உளவாளியல்ல… தேசபக்தன்!
பத்திரிகைச் சுதந்திரமும் தனிநபர் சுதந்திரமும் இல்லாத ரஷ்யாவில் மாட்டிக்கொண்டிருப்பது தனக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருப்பதாக, அமெரிக்காவின் ராணுவ ரகசியங்களை வெளியிட்டுப் பரபரப்பைக் கிளப்பிய எட்வர்டு ஸ்னோடன் தெரிவித்துள்ளார். என்.பி.சி. நியூஸ் என்ற செய்தி நிறுவனத்துக்கு சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் மனம்திறந்து பேசியுள்ள அவர், ‘ரஷ்யாவில் தங்கியிருப்பதால் நான் ஒன்றும் ரஷ்ய உளவாளி இல்லை. அமெரிக்க தேசபக்தன்தான் நான். ரஷ்ய அதிபர் புதினை நான் சந்தித்ததே இல்லை. தவிர, அவர்கள் என்னை ஆதரிக்கவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
தப்பிய நான்கு மான்கள்
‘போகோ ஹராம்’ பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளிச் சிறுமிகளில் நான்கு பேர் தங்கள் பெற்றோருடன் இணைந்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ‘மேற்கத்திய கல்வி ஒரு பாவச்செயல்’ என்ற கொள்கையுடன் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டுவரும் ‘போகோ ஹராம்’ பயங்கரவாதிகள், ஏப்ரல் 14-ம் தேதி, வகுப்பறையில் தேர்வெழுதிக்கொண்டிருந்த 200-க்கும் மேற்பட்ட மாணவிகளை இந்தக் கும்பல் கடத்திச் சென்றது. தற்போது பெற்றோர்களுடன் இணைந்துவிட்ட நான்கு மாணவிகளும், தீவிரவாதிகளிடமிருந்து தப்பியது எப்போது என்ற தகவல் வெளியாகவில்லை. அமெரிக்காவும் பிரிட்டனும் மீட்பு நடவடிக்கைகளில் உதவிவருவதெல்லாம் சரிதான், நைஜீரியா பெட்ரோல் வளம் மிக்க நாடு என்பதால், இந்த உதவிகளை நினைத்து அஞ்சத்தான் வேண்டியிருக்கும்.
முடக்கப்படுவது ஜனநாயகமே தவிர, ஃபேஸ்புக் அல்ல!
நவீனத் தொழிற்சாலைகள், சுற்றுலா வசதிகள் நிறைந்த தாய்லாந்து தற்போதைய அரசியல் சூழலால் அவஸ்தைக்கு உள்ளாகியுள்ளது. பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட யிங்லக் சினவத்ரா கைதுசெய்யப்பட்டதை எதிர்த்து அவரது ஆதரவாளர்களான ‘செஞ்சட்டையினர்’ தொடர்ந்து போராட்டம் நடத்திவந்தனர். பின்னர், யிங்லக்கும் அவரது ஆதரவாளர்களும் விடுதலை செய்யப்பட்டனர். பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள ராணுவத் தளபதி பிரயுத் சான் - ஓச்சா, எதிர்ப்பாளர்களை அடக்கப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். புதன்கிழமை அங்கு ஃபேஸ்புக் இணையதளம் 90 நிமிடங்களுக்கு முடக்கப்பட்டது. எனினும், அரசுக்கு எதிராகப் பதிவிடுபவர்களுக்குத்தான் ஆபத்தே தவிர, ஃபேஸ்புக் முழுமையாக முடக்கப்படாது என்று ஓர் எச்சரிக்கை செய்தியையும் ராணுவத்தினர் விடுத்துள்ளனர்.
எகிப்துக்குப் புதிய அதிபர்!
புரட்சிக்கும் போராட்டத்துக்கும் பேர்போன எகிப்தில் ஒரு வழியாகத் தேர்தல் முடிந்து, முன்னாள் ராணுவத் தளபதி அப்துல் ஃபதாஹ் அல்-சிசி பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வாக்குப்பதிவு குறைவாக இருந்தது என்று கூறி, கூடுதலாக ஒரு நாள் வாக்குப்பதிவும் நடந்தது. வாக்குப்பதிவுக்காக ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டதுடன், வாக்களிக்காதவர்கள் அபராதம் கட்ட வேண்டிவரும் என்றும் எச்சரிக்கப்பட்டனர். இதற்கு அப்துல் ஃபதாஹும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஹம்தீன் சபாஹியும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். பெரிய சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் விஷயம், ஃபதாஹுக்குக் கிடைத்த வாக்கு சதவீதம்தான். பதிவான வாக்குகளில் 95.3% அவருக்குக் கிடைத்திருக்கிறது. ஹம்தீனுக்கு வெறும் 4.7% வாக்குகளே கிடைத்துள்ளன. சதாம் ஹுசேன் நடத்திய தேர்தல் நினைவுக்கு வருகிறதா?
ஆபத்பாந்தவன் பீன்!
பிரிட்டன் தொலைக்காட்சித் தொடரான மிஸ்டர் பீன் மூலம் உலகப் புகழ்பெற்ற நடிகர் ரோவன் ஆட்கின்சன். தனது குறும்புகளால் அருகில் இருப்பவர்களை அலற வைக்கும் பாத்திரத்தில் நடித்த ஆட்கின்சன், சமீபத்தில் ஓர் உயிரைக் காப்பாற்ற உதவியிருக்கிறார். இத்தாலியில் உள்ள டஸ்கேனி நகரில் நடைபெற்ற கார் ஊர்வலத்தில் கலந்துகொண்ட அமெரிக்கர் ஒருவர் ஓட்டிச் சென்ற மெக்லேரன் எப்.1 கார், கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்திலிருந்த மரத்தில் முழு வேகத்துடன் மோதியது. உடனடியாக அவரைக் காப்பாற்றச் சென்றவர்களில் ஆட்கின்சனும் ஒருவர். அவரது முயற்சியால் அந்த அமெரிக்கர் காப்பாற்றப்பட்டு, ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கார் ஆர்வலரான ஆட்கின்சன், மூன்றாண்டுகளுக்கு முன் இதேவகை காரை ஓட்டி விபத்துக்குள்ளானது குறிப்பிடத் தக்க விஷயம்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago