பிரதமர் மோடி ஒரு ‘க்ரோனி கேபிடலிஸ்ட்’, பெருநிறுவனங்களின், பெருமுதலாளிகளின் பிரதிநிதி; அதனாலேயே இந்நாட்டு மக்களின், விவசாயிகளின் எதிர்காலத்தைப் பற்றித் துளியும் கவலைப்படாமல், பெருநிறுவனங்களின் வசதிக்கேற்ப நிலம் கையகப் படுத்தும் சட்டத்தைக் கொண்டுவரத் துடிக்கிறார். - எல்லா எதிர்ப்பு களையும் மீறி பாஜக அரசு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தைக் கொண்டுவரத் துடிப்பதற்குப் பெரும்பான்மையான விமர்சகர்களும் எதிர்க் கட்சிகளும் முன்வைக்கும் காரணம் இது. இது மட்டையடிப் பேச்சு!
நாட்டின் வளர்ச்சியைப் பற்றிச் சிந்திக்கும் எவரும் வறுமை ஒழிப்பிலிருந்தே அதைத் தொடங்கியாக வேண்டும். யார் வறுமையை ஒழிக்க வேண்டும் என்றாலும், முதலில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தியாக வேண்டும். மிகப் பெரிய மக்கள்தொகையைக் கொண்ட இந்தியச் சூழலில் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் என்பது எந்த ஆட்சியாளருக்கும் பெரிய சவால் என்பதை நாம் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்.
முந்தைய பிரதமர் மன்மோகன் சிங் விஷயத்திலும் சரி, இப்போதைய பிரதமர் மோடி விஷயத்திலும் சரி... நாட்டின் வளர்ச்சியைப் பற்றிய அவர்களுடைய ஆர்வம், அக்கறை ஆகியவை மறுப்பதற்கில்லை. அதேசமயம், வளர்ச்சிக்காக - வறுமை ஒழிப்புக்காக - வேலை வாய்ப்புகள் உருவாக்கத்துக்காக அவர்கள் தேர்ந்தெடுத்த / தேர்ந்தெடுக்கும் வழி மிக ஆபத்தானது, மோசமான விளைவுகளை உண்டாக்கக் கூடியது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
தேவை: ஆண்டுக்கு 1.3 கோடி வேலைகள்
இந்தியக் குடிமக்களில், 70 கோடிப் பேர் கண்ணியமற்ற வாழ்க்கையையே வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றனர். உலகில் சீனாவுக்கு அடுத்து பெருந்தொகையில் தொழிலாளர் களைக் கொண்ட நாடு இது. ஆனால், இந்தியத் தொழிலாளர் அமைப்பின் அறிக்கைப்படி, இந்தியாவில் 15 வயது முதல் 59 வயது வரையிலான ஆண்களில் 21.2% பேர் மட்டுமே நிரந்தர ஊதியம் தரும் வேலைகளில் இருக்கின்றனர். அமைப்புசாரா துறையே நாட்டின் 90% பேருக்கு வேலை அளிக்கிறது.
இந்தியாவின் மிகப் பெரிய கவலையாகவும் இத்தகைய விவாதங்களின் மையப் பொருளாகவும் இருப்பது, நாட்டிலேயே அதிகமானோருக்கு - 36% பேருக்கு - வேலை வாய்ப்பளிக்கும் வேளாண் துறையின் வீழ்ச்சி. தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு அமைப்பின் அறிக்கையின்படி, சமீப ஆண்டுகளில் வேளாண் துறையில் மட்டும் 60 லட்சம் வேலைவாய்ப்புகள் குறைந்திருக்கின்றன. அடுத்த பெரிய கவலை, இப்போது அமைப்புசார் துறையைக் காட்டிலும் அமைப்புசாராத் துறையில் வேகமாக வேலைவாய்ப்பின்மை அதிகரித்துக்கொண்டுவருவது. ஒருபுறம் இருக்கும் வேலைகளே சரிய, இன்னொருபுறம் ஒவ்வோர் ஆண்டும் 1.3 கோடி இளைஞர்கள் புதிதாக வேலை தேடி நுழைகின்றனர்.
இப்படிப்பட்ட சூழலில், வளர்ச்சியை முழக்கமாகக் கொண்டு, தனது தேர்தல் அறிக்கையில் அடுத்த 10 ஆண்டுகளில் 25 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கத் திட்டமிட்டிருப்பதாகச் சொன்ன மோடிக்கும் பாஜகவுக்கும் இது நிச்சயம் பெரிய சவால்!
சேவைத் துறையிலிருந்து உற்பத்தித் துறைக்கு...
புதிய பொருளாதாரக் கொள்கையைத் தேர்ந்தெடுத்த 1991-க்குப் பின், இந்தியா வேலைவாய்ப்புகளுக்குப் பெரிதும் நம்பியிருந்தது சேவைத் துறையை. இப்போது புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க உற்பத்தித் துறையை நோக்கி நகர்கிறது மோடி அரசு. இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில், உற்பத்தித் துறையின் பங்களிப்பு 16%. மிகக் குறைவான பங்களிப்பு இது. பல வளரும் நாடுகளுடன் ஒப்பிட்டால் சரி பாதி அளவு.
சீனாவின் இன்றைய வளர்ச்சிக்கு முக்கியமான காரணம் உற்பத்தித் துறையில் அதன் வளர்ச்சி. தவிர, சீனாவில் 40 கோடிப் பேரை வறுமையிலிருந்து வெளியே கொண்டுவரவும் அது உதவியது. சமீபத்திய ஆண்டுகளில், உற்பத்திக்கான செலவுகள் சீனாவில் கூடிவிட்டதால், அங்கிருந்து அதைக் காட்டிலும் மலிவான வேறு நாடுகளை நோக்கிப் பன்னாட்டு நிறுவனங்கள் நகர்கின்றன. இத்தகைய சூழலில், இந்தியாவில் உற்பத்தித் துறையை முடுக்கிவிட்டால், பெரிய அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்பது மோடி அரசின் பார்வை. அதன்படி, பன்னாட்டு நிறுவனங்களை ஈர்க்கும் நடவடிக்கைகளில் முக்கியமான நகர்வாகவே நிலம் கையகப்படுத்தலை அது கையில் எடுத்துள்ளது.
கவனிக்காத முக்கியப் பாடம்
சீனத்தின் வளர்ச்சியைப் பார்த்து, உற்பத்தித் துறையை நோக்கி நகரும் மோடி அரசு, சீனத்திடமிருந்து கவனிக்காத முக்கியமான பாடம்... பன்னாட்டு நிறுவனங்கள் உச்சபட்ச லாபத்துக்காக இப்படி மலிவான சூழலை நோக்கி நகர்ந்துகொண்டே இருக்கக் கூடியவை என்பது. தவிர, இப்படி மலிவான சூழலை உருவாக்குவதன் மூலம் எப்படி வேலைகளை நாம் உருவாக்கப்போகிறோம் என்பது. தற்காலிகமான இந்த வேலைகளுக்காக எதையெல்லாம் இழக்கப்போகிறோம் என்பது.
அசாமிலிருந்தும் நாகாலாந்திலிருந்தும் சென்னையில் மெட்ரோ ரயில் வேலையிலும் இன்னபிற வேலைகளிலும் இருக்கும் பல்லாயிரக் கணக்கான இளைஞர்களை அன்றாடம் பார்க்கிறோம். அரசாங்கத்தின் புள்ளிவிவரங்கள்படி பார்த்தால், இவர்கள் எல்லாம் அரசாங்கத்தின் புதிய பொருளாதாரக் கொள்கைகளால் ‘வேலைவாய்ப்பு பெற்றவர்கள்’. அதாவது, நாளைக்கு மோடியின் ‘இந்தியாவில் உருவாக்குவோம்’ திட்டப்படி ‘வேலைவாய்ப்பு’ பெறப்போகும் 10 கோடிப் பேரைப் போல.
ஆனால், தன்னுடைய மண்ணையும் சொந்தங்களையும் பிரிந்து, பல நூறு கி.மீ. தொலைவு கடந்து சில ஆயிரங்களுக்காக வந்திருக்கும் இவர்கள், அரசாங் கத்தின் பொருளாதாரக் கொள்கைகளால் பெற்றிருக்கும் ‘வேலைவாய்ப்பு’ இவர்களுக்குத் தந்திருப்பது என்ன? எந்த உரிமைகளும் இல்லாமல், கொதிக்கும் சென்னை வெயிலில் கூவம் கரையில், அடுக்கி ஒடுக்கப்பட்ட தகரக் கொட்டகைகளில் ‘பிராய்லர் கோழிகள்’ போல் அடைக்கப் பட்டிருக்கும் இவர்களைத் தொழிலாளர்கள் என்று சொல்வதா, கொத்தடிமைகள் என்று சொல்வதா?
12 மணி நேர வேலைக்கு ரூ. 400 கூலி
வெளிமாநிலத் தொழிலாளர்கள் தொடர்பான சமீபத்திய உதாரணங்களில் ஒன்று இது. கேரளத்தில், கொச்சி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் வெவ்வேறு திட்டங்களில் இப்படி 12,000 தொழிலாளர்கள் வேலையில் இருக்கின்றனர். இவர்கள் தங்கவைக்கப்பட்டிருக்கும் முகாம்களுக்குச் சமீபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பி. ராஜீவும் அதிகாரிகளும் சென்றனர். “மனிதர்கள் வசிக்கவே தகுதியற்ற கொட்டடிகளில் அவர்கள் திணிக்கப்பட்டிருக்கின்றனர்.
ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை வாங்கப்படுகின்றனர். ஆனால், வாங்கும் கூலி வெறும் ரூ. 400 என்கின்றனர். எல்லாம் எல்&டி, ஃபேப்டெக், ஏ.பி.எம்., கே.எஸ்.எஸ். மற்றும் எஸ்ஸார் நிறுவனங்களுக்காக ஒப்பந்த முறையில் பணிபுரியும் ஆட்கள்” என்கிறார்கள் ராஜீவும் அதிகாரிகளும்.
இதே காலகட்டத்தில் இன்னொரு செய்தியும் வெளியாகி யிருக்கிறது. இந்தியாவில் தொழில் துறை வளர்ச்சியின் தாக்கத்தால், பெருங்கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் புணேவில் 317%, மும்பையில் 220%, ஹைதராபாத்தில் 219%, பெங்களூருவிலும் டெல்லியிலும் 214% பெருங்கோடீஸ்வரர்கள் அதிகரித் திருக்கின்றனர்.
அரசின் பார்வையில் எங்கே கோளாறு?
(நிலம் விரியும்...)
- சமஸ்,
தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
5 mins ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago