ஒரு பிடி மண் 4 - மாண்புமிகு இந்திய விவசாயி

By சமஸ்

நம்முடைய கிராமங்களில் சொல்வார்கள், “பீடம் பார்த்துச் சாமியாடணும்” என்று. “ரோமாபுரியில் இருக்கும்போது, ரோமானியனாக இரு” கதைதான். இந்தியாவுக்காக நீங்கள் சிந்திக்கும்போது, இந்தியராகச் சிந்திக்க வேண்டும். நம்முடைய அரசும் கொள்கை வகுப்பாளர்களும் இறக்குமதிச் சிந்தனையாளர்களாக மாறிவிடுவதுதான் நம் பிரச்சினைகளின் அடிநாதம்.

இந்தியாவின் ஏழைகளில் 70% பேர் இருப்பது கிராமங்களில். வேலைவாய்ப்பற்றோர் விகிதமும் கிராமப் புறங்களிலேயே இந்தியாவில் அதிகம். மோடி அரசு உட்பட இந்திய ஆட்சியாளர்கள் பலரும் வறுமை ஒழிப்புக்கு வழியாக நம்பியது / நம்புவது நகர்மயமாக்கலை, தொழில்

மயமாக்கலை. குறிப்பாக, மோடி அரசு கிராமப்புற இந்தியாவைத் தொழில்மயமாக்குவதே வறுமை ஒழிப்புக்கான அதிவேக வழி என்று ஆழமாக நம்புகிறது. இன்னும் சொல்லப்போனால், இந்தியக் கிராமப்புறங்களில் உள்ள விவசாயத் தொழிலாளர் கூட்டத்தைத் தொழிற்சாலைகளை நோக்கி அனுப்புவது இந்த அரசின் மறைமுக நோக்கங்களில் ஒன்று. இதற்கெல்லாம் ஆட்சியாளர்கள் சுட்டிக்காட்டும் முக்கியமான காரணம் விவசாயத்தின் வீழ்ச்சி.

வீழ்கிறதா விவசாயம்?

இந்தியாவில் விவசாயிகள் ஏழ்மை, வறுமை, கடன் காரணமாகத் தற்கொலை செய்துகொள்ளலாம், விளை நிலங்களின் பரப்பு குறைந்துகொண்டே போகலாம். ஆனால், அரசாங்கத்தின் எல்லாப் பொறுப்பற்றதனங்களையும் தாண்டி, உற்பத்தியில் நாட்டை முன்வரிசையிலேயே கொண்டு நிறுத்தி யிருக்கின்றனர் நம்முடைய விவசாயிகள்.

உலகில் உணவு தானிய உற்பத்தியில் முதல் வரிசையில் உள்ள நாடு இந்தியா. உலகில் பால், பருப்பு, வாசனாதிகள், காய்கறிகள் - பழங்கள் உற்பத்தியில் முதலிடத்தில் இருப்பவர்கள் நாம். கோதுமை, நெல், பருத்தி, கரும்பு, தேங்காய், தேயிலை, முட்டை உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் இருக்கிறோம். இதில் கவனிக்க வேண்டிய இரு முக்கியமான அம்சங்கள் உண்டு.

1. சீனாவின் நெல் உற்பத்திப் பரப்புடன் ஒப்பிட்டால் இந்தியாவின் நெல் உற்பத்திப் பரப்பு மூன்றில் ஒரு பகுதி. வியட்நாம் மற்றும் இந்தோனேசியா ஆகியவற்றின் நெல் உற்பத்திப் பரப்புடன் ஒப்பிட்டால், இந்தியாவின் நெல் உற்பத்திப் பரப்பு சரி பாதி அளவு. நம்முடைய சாகுபடிப் பரப்பு குறைவானது.

2. நாட்டின் ஒட்டுமொத்த சாகுபடிப் பரப்பில் 63% மானாவாரிப் பரப்பு. மழையை நம்பியே எல்லாம். வெறும் 37% பரப்பே பாசன வசதியைப் பெற்றது. இதை வைத்துக்கொண்டுதான் 2011-ல் உச்சபட்ச உற்பத்தியை நிகழ்த்தினார்கள். 20 லட்சம் டன் அரிசியையும் கோதுமையையும் ஏற்றுமதிசெய்ய வழிவகுத்தார்கள்.

பல கிராமங்களில் கால்நடைகளுக்கு இன்று மேய்ச் சலுக்குக்கூட இடம் கிடையாது என்பது நமக்குத் தெரியும். நம்முடைய கால்நடைகளுக்கு அரசு கொடுக்கும் கவனம் இவ்வளவுதான். ஆனால், சுதந்திரத்துக்குப் பிந்தைய 67 ஆண்டுகளில் கால்நடைகளின் எண்ணிக்கையை 62% உயர்த்தி யிருக்கிறார்கள் இந்திய விவசாயிகள். அப்போது 19.87 கோடியாக இருந்த கால்நடைகளின் எண்ணிக்கை, இப்போது 52.9 கோடி. பால் உற்பத்தியை மட்டும் கடந்த 20 ஆண்டுகளில் இரண்டு மடங்குக்கு மேல் உயர்த்தியிருக்கிறார்கள்.

1991-92-ல் இந்தியாவின் பால் உற்பத்தி 5.57 கோடி டன். 2012-13-ல் 14 கோடி டன். இப்படி இறைச்சி, முட்டை, தோல் என்று வரிசையாகப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். ஆக, எவ்வளவோ தடைகளுக்கு மத்தியிலும் இந்திய விவசாயிகள் சாதிக்கவே செய்திருக்கிறார்கள்.

அரசின் தட்டைப் பார்வையும் குறுகிய மதிப்பீடும்

சர்வதேசப் பொருளாதார நிபுணர்கள் இந்திய வேளாண் துறையை இன்னமும் தன்னுடைய முழு பலத்தை அறியாது தூங்கும் ராட்சதன் என்று குறிப்பிடுகிறார்கள். ஆனால், இந்திய அரசும் கொள்கையாளர்களும் தம்முடைய தவறுகளை மறைக்க வேறு ஒரு அளவுகோலை உருவாக்குகிறார்கள். வருவாய் அடிப்படையிலான அளவுகோல் அது.

1947-ல் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 51.9% ஆக இருந்த விவசாயத்தின் பங்களிப்பு 2012-13-ல் 13.7% ஆகக் குறைந்துவிட்டது. 2013-14-ல் உற்பத்தித் துறையின் வளர்ச்சி வீதம் 5.32% ஆகவும் சேவைத் துறையின் வளர்ச்சி வீதம் 7.64% ஆகவும் இருந்தது. விவசாயத் துறையின் வளர்ச்சி வீதமோ 3.66%. நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சியில் விவசாயத் துறையின் பங்கு குறைவதையே இவையெல்லாம் காட்டுகின்றன என்று ஆட்சியாளர்கள் சொல்கிறார்கள்.

விவசாயத் துறையைவிட ஏனைய துறைகளில் வளர்ச்சி வேகம் அதிகரிக்கும் போக்கு 1970-களில் தொடங்கியது. 1990-களின் மத்திய காலத்துக்குப் பிறகு, அதன் வேகம் அதிகரித்தது. இதற்கெல்லாம் சூத்ரதாரிகள் அரசும் ஆட்சியாளர் களும். ஆனால், பாவம் ஓரிடம், பழி ஓரிடம். இதைத் தாண்டியும், இந்தியாவில் விவசாயத்தின் உண்மையான மதிப்பை அறிய வருவாய் அடிப்படையிலான, ஏனைய துறைகளுடனான இந்த ஒப்பிட்டு அளவுகோல் சரியானது அல்ல. விவசாயத்தின் பங்களிப்பை வெறுமனே வருமானத்தின் பங்களிப்பை மட்டுமே கொண்டு பார்க்க முடியாது, பார்க்கக் கூடாது. அப்படி அணுகுவது மிக மோசமான புரிதல்.

அரை நூற்றாண்டுக்கு மேல் நகர்மயமாக்கலை நம்முடைய அரசு தீவிரமாக முன்னெடுத்தாலும், இன்னமும் இந்தியாவின் மக்கள்தொகையில் 69% பேர் கிராமங்களிலேயே இருக்கின்றனர். அதாவது, 83.3 கோடிப் பேர். அடிப்படையிலேயே இந்தியா என்பது கிராமங்களில்தான் இருக்கிறது. இது வெறும் மக்கள்தொகை அடிப்படையில் மட்டும் அல்ல. அதன் பண்பாட்டில், இயல்பில் எல்லாவற்றிலுமே கிராமத்தன்மையே ஆதிக்கம் செலுத்துகிறது.

இது எந்த அளவுக்கு உண்மையோ, அந்த அளவுக்கு உண்மை விவசாயம் என்பது ஒரு தொழில் மட்டும் அல்ல; அது ஒரு வாழ்க்கை முறை, கிராமப்புற இந்தியாவின் வாழ்வியல் என்பது.

விவசாயம் வெறுமனே வருமானம் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. உதாரணமாக, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 4% மட்டுமே கால்நடைகள் துறை பங்களிக்கிறது. ஆனால், இந்தியக் கிராமங்களில் கால்நடைகள் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 70%. பெரும்பாலானோருக்கு இது சுயதொழில். இன்னொரு முக்கியமான அம்சம், இப்படிக் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களில் மூன்றில் இரு பங்கினர் பெண்கள். அவர்களுடைய கையிலேயே இந்தப் பொருளாதாரம் வளர்த்தெடுக்கப்படுகிறது.

பாலினச் சமத்துவ மேம்பாட்டுக்கு வழிகோலுகிறது. தொலைநோக்கோடு ஒரு விஷயத்தை நாம் அணுகும்போது எதையுமே தட்டையாக ஒரே கோணத்தில் பார்த்துவிட முடியாது. துரதிர்ஷ்டவசமாக, நீண்ட காலமாக ஆட்சியாளர்கள், கொள்கை வகுப்பாளர்களால் இந்திய விவசாயம் அப்படித்தான் தட்டையான பார்வையிலேயே பார்க்கப்படுகிறது. வளர்ச்சி பற்றி வாய்கிழியப் பேசுபவர்களுக்கு ‘தூங்கும் ராட்சதன்’ ஏன் நினைவுக்கு வருவதே இல்லை?

(நிலம் விரியும்...)

- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்