இதைப் படியுங்கள். எழுத்தாளர் இமையம் எழுதிய தமிழின் முக்கியமான நாவல்களில் ஒன்றான ‘கோவேறு கழுதைகள்’ நாவலின் ஒரு பகுதி இது:
“அன்று பீட்டருக்கு நல்ல அடி. இரவு ஆரோக்கியத்திடம் கேட்டான்.
“ஏம்மா நாம்ப ராச்சோறு எடுக்காம இருக்கக் கூடாதா? நெதமும் நம்பூட்டுல சோறாக்கினா என்னா?”
“ஏன்டா?”
“மத்தவுங்க வூடுமாரி நம்மூட்டுலியும் சோறாக்கு!”
“உன் கையக் காலத் தெலக்கிப்புடுவன் தெலக்கி, கயிதக்கிப் பொறந்தத!”
“பசங்க எல்லாரும் என்னெ ராச்சோறு, ராச்சோறுன்னு எளக்காரம் பண்றாங்க.”
“அதனாலென்னடா சின்னம்? சொன்னாப் போறாங்க.”
“வண்ணாரப் பெய, வண்ணாரப் பெயனு நெட்டித் தள்ளுறானுவோ.”
“சரி வுடு.”
“நாம்பளும் கூலி வேலக்கிப் போனா என்ன?”
“அது நடக்கிற காரியமா? கோழி போனதில்லாம, கொரங்கும் போன கதெ ஆயிடும்.”
“மத்தவங்க எல்லாம் போறாங்கல்ல!”
“அவுங்களுக்குக் கொல்லக்காடு, நிலம்பலம் இருக்கு.”
“நம்பளுக்கு ஏன் இல்ல?”
“ம், உங்கப்பன் பெரிய ராஜா வூட்டுப் புள்ளெ பாரு! காணிகாணியா இருக்கிறதுக்கு. வெறும் வெங்கப்பயலுக்குப் பொறந்தவன... கேவியா கேக்கற?”
“நான் இனும தொரப்பாட்டுக்கு வர மாட்டன்.”
“உங்கப்பன் வூட்டு நஞ்சயிலும் பிஞ்சயிலும் வௌயறதத் திங்கலாமுன்னு பாக்குறியா? கறிய உரிச்சி நாய்க்கிட்டப் போட்டுடுவன், கயிதக்கிப் பொறந்தவன.”
“துணியெடுக்க வந்தாலும், சோறு எடுக்கப் போவ மாட்டன்.”
“இங்க வா, உன் கால முறிச்சி அடுப்புல வக்கறன், கம்மனாட்டி.”
பீட்டர் தெருவுக்கு ஓடிப்போனான். சிறிது நேரத்தில் ஆரோக்கியம் “அந்தோணியாரே! கடவுளே!” என்று கூவியபடி அழ ஆரம்பித்துவிட்டாள். அந்த அழுகை யாரையுமே பாதிக்க வில்லை. ஆனால், இரவு முழுதும் அழுதாள்.”
இமையம் வெறுமனே கற்பனையில் உதிப்பதை எழுதக்கூடிய எழுத்தாளர் அல்ல. பெரும்பாலும் தான் நேரில் பார்ப்பதை, கேட்பதையே கதைகளாக்கக் கூடியவர். ‘கோவேறு கழுதை’யில் ஒரு தாய்க்கும் மகனுக்கும் இடையே நடக்கும் மேற்கண்ட உரையாடல் கொஞ்ச காலம் முன்பு வரை நம்முடைய தமிழகத்தில் நடந்ததுதான்.
நம்மையும் போல, ஒரு வேளை நெல் சோற்றை சகஜமாகச் சாப்பிடுவதற்கே சாதி அவ்வளவு பெரிய தடை என்றால், சொந்தமாக நிலம் வைத்து நெல் விளைவிக்க வேண்டும் என்றால், இந்த நிலவுடைமை - சாதியச் சமூகத்தில் அடித்தட்டு மக்களுக்கு எவ்வளவு தடைகள் இருக்கும்?
கயர்லாஞ்சி சம்பவம் நினைவிருக்கிறதா?
மகாராஷ்டிர மாநிலம், பண்டாரா மாவட்டத்தில் உள்ள சின்ன கிராமம் கயர்லாஞ்சி. இந்த ஊரைச் சேர்ந்த பையாலால் போட்மாங்கே, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். தனக்குச் சொந்தமான நிலத்தில், ஒரு சிறிய வீடு கட்டிக்கொள்ள விரும்பினார் பையாலால். இதைப் பொறுக்காத ஆதிக்கச் சாதியினர் கிராமத்தின் பொதுப் பாதைக்கு வேண்டும் என்று சொல்லி, பையாலாலின் நிலத்தின் ஒரு பகுதியைப் பறித்தனர். இந்த நிலப்பறிப்பை எதிர்த்ததன் தொடர்ச்சியாக, ஒன்றுதிரண்ட ஆதிக்கச் சாதியினர் பையாலாலின் மனைவி சுரேகா, பிள்ளைகளை அடித்து நிர்வாணமாக்கி, தெருக்களில் இழுத்துவந்தார்கள். ஊரின் பொதுப் பகுதிக்குக் கூட்டிவந்து, கொடூரமாகத் தாக்கி, பையாலாலின் மனைவியையும், மகள் பிரியங்காவையும் பலரும் சேர்ந்து பாலியல் வன்முறைக்குள்ளாக்கினர். கொடுமையின் உச்சகட்டமாக, தாயுடனும் தங்கையுடனும் பாலுறவு கொள்ளுமாறு பையாலாலின் மகன்கள் ரோஷன், சுதிர் இருவரையும் மிரட்டியவர்கள், இதை ஏற்க அவர்கள் மறுக்கவும் இருவரின் ஆண் உறுப்புகளையும் வெட்டித் தூக்கி வீசினார்கள். பின்னர், அந்த இரு பெண்களின் பெண்ணுறுப்புகளுக்குள்ளும் மாட்டு வண்டியின் நுகத்தடிக் குச்சிகளைச் செருகிக் குத்திக் கொன்றார்கள். நாட்டையே அதிரவைத்த படுகொலை. ஆதிக்க வாதிகளின் இவ்வளவு கொடூரங்களுக்கும் அடிப்படைக் காரணம் என்ன? பையாலாலுக்கும் கொஞ்சம் நிலம் இருந்தது, அதில் அவர் ஒரு வீடு கட்டிக்கொள்ள விரும்பியது.
சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் கதை
தமிழகத்தில் இன்றைக்குக் கொஞ்சம் நிலைமை மேம்பட்டிருக் கிறது. ஆனால், ஒட்டுமொத்த இந்தியாவின் நிலை இதுவல்ல. குறிப்பாக, இந்தியாவின் ஆகப் பெரும் பகுதியைக் கொண்ட வட இந்தியாவின் நிலை இதுவல்ல. காலங்காலமாக நிலவுடைமை கோலோச்சும் இந்த நாட்டில், நிலம் என்பது வெறும் மண் அல்ல; அது ஒரு அடையாளம், அதிகாரம். ஒரு ஏழை விவசாயியிடம் இன்றைக்கு ஒரு பிடி மண் இருக்கிறது என்றால், ஒரு அடி நிலம் இருக்கிறது என்றால், அதற்குப் பின் எத்தனையோ தலைமுறைகளின் நூற்றாண்டுக் கனவு இருக்கிறது. நிலத்துக்குச் சொந்தக்காரரின் அனுமதிக்குப் புறம்பாக ஒரு அரசாங்கம் அதை அப்படியே பறித்து ஒரு தனியார் நிறுவனத்திடம் தாரைவார்ப்பது எப்படி முறையாகும்? ஒரு நிலம் ஒரு தலைமுறைக்கு மட்டும் வாழ்வளிப்பதல்ல; தலைமுறை தலைமுறையாக வாழ்வளிப்பது. இன்றைய வேலைக்கே முழு உத்தரவாதம் தராத தொழிற்சாலைகளிடம் வளர்ச்சியின் பெயரால் அதை ஒப்படைக்கிறது அரசாங்கம். ஆனால், அப்படி ஒப்படைக்கப்படும் நிலமேனும் உண்மையாகவே பயன்படுத்தப் படுகிறதா?
இன்றைக்கு வளர்ச்சி வளர்ச்சி என்று நிலம் கையகப் படுத்தலுக்கு ஆதரவாகக் கூச்சலிடும் பலருக்குத் தெரியாத கதை ஒன்று உண்டு. சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் கதை. தொழில் வளர்ச்சியின் பெயரால், விவசாயிகளிடமிருந்து நிலங்களைக் கொத்துக்கொத்தாகப் பறித்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் சுயரூபத்தை தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் சில மாதங்களுக்கு முன் அம்பலப்படுத்தியிருக்கிறது. தொழிற்சாலைகளை அமைப் பதாகக் கூறி நில ஒதுக்கீட்டையும் வரிச் சலுகைகளையும் பெற்ற பல நிறுவனங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தைப் பயன்படுத்தவில்லை / வேறு தேவைகளுக்குப் பயன்படுத்து கின்றன என்பதோடு வரி ஏய்ப்பிலும் ஈடுபடுகின்றன; சிறப்புப் பொருளாதார மண்டலங்களில், இப்படிச் செயல்பாட்டுக்கு வராத நிறுவனங்களுக்கு அளித்த, நேரடி மற்றும் வரிச் சலுகைகள் மூலம், மத்திய அரசுக்கு ஏற்பட்ட வரி வருவாய் இழப்பு ரூ. 1.5 லட்சம் கோடியைத் தாண்டும் என்கிறது தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம்.
நாட்டின் 377 சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் 196 மட்டுமே செயல்படுகின்றன (அதாவது, ஒரேயொரு தொழிற்சாலை இயங்கினாலும் அந்த மண்டலம் இயங்குவதாக எடுக்கப்பட்ட கணக்கின்படி). சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக - தனியார் நிறுவனங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்களில் 63% நிலம் சும்மா கிடக்கிறது. அதாவது, தன்னுடைய விவசாயிகளுக்குச் சமமான நிலப் பங்கீட்டைத் தர முடியாத அரசு, அவர்களிடம், “உன்னுடைய கிராமத்தில் தொழிற்சாலை வரும், உன் மகனுக்கு வேலை வரும்” என்றெல்லாம் சொல்லி நிலத்தைப் பறிக்கிறது. அங்கு தொழிற்சாலையும் வரவில்லை; அதனால் வேலையும் கொடுக்கப்படவில்லை; ஆனால், அந்த விவசாயிகளின் நிலம் ஒரு பெருநிறுவனத்தின் கட்டுப்பாட்டில்; எவ்வளவு பெரிய அநீதி?
எது உண்மை முகம்?
மன்மோகன் சிங் காலத்தில் கொண்டுவரப்பட்ட நிலம் கையகப்படுத்தும் சட்டம் இந்த நிலையில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவந்தது. விவசாயிகளிடமிருந்து பெறப்பட்டு, இப்படி 5 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்படாமல் இருக்கும் நிலத்தை அரசு / விவசாயிகளிடத்தில் திரும்ப ஒப்படைக்க அது வலி யுறுத்தியது. மோடி அரசு இதையும் சிதைக்கிறது. ஒரு நிறுவனம் தொழிற்சாலையை விரைவில் அமைக்கிறேன் என்று சொல்லி கால அவகாசம் குறிப்பிட்டு, அந்தக் காலகட்டம் வரை நிலத்தை அதன் கட்டுப்பாட்டிலேயே வைத்து இழுத்தடிக்க முடியும்.
இப்படியெல்லாம் தனியார் நலன்களுக்காக ஏன் நிலங்களை அரசு கைப்பற்றித் தர வேண்டும்? காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இந்தக் கேள்வியை ஒருவர் கேட்டார், அதன் கட்சி சார்பில். பாஜகவைச் சேர்ந்த சுமித்ரா மகாஜன். இன்றைக்கு மக்களவைத் தலைவராக இருப்பவர். “எந்த வளர்ச்சி அடைந்த நாடும்கூட இப்படியெல்லாம் செய்யாதபோது நாம் ஏன் செய்ய வேண்டும்?” என்ற கேள்வி அன்றைக்கு நியாயமாகப் பார்க்கப்பட்டது. அன்றைக்கு அப்படிக் கேள்வி கேட்டவர்களின் உண்மையான முகத்தைத்தான் இன்றைக்கு அவர்கள் ஆட்சி அதிகாரத்தில் உட்கார்ந்திருக்கும்போது பார்க்கிறோம்.
(நிலம் விரியும்...)
- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago