இந்துத்துவமும் இந்தியத்துவமும்!

By ஷிவ் விஸ்வநாதன்

இந்தியா என்பது ஒருசீர்மைக்குக் கட்டுப்படாத பலவற்றின் கூட்டுக்கலவை.

பகவத் கீதை தொடர்பான போட்டியொன்றில் மும்பையைச் சேர்ந்த மரியம் ஆசிஃப் சித்திகி என்ற 12 வயதுப் பெண் முதல் பரிசை வென்றிருக்கிறார் என்ற செய்தியைப் படித்தபோதே இதயம் பூரித்துப்போனது. பகவத் கீதையை அவர்கள் எந்த அளவுக்குப் புரிந்துகொண்டிருக்கிறார்கள், அதில் எந்த அளவுக்குத் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்பதை அறிவதற்கான போட்டி அது. அந்தப் பெண் முஸ்லிம் என்பதால் மட்டுமல்ல, எல்லா மதங்கள் மீதும் நம்பிக்கைகள் மீதும் அந்தப் பெண் நல்ல மதிப்பு வைத்திருக்கிறாள் என்பதை அறிந்தபோது நெஞ்சம் பெருமிதத்தால் விம்மித் தணிந்தது.

இந்தச் செய்தி, சமீபத்தில் கிரிராஜ் சிங் என்ற மத்திய அமைச்சர், சோனியா காந்தி தொடர்பாக சர்ச்சைக்கிடமாகவும் நிற அடிப்படையிலும் பேசிய அபத்தமான பேச்சுக்கு உற்ற மாற்றாகத் திகழ்கிறது. மரியம் சித்திகிக்கும் கிரிராஜுக்கும் இடையிலான வேறுபாடு ஆழமானது. ஒருவர், அந்த வேறுபாட்டைக் கண்ணியமாக ஆராதித்துக் கொண்டாடுகிறார், இன்னொருவர், அதையே கேவலமாகக் கருதி மட்டம் தட்டப் பார்க்கிறார். ஒருவருடைய பேச்சும் செயலும் புத்திசாதுரியத்தால் பொங்கி வழிகிறது. இன்னொருவருடையது மந்த புத்தியால் அழுது வடிகிறது.

இன்றைக்கு கிறிஸ்தவம் குறிவைக்கப்பட்டுள்ளது. இந்து மதத்தைக் குறுகிய பெட்டிக்குள் போட்டுப் பூட்ட முனைகிறவர்கள் என்றால், அது ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.) என்ற அமைப்பும் பாரதிய ஜனதா (பி.ஜே.பி.) கட்சியும்தான். அவர்கள் கூறும் இந்துத்துவா என்பது பொறாமையின் அடையாளம், தரக்குறைவானது, மேற்கத்திய நாடுகளின் சிந்தனையை அப்படியே பின்பற்றுகிற முயற்சி.

முற்றுகை மனப்பான்மை

கிரிராஜ் சிங் போன்றவர்களின் பேச்சு, சிறுபான்மைச் சமூகத்தவரை மன நெருக்கடியில் ஆழ்த்தி தாங்கள் யார், தங்களுடைய எதிர்காலம் என்ன என்று கலவரப்பட வைத்திருக்கிறது. இது இருவேறு சம்பவங்கள் மூலம் வெளிப்பட்டிருக்கிறது. முதலாவது, மும்பை மாநகரக் காவல்துறைத் தலைவரும் நேர்மையாளரும் ராஜீயத் தூதராகப் பதவி வகித்தவருமான ஜூலியோ ரிபைரோ எழுதிய கட்டுரை வாயிலாகத் தெரியவருகிறது. இரண்டாவது, இந்திய அரசியல் உளவியலாளரும் சமூகவியல் அறிஞரும் விமர்சகருமான ஆசிஷ் நந்தி அளித்த பேட்டி வாயிலாக வெளிப்பட்டிருக்கிறது.

இருவரும் கிறிஸ்தவர்கள். சுவாரசியம் என்னவென்றால் இருவரும் இந்தியர்கள். தேசியவாத அடிப்படையில் அல்ல, கலாச்சார அடிப்படையில்! ஒரு கிறிஸ்தவராகவும் இந்தியராகவும் நேர்மையான அதிகாரியாகவும் இருப்பதற்காக ரிபைரோ பெருமைப்படுகிறார். தான் இந்தியாவின் ஒருபகுதி என்று அவருக்கு உணர்த்தியதே கிறிஸ்தவம்தான். இந்தியாவின் கிறிஸ்துவத்துவம் மேற்கத்திய கிறிஸ்துவத்தைவிடப் பழமையானது என்பதை அவர் உணர்ந்துகொண்டதும் இங்குதான். ‘(சிறுபான்மை) சமூகங்கள் குறிவைக்கப்படுகின்றன, முற்றுகையிடப்பட்டதைப் போல உணர்கிறோம். இது மக்களின் நிம்மதியைப் பாதிக்கிறது’ என்கிறார்.

தாங்கள் ஒரு சிறுபான்மைச் சமுதாயம் என்று நினைக்காத ஒரு சமூகத்தின் உள்ள உறுதியை இருவரும் வெளிப்படுத்துகின்றனர். இந்தியாவின் பன்முகக் கலாச்சாரத்தின் ஒரு பகுதிதான் நாமும், அடையாளங்கள்தான் பல. ஆனால், அனைவருடனும் இணைந்திருக்கிறோம் என்றே நினைக்கின்றனர். என்னுடைய கிறிஸ்துவத்தன்மைக்கு ஆபத்து என்ற அச்சுறுத்தல் இருக்கும்போது என்னுடைய இந்தியத்தன்மைக்கு என்ன பொருள் என்று வேதனையுடன் கேட்கிறார். இதற்கு முன்பெல்லாம் ஒருவர் இந்தியராக இருப்பதும் கிறிஸ்தவராக இருப்பதும் முரண்பாடாகப் பார்க்கப்படவேயில்லை.

ஜனநாயகத்துக்கே சவால்

ரிபைரோவின் நம்பிக்கையை பாஜக தகர்த்திருக்கலாம். ஆனால், ஆசிஷ் நந்தியின் நம்பிக்கையில் சிறிய நெளிசலைக்கூட அதனால் ஏற்படுத்த முடியவில்லை. நந்தி கொல்கத்தா குறித்துப் பெருமையோடிருக்கிறார். அது கிறிஸ்தவர்களை எந்த நாளும் அலைக்கழிக்காது என்று உறுதியாக நம்புகிறார். அவருடைய பெருமிதத்துக்குக் காரணம் கிறிஸ்தவ அடையாளமில்லை, பல்வேறு கலாச்சாரங்களையும் அரவணைத்த கல்கத்தாவின் வரலாறுதான்! “எல்லாமாகவும் இருப்பதும் ஏதாவது ஒன்றாகத் திகழ்வதும்தான் என்னை இந்தியனாக வைத்திருக்கிறது; என்னுடைய இந்த நம்பிக்கையை எந்த பஜ்ரங் தளத்தாலும் விசுவ இந்து பரிஷத்தாலும் போக்கிவிட முடியாது” என்கிறார்.

நந்திக்கு இன்னொரு அனுகூலம் இருக்கிறது. ரிபைரோ இந்த சமூகத்தைச் சட்டம்-ஒழுங்கு என்ற கட்டமைப்புக்குள் பார்க்கிறார்; இந்தியா என்பது ஒருசீர்மைக்குக் கட்டுப்படாத பலவற்றின் கூட்டுக்கலவை என்று நந்திக்கு அவருடைய உள்ளுணர்வு சொல்லுகிறது. இந்துக்கள் தேவாலயங்களின் திருப்பலிகளில் பங்கேற்கிறார்கள், இஸ்லாமியர்கள் இந்துக் கோயில்களுக்குப் புரவலர்களாக, காப்பாளர்களாக இருக்கின்றனர். நம்முடைய கலாச்சாரமே எல்லாவற்றின் தொகுப்பாக மணம் வீசுகிறது. சாதத் ஹாசன் மன்டோவின் பாம்பே டாக்கீஸ் தொடங்கி 21-வது நூற்றாண்டின் பாலிவுட் வரையில் இந்தியர்களின் அன்றாட வாழ்க்கையின் அங்கமாகத் திகழ்வது கிறிஸ்தவத் தேவாலயங்கள்.

ரிபைரோ, நந்தி, மரியம் ஆகியோரைப் பார்க்கும்போது பெரும்பான்மையினவாதம் என்பது இந்திய ஜனநாயகத்துக்கு ஏற்பட்டுள்ள புதிய சவால் என்பது புரிகிறது. இந்த இரண்டு அமைப்புகளுக்குமே அடிப்படைகள் வேறு. ஒன்றில், குடியுரிமை சட்டபூர்வமானது, கலாச்சாரம் அனைத்தையும் இணைப்பது, அரசியல் என்பது ஜனநாயகபூர்வமானது.

பாஜக அரசின் கற்பனை வறட்சி

இப்போது நடக்கும் விவாதங்களைப் பார்க்கும்போது பாஜக அரசு பல நிலைகளிலும் கற்பனை வறட்சியால் தோல்விகண்டு வருகிறது என்று உணர்கிறேன். முதலில் அது பெருநிறுவனங்களைப் போலப் பேசுகிறது. அதனுடைய பேச்சில் அதானிகளும் அம்பானிகளும் அதிகம் வருகிறார்கள். கிராமப்புறப் பிரச்சினைகள் தலைகாட்டுவதே இல்லை.

இரண்டாவதாக, உள்நாட்டு வாழ் இந்தியர்களிடம் பேசுவதைவிட, அயல்நாடு வாழ் இந்தியர்களிடம் பேசுவதிலேயே ஆர்வம் காட்டுகிறது. காரணம், உள்நாட்டு இந்தியர்கள் நாட்டின் அடையாளத்தையே மாற்றக்கூடியவர்கள். வெளிநாட்டில் வசிப்பவர்களால் அது இயலாது.

மூன்றாவதாக, ‘அனைத்தையும் உள்ளடக்கிய பார்வையில்’, கலாச்சாரம் என்பது சாத்தியமான எல்லா மாற்று வாய்ப்புகளையும் கொண்ட இனிய கலவையாகும்; இந்துத்துவாவுக்கோ கலாசாரம் என்பது தங்களால் கண்காணிக்கப்பட வேண்டிய ஒரு தளமாகும். பாஜகவின் ஆழ் மனதில் ஒரே நாடு, ஒரே கடவுள், ஒரே கலாசாரம் என்பது மட்டுமே பதிந்திருக்கிறது.

நம்மைப் பிணைத்திருக்கும் பந்தம்

இந்தியர்களான நம்மை ஒன்றாக இணைத்திருப்பது எது? ரிபைரோ மெலிதாகக் கோடிட்டுக்காட்டியிருக்கிறார். இந்துமதம் என்பது நம்பிக்கை, இந்துத்துவா என்பது சித்தாந்தம். நம்பிக்கை அதிலும் மத நம்பிக்கை மாறக்கூடியது. சித்தாந்தம் என்பது மாற்றம் ஏதுமில்லாமல் திணிக்கப்படுவது. மதம் என்பது எல்லாவற்றுக்கும் இடம் தருவது, சித்தாந்தம் என்பது ஏனைய கருத்துகளுக்கு இடம் தராமல் நிராகரிப்பது. முக்கியமான இந்த மாற்றத்தை ரிபைரோ உணர்ந்திருக்கிறார். சாதாரண இந்துக்கள் ரிபைரோவைக் கண்டால் மகிழ்கிறார்கள், நல்ல நேர்மையான, திறமையான அதிகாரி என்று அவருக்கு மரியாதை செலுத்துகின்றனர்.

நந்தியின் பார்வையிலோ இந்துத்துவம் என்பது பலதரப்பட்டது, எண்ணிலடங்காதது; ஆர்.எஸ்.எஸ். அமைப்போ ஒரே நாடு, ஒரே கலாசாரம், ஒரே மதம் என்று பிரசாரம் செய்கிறது. கிறிஸ்தவத்துக்கு மதமாற்றும் செய்கை அவசியம் இல்லை என்று நந்தியும் கருதுகிறார்.

அராபிய அறிஞரின் வியப்பு

எழுத்தாளரும் அறிவுஜீவியுமான யு.ஆர். அனந்தமூர்த்தி சொன்ன ஒரு தகவலில் இருக்கும் தர்க்கம் இதை மேலும் தெளிவுபடுத்தும். (அனந்தமூர்த்தி மீதும் கிரிராஜ் சிங்குக்கு வெறுப்புதான்!). அனந்தமூர்த்தியை ஒருமுறை சந்தித்த அராபிய அறிஞர் மிகுந்த வியப்போடு ஒரு விஷயத்தைச் சொன்னாராம். “எங்கள் சமூகத்தில் ஒரே ஒரு மொழிதான், ஒரேயொரு மதம்தான்; ஆனால் 22 நாடுகளாகப் பிரிந்து நிற்கிறோம். இந்தியாவிலோ டஜன் கணக்கில் மொழிகள்; எண்ணிலடங்கா மதங்கள். இன்னமும் ஒரே நாடாக, ஒற்றுமையாக இருக்கிறீர்கள், எப்படி?” என்று கேட்டாராம். நம்மிடையே உள்ள வேற்றுமைகள் அல்ல; நம்மிடையே இருக்கும் ஒற்றுமைகள்தான் இதற்குக் காரணம்.

தன்னம்பிக்கையுள்ள கலாச்சாரங்கள்

ஒரு முறை அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த தலாய் லாமா பிறகு இப்படிக் கூறினாராம்: “அவர் எனக்குள்ளிருந்த முஸ்லிமை வெளிக்கொண்டு வந்தார். இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அவர் நடத்தும்விதம் உண்மைக்கு மாறாகவும் நியாயமற்றும் காட்டுமிராண்டித்தனமாகவும் இருந்தது” என்றாராம்.

கிரிராஜ் சிங் பேசுவதைக் கேட்டபோதும் எனக்குள்ளிருந்த கிறிஸ்தவர், முஸ்லிம், பவுத்தர் அனைவருமே, எனக்குள்ளிருந்த இந்துவைக் குறைக்காமல் வெளிப்பட்டனர். அதுதான் இந்தியாவின் சிறப்பு; எந்த இந்துத்துவப் பொறாமையும் இதை அழித்துவிட முடியாது.

© ‘தி இந்து’ சுருக்கமாகத் தமிழில்: சாரி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்