பிரபாவதி - ஜானகிநாத் போஸ் தம்பதியரின் 9-வது மகனாக 23.1.1897-ல் கட்டாக் நகரில் பிறந்தார் சுபாஷ் சந்திர போஸ். அவருடன் உடன் பிறந்தவர்கள் மொத்தம் 14 பேர். வழக்கறிஞரான அவருடைய தந்தை, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படிக்க சுபாஷை அனுப்பிவைத்தார். அங்கு படித்துப் பட்டம் பெற்ற சுபாஷ், இந்திய ஆட்சிப் பணிக்கான சிறப்புத் தேர்வையும் (ஐசிஎஸ்) எழுதி தேர்ச்சி பெற்றார். ஆனால், பிரிட்டி ஷாரிடம் அதிகாரியாகப் பணிபுரிய விருப்பம் இல்லை. தேச விடுதலைக்காக காங்கிரஸில் சேர்ந்தார்.
சுபாஷ் 1923-ல் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவரானார். 1924-ல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலரானார். 1930-ல் கல்கத்தா நகர மேயரானார். பூரண சுதந்திரம்தான் லட்சியமாக இருக்க வேண்டும். அதற்காக எந்த வழிமுறையையும் கையாளலாம் என்பது சுபாஷின் நிலைப்பாடு. இது காந்திக்கும் சுபாஷுக்கும் இடையே பிளவு ஏற்பட வழிவகுத்தது.1938-ல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு வென்றார். எனினும், காந்தியின் செல்வாக்கை மீறி அவரால் நீடிக்க முடியவில்லை. இதனால், காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியைவிட்டு விலகினார். 1939-ல் காங்கிரஸில் இருந்து கொண்டே அனைத்திந்திய பார்வர்டு பிளாக் அரசியல் இயக்கத்தைத் தொடங்கினார்.
சுபாஷின் பேச்சுகளும் எழுத்துகளும் தீவிரக் கனல்கொண்டிருந்ததால், பிரிட்டிஷ் அரசு அவரை 1940-ல் கல்கத்தாவிலேயே வீட்டுக்காவலில் சிறை வைத்தது. மாறு வேஷத்தில் வீட்டிலிருந்து தப்பிய அவர், ஆப்கன், சோவியத் ஒன்றியம் என ஜெர்மனி சென்றார். ஹிட்லரைச் சந்தித்தார். பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து இந்தியா விடுதலை பெற ராணுவ உதவியைக் கோரினார். ஐரோப்பிய அரசியல் மாற்றங்கள், ஜெர்மனி - இத்தாலி - ஜப்பான் மீது அவருக்கு ஓர் ஈர்ப்பை உண்டாக்கியிருந்தன.
1934-ல் அவர் சந்தித்த அயல்நாட்டுப் பெண்ணான எமிலி ஷென்கல் - போஸ் இணையருக்கு இதே காலகட்டத்தில் குழந்தை பிறந்தது. அனிதா போஸ். 1940-களின் தொடக்கத்தில் தொடர்ந்த ஜப்பானிய வெற்றிகள், போஸை ஜப்பானை நோக்கி நகர்த்தியது. ஜப்பான் சென்றார் போஸ். ஜப்பானிய ஆதரவுடன் 1942-ல் ‘ஆசாத் ஹிந்த் ஃபௌஜ்’ என்னும் இந்திய தேசிய ராணுவம் உருவாக்கப்பட்டது. பிரிட்டிஷ் படையில் இருந்துகொண்டு ஜப்பானியர்களுக்கு எதிராகப் போரிட்டு, போரில் கைதிகளாகப் பிடிபட்ட இந்தியர்களையும் மலேசியா, சிங்கப்பூர் போன்ற கீழை நாடுகளில் வாழ்ந்த இந்தியர்களை குறிப்பாகத் தமிழர்களைத் தனது படையில் வீரர்களாகச் சேர்த்துக்கொண்டார்.
ஜப்பானிய ராணுவத் துணையுடன் களம் இறங்கிய சுபாஷின் படைகள், இந்தியாவை மீட்கக் களத்தில் இறங்கின. மணிப்பூர் மாநிலம் இம்பால் வரையில் முன்னேறி, நாட்டின் மூவர்ணக் கொடியை அங்கே பறக்கவிட்டன. ஆனால், தொடர்ந்து அடுத்தடுத்த தாக்குதல்களில் கடுமையான சேதத்தைச் சந்தித்த படைகள் தோல்வியைக் கண்டன. சில ஆயிரம் பேர் இன்னுயிர் நீத்தனர். ஏனையோர் போர்க் கைதிகளாகச் சிக்கினர்.
உலகப் போரில் ஜப்பானின் வீழ்ச்சிக்குப் பின் நிலைமை மேலும் மோசமானது. 18.8.1945-ல் பாங்காக்கிலிருந்து டோக்கியோ செல்ல விமானத்தில் புறப்பட்டார் போஸ். அந்த விமானம் விபத்தில் சிக்கி போஸ் இறந்ததாகப் பின்னர் அறிவிக்கப்பட்டது. அப்போது அவருக்கு வயது 48. ஆனால், பலர் இதையெல்லாம் நம்பத் தயாராக இல்லை. அவர் என்றாவது வருவார், மாறுவேஷத்தில் வாழ்கிறார் - என்றாவது அரசியல் அரங்கின் மையத்துக்குத் திரும்புவார் என்று ஏராளமான நம்பிக்கைகள்... பெயர் சுபாஷ் என்றாலும் நேதாஜி என்பதே பின்னாளில் நிலைத்துநின்றது. நேதாஜி என்றால், தலைவர் என்று அர்த்தம்!
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago