ஒரு பிடி மண் 5 - அறுபடும் தலைமுறை பந்தம்

By சமஸ்

நிலத்தை ஒரு சரக்காகக் கருதித்தான் சுரண்டுகிறோம். அது நம் சமூகத்தின் ஓர் அங்கம் என்பதை உணர்ந்தால் அன்புடனும் மரியாதையுடனும் அதை அணுகுவோம். - ஆல்டோ லியோபால்ட்

வெற்றுப் பெருமிதம் பேசப் பொருள் தேடி அலையும் காலம் இது. அறிவியல் பெருமைக் காகப் புராணங்களைப் புரட்டும் காலம். “பண்டைய காலத்திலேயே நமக்கு மரபணுவியல் தெரியும்; பிளாஸ்டிக் சர்ஜரியெல்லாம் நம் முன்னோர்களுக்கு அப்போதே அத்துப்படி” என்று அதற்கான உதாரணங்களாக கர்ணனின் பிறப்பையும் பிள்ளையாரின் தலையையும் காரணமாகக் காட்டும் ஒரு பிரதமரின் காலம். இந்திய அறிவியல் மாநாட்டில், ‘புராதன விமானத் தொழில்நுட்பம்’ என்ற பெயரில், ‘வ்யாமானிக சாஸ்திரம்’ பற்றியும் கிரகங்களுக்கு இடையே பறக்க விடப்பட்ட விமானங்களை நாம் அப்போதே வைத்திருந்தோம் என்றும் ‘அறிவியல் கட்டுரை’ சமர்ப்பிக்கும் கேப்டன் போடாஸ்களின் காலம். ஆனால், இந்தியாவின் உண்மையான அறிவியல் பெருமைகளில் ஒன்று இங்கு பொருட்படுத்தப்படுவது இல்லை. அது, நம்முடைய ‘உறங்கும் ராட்சதன்’ பெருமை.

விவசாயம் எனும் விஞ்ஞானம்

நிலத்தில் களம் இறங்கும் ஒரு விவசாயி குறைந்தது 72 தொழில்நுட்பங்களை அவனுக்குத் தெரியாமலேயே தெரிந்துவைத்திருக்கிறான் என்று சொல்வார் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார். விவசாயம் என்பது வெறும் தொழில் மட்டும் அல்ல; பெரும் விஞ்ஞானம். பல ஆயிரம் ஆண்டுகள் அனுபவத்தில் நம்முடைய முன்னோர்கள் அடைந்த வளர்ச்சியின் நீட்சியையே இன்றைக்கு நாம் அனுபவிக்கிறோம். சிந்து சமவெளி நாகரிகம், வெண்கல யுகம், ரிக் வேதம் என்று பல நூற்றாண்டுகளுக்கு முந்திப் பாய்ந்து செல்லக் கூடியது இந்திய விவசாயத்தின் வரலாறு. வெறும் புராணமோ, புரட்டோ அல்ல; சான்றுகள் இருக்கின்றன. 2500 வருடங் களுக்கு முந்தையதாகக் கருதப்படும் சம்ஸ்கிருத ஸ்லோகம் ஒன்று நிலத்தை 12 வகைகளாகப் பிரிக்கிறது. நமக்குத்தான் உறைக்கவில்லை. உலகம் உணர்ந்திருக்கிறது.

பிரிட்டன் எழுத்தாளரும் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளரும் ‘இந்த நிலம் நமக்கானது’ இயக்கத்தின் நிறுவனருமான ஜார்ஜ் மன்பியாட், ‘தி கார்டியன்’ பத்திரிகைக்குச் சமீபத்தில் எழுதிய கட்டுரையில் கி.மு.1500-ல் எழுதப்பட்ட ஒரு சம்ஸ்கிருத ஸ்லோகத்தைச் சுட்டிக்காட்டுகிறார்: ‘கைப்பிடியளவு உள்ள இந்த மண்ணில்தான் நம் உயிர்வாழ்க்கை அடங்கியிருக்கிறது. இதைக் கவனமாகக் காப்பாற்றிக்கொள்ளுங்கள், நம்முடைய உணவை, எரிபொருளை, நம்மைச் சூழ்ந்து நின்று இது பாதுகாக்கும்; இதைப் பராமரிக்காமல் உதாசீனப்படுத்தினால் அழிந்துவிடும் - அத்துடன் மனிதகுலமும்தான்.”

ஒரு விவசாயி தன்னுடைய பிள்ளைகளுக்கு இந்தத் தொழில் வேண்டாம் என்று நினைத்து விவசாயத்தைக் கைவிடும்போது, ஒரு ஆள் மட்டும் விவசாயத்தை விட்டுப் போவதில்லை. ஆயிரமாண்டு நீட்சி, பல தலைமுறைகள் கையளித்த நீட்சி அத்தோடு அறுபட்டுப்போகிறது. ஏன் இந்திய விவசாயத்தின் நுட்பங்களும் அதன் நீண்ட வரலாற்றுப் பெருமையும் நம்முடைய ஆட்சியாளர்களுக்கு உறைக்கவில்லை?

தூங்கும் ராட்சதன்

பிரதமர் நரேந்திர மோடி தேர்தலுக்கு முன் வளர்ச்சியைப் பற்றிப் பேசியபோதெல்லாம் விவசாயத்தைப் பற்றியும் நிறையப் பேசினார். ஆனால், இந்திய அரசியல்வாதிகள் விவசாயத்தைப் பற்றி எதாவது பேசினால், அது தேர்தல் மேடைகளுடன் அவர்களுக்கே மறந்துபோவது நம்முடைய விவசாயிகளின் சாபக்கேடுகளில் ஒன்று. இன்றைக்கு அவருடைய கட்சி, விவசாயிகளை எப்படி அணுகுகிறது என்பதற்கான உதாரணங்களில் ஒன்று இது. மகாராஷ்டிரத்தில், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகையாக அரசு ரூ. 4,000 கோடியை ஒதுக்கியது. இப்படி ஒதுக்கப்பட்ட நிதி 26 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. காரணம் என்ன தெரியுமா? வங்கிக் கணக்கு இல்லை என்பது! இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், வறட்சியால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மராத்வாடா, விதர்பா பகுதிகளிலிருந்தே இப்படி விநியோகிக்கப்படாத பணம் பெரும் அளவில் அரசுக்குத் திரும்பியிருக்கிறது. நம்முடைய அக்கறைகள், கரிசனங்களின் உண்மையான முகம் எப்படியெல்லாம் இருக்கிறது, பாருங்கள்!

ஆனால், இப்படியான நிவாரணங்கள், உதவிகள் அல்ல; காலங்காலமாகப் புறக்கணிக்கப்படும் தங்களது முக்கியமான 3 கோரிக்கைகள் கவனிக்கப்பட்டாலே போதும்; ‘தூங்கும் ராட்சதன்’ தட்டியெழுப்பப்படுவதுடன் இந்தியாவின் வளர்ச்சியும் விஸ்வரூபம் எடுக்கும் என்கிறார்கள் நம்முடைய விவசாயிகள். அவர்கள் குறிப்பிடும் 3 விஷயங்கள் அவர்களுடைய கோரிக்கைகள் மட்டும் அல்ல; இந்திய வேளாண்மை எதிர்கொள்ளும் பெரிய, முக்கியமான சவால்களும்கூட.

அந்த 3 சவால்கள்

1. இந்திய விளைநிலங்களில் 36% மட்டுமே சாகுபடிக்கான நீர் ஆதாரத்தைப் பெற்றிருக்கின்றன. இந்திய விவசாயத்தைக் காக்க இந்தப் பரப்பளவு உயர்த்தப்படுவது மிக அவசியம். ஆனால், தவறான கொள்கைகள் - அணுகுமுறைகளின் விளைவாக, உள்ள நீராதாரங்களையும் நாசமாக்குவதையே நம்முடைய அரசு தொடர்ந்து செய்துவருகிறது. தவிர, அதிகமாக நீர் விரயம் செய்யும் தொழிலாகவும் விவசாயத்தை மாற்றிவிட்டது. நம்மிடம் மிச்சமுள்ள நீராதாரத்தையேனும் பாதுகாத்துக்கொள்ள புதிய தேசிய நீர்க் கொள்கையை அரசு உருவாக்க வேண்டும். அதன் அடிப்படையில், எல்லா நதிகளையும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும். நீர்ப் பாதுகாப்பு, பகிர்வு இரண்டுமே மத்தியப் பாதுகாப்புப் படை வசம் ஒப்படைக்கப்பட வேண்டும். சூழலுக்கு உகந்த வகையில், புது ஆறுகள் (பெரும் கால்வாய்கள்) உருவாக்கப்பட வேண்டும். ஏரி - குளம் - குட்டைகள் மீட்டுருவாக்கப்படுவதுடன் விவசாயிகள் பங்கேற்புடன் நாடு முழுவதும் மழை நீர் சேகரிப்பு பாசனக் குட்டைகள் அமைக்கப்பட வேண்டும். நெல், கோதுமை, கரும்பு என அரசு இப்போது குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயித்தில் நேரடியாக / மறைமுகமாகப் பங்கேற்கும் பயிர்கள் மூன்றும் அதீதமான நீரைக் கோருபவை. அதிகமான விவசாயிகள் நெல் / கோதுமை / கரும்புச் சாகுபடியைத் தேர்ந்தெடுக்க அரசின் இந்த ஆதரவும் ஒரு காரணம். இதற்கு இணையாக குறைவான நீர்ப் பயன்பாட்டைக் கோரும் / மானாவாரிப் பயிர்களுக்கான தேவையை, சந்தையை அரசு உருவாக்க வேண்டும்.

2. ஒவ்வொரு ஆண்டும் இந்திய விவசாயிகளை நஷ்டத்தில் தள்ளுவது வெள்ளமும் வறட்சியும் மட்டும் அல்ல; தொழில்நுட்பமும்தான். ஒரு பஞ்சாப் விவசாயி 3.8 டன் விளைச்சல் எடுத்தால், பிஹார் விவசாயி கிட்டத்தட்ட அதில் பாதி அளவு 2.2 டன் மட்டுமே விளைச்சல் எடுக்கிறார். கரும்பு விளைச்சலில், கர்நாடக விவசாயி 79.5 டன் எடுத்தால், பஞ்சாப் விவசாயி 65.3 டன் மட்டுமே எடுக்கிறார். இங்கு என்ன நடக்கிறது என்று அந்த விவசாயிக்கும் தெரியாது, அங்கு என்ன நடக்கிறது என்று இந்த விவசாயிக்கும் தெரியாது. நம்மூரில் ஆலங்குடியைச் சேர்ந்த விவசாயி பெருமாள் 3.8 டன் விளைச்சல் எடுத்திருக்கிறார். தமிழ்நாட்டில் எத்தனை விவசாயிகளுக்கு இந்தத் தகவலும் அவர் கையாண்ட உத்தியும் தெரியும்?

மேற்கு வங்கத்தில் நல்ல விளைச்சலைக் கண்டும், விலை வீழ்ச்சியால் தலை மேல் கை வைத்து உட்கார்ந்திருக் கிறார்கள் உருளைக்கிழங்கு விவசாயிகள். காரணம், உணவு தானியங்களைப் பதம் கெடாமல் பாதுகாத்து வைக்கும் நவீனக் கிடங்குகள் போதிய அளவில் அங்கு இல்லாதது. அறுவடைக்குப் பின் ஒவ்வோர் ஆண்டும் இந்தியா வீணடிக்கும் தானியங்களின் அளவு மட்டும் 2 கோடி டன். நூற்றுக் கணக்கான பெரிய அளவிலான உணவுப் பூங்காக்களும் ஆயிரக் கணக்கான நவீனக் கிடங்குகளும் வேண்டும்.

இரு சின்ன உதாரணங்கள் இவை. தேவையையும் சூழலையும் முன்கூட்டித் திட்டமிட்டு உற்பத்தியில் விவசாயி களுக்கு அரசு வழிகாட்ட வேண்டும். மேலைநாடுகளின் சந்தைத் தேவையை அவர்கள் மேல் திணிப்பதை மட்டுமே ‘தொழில்நுட்ப ஆலோசனை’ என்று கருதாமல், உண்மையான தொழில்நுட்ப ஆலோசனையை விவசாயிகளுக்கு அளிக்க வேண்டும்.

3. ரேஷன் முறையிலான பங்கேற்பைத் தாண்டி, உற்பத்தி - கொள்முதல் - சந்தை - விநியோகத்தில், ஆக்கபூர்வமான சந்தைப்படுத்தலில் அரசின் பங்கேற்பு தேவை. உற்பத்தியில் ஈடுபடுவோருக்கு குறைவான வட்டியில் கடன் வழங்கப்பட வேண்டும். நாட்டின் மிகப் பெரிய தொழில், தொழில்மயமாக அணுகப்பட வேண்டும். விவசாயத்துக்கு என்று தனி நிதிநிலை அறிக்கை தாக்கல்செய்யப்பட வேண்டும்.

இவை எதுவுமே சாதிக்க முடியாத காரியங்கள் கிடையாது, விவசாயிகள் மீது அக்கறை கொண்ட ஒரு அரசுக்கு. அக்கறை என்றால், பெயரளவிலான அக்கறை அல்ல. நாடு முழுவதற்கும் வெண்மைப் புரட்சியைக் கொண்டுசெல்வதற்காக, குஜராத் விவசாயிகளின் வீட்டில் இரவில் தங்கி வெற்றி சூட்சமத்தைக் கற்றுக்கொண்டாரே பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி... அப்படியொரு அக்கறை!

(நிலம் விரியும்...)

- சமஸ்

தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்