அந்த நாளைய பொருளாதாரம்

By பால் க்ரூக்மேன்

நாட்டில் பொருளாதார வளர்ச்சி இல்லையென்றால், அங்கே தன்னம்பிக்கை இல்லை என்று பொருள்!

2008-ல் ஏற்பட்ட நிதி நெருக்கடியிலிருந்து அமெரிக்கா இன்னமும் முழுதாக மீட்சி அடையவில்லை. நமக்குள்ள வசதிவாய்ப்புகளை எல்லாம் முழுமையாகப் பயன் படுத்தாவிட்டாலும் பெருமளவுக்கு மீட்சி பெற்றிருக் கிறோம் என்பதே உண்மை.

இதே மதிப்பீட்டை ஐரோப்பிய மண்டலத்துக்குச் சொல்லிவிட முடியாது. அங்கு நபர்வாரி வருமான அடிப்படையிலான ‘உண்மை’ மொத்த உற்பத்தி மதிப்பு விகிதம், 2007-ல் இருந்ததைவிடக் குறைவாக இருக்கிறது. 1930-களில் இருந்ததுடன் ஒப்பிடும்போது இது மிகவும் மோசமான நிலைமை.

பேரியல் பொருளாதாரம்

ஐரோப்பிய நாடுகள் ஏன் இப்படி மோசமான பொருளாதார நிலையில் இருக்கின்றன? கடந்த சில வாரங்களில் நான் பலருடைய உரைகளைக் கேட்டேன். பொருளாதாரக் கட்டுரைகளைப் படித்தேன். பொருளாதார மந்தநிலையிலிருந்து மீள்வதற்கான பொருளாதார உத்திகளும் கொள்கைகளும் போதுமான அளவில் நம்மிடம் இல்லை என்று பேசியவர்களும் எழுதியவர்களும் குறிப்பிட்டுள்ளனர். ஒரு நாட்டையே வழிநடத்திச் செல்லக் கூடிய பேரியல் பொருளாதாரம் (மேக்ரோ எகனாமிக்ஸ்) தொடர்பாக புதிய கருதுகோள்களும் உத்திகளும் அவசியம் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர். இது உண்மைதானா? அவர்கள் சொல்வதைப் போல இந்தச் சூழலிலிருந்து விடுபட நம்மிடம் பொருளாதார உத்திகளோ, கருது கோள்களோ இல்லையா?

தவறான பாதைக்கு இட்டுச் சென்ற புதிய உத்திகள்

அவர்கள் சொல்வதில் உண்மையில்லை. இப்படி யொரு நெருக்கடி ஏற்படும் என்று சில பொருளாதார வல்லுநர்கள் ஏற்கெனவே ஊகித்து எச்சரித்துள்ளனர். 50 ஆண்டுகளுக்கு முன்னால், பொருளாதாரம் படித்த அனைவருக்கும் பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்பட்டு அது வீழ்ச்சிக்குக் கொண்டுசென்றாலோ, பிறகு பொருளாதாரம் மெதுவாக மீட்சிபெறத் தொடங்கினாலோ அரசு என்ன செய்ய வேண்டும் என்பது வெளிப்படையாகத் தெரிந்திருந்தது. காரணம், அது அடிப்படையான பாடப் புத்தகங்களிலேயே இடம்பெற்றிருந்தது. ஐரோப் பாவைச் சேர்ந்த ஆட்சியாளர்கள் அந்தப் பாடப் புத்தகங்களைத் தூக்கி எறிந்துவிட்டனர். இதுவரை கூறப்பட்டுவந்த உத்திகளுக்கும் கொள்கைகளுக்கும் மாறாக புதிதாக என்ன கூறப்படுகிறது என்று பார்த்து அதற்கு முக்கியத்துவம் தரத் தொடங்கினர். புதிய உத்திகள் உண்மையிலேயே புதுமையாகவும், உற்சாகம் அளிப்பதாகவும் இருந்தன. ஆனால், தவறான பாதைக்கு இட்டுச் சென்றுவிட்டன.

கீன்ஸின் பாலபாடம்

2008 முதல் பொருளாதாரக் கொள்கை தொடர்பான விவாதங்களைத் தொடர்ந்து கவனிக்கிறேன். அதில் தெளிவாகத் தெரிவது என்னவென்றால், 2010 முதல் அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையில் சிந்தனையில் பெரிய வித்தியாசம் ஏற்பட்டுவருகிறது. அமெரிக்காவில் வெள்ளை மாளிகையும் ஃபெடரல் ரிசர்வ் வங்கியும் ஜான் மேனார்ட் கீன்ஸ் என்ற பொருளாதார மேதை வகுத்த கொள்கைகள் மீது நம்பிக்கை கொண்டு செயல்பட்டுவருகின்றன. அமெரிக்க நிதிநிலை அறிக்கை தொடர்பாக குடியரசுக் கட்சியினருடன் நீண்ட காலம் சமரசப் பேச்சில் ஈடுபட்டு, தங்கள் கொள்கையை ஏற்றால் அவர்கள் விரும்பும் கொள்கைகளையும் ஓரளவுக்கு நிறைவேற்றுவதாகக் கூறிப் பார்த்தார் அதிபர் பராக் ஒபாமா. அவர்கள் ஏற்கவில்லை. அதனால் காலவிரயம்தான் ஏற்பட்டது. அதே வேளையில், ‘பொருளாதாரம் மந்தமாக இருந்தால் வரவு-செலவைச் சமநிலைப்படுத்த முயற்சிக்காமல் பொதுச் செலவை அரசு அதிகப்படுத்த வேண்டும்’ என்ற கீன்ஸின் பாலபாடத்தை ஒபாமா செயல்படுத்தினார். அதனால், அமெரிக்காவில் வேலைவாய்ப்பும் உற்பத்தியும் அதிகமானது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியோ அபாய எச்சரிக்கைகளைப் பொருட்படுத்தாமல், ‘வட்டி வீதம் குறைவாக இருந்தால்தான் பணவீக்க வீதம் உயராது’ என்று கூறி, வட்டியை உயர்த்தாமல் இருந்தது. இதனால், வங்கிகளில் முதலீடுசெய்ய மக்கள் முன்வரவில்லை. இதனால் பணச் சுழற்சி குறைந்தது.

குறைபாடுள்ள கொள்கைகள்

ஐரோப்பாவில் நாம் ஏற்கெனவே கூறியபடி அடிப்படைப் பொருளாதாரக் கொள்கைகளைக் காற்றில் பறக்கவிட்டனர். புதிய பொருளாதாரச் சிந்தனையாளர்கள் கூறிய பாதையில் சென்றனர். ‘அரசின் செலவுகளைக் குறைத்து, சிக்கன நடவடிக்கைகளை அதிகப்படுத்தினால், தன்னம்பிக்கை அதிகரிக்கும், அதனால் வேலைவாய்ப்பு பெருகும்’ என்று சொன்னதை நம்பி, ஐரோப்பிய நாடுகள் அதில் தீவிரம் காட்டின. அதே வேளையில் ஐரோப்பிய மத்திய வங்கி, பணவீக்கம் அதிகரிக்கும் என்ற எச்சரிக்கையை அக்கறையோடு பரிசீலித்து வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாக இருந்த நிலையிலும், வட்டிவீதத்தை 2011-ல் உயர்த்தியது. (அமெரிக்காவில் ஒபாமா அரசு பொருளாதார அரிச் சுவடியைப் பின்பற்றியது, அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி அலட்சியப்படுத்தியது; ஐரோப்பாவில் நாடுகள் அலட்சியப்படுத்தின, ஐரோப்பிய மத்திய வங்கி அக்கறை காட்டியது!)

ஐரோப்பாவில் அரசியல் தலைவர்கள் பொருளாதாரக் கருத்துகளைத் தாராளமாக வரவேற்பவர்கள்போலத் தங்களைக் காட்டிக்கொண்டார்கள். அவர்களுக்கு வாய்த்த ஆலோசகர்கள், அவர்கள் எதை விரும்பு கிறார்கள் என்று தெரிந்துகொண்டு அதையே ஆலோசனைகளாக முன்வைத்தார்கள். அரசியல், சித்தாந்த காரணங்களுக்காகத் தாங்கள் ஏற்கெனவே தீர்மானித்து வைத்திருந்த கடுமையான பொருளாதாரக் கொள்கைகளை நியாயப்படுத்தி, கடன் வாங்கிய நாடுகள் மீது திணித்தார்கள். அதற்காக அந்தப் பொருளாதார ஆலோசகர்களைப் பெரிய மேதைகளைப் போல சித்தரித்தார்கள். கடைசியில், அந்த யோசனைகளும் கொள்கைகளும் ஏதோ ஒரு வகையில் குறைபாடுள்ளவை என்பது கடைசியில் அம்பலமாகிவிட்டது.

சொன்னதே நடந்தது

புதிய எண்ணங்களும் கருதுகோள்களும் நொறுங்கியும் எரிந்தும் செல்வாக்கிழக்கும் அதே வேளையில் கீன்ஸ் உள்ளிட்ட முந்தைய பொருளாதார அறிஞர்களின் கொள்கைகள் மீது நாளுக்கு நாள் நம்பிக்கை அதிகரித்து வலுவடைகிறது. கீன்ஸின் சிஷ்ய கோடியான நான் உட்படப் பலர் கூறிய யோசனைகளை வெகு அலட்சியமாக விமர்சித்தார்கள் ஆட்சியாளர்கள். அரசு தன்னுடைய வரவுக்கு மிஞ்சி செலவு செய்தாலும் வட்டி வீதம் உயராது, மத்திய வங்கி கடன் பத்திரங்களை அதிகம் வாங்கினாலும் பணவீக்க விகிதம் கட்டுக்குள்தான் இருக்கும். அரசு தன்னுடைய செலவுகளைக் கணிசமாகக் குறைத்தால் தனியாரிடம் அது நம்பிக்கையை வளர்ப்பதற்குப் பதிலாக தனியாருடைய செலவையும் குறுக்கி பொருளா தாரத்தை மேலும் முடக்கிவிடும் என்று எங்களால் கூறப்பட்டவையே உண்மையில் நடந்தன.

குளறுபடிகளே பலன்கள்

அரசில் கொள்கை வகுப்போருக்கு வழிகாட்டும் விதத்தில் பொருளாதாரக் கொள்கைகள் இல்லாத தால்தான் தோல்வி ஏற்பட்டது என்பது சரியில்லை. பொருளாதாரக் கொள்கைகள் என்னவோ தெளிவாகத் தான் வழிகாட்டின. ஆட்சியாளர்கள்தான் அதைக் கவனித்து கேட்கும் பொறுமை இல்லாதவர்களாக இருந்துள்ளனர். அதன் பலன்தான் இப்போதைய குளறுபடிகள்.

தன்னம்பிக்கையே வளர்ச்சி

ஆட்சியாளர்களின் போக்கு இன்னமும் மாறவில்லை என்பதையே ஜெர்மனியின் நிதியமைச்சர் உல்ஃப்காங் ஷுவாபிள், டைம்ஸ் பத்திரிகைக்காக எழுதிய கட்டுரையைப் படித்தாலே புரிந்துவிடும். பேரியல் பொருளாதாரக் கருதுகோள்களையும் ஐரோப்பிய நாடுகள் கடந்த 5 வருடங்களாகப் பெற்றுள்ள அனுபவங்களையும் நிராகரிக்கும் வகையில்தான் அவருடைய கட்டுரை இருக்கிறது.

அரசாங்கம் செலவு செய்வதைக் குறைத்துக்கொண்டு சிக்கனமாக இருந்தால்தான், தன்னம்பிக்கை பெருகி பொருளாதாரம் வலுப்படும் என்று எழுதியிருக்கிறார். தன்னம்பிக்கை இருந்தால் பொருளாதாரம் வளரும். உங்கள் நாட்டில் பொருளாதார வளர்ச்சி இல்லையென்றால், உங்களுக்கு தன்னம்பிக்கை இல்லை என்று பொருள் என்கிறார்.

மீண்டும் புதிய பொருளாதாரச் சிந்தனைக்கும் கொள்கைகளுக்கும் வருவோம். புதிய கொள்கைகள் சிந்தனைகள் எல்லாமே தவறு என்று கூறிவிட முடியாது. ஆனால், சமீப ஆண்டுகளாக புதிய பொருளாதாரச் சிந்தனைகள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக பிரச்சினையின் அங்கமாகவே மாறிவிடுகின்றன. எனவே, பழைய கொள்கைகளைப் பின்பற்றினால் அது நாட்டுக்கு மேலும் நன்மையைத் தரும்.

- ‘தி நியூயார்க் டைம்ஸ்’ தமிழில்: சாரி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

45 mins ago

கருத்துப் பேழை

53 mins ago

கருத்துப் பேழை

58 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்