் சட்டங்களை நிறைவேற்றிய அரசு இது. கிட்டத்தட்ட 20 நாட்களுக்கு ஓர் அவசரச் சட்டம். ஏன்? பாஜகவுக்கு மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லை என்பதை மட்டும் ஒரு காரணமாகச் சொல்ல முடியாது. மக்களவையில் பெரும்பான்மை இருக்கிறது.
ஒரு மசோதாவை மாநிலங்களவை நிராகரிக்கும்போது இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தைக் கூட்ட முடியும். அப்படிக் கூட்டினால், எண்ணிக்கை அடிப்படையில் ஆளும் கூட்டணிக்குப் பெரும்பான்மை இருக்கிறது. ஆனாலும், அரசுக்கு அவசரச் சட்டங்கள்தான் எளிய வழியாக இருக்கிறது. இது அரசியல் சாசனத்தை முறைகேடாகப் பயன்படுத்துவது மட்டும் அல்ல; ஜனநாயக விரோதமும்கூட.
நிலம் கையகப்படுத்தும் சட்டத்தோடு முடியவில்லை கதை. அரசு இன்னும் ஏராளமான திட்டங்களுடன் காத்திருக்கிறது. ஏகப்பட்ட சட்டங்கள் அதன் கையில் இருக்கின்றன.
காலங்காலமாகப் பழங்குடிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குப் பரிகாரமாக மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டது, 2006-ல் இயற்றப்பட்ட வன உரிமைச் சட்டம். வனவாசிகளுக்கு வன நிலங்கள் மீதும் வனத்தில் கிடைக்கும் பொருட்கள் மீதும் உரிமையளிக்கும் சட்டம் இது. அவர்கள் வாழ்வை வளப்படுத்தக் கூடியது. இதை நீர்த்துப்போகச் செய்யும் நடவடிக்கைகள் தொடர்கின்றன.
இதே போன்ற இன்னொரு மசோதா 2010 சுரங்க, கனிம மசோதா. வளர்ச்சியில் பழங்குடிகளுக்கும் பங்கு அளிக்க வகைசெய்யும் திட்டத்தை உள்ளடக்கிய மசோதா இது. இதன்படி, கனிம நிறுவனங்களில் 26% பங்குகள் பழங்குடிகளுக்குக் கிடைக்கும். மோடி அரசு இதிலும் கை வைக்கிறது. வனத்தில் வாழும் 10 கோடி மக்களுக்கும் வனம் சார்ந்த 27.5 கோடி மக்களுக்கும் இழைக்கப்படும் பெரும் அநீதி.
இந்த அநீதிகளுக்கெல்லாம் ஆளும் கட்சிகளை மட்டுமே குற்றவாளியாக்க முடியாது. எதிர்க் கட்சிகளுக்கும் முக்கியப் பங்கு உண்டு. அவர்களுடைய பங்கைத்தான் துரோகம் என்று குறிப்பிடுகின்றனர், பாதிக்கப்பட்ட மக்கள். மன்மோகன் சிங் அரசு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தைக் கொண்டுவந்தபோது “விவசாய நிலங்களைக் கையகப்படுத்தும் விதிகளை மேலும் கடுமையாக்க வேண்டும்” என்று பெருங்குரல் கொடுத்தது பாஜக.
அக்கட்சியின் அன்றைய தலைவர் ராஜ்நாத் சிங்கும், சுஷ்மா ஸ்வராஜும், சுமித்ரா மஹாஜனும் என்னவெல்லாம் பேசினார்கள் என்பது இன்றைக்கும் இணையத்தில் கிடைக்கிறது. நம்பி வாக்களித்தனர் மக்கள். இன்றைக்கு அப்படியே நேர் விரோதமாகச் செயல்படுகிறது அதே கட்சி. இது துரோகமா இல்லையா?
பாவனை அரசியலிலிருந்து வெளியே வாருங்கள்
இன்றைய எதிர்க் கட்சிகளுக்கும் இது பொருந்தும். இவ்வளவு தவறுகளையும் அரசாங்கத்தால் எப்படித் துணிச்சலாகச் செய்ய முடிகிறது? எதிர்க் கட்சிகளின் பாவனை அரசியலே (டோக்கனிஸ பாலிடிக்ஸ்) காரணம். இன்றைக்கு எத்தனை விவசாயிகளுக்கு இந்திய அரசாங்கத்தின் வேளாண் விரோதக் கொள்கைகள் தெரியும்? நிலம் கையகப்படுத்தும் சட்டத்தைப் பற்றித் தெரியும்? தமிழகத்தில் காவிரிக்காக, முல்லைப் பெரியாறுக்காக எழுந்த குரல்களில் எத்தனை குரல்கள் இப்போது ஒலிக்கின்றன?
பல கட்சிகளுக்கு, பல அமைப்புகளுக்கு அவர்கள் பேசும் கொள்கைகளில் அவர்களுக்கே நம்பிக்கை கிடையாது. இந்த நாட்டில் எதிர்க் கட்சிகள் கர்ம சிரத்தையோடு ஒரு காரியத்தை எதிர்க்க ஆரம்பித்தால், ஒரு அரசாங்கம் என்னவாகும் என்பதற்கு இன்றைக்கும் உதாரணம், நெருக்கடிநிலைக் காலகட்டம். உண்மையான எதிர்ப்பு திரண்டால் நிச்சயம் அரசு செவிசாய்க்கும், நிலைமை மாறும். ஆனால், நம்முடைய அரசியல் கட்சிகள் பெயருக்கு அரசியல் செய்கின்றன; சம்பிரதாயப் போராட்டங்களை நடத்துகின்றன. வெறும் அறிக்கை அரசியலால் என்ன மாற்றங்களைக் கொண்டுவர முடியும்?
விவசாயிகளின் எந்தப் பிரச்சினையும் அவர்களுடைய பிரச்சினை மட்டும் அல்ல. அது சோற்றுப் பிரச்சினை. நம் ஒவ்வொருவருடைய பிரச்சினை. செஞ்சோற்றுக் கடன் தீர்க்க, ஆன்மசுத்தியுடன் ஒவ்வொரு இந்தியரும் களம் இறங்கும் தருணம் இது!
(நிறைந்தது)
- சமஸ்,
தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago