உண்மை என்பது ஒரு உத்தியோ தந்திரமோ அல்ல; வாழ்வின் ஆதாரம்.
சமணத் தத்துவத்தைத் தந்த மகாவீரர், ஐந்து விதமான அறங்களை அடிப்படையானவையாக வலியுறுத்துகிறார். அகிம்சை, வாய்மை, கள்ளாமை, பிரம்மச்சரியம், அவாவறுத்தல் (ஆசை துறத்தல்) ஆகியவையே அவை. இதில் இரண்டாவது பேரறமாகத் திகழ்வது பொய் பேசாமை. இதனை ‘அசத்தியத் தியாகம்’ எனச் சமணம் வரையறுக்கிறது. அகிம்சையையும் சத்தியத்தையும் அறமாகக் கொள்பவர்கள் பல்வேறு சித்திகளைப் பெறுவார்கள் என்பது சமண சமயத்தின் நம்பிக்கை. காந்தியடிகளின் அறப் போராட்டத்துக்கு மகாவீரர் போதித்த அகிம்சையும் சத்தியமும் இரு பெரும் ஆயுதங்களாகப் பயன்பட்டன.
‘சத்யமேவ ஜெயதே’ (வாய்மையே வெல்லும்) என்பது நமது அறிவிக்கப்பட்ட தேசியக் குறிக்கோள். இந்தியாவின் தேசியச் சின்னத்தில் இந்த வாக்கியம் பொறிக்கப்பட்டுள்ளது. முண்டக உபநிடதத்தின் புகழ் பெற்ற வாக்கியங்களில் ஒன்று. ஆனால், உண்மை பேச வேண்டும் என்பது பொதுவாக எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்டு, அனேகமாக யாராலும் கடைப்பிடிக்க முடியாத ஒரு மதிப்பீடாக உள்ளது. அரசியலிலிருந்து சாமானிய மனிதர்களின் அன்றாட வாழ்க்கை வரை இதற்கு வாழும் உதாரணங்கள் கொட்டிக் கிடக்கின்றன.
புரை தீர்ந்த நன்மை!
உண்மை நமது குறிக்கோளாக இருக்கலாம். ஆனால், அது நடைமுறைக்கு ஒவ்வாத லட்சியம் என்பதே யதார்த்தம். உண்மை பேசுவதிலிருந்து நம்மைத் தடுக்கும் அம்சங்களில் வேடிக்கை, விளையாட்டு போன்ற காரணங்களை விட்டுவிடுவோம். ‘புரை தீர்ந்த நன்மை பயக்கும்’ பொய்களையும் விட்டுவிடலாம். இதர பொய்களை ஏன் தவிர்க்க முடியவில்லை? உண்மை என்பது ஏன் அடைய முடியாத லட்சியமாகவே இருக்கிறது?
உண்மை பேசினால் பல சமயம் கெட்ட பெயர் வருகிறது என்பது ஒரு காரணம். ஒருவர் அலுவலகத்துக்குத் தாமதமாக வருகிறார். அதற்கு வெளியில் சொல்ல முடியாத அந்தரங்கமான காரணம் இருக்கலாம். மேலதிகாரி வற்புறுத்திக் கேட்டால் பொய் சொல்ல வேண்டியிருக்கிறது. மிகவும் அதிக விலை கொடுத்து வாங்கிய உடையைப் போட்டுக்கொண்டிருக்கும் நண்பர் அதுபற்றிக் கருத்துக் கேட்கும்போது உண்மையை வெளிப்படையாகச் சொல்வதில் சங்கடம் ஏற்படுகிறது.
பொய்மை நிறைந்த உலகில் நாம் மட்டும் உண்மை பேசி ஏமாளியாக நிற்க முடியாது என்பதுதான் உண்மை பேசாமல் இருப்பதற்குச் சொல்லப்படும் காரணங்களில் முக்கியமானது. பொய் சொன்னால்தான் வெற்றி பெறவோ வாழ்க்கையில் முன்னேறவோ முடியும் என்னும் சூழலையும் இந்தக் காரணத்தோடு சேர்த்துப் பார்க்க வேண்டும்.
நேர்முகத் தேர்வில் பொய் சொல்ல வேண்டியிருக் கிறது. பொருளை விற்க வேண்டியவர்கள் பொய் சொல்ல வேண்டியிருக்கிறது. கையில் பணம் இருந்தும் இல்லை எனச் சொல்ல வேண்டியிருகிறது. சாலைகளில் காவலர்களைச் சமாளிக்கும் தருணங்களில் பொய் சொல்ல வேண்டியிருக்கிறது. பணியிடத்தில் பொய் சொல்ல வேண்டியிருக்கிறது. குழந்தைகளிடம் பொய் சொல்ல வேண்டியிருக்கிறது. பெற்றோரிடம் பொய் சொல்ல வேண்டியிருக்கிறது. காதலில் பொய் சொல்ல வேண்டியிருக்கிறது. தவறை மறைக்கப் பொய் சொல்ல வேண்டியிருக்கிறது. தவறே செய்யாதபோதும் பொய் சொல்ல வேண்டியிருக்கிறது.
எல்லாம் பொய், எதிலும் பொய்
பொய்களால் கட்டமைக்கப்பட்ட சூழலில் பொய் களைச் சொல்லி, பொய்களை நம்பி, பொய்யான வாழ்வை வாழ்ந்துகொண்டிருக்கிறோம். விளம்பரங்கள் பொய் சொல்கின்றன. ஒப்பனைகள் பொய் சொல்கின்றன. புன்னகைகளில் பொய் ஒளிந்திருக்கிறது. கண்ணீரில் பொய் கலந்திருக்கிறது. உண்மையின் மகத்துவத்தைப் பேசிக்கொண்டே பொய்களால் சூழ்ந்த வாழ்வை நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
உண்மை பேசினால் வரக்கூடிய கஷ்டம், நஷ்டம், வருத்தம், ஆபத்து, அவமானம், விரோதம் முதலான பல காரணங்கள் உலகைப் பொய்மை நிறைந்ததாக மாற்றுகின்றன. பொய்யால் வரும் ஆதாயங்களும் பொய்மையை வளர்க்கின்றன.
எனினும், உண்மைதான் இந்த உலகில் சம நீதியையும் அனைவருக்குமான நல வாழ்வுக்கான உத்தரவாதத்தையும் உறுதிசெய்யக்கூடியது என்பதையும் நாம் உணர்ந்திருக்கிறோம். எனவே, உண்மைதான் மனித வாழ்வின் ஆதாரமான மதிப்பீடாக இருக்க முடியும்.
ஆனால், உண்மை பேச வேண்டும் என்றால் நாம் சில ஆதாயங்களைத் துறக்க வேண்டும் அல்லது சில நஷ்டங்களுக்குத் தயாராக வேண்டும். அந்த நஷ்டத்தை ஏற்றுக்கொள்ளும் வலிமை நமக்கு இருக்க வேண்டும். பொருளியல் வலிமை, சமூக மதிப்பு சார்ந்த வலிமை, உடல் வலிமை, மன வலிமை எனப் பல வித வலிமைகள் தேவை என்றாலும், மன வலிமையே முக்கியமானது. ஏனெனில், பிற வலிமைகள் வரையறைக்குட்பட்டவை. ஒப்பீட்டளவிலேயே வரையறுக்கப்படுபவை.
மனவலிமையே வெல்லும்
வசதியும் அந்தஸ்தும் இருந்தால் உண்மை பேசுவதால் வரும் நஷ்டத்தைச் சமாளிக்கலாம் என்று சிலர் கருதலாம். இது தர்க்கரீதியாகச் சரியாக இருந்தாலும், அந்த வசதியை அடைவதற்கும் தக்கவைத்துக்கொள்வதற்கும் சொல்ல வேண்டிய பொய்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், இந்த அனுகூலங்கள் வெறும் மாயை என்பதைப் புரிந்துகொள்ள முடியும். எனவே, எந்தச் சூழலிலும் உண்மை என்பதே உண்மை நாடுபவரின் லட்சியமாக இருக்க முடியும். அத்தகைய லட்சியத்தை அடைய மன வலிமையே முக்கியமானது.
உண்மை பேசுவதால் ஏற்படும் விளைவுகளை ஏற்கும் மனப் பக்குவம் இருக்க வேண்டும். அல்லது உண்மை சொன்னால் நஷ்டம் வராத அளவுக்கு நம் நடத்தை மாற வேண்டும். அலுவலகத்துக்குத் தாமதமாகச் செல்பவர் உண்மையான காரணத்தைச் சொன்னால் ஏற்படும் விளைவை எண்ணி அஞ்சிப் பொய் சொல்கிறார். இவர் உண்மை பேச வேண்டுமானால், ஒன்று அந்த விளைவை ஏற்கத் தயாராக இருக்க வேண்டும். அல்லது தாமதமாக வருவதைத் தவிர்க்க வேண்டும். விற்பனைப் பிரதிநிதி உண்மை சொல்வதால் ஏற்படும் நஷ்டத்தை ஏற்க வேண்டும். அல்லது பொய் சொல்லாமலேயே விற்கக்கூடிய அளவுக்குச் சிறந்த பொருட்களையோ சேவைகளையோ விற்கும் அளவுக்குத் தன் தொழிலை அமைத்துக்கொள்ளும் வலிமையைப் பெற வேண்டும்.
அகத்தின் மாற்றம்
ஒரு உதாரணம் பார்ப்போம். கடனைத் திருப்பித் தருவதாகச் சொல்லிவிட்டுத் தராமல் இருப்பது, பொய் சொல்லிச் சமாளிப்பது ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும் என்றால் திருப்பித் தருவதற்கான பணம் இருக்க வேண்டும். அதற்காகக் கடுமையாக உழைக்க வேண்டும், கவனமாகத் திட்டமிட வேண்டும். அல்லது கடன் தேவைப்படாத வாழ்வை வாழப் பழக வேண்டும். அதற்குத் தேவையான மாற்றங்களை நம் வாழ்வில் கொண்டுவர வேண்டும். மாற்றங்கள் புற வாழ்வில் மட்டும் இருந்தால் அது நீடிக்காது. அகத்திலும் மாற்றம் வர வேண்டும். நம்மைச் சேர்ந்தவர்களையும் இதற்கு ஒப்புக்கொள்ளச் செய்ய வேண்டும். பழக்கப்படுத்த வேண்டும். அவர்கள் ஒத்துழைக்காத நிலையிலும் இதைக் கடைப்பிடிக்கத் தேவையான மன உறுதி இருக்க வேண்டும். சூழலோடு ஒத்துப்போகாத வாழ்வை வாழ்வதற்கான அசாத்தியமான துணிச்சலையும் மன வலிமையையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். அல்லது சூழலை மாற்றிக்கொள்ளவோ இழக்கவோ தேவையான வலிமையையும் பக்குவத்தையும் பெற வேண்டும்.
இந்த மாற்றம் எந்த அளவுக்கு ஆழமானதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அதன் விளைவு - அது நம் ஆளுமையில் ஏற்படுத்தும் தாக்கம் - ஆழமானதாகவும் நீடித்திருப்பதாகவும் இருக்கும். இந்தப் பொருளில்தான் சத்தியம் என்பது சோதனையாக மாறுகிறது; சுய பரிசோதனையாகப் பரிணமிக்கிறது. நம்மால் பொய் சொல்லாமல் இருக்க முடியுமா? உண்மைதான் உயர்ந்த மதிப்பீடு என்று உண்மையிலேயே நாம் நம்புகிறோமா? உண்மை சொல்வதால் வரும் விளைவுகளை நம்மால் தாங்கிக்கொள்ள முடிகிறதா? பொய் சொல்லவே அவசியமற்ற வகையில் நடத்தையை அமைத்துக்கொள்ள முடிகிறதா? இந்தக் கேள்வி களுக்கான நமது உண்மையான பதில்கள் என்ன என்பதே சத்திய சோதனையில் நாம் எந்த அளவுக்குத் தேறியிருக்கிறோம் என்பதற்கான அளவீடு.
உண்மை என்பது ஒரு உத்தியோ தந்திரமோ அல்ல; வாழ்வின் ஆதாரம். எனவே, உண்மை பேச வேண்டும். அப்படிப் பேச வேண்டுமானால், ஒருவரது அக வாழ்விலும் புற வாழ்விலும் பல விதமான மாற்றங்களுக்கும் போராட்டங்களுக்கும் தயாராக இருக்க வேண்டும். சோதனைகளுக்குத் தயாராக இருக்க வேண்டும். இதுவே சத்திய சோதனை. இந்தச் சோதனையில் பெறும் முன்னேற்றமே அமைதியான வாழ்வுக்கான ஆதாரம்.
- அரவிந்தன், தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in
இன்று மகாவீரர் ஜெயந்தி
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago