முதலில் சுஹாசினியின் விமர்சனத்தில் தரம் வேண்டும்!

By அரவிந்தன்

எந்த விமர்சனத்தை அனுமதிப்பது, எதைத் தடுப்பது என யார் தீர்மானிப்பது?

நடிகை சுஹாசினி, தான் பேசுவது என்னவென்று புரிந்துதான் பேசுகிறாரா என்றே சந்தேகமாக இருக்கிறது. “எப்படி தகுதியுள்ளவர்கள்தான் படத்தில் நடிக்க முடியுமோ, ஒளிப்பதிவு பண்ண முடியுமோ, ரஹ்மான் மாதிரி மியூசிக் தெரிஞ்சவங்கதான் மியூசிக் பண்ண முடியுமோ அதேமாதிரி எழுதத் தெரிஞ்சவங்கதான் விமரிசனம் எழுதணும். இந்தப் படத்தைப் பத்தி எல்லாம் எழுதணும். நீங்க எல்லாம் இருக்கும்போது எல்லோரையும் எழுத விட்டுடாதீங்க. முதல்ல நீங்க வந்து இந்தப் படத்தைப் பார்த்துட்டு, இந்தப் படத்தைப் பத்தின விஷயங்களை எழுதுங்க. இப்போ கம்ப்யூட்டர் உலகத்துல, மவுஸ் மூவ் பண்ணத் தெரிஞ்சவங்க எல்லாம் எழுத்தாளராயிட்டாங்க. அப்படி விட வேண்டாம்” - மணிரத்னத்தின் ‘ஓ காதல் கண்மணி’ இசை விழாவில் பத்திரிகையாளர்களுக்கு சுஹாசினி கொடுத்திருக்கும் அறிவுரை இது.

அபத்தமான வகைப்பாடு

ஒரு துறையில் பல காலம் இருந்து, சில வெற்றி களை அல்லது விருதுகளைப் பெற்றவர்கள்தான் திறமை சாலிகள் என்றால், புதிதாக யாரும் எதிலும் நுழையவே முடியாது. ஆகவே ஒரு சிலரைப் பார்த்து, “நீங்கள் திறமை உள்ளவர்கள், நீங்கள் எழுதுங்கள்” என்று சொல்வது அசட்டுத்தனம்.

தகுதியுள்ளவர்கள், விஷயம் தெரிந்தவர்கள் என்று சிலரை சுஹாசினி தரம் பிரிக்கிறார். உதாரணத்துக்கு ஏ.ஆர். ரஹ்மானைச் சொல்கிறார். ரஹ்மான் என்றில்லை, இளையராஜா, மணிரத்னம், கமல்ஹாஸன், சிவாஜி கணேசன் என எல்லாத் திறமையாளர்களுமே தங்கள் திறமையை முதல் முயற்சியிலோ அல்லது அடுத்தடுத்த முயற்சிகளிலோ வெளிப்படுத்தியவர்கள்தான். அவர்கள் திறமை மீது அவர்களுக்கும் வேறு சிலருக்கும் இருந்த மதிப்புதான் அவர்களுக்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தது. அந்த வாய்ப்புதான் அவர்கள் திறமையை வெளிச்சம் போட்டுக் காட்டியது. அதன் பிறகுதான் அவர்கள் ‘தகுதியுள்ளவர்கள்’ஆக அடை யாளம் காணப்பட்டார்கள். பத்திரிகையில் எழுதுபவர் களும் அப்படித்தான். திறமையை நிரூபித்துவிட்டுத் தான் உள்ளே நுழைய வேண்டும் என்றால், அனேக மாக யாருமே உள்ளே நுழைய முடியாது. எனவே, தகுதியுள்ளவர்கள் என்னும் வகைப்பாடே அபத்தமானது.

அனுபவம் இல்லாதவர்களிடம் பிரமிப்பு

வரலாற்றில் முதல்முறையாக, எந்த அமைப்பின் பின்புலமும் இல்லாதவர்களும் தங்கள் கருத்தைப் பொது வெளியில் முன்வைக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள். “யார் வேண்டுமானாலும்” எழுதக்கூடிய, “மவுசைப் பிடித்தவர்கள்” எல்லாம் எழுதக்கூடிய இந்தக் களத்தில்தான் இன்று தேர்தல் பிரச்சாரங்கள் நடக்கின்றன. சமூகப் புரட்சிகளுக்கான வித்துகள் விழுகின்றன. புத்திசாலி என்று எங்கும் சான்றிதழ் வாங்கிவர வேண்டிய அவசியம் இல்லாமலேயே பலரும் தங்கள் புத்திசாலித்தனத்தைக் காட்டிக்கொள்ளக்கூடிய களமாக இது உருப்பெற்றிருக்கிறது. அனுபவமும் அமைப்பு பலமும் இருப்பவர்களைவிடவும் சிறப்பாகவும் கூர்மையாகவும் இவர்களில் சிலர் செயல்படுகிறார்கள். வலைதளங்களின் தெறிப்புகளில் சிலவற்றை அச்சு ஊடகங்கள் தேர்ந்தெடுத்துப் பிரசுரிக்கின்றன. அவற்றைப் பார்க்கும்போது, எந்த அனுபவமும் சான்றிதழும் இல்லாதவர்கள் இவ்வளவு சுருக்கமாக, இவ்வளவு அபாரமாக எழுதுகிறார்களே என்னும் பிரமிப்பு ஏற்படுகிறது.

ஒரு படைப்பு பொதுவெளிக்கு வந்துவிட்டதென்றால், எல்லா விதமான விமர்சனங்களையும் அது எதிர் கொள்ளத் தயாராகத்தான் இருக்க வேண்டும். எல்லாத் துறைகளிலும் எல்லா மேதைகளுக்கும் எல்லாக் காலத்துக்கும் இது பொருந்தும். கடவுள்களும் அவதார புருஷர்களும் மகான்களும் சாதனையாளர்களும் மகா கலைஞர்களுமேகூட இதற்கு விதிவிலக்கல்ல.

ஜனநாயகத்துக்கு எதிரான அதிகாரக் குரல்

அது சரி, அவர்களை எழுதவிடாதீர்கள் என்று அம்மையார் கேட்டுக்கொள்கிறாரே, அதற்கு என்ன அர்த்தம்? எழுத விடாதீர்கள் என்னும் வேண்டு கோளுக்குப் பின் இருப்பது கடைந்தெடுத்த அதிகார உணர்வு. மேட்டிமைத்தனமான இந்த அதிகாரக் குரல் ஜனநாயகத்துக்கு எதிரானது. கடும் கண்டனத்துக்கு உரியது. இன்று அவர்களை எழுத விடாதீர்கள் என்று சொல்லும் இந்தக் குரல், நாளை வேறொரு பிரிவினரை எழுதத் தெரியாதவர்கள் என வரையறுத்து அவர்களையும் எழுத விடாதீர்கள் என்று சொல்லும். படிப்பறிவில்லாதவர்களுக்கெல்லாம் வாக்குரிமை கொடுக்கக் கூடாது என்று சில ‘மேதாவிகள்’ அவ்வப் போது சொல்வார்களே அதைப் போலத்தான் இது.

மாற்றுப் பார்வைகளும் கோணங்களும்

எதிர்மறை விமர்சனங்களால் மட்டுமே தோல்வி அடைந்த படங்கள் மிகமிகக் குறைவு. ஒரு படம் கருத்து, கலைத் தன்மை, படமாக்கப்பட்ட விதம், நடிப்பு, ஒளிப்பதிவு, இசை முதலானவவற்றின் அடிப்படையில் கடுமையாக விமர்சிக்கப்பட்டாலும் வெகுஜன மக்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் அதில் வலுவாக இருந்தால், அந்தப் படம் ஓடிவிடும். விமர்சகர்களிடம் திட்டு வாங்கிய எத்தனையோ படங்கள் வெள்ளி விழா கண்டிருக்கின்றன. மோசமான படம் என்று பரவலாகப் பெயர் வாங்கிய படங்களும் பார்வை யாளர்களை இருக்கையில் உட்காரவைக்கும் ஒரே தகுதியால் வெற்றிபெற்றிருக்கின்றன. விமர்சகர்கள் ஒட்டுமொத்தமாகப் பாராட்டிய படங்கள் கடுமையாக அடிவாங்கியிருக்கின்றன. அச்சு ஊடகங்களில் எதிர்மறை விமர்சனங்களைப் பெற்ற பல படங்கள், சமூக வலைதளங்களில் சாதகமான விமர்சனங்களைப் பெற்றிருக்கின்றன. பெரிய ஊடகங்களில் வெளிப்படாத மாற்றுப் பார்வைகளும் கோணங்களும் சமூக ஊடகங்களில் வெளிப்படுகின்றன. கோடிக் கணக்கில் செலவுசெய்து விளம்பரப்படுத்தப்படும் ஒரு படம், ஒரு சில குறுஞ்செய்திகளாலும் ட்விட்டர், ஃபேஸ்புக் குறிப்புகளாலும் தோல்வியடையும் என்றால், அது படத்தின் உள்ளார்ந்த பலவீனத்தையே காட்டும்.

மணிரத்னத்தின் பார்வை

நல்லவேளையாக மணிரத்னம் இதைப் புரிந்து கொண்டிருக்கிறார். “வலைதளங்களில் வரும் விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அதுதான் இன்றைய சமூகம். முன்பு இந்த விமர்சனங்கள் டீக்கடையில் இருந்துவந்தன. இப்போது அதையே ட்விட்டர் தளத்தில் பேசிக்கொண்டிருக்கிறார்கள். முன்பு கருத்துச் சொல்வதற்கு எந்த வழிமுறையும் கிடையாது. இப்போது அதற்கு ஒரு தளம் கிடைத்திருக்கிறது” என்று கூறியிருக்கிறார். ‘தகுதியுள்ளவர்கள்’ பற்றிப் பேசும் சுஹாசினி, தன் கணவரிடம் முதலில் அதை விவாதிப்பதே நல்லது.

சுஹாசினியின் பொறுப்பற்ற பேச்சு

இன்று திரைப்படத் துறையைப் பீடித்துவரும் பிரச்சினைகள் மிகத் தீவிரமானவை. கேட்டால் ரத்தக் கண்ணீர் வரும் அளவுக்குப் பிரச்சினைகள் முற்றியிருக்கின்றன. படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கவே ரூ. 75 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய்வரை செலவுசெய்ய வேண்டியிருக்கிறது. பலராலும் பாராட்டு பெற்ற படங்கள்கூட வந்த சுவடு தெரியாமல் மூன்றாவது நாளே திரையரங்கிலிருந்து தூக்கப்படுகின்றன. தொலைக்காட்சி, வானொலி, இணையம் முதலான பல இடங்களிலும் சினிமா முக்கிய இடம் வகிக்கிறது. ஆனால், திரையரங்கில் திரைப்படங்களை ஆதரிக்க ஆளில்லை.

பல்வேறு காரணங்களும் பின்னணிகளும் கொண்ட இந்தப் பிரச்சினையை ஆழமாக அலசி, விவாதித்துத் தீர்வுகாண வேண்டிய நிலையில் இதுபோன்ற பொறுப்பற்ற பேச்சுகள் மூலம் விவகாரத்தைத் திசைதிருப்புவது சூழலை மேலும் பலவீனமாக்கவே உதவும். அதிலும் “அவர்களை அனுமதிக்காதீர்கள்” என்பதுபோன்ற பேச்சு, சூழலை மேலும் மாசுபடுத்தவே செய்யும். விவரம் கெட்ட விமர்சனங்களைப் பார்த்து மனம் வருந்துபவர்கள் அதை விமர்சிப்பதில் தவறில்லை. அந்த விமர்சனமாவது கொஞ்சம் விவரத்துடன் அமைய வேண்டும் என்று எதிர்பார்ப்பதிலும் தவறில்லை!

- அரவிந்தன்,

தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்