அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவராகவும், மக்களவையின் காங்கிரஸ் உறுப்பினராக இரண்டு முறையும் இருந்த எஸ்.கே. கார்வேந்தன் தற்போது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் உறுப்பினராக இருக்கிறார். ‘தி இந்து’ நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியிலிருந்து…
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் எப்போது, என்ன நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டது?
இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1950-ல் ஆண்டு அமல்படுத்தப்பட்டபோது தாழ்த்தப்பட்டவர் மற்றும் மலைவாழ் மக்கள் பட்டியல் அரசிடம் இருந்தது. ஆனால், யாரெல்லாம் பிற்படுத்தப்பட்டவர்கள் என்ற பட்டியல் அரசிடம் இல்லை. அதற்காக, அம்பேத்கர் ஆலோசனையின்படி பிற்படுத்தப்பட்ட மக்களின் நிலையை அடையாளம் காண ஒரு ஆணையம் உருவாக்கப்பட வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 340-ல் தெளிவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில் முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் 1978-ல் பி.பீ. மண்டல் தலைமையில் ஒரு ஆணையம் அமைத்தார். அந்த ஆணையம் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று ஆய்வு நடத்திப் பல தரப்பினரையும், மாநில அரசுகளையும் விசாரித்து டிசம்பர் 31,1980-ல் தனது அறிக்கையைத் தாக்கல் செய்தது.
பல ஆண்டுகளாக அமல்படுத்தப்படாமல் இருந்த அந்த அறிக்கையை, நாடு முழுவதும் நடந்த மாபெரும் போராட்டங்களுக்குப் பின், 1989-ல் அப்போதைய பிரதமர் வி.பி. சிங் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து வி.பி. சிங் 1990-ல் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு அரசுப் பணியில் 27% இடஒதுக்கீட்டுக்கு ஆணை பிறப்பித்தார். அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் இந்திரா சஹானி தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இதர பிற்படுத்தப்பட்டோருக்காக தேசிய அளவில் ஒரு ஆணையம், அனைத்து மாநிலங்களிலும் மாநில அளவில் ஆணையங்களும் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியது. இதற்குப் பிறகு உருவாக்கப்பட்டதுதான் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்.
உங்கள் ஆணையத்தின் முக்கியப் பணிகள் என்ன?
சமூகரீதியாக, கல்விரீதியாகப் பின்தங்கிய சமுதாயத் தினரை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பதும், தவறாகச் சேர்க்கப்பட்டுவிட்டதாகப் புகார்கள் வந்தால் அந்தச் சாதியினரைப் பட்டியலிலிருந்து நீக்குவதும்தான் எங்கள் பணிகள்.
நாடு முழுவதும் மாநிலவாரியாக எத்தனை சாதியினர் தேசிய அளவில் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப் பட்டுள்ளனர்?
மண்டல் கமிஷன் நாடு முழுவதும் 3,743 சாதியினரைப் பிற்படுத்தப்பட்டோராக அடையாளம் காண்பித்தது. எங்கள் ஆணையம் முறையான விசாரணைக்குப் பின்னர் இதுவரை மொத்தம் 2,418 சாதியினரைப் பட்டியலில் சேர்த்துள்ளது. இவற்றில் 47 சாதியினரை நீக்குவது குறித்தும், மேலும் 298 சாதியினரைச் சேர்ப்பது குறித்தும் பரிசீலித்துக் கொண்டிருக்கிறோம்.
ஒரு சாதியினரை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கவும் நீக்கவும் உங்கள் ஆணையம் பின்பற்றும் வழிமுறைகள் என்ன?
சாதிய அமைப்பினரிடம் அல்லது மாநில அரசிடம் இருந்தோ கோரிக்கை வருமானால் அதைப் பதிவு செய்து மாநில அரசிடமும், மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடமும் அந்த சாதியைப் பற்றி அறிக்கை கேட்கிறோம். அறிக்கை பெற்ற பின்னர் அந்த மாநிலத்துக்கே சென்று கோரிக்கையாளரையும், சம்பந்தப்பட்ட மாநில அரசையும் விசாரித்து, குறிப்பிட்ட சாதியினர் சமூகரீதியாக, கல்விரீதியாகப் பின்தங்கியவர்களாக இருந்தால் அவர்களைப் பட்டியலில் சேர்க்க மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கிறோம். எங்கள் பரிந்துரையை ஏற்று மத்திய அரசு, அரசாணை வெளியிடும். பட்டியலிலிருந்து ஒரு சாதியை நீக்குவதற்கும் இதே முறைதான் பின்பற்றப்படுகிறது.
உங்களுடைய பரிந்துரை இறுதியானதா? அதை அரசு நிராகரிக்கலாமா?
எங்களுடைய பரிந்துரை அரசைக் கட்டுப்படுத்தும் என தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையச் சட்டத்தில் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. அரசு எங்கள் பரிந்துரையை நிராகரிக்க வேண்டுமென்றால் அதற்கு தகுந்த காரணங் களைத் தெளிவுபடுத்த வேண்டும். எங்கள் பரிந்துரையையும் மீறிக் கடந்த ஆட்சியில் ஜாட்டுகளுக்கு ஒதுக்கீடு அளிக்கப் பட்டதுதான் இந்த ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ய முக்கியக் காரணமாக அமைந்தது.
இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இடஒதுக்கீடு மத்திய அரசின் பணிகளில் கடைப்பிடிக்கப்படுகிறதா?
இதர பிற்படுத்தப்பட்டோருக்கான மத்திய அரசுப் பணிகளில் 27% இடஒதுக்கீடு 1993-ம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தது, ஆனால், மத்திய அரசின் சில துறைகளில் ‘ஏ’ பிரிவில் ஒருவர்கூட பணியில் இல்லை. அனைத்துத் துறைகளிலும் பார்த்தால் 0% முதல் 10% பேர் மட்டும் உள்ளனர். காரணம் பெரும்பாலான துறைகளில் ‘ஏ’, ‘பி’, ‘சி’ ஆகிய பிரிவுகளில் பல பதவிகள் காலியாகவே உள்ளன. அவற்றைப் பூர்த்திசெய்ய எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை என்பதுதான் வேதனைக்குரியது.
இந்த 27% ஒதுக்கீடு, குறைந்தபட்சம் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களிலாவது அமல்படுத்தப்பட்டுள்ளதா?
மத்திய அரசின் கீழ் நடைபெறும் பல கல்வி நிறுவனங்கள் இதுவரையிலும் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவ மாணவியருக்கு முழுமையாக இடஒதுக்கீடு வழங்கவில்லை. உதாரணத்துக்குச் சொல்ல வேண்டுமானால் மத்திய அரசின் கேந்திர வித்யாலயா பள்ளிகள் மற்றும் இந்திய ராணுவ அமைச்சகத்தின் சைனிக் பள்ளிகளில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடிகளுக்கான இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால், இதுவரை இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. பலமுறை வேண்டுகோள் விடுத்தும் பலனில்லை. அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 15(5)-க்குப் புறம்பாக அவை செயல்படுகின்றன.
அரசுப் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் பிற்படுத்தப் பட்ட ஊழியர்களின் உரிமைகள் முறைப்படி காக்கப்படுகிறதா?
அரசுப் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் பிற்படுத்தப்பட்ட ஊழியர்களின் உரிமைகளைக் காக்க இந்திய அரசின் பணியாளர் நலத் துறை அமைச்சகம் பல வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது. உதாரணமாக, ஒவ்வொரு துறையும் இதர பிற்படுத்தப்பட்ட ஊழியர்களுக் கென்று தனி ஒருங்கிணைப்பு அதிகாரியை, அதுவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திலிருந்தே நியமிக்க வேண்டும்; குறைந்தபட்சம் ஆண்டுக்கு இருமுறை கூட்டம் நடத்த வேண்டும்; ஊழியர்களுக்கு அனைத்து வசதிகளுடன் கூடித் தனி அலுவலக அறை ஒதுக்கித்தர வேண்டும்; பணி நியமனங்களுக்கான குழுவில் ஒரு பிரதிநிதி நியமிக்கப் பட வேண்டும், என்றெல்லாம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால், பல பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் இதில் எந்த வழிகாட்டுதலையும் பின்பற்ற வில்லை.
பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த வசதி படைத்த முன்னேறியவர்களை இடஒதுக்கீடு சலுகை பெறாமல் தடுக்க என்ன வழி பின்பற்றப்படுகிறது?
‘மண்டல் வழக்கு’ எனப்படும் இந்திரா சஹானி வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம் பிற்படுத்தப்பட்டோரில் முன்னேறி யவர்களை ‘கிரீமிலேயர்’ பிரிவினர் என அடையாளம் காட்டியுள்ளது. இடஒதுக்கீடு சலுகையிலிருந்து நீக்கப்பட வேண்டிய கிரீமிலேயர் பிரிவினரைக் கண்டுபிடிக்க இந்தியஅரசு ஒரு நிபுணர் குழுவை அமைத்தது. இந்த நிபுணர் குழு (1) பிரதமர், ஜனாதிபதி, நீதிபதிகள் போன்ற அரசியல் சாசன அந்தஸ்து பதவி வகிப்பவர்கள் (2) ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். குரூப் ஒன்று பணியில் உள்ளவர்கள் (3) ராணுவ உயர் அதிகாரிகள் (4) தொழில் துறையில் கிரீமிலேயர் வருமான வரம்புக்கு மேல் வருமானம் சம்பாதிப்பவர்கள். (5) 85% பாசன நிலம் வைத்துள்ள விவசாயிகள் ஆகிய ஐந்து பிரிவினரையும் அடையாளப்படுத்தியது. இதில் 2- வது பிரிவில் பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்களில் பணியாற்றுபவர்களில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு இணையான அந்தஸ்தில் உள்ளவர்கள் கிரீமிலேயர் பட்டியலில் வருவார்கள்.
சமமான பதவியில் உள்ளவர்கள் யார் யார் என்பதை மத்திய அரசு முடிவு செய்யும். அதுவரை அவர்களின் வருமானம், மற்றும் சொத்து மதிப்பின் அடிப்படையில் அவர்கள் நிலை தீர்மானிக்கப்பட வேண்டும் என அறிவுறுத் தப்பட்டுள்ளது. இதில் அவர்களின் சம்பளத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ளக் கூடாது என விதிவிலக்கு அளித்துள்ளது. இதன் விளைவாகப் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் உயர்பதவி வகிப்பவர்கள் அதுவும் வருடம் ரூ. 15 லட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்குபவர்கள்கூட இடஒதுக்கீடு சலுகை பெறுகிறார்கள். அதன் விளைவாக ஏழ்மையில் வாழும் உண்மையான பின்தங்கிய சமுதாயத்தினர் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் கடந்த 23 ஆண்டு காலமாக மத்திய அரசின் முதல் நிலைப் பணியாளர்களுக்கு இணையாகச் சம அந்தஸ்தில் உள்ள பதவி வகிப்பவர்கள் யார் யார் என்பதைத் தீர்மானிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காததுதான்.
தற்போது புதிய அரசு மத்தியில் பொறுப்பேற்ற பின்னர் அந்தப் பணியை எங்களிடம் கொடுத்துள்ளது. கிரீமிலேயர் சம்பந்தமாக அனைத்துக் குறைகளையும் களையவும், கிரீமிலேயருக்குத் தற்போது உள்ள 6 லட்சம் ரூபாய் வரம்பை 10.5 லட்சமாக உயர்த்தவும் பல தரப்பினரின் கருத்துக்களைப் பெற்று அரசுக்கு கடந்த மார்ச் 2-ல் அறிக்கை சமர்ப்பித்துள்ளோம். நமது பிரதமர் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் நம்முடைய கோரிக்கைகளுக்கு செவிசாய்ப்பார் என்று நம்புகிறோம்!
தொடர்புக்கு: shaffimunna.r@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 hour ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago