ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவே தன் வாழ்நாள் முழுவதையும் செலவழித்த அம்பேத்கர், அரசியல் நிர்ணய சபைக்கு எதிராகவே முதலில் இருந்தார். கிரிப்ஸ் தலைமையில் 1942-ல் வந்த குழுவிடம் “எங்கள் கைகள், கால்களைக் கட்டி சாதி இந்துக்களிடம் ஒப்படைத்துவிட்டீர்கள்” என்று முறையிட்ட அவர், இந்திய விடுதலை உறுதியானதும் தனது நாட்டுக்கும் தனது மக்களுக்கும் மிகச் சிறந்த அரசியல் அமைப்புச் சட்டம் தேவை என்பதை உடனடியாக உணர்ந்தார்.
எதிர்த்தரப்பில் இருப்பதாலேயே எல்லாவற்றையும் எதிர்க்கக் கூடாது என்ற கொள்கையில் திடமாக இருந்த அவர், நமது அரசியல் அமைப்புச் சட்ட வரைவுக் குழுவின் தலைவராக இருந்தார் என்பது நாம் எல்லோரும் நன்கு அறிந்ததே. வரைவுக் குழுவில் பல புகழ் பெற்ற சட்ட வல்லுநர்கள் இருந்தாலும் அவர்கள் அனைவரும் அம்பேத்கரின் மீது பெருமதிப்பு வைத்திருந்தார்கள்.
நிறைவேறாத கனவு
அவர் நினைத்ததெல்லாம் நடைபெறவில்லை என்பது உண்மை. ஆனால், அம்பேத்கர் தனது மக்களுக்காக மட்டுமின்றி, எல்லாத் தரப்பு மக்களுக்காகவும் சிந்தித்தார். அவர் அரசியல் நிர்ணய சபைக்கு விரிவான அடிப்படை உரிமைகள் அடங்கிய பட்டியல் ஒன்றை அளித்தார். அந்தப் பட்டியலுடன் ஒரு சமுதாயத் திட்டமும் இருந்தது. அந்தத் திட்டம் எல்லா முக்கியமான தொழில்களும் அரசுடைமையாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியதோடு, நாட்டின் நிலங்கள் அனைத்தையும் அரசு எடுத்துக்கொண்டு, விவசாயத்தையும் அரசுத் தொழிலாக மாற்ற வேண்டும் என்றது.
எல்லா இந்தியர்களுக்கும் கட்டாயக் காப்புரிமை இருக்க வேண்டும் என்பதையும் அது சொன்னது. பல தடவைகள் அவரது திட்டத்தின் மீது விவாதங்கள் நடந்தன. ஆனால், அது நிறைவேறாத கனவாகவே முடிந்தது. இது போன்று பல தடைகளை அவர் சந்தித்தாலும், அரசியல் சட்டத்தின் பல முக்கியமான பிரிவுகள் அவரது திறமையான வாதங்களினாலேயே சட்டங்களாக மாறின.
அடிப்படை உரிமைகள்
நமக்குப் பல அடிப்படை உரிமைகள் இருக்கலாம். அவற்றை எவ்வாறு பாதுகாப்பது? அரசுக்கோ அரசு சார்ந்த நிறுவனங்களுக்கோ அவை செய்ய வேண்டிய காரியங்களை எழுத்து மூலம் செய்யச் சொல்லி உத்தரவு பிறப்பிக்கும் உரிமை நீதிமன்றங்களுக்கு இருக்கிறது. நமக்கு நன்றாகத் தெரிந்த ரிட் மனுக்களின் மீது நீதிமன்றங்கள் நாள்தோறும் ஆணை பிறப்பிக்கும் உரிமையை நமது அரசியல் அமைப்புச் சட்டத்துக்குள் கொண்டுவர வேண்டும் என்று வாதிட்டவர்களில் முதன்மையானவர் அம்பேத்கர்.
நீதிமன்றங்களுக்குத் தரப்பட்ட இந்த உரிமையே, இந்தியர்கள் இன்று சுதந்திரமாக இயங்கிக்கொண்டிருப்பதற்கு அடிப்படைக் காரணம் என்று பல அரசியல் சட்ட வல்லுநர்கள் கருதுகிறார்கள்.
ஆனால், அம்பேத்கர் அடிப்படை உரிமைகளுக்கு வரையறை இருக்கக் கூடாது என்று கருதவில்லை. அரசு நெருக்கடிக் காலங்களில் இந்த உரிமைகளைத் தற்காலிகமாகத் திரும்பப் பெறலாம் என்ற சட்டத்தையும் அவர்தான் முன்னின்று கொண்டுவந்தார். இதே போன்று நாட்டு நலனுக்காக மக்களைக் கட்டாயப் பணி செய்யுமாறு (ராணுவப் பயிற்சி உள்ளிட்ட) ஆணை பிறப்பிக்கும் உரிமையை அரசுக்கு அளிக்கவும் அவர் முன்வந்தார். மக்களுக்கு ஆயுதம் வைத்துக்கொள்ளும் உரிமையை அளிக்க வேண்டுமா என்பதுபற்றி பலத்த விவாதங்கள் நடந்தன. சிலர் இதுபற்றி முடிவு செய்யும் உரிமையை மாநிலங்களுக்கு விட்டுவிட வேண்டும் என்றனர்.
அம்பேத்கர் சொன்னார், “ஒரு மாநிலம் மறு மாநிலத்துக்கு எதிராக மக்களை ஆயுதம் திரட்டச் செய்தால் என்ன செய்வது? நாடு முழுவதும் இதுபற்றி ஒரே சட்டம் இருக்க வேண்டும்.” அமெரிக்காவில் சில மாநிலங்களில் இருப்பதைப் போன்று இந்தியாவிலும் ஆயுதம் வைத்துக்கொள்ளும் சட்டம் இருந்திருந்தால், வன்முறை எந்த அளவுக்கு வளர்ந்திருக்கும் என்பதை விளக்க வேண்டியதில்லை.
இந்திய ஒருமைப்பாடு
இந்தியா ஒரு வலுவான நாடாக உருப்பெற வேண்டுமானால், அதிலிருந்து பிரிந்து போகும் உரிமையை மாநிலங்களுக்கு அளிக்கக் கூடாது என்பதில் அம்பேத்கர் உறுதியாக இருந்தார். “ இந்தக் கூட்டமைப்பு (ஃபெடரேஷன்), மாநிலங்களெல்லாம் சேர்ந்து கூட்டமைப்பு அமைக்க வேண்டும் என்று ஒப்புதல் அளித்ததால் ஏற்பட்டதல்ல. எனவே, மாநிலங் களுக்குப் பிரிந்து போகும் உரிமை கிடையாது” என்று தனது உரையில் அவர் தெளிவாகக் குறிப்பிட்டார்.
ஒருமைப்பாட்டின் மீது அவருக்கு இருந்த அசைக்க முடியாத நம்பிக்கையை, மற்றொரு சமயத்தில் ‘தேவைப்பட்டால், இந்தியா ஒற்றையாட்சி அரசாகக்கூட (யூனிட்டரி ஸ்டேட்) மாறலாம்” என்று அவர் குறிப்பிட்ட திலிருந்து அறியலாம்.
மற்றொரு தருணத்தில் முஸ்லிம் உறுப்பினர் ஒருவர், விகிதாச்சார முறைப்படி பிரதிநிதித்துவம் வேண்டும், இல்லையென்றால் நடைபெறப்போவது பெரும் பான்மையினரின் அடக்குமுறை என்று வாதிட்டபோது, அம்பேத்கர் அது அரசைப் பலவீனப்படுத்திவிடும் என்றார். “இந்தியாவுக்குத் தேவை சட்டம் - ஒழுங்கை அமல்படுத்தும் ஒரு நிலையான அரசு” என்று அவர் சொன்னபோது, உறுப்பினர்கள் பலத்த ஆரவாரத்தோடு உடன்பட்டனர். ஆனால், சிறுபான்மையினரின் உரிமையைக் காப்பதில் அவர் உறுதியாக இருந்தார்.
சிறுபான்மையினரின் உரிமையைப் பறிப்பது என்பது ஜனநாயகத்திலிருந்து சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்லும் அழிவுப்பாதை என்று கருதிய அவர், அரசியல் சட்டத்தில் சிறுபான்மையினரின் உரிமைகளைச் சொல்லும் உறுப்புகளுக்கு (ஆர்ட்டிக்கில்ஸ்) முழு ஆதரவு அளித்தார்.
வலுவான மத்திய ஆட்சியை நம்பியதால், அவர் மாநிலங்களின் அதிகாரங்களைக் குறைக்க நினைத்தார் என்று பொருள் கொள்ளக் கூடாது. அதனுடைய எல்லைக்குள் சட்டம் - ஒழுங்கைப் பராமரிக்கவும் நல்லாட்சி அளிக்கவும் மாநிலத்துக்கு இறையாண்மை இருக்கிறது என்று அவர் சொன்னார். மத்திய அரசு, மாநில அரசு விவகாரங்களில் தலையிடுவது ‘மோசமான ஆக்கிரமிப்பு’ என்று குறிப்பிடவும் அவர் தயங்கவில்லை.
ஆட்சிமொழி
அரசியல் சட்ட நிர்ணய சபையில் இந்தி வெறியர்கள் பலர் இருந்தார்கள். இந்தியை உடனே தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் என்றும், அதுவே அரசு மொழியாக இயங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள். அதை எதிர்த்தவர்களும் பலர் இருந்ததால் விவாதங்கள் மிகவும் சூடாக இருந்தன. சூட்டைத் தணித்தவர்களில் முக்கியமானவர் அம்பேத்கர். ஆட்சிமொழி இந்தியாக இருக்கும். ஆனால், முதல் 15 வருடங்கள் ஆங்கிலமும் தொடர்ந்து இயங்கும். நாடாளுமன்றம் விரும்பினால், ஆங்கிலம் மேலும் இயங்கலாம் என்ற அரசியல் சட்டம் அவரது வழிகாட்டலில் உருவானது.
குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்
நாடாளுமன்றம் துவங்குவதற்கு முன்னால் குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்த வேண்டும் என்று பரிந்துரை செய்ததே அம்பேத்கர்தான். அதுவே, பின்னால் அரசியல் சட்டமாக மலர்ந்தது. ஆனால், அவர் குடியரசுத் தலைவருக்கு அளவற்ற அதிகாரங்களைத் தர விரும்பவில்லை. பிரதமர் மற்றும் அமைச்சர்களின் அறிவுரைகளை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொள்ள மறுத்தால், அவரைப் பதவியிலிருந்து நீக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு இருக்கிறது என்பதில் ஐயம் இல்லை என்று அவர் சொல்லியிருக்கிறார். எனவே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்தான் இந்த நாட்டை உண்மையாக ஆள்பவர்கள் என்ற கொள்கையில் உறுதியாக இருந்தவர் அவர்.
மாற்ற முடியாத அரசியல் சட்டமா?
இந்திய அரசியல் சட்டம் மிகவும் இறுக்கமானது, விரிவாக எழுதப்பட்டதால் மாற்றங்கள் செய்யக் கூடிய சாத்தியங்களை வெகுவாகக் குறைத்துவிடுகிறது என்ற குற்றச்சாட்டை ஜென்னிங்க்ஸ் போன்ற அரசியல் சட்ட வல்லுநர்கள் முன்வைத்திருக்கிறார்கள். ஆனால், “விரிவாக எழுதப்படாவிட்டால் அதை மிக எளிதாக அரசினால் உள்ளறுப்புச் செய்ய முடியும்” என்று அம்பேத்கர் சொன்னார். அரசியல் சட்டத்தைத் திருத்துவதையும் எளிதாக்க அவர் விரும்பவில்லை.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வரப்போகும் நாடாளுமன்றத்துக்கு அந்த உரிமையை அளிக்க வேண்டும் என்று நேரு விரும்பினார் என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். ஆனால், அம்பேத்கர் சொன்னார் “அரசியல் அமைப்புச் சட்டம் ஓர் அடிப்படை ஆவணம். அதை நாடாளுமன்றம் பெரும்பான்மை பலத்தை மட்டும் வைத்துக்கொண்டு திருத்த முடிந்தால் ஏற்படப்போவது பெரும் குழப்பம்.” இவ்வளவு தெளிவாக எழுதப்பட்ட பிறகும் இதுவரை நடைபெற்றிருக்கும் உள்ளறுப்பு வேலைகளை நாம் கவனித்தால் அம்பேத்கரின் தொலைநோக்குப் பார்வையின் மகத்துவம் நமக்கு விளங்கும்.
அம்பேத்கர் தலித் மக்களுக்கு மட்டுமின்றி, இந்திய மக்கள் அனைவருக்கும் ஒரு வழிகாட்டி என்பது எல்லா மக்களுக்கும், குறிப்பாக இளைஞர்களுக்குத் தெரிய வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் பாரதியின் வாக்கில் சொல்வதானால் அம்பேத்கரின் “எண்ணம் எலாம் நெய்யாக எம் உயிரின் உள் வளர்ந்த வண்ண விளக்கு.” அது ஒளி விட்டு எரியும் வரை அவர் புகழும் குன்றாது.
- பி.ஏ. கிருஷ்ணன்,
‘புலிநகக்கொன்றை’, ‘கலங்கிய நதி’ ஆகிய நாவல்களின் ஆசிரியர்,
தொடர்புக்கு: tigerclaw@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago