முலாயம் சிங் யாதவ் தலைமையில், ஜனதா குடும்பத்தைச் சேர்ந்த 6 கட்சிகள் கடந்த 15-ம் தேதியன்று இணைந்திருக்கின்றன. மூன்றாவது முறை இப்படியான இணைப்பு நிகழ்ந்திருப்பது இதற்குப் பெரும் முக்கியத்துவத்தை அளிக்கிறது.
1977-ல் ஜெயப்பிரகாஷ் நாராயண் தலைமையில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து ஜனதா கட்சி உருவானது. அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி, 1975 முதல் 1977 வரையில் அமல்படுத்திய நெருக்கடி நிலையை எதிர்த்துப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஒன்றிணைந்தனர். சுதந்திரா கட்சி, இந்திய சோஷலிசக் கட்சி, பாரதிய லோக் தளம், இந்துத்துவா கட்சியான பாரதிய ஜனசங்கம் மற்றும் இந்திராவுக்கு எதிராக காங்கிரஸில் இருந்து பிரிந்த தலைவர்களின் கட்சிகள் உட்பட 10-க்கும் மேற்பட்ட கட்சிகள் இணைந்துகொள்ள, ஜனவரி 23, 1977-ல் ‘ஜனதா கட்சி’ உருவானது. 1977-ல் முதல் மக்களவைத் தேர்தலைச் சந்தித்த ஜனதா கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டது.
ஒற்றுமையின்மை!
பல்வேறு தலைவர்களிடையே எழுந்த பதவிப் போட்டி மற்றும் கருத்து வேறுபாடுகளால் ஜனதா அரசு ஆட்டம் கண்டது. பாரதிய ஜனசங்கத்திலிருந்து வந்தவர்கள், ஆர்.எஸ்.எஸ். அமைப்பிலும் உறுப்பினர்களாக நீடிக்க விரும்பியது பிரச்சினையைப் பெரிதாக்கியது. இதனால், ஜனதா கட்சியின் ஆட்சியில் முதல் பிரதமரான மொரார்ஜி தேசாய், சுமார் 29 மாதங்களில் தன் பதவியை ராஜிநாமா செய்தார். அவருக்குப் பின் பிரதமரான சரண் சிங் கட்சியைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறினார். இதற்கிடையே, சரண்சிங் தலைமையிலான ஆட்சிக்கு அளித்துவந்த ஆதரவை இந்திரா காந்தி வாபஸ் பெற்றதால் 6 மாதங்களில் பதவி இழந்தார் சரண் சிங். இதனால், குறுகிய இடைவெளியில் மீண்டும் 1980-ல் வந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஜனதா கட்சியிலிருந்து பல்வேறு தலைவர்கள் பிரிந்து புதிய கட்சிகளை உருவாக்கிப் போட்டியிட வேண்டியதாயிற்று. தாய்க் கட்சியான ஜனதாவைக் கடைசி வரை நடத்திவந்த சுப்பிரமணியன் சுவாமியும் கடைசியில் கட்சியை பாஜகவுடன் இணைத்துவிட்டார்.
இரண்டாவது இணைப்பு!
காலம் அக்கட்சிகளை மீண்டும் ஒன்றாகச் சேர்த்தது. காங்கிரஸை எதிர்த்து அதை விட்டு வெளியேறிய வி.பி. சிங் தலைமையில், ஜனதா தளம் எனும் புதிய பெயரில் ஒன்றிணைந்தன. லோக் தளம், ஜன்மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் (எஸ்) ஆகிய கட்சிகள் இணைந்து அக்டோபர் 11, 1988-ல் ஜனதா தளத்தை உருவாக்கின. ஜனதா தளம் தலைமையில் ‘தேசிய முன்னணி’எனும் பெயரில் தேசிய அளவில் ஒரு கூட்டணி உருவாகி மத்தியில் ஆட்சியைப் பிடித்தது. இந்த ஆட்சியின் ஆதரவுக் கட்சிகளில் ஒன்றான பாஜகவைச் சேர்ந்த எல்.கே. அத்வானியின் ரதயாத்திரை பிஹாரில் நுழைந்தபோது, ஜனதா தளம் சார்பில் அந்த மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த லாலு பிரசாத் யாதவ் அத்வானியைக் கைதுசெய்யும்படி ஆணையிட்டார். அத்வானியின் கைதைத் தொடர்ந்து வி.பி. சிங் அரசுக்குத் தான் அளித்துவந்த ஆதரவை பாஜக திரும்பப் பெற்றுக் கொண்டது. 1990-ல் வி.பி. சிங் அரசு கவிழ்ந்தது.
அரசு கவிழ்ந்தது மட்டுமல்ல, புத்துயிர் பெற்ற இரண்டு ஆண்டுகளுக்குள் ஜனதா தளம் உடைந்தும்போனது. ஜனதா தளத்திலிருந்து மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் என இரு கட்சிகள் புதிதாக உதயமாயின. அத்தோடு முடிந்துவிடவில்லை, முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சி, லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம், ராம்விலாஸ் பாஸ்வானின் லோக்ஜன சக்தி, ஜார்ஜ் பெர்னாண்டஸின் சமதா கட்சி என்று ஜனதா தளத்திலிருந்து மேலும் பல கட்சிகள் தோன்றின. ஜனதா குடும்பத்தின் வழித்தோன்றல்களில் சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம், இந்திய தேசிய லோக் தளம், சமாஜ்வாதி ஜனதா ஆகிய 6 கட்சிகள் இப்போது இணைந்திருக்கின்றன. ஜனதா குடும்பத்தின் மூன்றாவது இணைப்பு இது! வரலாறு திரும்பத் திரும்ப ஒரே விதத்தில் தன்னை நிகழ்த்திக்கொள்ளும் என்பார்களே, அதுதான் இப்போது நினைவுக்கு வருகிறது!
- ஆர். ஷபிமுன்னா,
தொடர்புக்கு: shaffimunna.r@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
3 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago