அறிவு உற்பத்தி எப்போது?

By ஷிவ் விஸ்வநாதன்

அறிவுக்கும் பொதுச் சமூகத்துக்கும் அறிவுக்கும் அதிகாரத்துக்கும் இடையிலான உறவு!

முரண்பாடுகளின் தேசம்தான் இந்தியா. தேசத்தில் உள்ள மேட்டுக்குடியினர் வளர்ச்சியை விரும்புகிறார்கள்; புதுப்புதுத் திறன்களை ஊட்டுவதுகுறித்து வலியுறுத்துகிறார்கள். ஆனால், இவை எல்லாவற்றையும் பிற்போக்கான நிறுவனங்களை வைத்துக்கொண்டே செய்ய முயல்கிறார்கள்.

“அறிவுரீதியிலான ஒரு பொருளாதார சக்தியாக நாம் இருக்க விரும்புகிறோம். ஆனால், அறிவுச் சமூகத்தின் தேவைகள் என்ன என்பதைப் பற்றி நாம் சிந்திப்பதில்லை. தொடர்ந்து புதுமையான முயற்சி களில் ஈடுபடக்கூடிய நிறுவனங்கள் இல்லாமல் போனதும், குறுகிய காலப் பலன்களை மட்டுமே கொடுப்பவையாகவும் சீரற்றவையாகவும் ஆட்சிக் கொள்கைகள் இருப்பதற்கும் அதுதான் காரணம். அறிவு, கொள்கையாக்கம் என்றெல்லாம் வரும்போது செயலாலும் சிந்தனையாலும் பிறர் நம்மைத் தோற்கடித்து விடுகிறார்கள். நாமோ வாய்ஜாலத்துக்குக் கிடைக்கும் வெற்றிகளை உண்மையான வெற்றிகளோடு போட்டுக் குழப்பிக்கொள்கிறோம்” என்று ஒரு கருத்தாளர் கூறியிருக்கிறார்.

வேறுபாடுகளைப் பற்றிய குழப்பங்கள்

நமது அறிவுச் சமூகம் தகவலுக்கும் அறிவுக்கும் இடையேயுள்ள வேறுபாட்டை அறிவதில்லை. அறிவு என்பது கருத்தை வெளிப்படுத்தும் விதத்தில் இருப்பது, செயல்வடிவம் தொடர்பானது, பூடகமானது. தகவலையும் அறிவையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக்கொள்வதால் நுட்பமாகச் சிந்திப்பது என்ற பண்பே நம்மிடம் இல்லாமல் போய்விட்டது. அதேபோல், அறிவுக்கு அடிப்படையான இருக்கும் விவரணை மொழியும் சுயமாகக் கற்றுக்கொள்ளும் திறனும் நமக்கு இல்லாமல் போய்விட்டது.

2006-ல் வெளியான சாம் பிட்ரோடா தலைமையிலான ‘அறிவுசார் ஆணையம்’ 2006-ல் வெளியிட்ட அறிக்கையும் அப்படித்தான், அறிவுப் புரட்சியையும் தகவல் புரட்சியையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக்கொண்டது. தொழில்நுட்பத்தையும் அறிவுச் செயல்பாட்டையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொண்டது.

20-ம் நூற்றாண்டின் உலகில் ஏற்பட்ட நான்கு புரட்சிகள், அதாவது குவாண்டம் இயற்பியல், மரபணுவியல், மொழியியல், அறிவுத் துறை ஆகிய நான்கு புரட்சிகளில் கடைசி இரண்டும் இந்தியாவைத் தொடாமலே சென்று விட்டன. இந்தியாவின் மேட்டுக்குடியினர் இதை உணரவே இல்லை.

சமகால இந்தியா என்பதெல்லாம் பேருக்குத்தான். உண்மையில் சமகால அறிவுத் துறையின் மரபுகள், போக்குகள்குறித்த பிரக்ஞை இந்தியாவுக்கு ஒருபோதும் இருந்ததில்லை. திட்டக்குழு, அறிவுசார் குழு, டி.எஸ். கோத்தாரி குழு போன்றவற்றைப் பற்றி நாம் பெருமையடித்துக்கொள்கிறோம். ஆனால், கல்வியையும் அறிவையும் வெறும் கருவிகளாக மட்டுமே பார்க்கிறோம். நாமெல்லாம் அறிவை நுகர்ந்தோம்; ஆனால் அறிவுத் துறைக்குக் கற்பனைத் திறனுடன் ஏதும் பங்களிக்கவில்லை. அறிவை இறக்குமதி செய்பவர் களாகவோ அறிவுத் துறைகளை இங்கேயே புதிதாக உருவாக்குபவர்களாகவோ இல்லாமல் வெறுமனே அறிவை நுகர்வோராகத்தான் நாம் இருக்கிறோம்.

அறிவும் அதிகாரமும்

அறிவுக்கும் அதிகாரத்துக்கும் இடையே உருவாகியுள்ள புதிய உறவுகளைப் பற்றிப் புரிந்துகொள்ள மேற்கண்ட பின்னணியைப் பற்றித் தெரிந்துகொள்வது அவசியம். இந்த இரண்டையும் இணைப்பதற்குப் பெயர்தான் கொள்கையாக்கம். இதனால் இரண்டு வகையான அறிவுஜீவிகள் உருவாகிறார்கள்: 1. கொள்கையாக்க அறிவுஜீவிகள், 2. சமூக அறிவுஜீவிகள்.

இந்த வேறுபாடு மிகவும் முக்கியமானது. கொள்கையாக்க அறிவுஜீவிகள் அரசின் நீட்சியாகச் செயல்படு கிறார்கள். ‘சிந்தனைக் குழாம்’(திங்க் டேங்க்), அரசு/ பெருநிறுவனங்களின் கொள்கையாக்க நலன்களைத் திருப்திப்படுத்துவோர் குழுக்கள் போன்றவற்றின் உருவாக்கம்தான் கொள்கையாக்க அறிவுஜீவிகள். சமூக அறிவுஜீவி என்பவர் கொள்கையாக்கங்களை ஆழமாக அணுகி விமர்சனம் செய்பவர்கள், அறிவுக்கும் அதிகாரத்துக்கும் இடையிலான உறவை மேலும் பரந்த தளத்தில் அணுகுபவர்கள். அறிவுச் சமூகத்துக்கு மேற்கண்ட இரண்டு வகையான அறிவுஜீவிகளும் அவசியம்.

மறைந்த பொருளியல் அறிஞர் சுகமோய் சக்ரவர்த்தி சிறந்த கொள்கையாக்க அறிவுஜீவிக்கான எடுத்துக்காட்டு. ஆஷிஸ் நந்தி, ரஜினி கோத்தாரி, யூ.ஆர். அனந்தமூர்த்தி போன்றவர்களெல்லாம் சமூக அறிவுஜீவிகள் வகையைச் சேர்ந்தவர்கள். கொள்கை யாக்க அறிவுஜீவிகள் தங்கள் நிபுணத்துவம் மீது சற்றும் சந்தேகம் கொண்டிராதவர்கள். ஆனால், சமூக அறிவுஜீவிகளோ அந்த நிபுணத்துவத்தின் இயல்பு குறித்துக் கேள்வி எழுப்புகிறார்கள்.

அப்படிச் செய்யும் போது, கருத்துகளின் மரபு, அறம் ஆகியவற்றினுள் ஆழமாகச் செல்கிறார்கள். தாராளமயமாதலுக்குப் பிந்தைய காலகட்டத்தில் இந்தியாவில் சமூக அறிவுஜீவிகளைவிட அதிக அளவில் கொள்கையாக்க அறிவுஜீவிகளே உருவாகியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட அறிவுஜீவிகளை உருவாக்கும் ‘சென்டர் ஃபார் பாலிசி ரிசர்ச்’, ‘அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷன்’ போன்ற நிறுவனங்கள் தான் இந்தியக் கொள்கையாக்கக் களத்தை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கின்றன.

இந்த அறிஞர் குழாம்களும், அவர்களின் கொள்கை யாக்க முயற்சிகளும் நம்மிடம் எழுப்பும் கேள்வி இதுதான்: அறிவுக்கும் பொதுச் சமூகத்துக்கும் இடையிலான உறவு என்ன? உண்மையில், கொள்கையாக்கங்கள் சந்தித்த முதல் சவாலே மக்கள் இயக்கங்களிடமிருந்தும், கொள்கையாக்கங்களையும் அதை வகுத்தவர்களையும் அரசின் நீட்சியாகக் கருதிய மக்களிடமிருந்தும்தான்.

போபால் விஷவாயுத் துயரம், நர்மதா அணை போன்றவை சார்ந்து உருவான இயக்கங்கள் சிறந்த உதாரணங்கள். பெருந்திட்டங்கள் போன்றவற்றால் ஏற்பட்டிருக்கும் இடப்பெயர்வு, உடமையிழப்பு போன்றவை கொள்கையாக்கங்கள்குறித்துத் தீவிரமான கேள்விகளை எழுப்பியுள்ளன. அரசு நிர்வாகம் என்பது ஜனநாயகத்தோடு பிணைக்கப்பட்டுவிட்டது. இதில் பொதுச் சமூகத்தின் பங்கேற்பு மிகவும் முக்கியமானது; ஆகவே, கொள்கையாக்கம் என்பது முக்கியமான களம்.

கொள்கையாக்கத்தைப் பொறுத்தவரை பழைய முறையில் அறிவுத் துறைகளை அணுகுவது இப்போது போதுமானதாக இருப்பதில்லை. வெவ்வேறு கலாச் சாரங்கள், வெவ்வேறு துறைகள் என்றெல்லாம் எல்லாத் தரப்புகளையும் உள்ளடக்கும் புதுவித சாத்தியங்களைக் கொண்ட அறிவு வெளிப்பாடுகளை நாம் தற்போது தேடிக்கொண்டிருக்கிறோம்.

புதிய சவால்கள்

ஜனநாயகத்தின் புதுப்புதுத் தேவைகளால்தான் அறிவுத் துறையில் இந்தப் புரட்சிகள் ஏற்பட்டன. குறிப்பிட்ட கால இடைவெளியில் நடைபெறும் தேர்தல் களைத் தவிரப் பெரும்பாலும் மக்களின் பங்கேற்பு இல்லாத செயல்பாடாக ஜனநாயகம் இருந்த நிலை தற்போது மாறிவிட்டது. அறிவுகுறித்த விவாதங்களில் இயற்கையை முன்பெல்லாம் நாம் ஒரு பொருட்டாகவே கருதியதில்லை; அல்லது அமைதியான பார்வையாளர் போலவே இயற்கையை நாம் கருதினோம். பருவநிலை மாற்றம், எரிசக்தித் தட்டுப்பாடு போன்றவை ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்தியுள்ளன: சூழலியல்குறித்த கேள்விகளை எதிர்கொள்ள அறிவியலும் பொருளாதாரமும் மட்டுமே போதாது. இந்தத் துறைகளின் உருவாக்கத்தில் அறமும் ஒரு முக்கியமான அம்சமாக இப்போது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

1950-ல் அணுசக்தியை மிகவும் புனிதமானதாக இந்தியா கருதியது. இன்று அப்படி இல்லை. கூடங் குளத்தின் மீனவர்களும், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களின் பழங்குடியினரும் கிராமவாசிகளும் அணுஉலைகள் தங்கள் வாழிடங்களுக்கு அருகே அமைப்பதுகுறித்தும், அணு உலைகளின் சாத்தியப்பாடுகுறித்தும் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

உயிர்வேதியியலிலும் இதுபோன்ற பிரச்சினைகள் எழுவது நமக்குத் தெரிந்ததே. மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் இதற்கு ஓர் உதாரணம். சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஒருவர், ஒரு பிரச்சினை யோடு தொடர்புடையவர்கள் அனைவரையும் விவாதத் துக்கு அழைத்த அதிசயம் 2010-ல் நடந்தது. பிடி கத்திரிக்காய்க்கு அனுமதி வழங்குவதுகுறித்து பொது விவாதத்துக்கு அழைத்தவர் காங்கிரஸைச் சேர்ந்த ஜெய்ராம் ரமேஷ்தான். பொதுவெளியில் உயிரித் தொழில்நுட்பம்குறித்து விவாதம் நிகழ்வதைப் பார்க்கவே சந்தோஷமாக இருந்தது.

வளர்ச்சி, மேம்பாடு, காடுகள், சுரங்கத் தொழில் போன்றவற்றின் எதிர்காலம் போன்றவைகுறித்து சமீப காலமாக விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. கொள்கையாக்கங்கள் பதில் சொல்லியாக வேண்டிய கேள்விகளை இந்த விவாதங்கள் எழுப்பியிருக்கின்றன. இயற்கைக்கும் உரிமைகள் இருக்கின்றனவா என்று புதிய தலைமுறையினர் தங்களைத் தாங்களே கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, ஒரு மலைக்குச் சட்டரீதியான உரிமை இருக்கிறதா? ஒரு மலை இறக்கும்போது ஒரு தொல்கதை ஒன்று இறந்துபோகிறது என்று பழங்குடியினர் சொல்வதை கொள்கையாக்கத்தின் மொழியில் எப்படி மொழிபெயர்ப்பது?

அருவியொன்றின் மரணம்குறித்து சமீபத்தில் ஒரு செய்தி வந்தது. ஒரு ‘தொல்கதை’யின் இறப்பை, கொள்கையாக்கத்தின் மொழியில் ‘செலவு-லாபம்’ என்ற கணக்கில் எப்படி மாற்றிச் சொல்வது? அருவி என்பதை ‘ஒரு வினாடிக்கு இத்தனை அடி தண்ணீர்’ என்று மட்டுமே புரிந்துகொள்வதா?

ஆகவே, குடிமக்கள் என்ற அந்தஸ்துக்கு எழுந்துள்ள புது சவால்களை எதிர்கொள்ள வேண்டுமானால், சிறந்த கல்வியை நோக்கி நாம் நகர வேண்டியது அவசியம்!

- ஷிவ் விஸ்வநாதன்,
அரசு நிர்வாகம் மற்றும் ஆட்சிக் கொள்கைக்கான
ஜிந்தால் கல்லூரியின் பேராசிரியர்.
- © ‘தி இந்து’ (ஆங்கிலம்), சுருக்கமாகத் தமிழில்: ஆசை

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்