கூழாங்கற்களாக மாறிவிட்ட சொற்கள்

By சுந்தர ராமசாமி

தமிழ்ச் சமூகத்தின் சொல் வியாதி பற்றி விளக்குகிறார் சுந்தர ராமசாமி

‘ரெட்டாரிக்’ என்ற ஆங்கிலச் சொல் சில நாட்களாக அடிக்கடி மனதில் வந்து கொண்டிருக்கிறது. மூல அர்த்தத்திலிருந்து அந்தச் சொல் விலகிப் போய்க்கொண்டிருப்பதான தோற்றம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்றைய ஆங்கில விமர்சனக் கட்டுரைகள் ஒரு சிலவற்றில் அச்சொல் எதிர்மறையாக அல்லாமல் சாதகமாகக்கூடப் பயன்படுத்தப்படுகிறதோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. இன்று தமிழ் வாழ்வு ஒரு அவலப் புள்ளியில் வந்து நிற்கிறது. சிக்கலான, மொழிவழிப்படுத்தக் கடினமான புள்ளி அது. ஆனால் தமிழ் வாழ்வில் மையச் சுழற்சி சார்ந்த புரிதல்- பல்வேறு கோணங்களிலிருந்து பெறும் பார்வைகளின் தொகுப்பாக- வெளிப்படாத வரையிலும் இந்திய வாழ்க்கையையோ, உலக வாழ்க்கையையோ, வியப்பூட்டும் பிரபஞ்ச விரிவு பற்றிய அறிவையோ நாம் சரிவரப் புரிந்துகொள்ள முடியும் என்று தோன்றவில்லை. தமிழ் சார்ந்த வாழ்வின் உள்ளார்ந்த விதைகள் என்ன? இதைப் பற்றி நமக்கு இன்று தெளிவு இல்லை. இந்த விதைகளை நாம் ஊடுருவிப் பார்க்க முடியாதபடி எவ்வளவோ மாய்மாலங்கள், பொய்த்திரைகள், கபட வேடங்கள், தந்திரங்கள், நீட்சியான ஏற்பாடுகள் நம்மைச் சுற்றிக் கண்ணி வலைகளாக விரிந்து வாழ்வில் ஒரு பகுதியாக இறுகிக் கிடக்கின்றன. தனி நபர்களின் செயல்பாடுகளில் இருக்கும் ஊழல்களை ஏதேனும் ஒரு காரணத்தை முன்னிட்டு அம்பலப்படுத்த இயலவில்லை என்றால் சமூகச் சரிவுகளை எப்படி விளங்க வைக்கப் போகிறோம் என்பதும் தெரியவில்லை. ஊழலை அம்பலப்படுத்த முயலும்போது எனக்குச் சாதகமாக நிற்கும் ஒரு சூழலை ஏன் நான் கெடுத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொருவருக்கும், முக்கியமாக எழுத்தாளர்களுக்கு வலுப்பட்டுவிட்ட ஒரு சமூகத்தில் வாழ்க்கையை மேலும் கீழ்நிலைக்குத் தள்ளும் ஏற்பாடுகள்தான் வெற்றிகரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும்.

ரெட்டாரிக் என்ற சொல், தமிழ் வாழ்வு சம்பந்தப்பட்ட வரையில் மிக முக்கியமான சொல். இந்தச் சொல்லின் மூலப் பொருளைச் சுட்டும் ஒற்றைத் தமிழ்ச் சொல் எனக்குத் தெரியவில்லை. ஒற்றைத் தமிழ்ச் சொல் இருக்கும் என்றால்-இப்போதைக்கு அது தெரியாமல் இருப்பது நல்லதுதான். ஏனென்றால் இந்தச் சொல்லுக்கு என்னென்ன அர்த்த விரிவுகள் இருக்கின்றனவோ எல்லாவற்றுடன் ஏதோ ஒரு விதத்தில் உறவு கொண்டு நிற்கிறது நம் வாழ்க்கை. இருக்கும் தொடர்பை மேலும் ஆழப்படுத்திக்கொண்டும் வருகிறது. என்னென்ன அர்த்தச் சாயல்கள் இந்தச் சொல்லுக்கு இருக்கின்றன என்று பார்க்கலாம். ஆவேசமாகப் பேசப்படும் பேச்சு. ஆவேசமாக எழுதப்படும் எழுத்து. மிகை, சாரமற்ற சத்தம், தேவையற்ற நாடகப் பாங்கு, ஆடம்பரம், அந்த நிமிச வெற்றிக்கான சாகசம், எதிர்பார்ப்பின்றியே கேள்விகளை எழுப்புதல், சவடால்தனம் இவ்வாறு பல பல அர்த்தச் சாயல்களை எந்த விகற்பமும் இல்லாமல் இந்த ரெட்டாரிக் என்ற சொல் தன் பக்கம் இழுத்துக் கொள்கிறது.

தமிழ் அரசியல், நாடகம், புனைகதைகள், இதழியல், திரைப்படம், மேடைப் பேச்சு, சமயத் தலைவர்களின் கூத்தடிப்பு, ஜாதி, மதத்துவேசங்கள், மேடைப் பேச்சுக்கு உரியவையாக மேடையிலோ அல்லது மனமேடையிலோ உருவாகும் கவிதைகள், கைதட்டலுக்காக உற்பத்தி செய்யப்படும் கவிதை வரிகள், உள்ளாழமற்ற ஆனால் கம்பீரமாக எழுப்பப்படும் அறைகூவல்கள் என்ற பல்வேறுபட்ட நிகழ்வுகள் இந்தச் சொல்லிலிருந்து நமக்கு நினைவுக்கு வரும்போது தமிழ் வாழ்வின் மையத்துக்குள் ஊடுருவ இந்தச் சொல் உதவுவதை நாம் உணர முடியும். இதுபோல் பல சொற்கள் நமக்குத் தேவையாக இருக்கின்றன. பல சொற்கள், பல வாக்கியங்கள், பல சிந்தனைகள், பல புத்தகங்கள், நடைமுறை அனுபவங்கள், கள ஆராய்ச்சிகள் என்று ஊடுருவிச் செல்லும் ஆயுதங்கள் பல தேவையாக இருக்கின்றன. இந்தச் சொல்லுக்குரிய எல்லா அர்த்தங்களையும் ஏககாலத்தில் சுமந்து கொண்டு போவது சிரமம் என்பதால் பொருளின் எல்லாச் சாயல்களையும் உள்ளடக்கி போலி நாடகப் பாங்கு என்ற பொருளை நாம் இப்போதைக்குத் தக்க வைத்துக்கொள்ளலாம்.

உண்மையைத் தேடும் மனம்

போலி நாடகப் பாங்கை முற்றாகத் தவிர்த்த வாழ்க்கை என்பதே இல்லை. முற்றாகத் தவிர்த்த கவிதை என்பதும் இல்லை. கவிதை உண்மையின் தளத்தில் ஊடுருவி நெடுந்தூரம் போகும்போது கவிஞனின் ஆத்மார்த்தமான குரல் சந்தேகத்துக்கு இடமின்றி நம் அனுபவ இழையில் ஒன்றிக்கொள்ளும்போது அலைபோல் பட்டென்று எழும்பி வரும் ரெட்டாரிக் ‘மிகையான நாடகப் பாங்கு’ உண்மையின் தொனி கொண்டு நமக்கு மிகுந்த மன எழுச்சியை ஏற்படுத்துகிறது. இந்த மன எழுச்சியை ஏற்படுத்துவதற்குக் காரணம் கவிஞனிடமிருந்து தொடர்ந்து வெளிப்படும் ஆத்மார்த்தமான குரலும் அந்தக் குரல் அவனுக்கு அடித்தளமாக நிற்பதும் அந்தத் தளத்தில் அவன் தன் நெடும் பயணத்தைத் தொடர்வதும் ஆகும். இந்த ஆத்மார்த்தமான அடித்தளப் பயணம் இல்லையென்றால் இந்த ரெட்டாரிக் உண்மையைத் தேடும் மனதில் எந்த ஆவேசத்தையும் எழுப்பாது. அதன் போலித்தனம் பட்டென்று வெளிப்பட்டுத் துல்லிய மனங்களில் பரிகாசச் சிரிப்பை உருவாக்கும்.

‘இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக உலகியற்றி யான்’ என்ற குறளுக்கும்

‘தனியருவனுக்கு உணவில்லையெனில்

ஜகத்தினை அழித்திடுவோம்’ என்ற கவிதை வரிகளுக்கும் பொருள் ஒற்றுமையோடு இரண்டாயிரம் ஆண்டு நீட்சியின் இரு எல்லைகள் காணக் கிடைப்பது மிகையான நாடகப் பாங்குக்கும் கவிதைக்குமான உறவை நியாயப்படுத்துகிறது. வள்ளுவனிலும் சரி பாரதியிலும் சரி ரெட்டாரிக்கை நாம் ஏற்றுக் கொள்கிறோம். சந்தேகத்துக்கு இடமின்றி அவர்களுடைய கவித்துவப் பயணம் ஆத்மார்த்தமான தளத்தில் நிகழ்ந்திருப்பதுதான் இதற்குக் காரணம். உலகக் கவிஞர்கள் மத்தியில் இந்த நாடகப் பாங்குக்கு வலுவான பெருமையை ஏற்படுத்தித் தந்தவர் என்று வால்ட் விட்மனைச் சொல்லலாம். அவர் தமிழ்க் கவிஞர்களையும் வெகுவாகக் கவர்ந்தவர் என்பது நாம் நினைவில் கொள்ள வேண்டிய ஒரு செய்தியாகும்.

நாணயங்களின் நம்பகத் தன்மையிலிருந்துதான் போலி நாணயங்கள் உருவாகின்றன. நல்ல நோட்டுகள் இருப்பதால்தான் கள்ள நோட்டுகளைப் புழக்கத்தில் விட முடிகிறது. கள்ள நோட்டுகள் நீக்கமற நிறைந்துவிட்டால் அவற்றின் சுவாதீனம் செல்லுபடியாகிவிடும். தமிழில் ரெட்டாரிக் என்ற சொல்லின் சகல சாயல்களும் ஜனரஞ்சகக் கவிதையின் அங்கங்களாக இருக்கின்றன. இப்போது மிகையான நாடகப் பாங்கே கவிதை என்றாகி விட்டது. ரெட்டாரிகே கவிதை என்றாகிவிட்டது. பெரும் வரவேற்புக்கு உட்படும் வெற்றிகரமான, புகழ் வாய்ந்த கவிஞர்களின் செயல்பாட்டுத் தளம் இதுதான். இவர்களுடைய செயல்பாட்டுத் தளம் தமிழ் வாழ்வுக்குரிய அவலத்தின் குறியீடாக இருக்கிறது. தமிழ் வாழ்க்கையில் காணக்கிடைக்கும் சரிவுகளும் தாழ்வுகளும் அவற்றின் அருவருக்கத்தகுந்த தோற்றத்தை மறைத்துக்கொண்டு, அவர்களுடைய கவிதைகளில் வரிகளாக உருவாகின்றன. வாழ்க்கை வெளிப்படுத்தும் நிகழ்வுகளை ஆராய்ந்தோ அவற்றின் பரிமாணங்களைத் தியானித்தோ அவர்கள் எந்த நிலைப்பாடுகளையும் எடுப்பதில்லை. அவர்களுடைய நிலைப்பாடுகள் நிலையானவை; தீர்மானிக்கப்பட்டவை. ஒரு எலும்புத்துண்டு போல் இறுக்கமானவை அவை. பாடுபொருள் சார்ந்து அந்த எலும்புத் துண்டின்மீது சபைக்கேற்ற சதையைப் பொதிந்து தரவேண்டும். இந்த வேலை மட்டுமே அவர்களுக்கு உள்ளது. அவர்களுடைய வரிகளை அவர்களோ, ஒலிபெருக்கி வழியாகச் செவிப்பறை அதிர்வுகள் வழியாக உடலில் உஷ்ணம் ஏற்றிக்கொள்பவர்களோ நம்புவதில்லை. யாருமே நம்பாத வரிகளை எல்லோருமே சேர்ந்து ரசிக்கிறார்கள். இந்த ரசனையை மேடைப் பேச்சு, திரைப்படம், சமயச் சொற்பொழிவு, தொலைக்காட்சி நிகழ்வுகள் போன்றவற்றை எதிர்கொள்ளும் எல்லாச் சபைகளிலும் நாம் பார்க்கலாம்.

செயல்பாடும் அதன் தாக்கமும்

ஒரு தையல் மிஷின் ஓடிக் கொண்டிருக்கிறது. ஊசி சொருகப்பட்டிருக்கிறது; ஆனால் நூல் கோர்க்கப் படவில்லை. அப்படியென்றால் அந்தத் தையல் மிஷின் வேலை செய்கிறதா? வேலை செய்யவில்லையா? தையல் மிஷினுக்குரிய சத்தம் அதில் இருக்கிறது. கால்கள் தொடர்ந்து பெடல் செய்துகொண்டிருப்பதால் உழைப்பு வெளியேறிக்கொண்டுதான் இருக்கிறது. துணி நகர்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. வெளியே வழியும் துணி, பெடல் செய்யும் கால்களை மறைக்கிறது. ஆனால் தையல் என்ற ஆதாரமான காரியம் நடைபெறவில்லை. இன்றைய ஜனரஞ்சகக் கவிஞர்களுடைய கவிதைகள் தமிழ் வாழ்க்கையைப் பாதித்திருக்கிறதா - பாதிப் பது போன்ற தோற்றம் இருக்கிறதா என்று கேட்டால், தோற்றம் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். வலிமையாக இருக்கிறது என்றுகூடச் சொல்லலாம். பரவலாகக் கவனத்திற்கு வந்துவிட்ட ஒன்று மிகுந்த பாதிப்பை நிகழ்த்துவதான தோற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அச்சில் ஒருவடைய பெயர் எப்போதும் வந்துகொண்டியிருந்தால் பேச்சில் ஒருவடைய பெயர் அடிபட்டால் அவர் ஆழமான, ஆக்கபூர்வமான காரியத்தைச் செய்து கொண்டிருக்கிறார் என்ற தோற்றம் ஏற்படுகிறது. இந்தத் தோற்றம் எல்லாமே பொய்.

எந்தக் கவிஞனும் வாழ்க்கையை நேரடியாகப் பாதிப்பதில்லை. அது சாத்தியமுமில்லை. அவன் கவிதைகள் மூலம் உடனடியாக எதுவும் நிகழ்வதுமில்லை. கவிஞன் ஒரு பாதிப்பை நிகழ்த்த வேண்டும் என்றால் அது எங்கு நிகழ்கிறது? வானத்திலா? கடலிலா? மண்ணிலா? காற்றிலா? எங்கு நிகழ்கிறது அந்தப் பாதிப்பு? தனி அறையில் ஒரு காகிதத்தில் சில எழுத்துகளை வரிசைப்படுத்துவதன் மூலம் ஒரு சமூகப் பாதிப்பை நிகழ்த்த முடியும் என்றால் எங்கு நிகழ்கிறது அந்தக் காரியம். கவிஞனுடைய செயல்முறை வித்தியாசமானது. பாதிப்பு நிகழும் முறை வித்தியாசமானது. அவன் காலத்தை முறித்து எதுவும் செய்வதில்லை. வாழ்க்கையை ஸ்தம்பிக்கச் செய்து புதிய தளத்தில் அதைத் திருப்பிவிட அவனிடம் பேராற்றல் எதுவும் இல்லை. மிகமிகச் சாவகாசமாக நம் புலன்களால் உணர முடியாதபடி கண்டறிவதுகூடச் சாத்தியமில்லாதபடி, அவன் காலத்துக்குள் ஊடுருவிக் கொண்டிருக்கிறான். காலத்துக்குள் ஊடுருவது எப்படிச் சாத்தியமாகிறது? காலம் எங்கே இருக்கிறது? ஒரு கவிஞனாக வாழ்க்கையைப் பாதிக்க வேண்டும் என்றால் நான் என்ன செய்ய வேண்டும். கவிஞனுக்கு ஒரு சாத்தியக்கூறுதான் இருக்கிறது. அவன் மொழியுடன் விசேஷமான உறவு கொண்டிருக்கிறான். விசேஷம் என்று சொல்லலாம். வித்தியாசமான, ரகசியமான, நுட்பமான, மாந்த்ரீக அம்சம் கொண்ட உறவு கொண்டிருக்கிறான் என்றெல்லாம் சொல்லாம். ஒன்று தெளிவு. மொழியுடன் சகஜ மனிதன் கொண்டிருக்கும் உறவல்ல அது. சாதாரண மனிதன் கொண்டிருக்கும் உறவல்ல அது. மொழியைப் பாதிப்பதன் மூலம்தான் கவிஞன் சமூகத்தைப் பாதிக்கிறான். நித்திய வாழ்வில் எண்ணற்ற மக்கள் எண்ணற்ற காரியங்களுக்காகச் சொற்களைச் சிதறிக்கொண்டே இருக்கிறார்கள். இந்தச் சொற்சிதறலைச் சார்ந்து நிற்கிறது மனித வாழ்க்கை. இந்தச் சொற்சிதறலைச் சார்ந்து நிற்கிறது மனித உறவு. பயன்படுத்தப்பட்டு, பயன்படுத்தப்பட்டதன் மூலம் தெளிவு பெற்றுவிட்ட சொற்களின் ஆற்றலை நம்பி வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. சாத்தியமான காரியங்களுக்குள் மொழி சுற்றிச் சுழன்றுகொண்டு வரும்போது அதிகப் பலன்களை மொழி ஈட்டித் தரும் நேரத்திலேயே மொழியின் எல்லைகளும் இறுகுகின்றன. அர்த்தம் இறுகுகிறது. சொற்கள் கூழாங்கற்களாக மாறிவிடுகின்றன. கூழாங்கற்களாக மாறிவிட்ட சொற்கள் மீது அரசியல்வாதிகளுக்கு இருக்கும் காதல், ஜனரஞ்சகக் கவிஞனுக்கு இருக்கக்கூடிய காதல் கொஞ்ச நஞ்சம் அல்ல. மேடையிலும், காகிதத்தின் மீதும் அந்தக் கூழாங்கற்களை வீசிவீசிப் பிடிப்பதில் படைப்புமனம் அற்ற பழக்கவாதிகளுக்கு எல்லையற்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது. கூழாங்கற்கள் போல் இறுகும் சொற்களை மீண்டும் அர்த்தச் செறிவுக்குள் தள்ளி அதை விம்மும்படி செய்பவன் கவிஞன். வார்த்தைகள் ஒன்றுக்கொன்று கொள்ளும் விநோத உறவுகளில் இந்த விம்மல்கள் நிகழுகின்றன. இந்த விநோத உறவு நிகழ வேண்டுமென்றால் மிகுந்த படைப்பாற்றல் வேண்டும்.

படைப்பாற்றல் என்பது ஒரு சக்தியின் உருவம். அந்த ஆற்றலை நீங்கள் கீறிப்பார்த்தால் அதில் சிந்தனை சார்ந்த ஒரு நுட்பம் துடித்துக் கொண்டிருப்பதை உணரலாம். மாறுபட்ட கோலங்களுக்கு அடிப்படையாக நிற்கும் ஏதோ ஒன்றைக் கவிதை எப்போதும் தேடிச் செல்ல முனைகிறது. நாம் விரும்பிப் படித்த பல கவிதைகளில் ஒரு சில கவிதைகள் நம்மை வெகுவாகக் கவர்கின்றன. மிக அதிகமாக நம்மைக் கவரும் கவிதைகளுக்குள் தென்படும் பொதுத்தன்மை என்ன என்று நாம் யோசிக்க முற்படுகிறோம். அந்தப் பொதுத்தன்மையை வரையறுப்பது மிகக் கடினமாக இருக்கிறது. சிறப்பான ஒவ்வொரு புதுக்கவிதையும் அந்தப் பொதுத்தன்மையை ஏதோ ஒருவிதத்தில் குலைத்து, பொதுத்தன்மை சார்ந்த நம் தீர்மானத்தையும் குலைத்துவிடுகிறது. சிறந்த கவிதைகளுக்குப் பொதுவாக நிற்கும் நியதிகளை வரையறுக்க முயல்கிறோம்.

(சுந்தர ராமசாமி 1.5.2000 அன்று எழுதிய இந்தக் கட்டுரை இதுவரை பிரசுரம் செய்யப்படவில்லை. இன்று (மே, 30) அவரது பிறந்த நாளை ஒட்டி இக்கட்டுரை இங்கு பிரசுரம் செய்யப்படுகிறது.)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்