பா.ஜ.கவிலிருந்து இதுவரை உமாபாரதி, வசுந்தரா ராஜே சிந்தியா, சுஷ்மா ஸ்வராஜ் ஆகிய பெண் தலைவர்கள் முதல்வர் பதவி வகித்துள்ளனர். தற்போது அந்தப் பட்டியலில் சேர்ந்திருப்பவர்தான் ஆனந்திபென் பட்டேல். இதுவரை ஆண்கள் மட்டுமே ஆட்சி செய்த குஜராத்தில் முதன்முதலாக முதல்வர் பதவிக்கு உயர்ந்த ஆனந்திபென்னின் வாழ்க்கை துணிச்சலுக்கும் உழைப்புக்கும் உதாரணம்.
குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள கரோட் கிராமத்தில் பிறந்த ஆனந்திபென், சிறுவயதி லிருந்தே துணிச்சல் மிக்கவர். கடும் உழைப்பாளி. “அதிகாலை 4 மணிக்கே எழுந்து தன் தாய்க்கு உதவியாக வீட்டுவேலை, வயல் வேலைகளில் ஈடுபடுவார்” என அவரது கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் நினைவு கூர்கிறார்.
சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்கு நடந்தே செல்வாராம். பெண் குழந்தைகளைப் படிக்க வைக்க பெற்றோர் தயங்கிய காலகட்டத்தில் பெண்களே இல்லாத பள்ளியில் பயின்றவர். 5-ம் வகுப்பில் அவர் சேர்ந்த பள்ளியில் மொத்தம் 700 பையன்கள். அவர் ஒருவர் தான் பெண். துணிச்சலுடன் விளையாட்டுப் போட்டிகளிலும் சிறந்து விளங்கினார் ஆனந்திபென். அதற்காக “வீரச்சிறுவர்” விருதும் வென்றவர்.
1970-ல் மோனிபாபா வித்யாலயா பள்ளியில் ஆசிரியையாகப் பணிக்குச் சேர்ந்த அவர், பின்னர் தலைமை ஆசிரியராக உயர்ந்தார். உழைப்பும் துடிப்பும் மிக்க இவர் தானாக அரசியலுக்குச் செல்லவில்லை. அரசியல் அவரைத் தேடிவந்தது.
1987-ல் இவரது மாணவிகளில் இருவர் நர்மதா ஆற்றுக்குள் தவறி விழுந்தனர். அப்போது தன் உயிரைப் பொருட்படுத்தாமல் ஆற்றில் குதித்து அவர்களைக் காப்பாற்றினார். இதற்காக, குடியரசுத் தலைவரின் கையால் வீரதீர விருது அவருக்குக் கிடைத்தது. கூடவே, அரசியல் தலைவர்களின் கவனமும் அவர் பக்கம் திரும்பியது. கட்சியில் சேருமாறு பா.ஜ.க-வின் முக்கியத் தலைவர்கள் வற்புறுத்தியபோது அவர் மறுத்துவிட்டார். பின்னர், வறட்சி நிவாரணப் பணிகளில் ஈடுபட்டபோது, அரசியலின் முக்கியத்துவதை உணர்ந்த ஆனந்திபென், பா.ஜ.க. மகளிரணித் தலைவியாகப் பொறுப்பேற்றார். தன் கடின உழைப்பால் கட்சியின் பெரிய தலைவர்களின் கவனமும் அவர் பக்கம் திரும்பியது.
1994-ல் மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்ற ஆனந்திபென், 1998-ல் அப்பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அஹமதாபாத் மாவட்டத்தின் மண்டல் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டு வென்றார். கேஷுபாய் பட்டேல் அமைச்ச்ரவையில் கல்வி அமைச்சராகப் பதவியில் அமர்ந்த அவர், கல்வித் துறை தொடர்பான பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்க்க ‘லோக்தர்பார்’ என்ற அமைப்பை உருவாக்கி சிறப்பாக செயல்பட்டார். 40,000 ஆசிரியர் பணியிடங்களை நிரப்பியதும் 80,000 பள்ளிகளைத் தொடங்கியதும் அவரது சாதனைகளில் குறிப்பிடத்தக்கவை. தனது கறாரான அணுகுமுறையால் கல்வித் துறையில் ஊழல் கறை படியாமலும் பார்த்துக்கொண்டார்.
குஜராத்தின் வளர்ச்சிக்கு உழைத்தவர் என்ற பெயரை அடைந்துவிட்ட மோடியைப் போலவே, ஆனந்தியும் நிர்வாகத் திறன் மிக்கவர் என்றும் கண்டிப்பானவர் என்றும் கட்சியின் பிற தலைவர்களால் பார்க்கப்படுகிறார்.
“முதல்வர் அலுவலகத்தில் எந்தக் கோப்பும் நிலுவையில் இல்லை” என்று ஆனந்திபென்னிடம் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கும் மோடி, அதன்மூலம் தனக்குப் பிறகு குஜராத்தின் தலைமை அதே பலத்துடன் இருக்க வேண்டும் என்று அன்புடன் அறிவுறுத்தியிருக்கிறார். அதேசமயம், “கடின உழைப்பு கொண்ட ஆனந்திபென்னின் தலைமையில் குஜராத் தன் வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து பயணிக்கும்” என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார். பிரதமரின் வார்த்தைகளை முதல்வர் நிஜமாக்குவார் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறது குஜராத்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago