விவசாயிகள் தற்கொலையா, படுகொலையா?

By சமஸ்

முக்கால் மணி நேரத்துக்கு ஒரு விவசாயி உயிரை மாய்த்துக்கொள்ளும் இந்த நாட்டில், ஒரு விவசாயியின் தற்கொலையால் நாடாளுமன்றம் முடக்கப்படுவது அசாதாரண நிகழ்வுதான். காண்டாமிருகத் தோலைவிடக் கடினமான, கருணைக்கோ, சொரணைக்கோ இடமே இல்லாததாகிவிட்ட இந்திய அரசியல் வர்க்கத்தின் இதயத்தைக் கொஞ்சமேனும் சுரண்டியிருக்கிறது ஒரு மரணம். விபத்துகளால் உருவாகும் வரலாற்றின் போக்கை திசை மாற்றும் சக்தி சில தற்கொலைகளுக்கு உண்டு. கஜேந்திர சிங்கின் ஆன்மா சாந்தி அடையட்டும்!

வரலாற்றுச் சூதாட்டத்தில் விதியின் காய் நகர்த்தல்போலவே தோன்றுகிறது கஜேந்திர சிங்கின் தற்கொலை. ஒரு அரசு எல்லா எதிர்ப்புகளையும் மீறி, பேய் வெறியோடு மக்கள் விரோத மசோதா ஒன்றை நிறைவேற்ற முற்படும் சூழலில், தலைநகரில் சாமானியர்களின் கட்சி என்று தன்னைப் பிரகடனப்படுத்திக்கொண்ட ஆம் ஆத்மி கட்சி, அதற்கெதிராகப் போராடுவதாகச் சொல்லி நடத்தும் பொதுக்கூட்டப் பகுதியில், பல நூறு போலீஸாரும் சில ஆயிரம் கட்சிக்காரர்களும் பார்க்க ஒரு விவசாயி தூக்கிட்டுக்கொள்வதும், அதைப் பார்த்துக்கொண்டே அந்தக் கட்சி ‘போராட்ட’த்தைத் தொடர்வதும் சொல்லும் செய்தி என்ன? இந்த நாட்டில் ஆளும்கட்சி மட்டும் அல்ல; எதிர்க்கட்சிகளும் போலிகளால் நிரம்பியிருக்கின்றன. இந்த நாட்டின் முதுகெலும்பு என்று நம் பாடப்புத்தகங்கள் சொல்லும், நாட்டுக்குச் சோறிடும் அறுதிப் பெரும்பான்மையினரான விவசாயிகள் தங்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ள முதலில் அவர்கள்தான் கிளர்ந்தெழ வேண்டும்.

தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் தரும் தகவல்களின் படியே கடந்த 2011, 2012, 2013 ஆகிய மூன்று ஆண்டு களில் மட்டும் 39,553 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். 2014-ம் ஆண்டுக்கான ஆவணக் காப்பக விவரம் வரும் ஜூலையில்தான் வெளி யாகும் என்றாலும், நல்ல அறிகுறிகளுக்கான வாய்ப்புகள் தெரியவில்லை. ஏனென்றால், இந்திய விவசாயிகள் தற்கொலைகளின் தலைமை கேந்திரமான மகாராஷ்டிரத்தில் - நாட்டின் தலைமைத் தொழில் கேந்திரம், நாட்டின் பணக்கார மாநிலம், நாட்டிலேயே அதிகமானோர் நகரங்களில் வசிக்கும் மாநிலமும்கூட - கடந்த ஆண்டு 1981 விவசாயிகள் உயிரை மாய்த்துக்கொண்டிருக்கின்றனர் என்கின்றன ஊடகங்கள். இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களுக்குள் இந்த எண்ணிக்கை அங்கு 601 ஆகியிருக்கிறது. நாடு முழுவதும், 1995 முதலான கடந்த 20 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 3 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனர்.

இந்த எண்ணிக்கைகள் எல்லாம்கூட உண்மையில் சொற்பம் தான். காவல் நிலையங்கள் தவிர்க்க முடியாமல் பதியும் / அரசாங்கங்கள் தவிர்க்க முடியாமல் தரும் எண்ணிக்கைகள். விவசாயிகள் தற்கொலைகள் செய்தியாக மாறி தரும் சங்கடங்களால் விவசாயிகள் தற்கொலைகளைப் பல மாநிலங்கள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு இருட்டடிப்பு செய்கின்றன. உதாரணமாக, பத்துக்கும் இருபதுக்கும் அல்லாடும் மக்களைக் கொண்ட, மாவோயிஸ்ட்டுகள் ஆதிக்கத்தால் பீடிக்கப்பட்ட சத்தீஸ்கரில் கடந்த மூன்றாண்டு களில் நடந்த விவசாயிகள் தற்கொலை என்று அங்கு ஆளும் பாஜக அரசு தரும் எண்ணிக்கை இது: 2011-ல் 0; 2012-ல் 4; 2013-ல் 0. மூன்று வருடங்களுக்கு முன்பு வரை ஆண்டுக்கு சராசரியாக 1567 தற்கொலைகள் நடந்து கொண்டிருந்த, தற்கொலையில் முன்னணியிலிருந்த மாநிலம் அது. சத்தீஸ்கரில் குழந்தைகூட அரசாங்கம் தரும் இந்தப் புள்ளிவிவரத்தைப் பார்த்தால் நகைக்கும். கூசாமல் மறைக்கிறார்கள்.

தமிழகத்திலும் இதைப் பார்த்தோம். கடந்த 2012-ல் காவிரியில் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகின. இழப்பைத் தாங்க முடியாமல் பத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் காவிரி மாவட்டங்களில் உயிரை மாய்த்துக்கொண்டனர். இழப்பீடு கேட்டு, விவசாயிகள் நீதிமன்றம் சென்றபோது, வேளாண் பிரச்சினையால் எவரும் சாகவில்லை என்று நீதிமன்றத்திடம் கூறினார்கள் மாவட்ட ஆட்சியர்கள்.

இப்படியெல்லாம் மறைத்தது போக, பதிவுசெய்யப்பட்ட விவரங்கள்தான் கடந்த 20 ஆண்டுகளில் 3 லட்சம் விவசாயிகள் உயிரை மாய்த்துக்கொண்ட கதையைச் சொல்கின்றன. இந்தியாவின் 6.38 லட்சம் கிராமங்களிலும் வருமானத்துக்கு வழியில்லாமல் மறுகி மறுகிச் சாவோரின் எண்ணிக்கை நம்மிடம் இல்லை. வேளாண் தோல்வியின் காரணமாக, தம் சந்ததியினருக்கும் இந்தத் தொழில் வாய்த்துவிடக் கூடாது எனும் விரக்தியால், பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக நிலத்தையும் விற்றுவிட்டு தொழிலையும் விட்டுவிட்டு நடைப்பிணங்களாக நகரங்களில் திரிவோரின் எண்ணிக்கை நம்மிடம் இல்லை.

சமீபத்தில் படித்த ஒரு கதை இது. தலைநகர் டெல்லியில் ஓடும் பேருந்தில், இளைஞர்கள் பலரால் கொடூரமாகப் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்ட ‘நிர்பயா’வின் பெற்றோரின் கதை அது. ஒரு சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த அவர்களுக்கு இருந்த ஒரே ஆதாரம் கொஞ்சம் நிலம். பெண்ணின் படிப்புக்காக, அவளுடைய எதிர்காலக் கனவுக்காக அந்த ஆதாரத்தையும் விற்றுவிட்டுதான் நகரத்தை நோக்கி நகர்ந்திருக்கிறார்கள். இப்போது பெண்ணும் இல்லை, நிலமும் இல்லை. ஏதோ இருக்கிறோம் என்கிறார்கள். இந்தக் கதைகளுக்கெல்லாம் எண்ணிக்கை கிடையாது.

ஆனாலும், 3 லட்சம் உயிர்கள் சாதாரண எண்ணிக்கை இல்லை. சென்ற நூற்றாண்டின் முதல் படுகொலையான நமீபிய இனப்படுகொலையில் கொல்லப்பட்டவர்களைப் போலக் கிட்டத்தட்ட 6 மடங்கு இது. கிட்டத்தட்ட இது ஒரு இனப்படுகொலைதான். அரசின் கொள்கைகளின் விளைவாகத் தொடர்ந்து ஒரு இனம் - தொழில் சார்ந்து - மரணத்தை நோக்கித் தள்ளப்படுகிறது. தங்கள் வாழிடத்தைவிட்டு விரட்டப்படுகிறது. இந்தப் பின்னணியில், நெருக்கடியில் உயிரை மாய்த்துக்கொள்ளும் ஒரு விவசாயியின் மரணத்தை எப்படித் தற்கொலை என்று நாம் சொல்ல முடியும்? ஏன் இதன் தீவிரம் நமக்கு உறைக்கவில்லை?

வார்த்தைகளின் அரசியல் முக்கியமானது.

முன்பு நாட்டின் முக்கியமான பத்திரிகையாளர்களில் ஒருவராக இருந்து, இப்போது அரசின் ஊதுகுழலாகிவிட்ட பாஜக செய்தித் தொடர்பாளர் எம்.ஜே. அக்பர், நிலம் கையகப் படுத்தும் மசோதாவை ஆதரித்து சமீபத்தில் ஒரு கட்டுரை எழுதியிருக் கிறார். அதில் அரசுக்கு ஆலோசனையாக அவர் எழுப்பி யிருக்கும் கேள்வி இது: “நிலம் கையகப்படுத்தல், மறுவாழ்வு, மறுகுடியமர்வு, நியாயமான இழப்பீட்டுக்கான உரிமை வழங்கும் மசோதா’ என்ற இதன் பெயரை நாம் ஏன் ‘நிலம், நிலமற்றோரின் பொருளாதார மறுவாழ்வு மசோதா’ என்று அழைக்கக் கூடாது?”

வார்த்தைகளின் அரசியல் முக்கியமானது.

நாம் ஏன் இன்னும் ‘விவசாயிகள் படுகொலை’யை, ‘விவசாயிகளின் தற்கொலைகள்’ என்றே சொல்லிக் கொண்டிருக்கிறோம்?

- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்