அவர்களும் நம்மவர்கள்தான்!

“நான் ஆட்சிக்கு வந்தால், வங்கதேசத்திலிருந்து வந்து இந்தியாவில் குடியேறியவர்களை வெளியேற்று வேன்” என்று பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் நரேந்திர மோடி அறிவித்திருக்கிறார். தேவைக்கும் அதிகமான வாக்குறுதி, ஆரவாரம், சிறுபான்மைச் சமூகத்தவருக்கு மிரட்டல் என்று கட்சியின் அடையாளங்கள் ஒன்றையும் குறைக்காமல், இந்த எச்சரிக்கையில் சேர்த்திருக் கிறார் மோடி. இந்தக் குடியேறல்களின் வரலாறு என்ன, இப்படிச் செய்ய முடியுமா என்றெல்லாம் யோசிக்காமல் அவருடைய ஆதரவாளர்கள் பலர் இந்த அறிவிப்பை மகிழ்ச்சியோடு வரவேற்றிருக்கிறார்கள்.

மேற்கு வங்க மாநிலத்தின் செராம்பூர் என்ற ஊரில் கடந்த மாதம் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும்போது “மே 16-ம் தேதி மக்களவைப் பொதுத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்போது, வங்கதேசத்திலிருந்து இந்தியாவில் ஊடுருவியவர்கள் அனைவரும் பெட்டி, படுக்கையுடன் நாட்டை விட்டு வெளியேறத் தயாராக இருக்க வேண்டும்” என்றார். இது ஏதோ பொதுக்கூட்டத்தில் மக்களிடையே கைத்தட்டலைப் பெறுவதற்காகப் பேசியது என்று விட்டுவிட முடியாது. இந்திய மக்களுக்கும் வாக்காளர்களுக்கும் - ஏன் பா.ஜ.க-வுக்குமே - சில விஷயங்களை விளக்க வேண்டியது நம்முடைய கடமை.

நாட்டை வளர்ப்பவர்கள்

‘வெளிநாட்டவர்கள்' என்று தாங்கள் நினைப்பவர்களை நாட்டை விட்டே வெளியேற்றும் உரிமை அரசுக்கு இருக்கிறது என்று 1946-ல் இயற்றப்பட்ட இரக்கமற்ற ஒரு சட்டம் இடம்தருகிறது. ‘தாங்கள் இந்த நாட்டில்தான் தொடர்ந்து வசித்துவருகிறோம், வெளிநாட்டவர்கள் அல்ல' என்று ஆதாரங்களைக் காட்டி அதை நீதிமன்றத்தில் நிலைநாட்டுவது, அப்படி குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான மக்களின் பொறுப்பு என்கிறது சட்டம்! வங்கதேசம் உள்ளிட்ட பக்கத்து நாடு களில்கூட இத்தகைய பயங்கரமான உட்பிரிவுகளைக் கொண்ட சட்டம் தான் அமலில் இருக்கிறது. பெரும்பாலான நாடுகளுக்கு இத்தகைய சட்டம்தான் அப்பாவிகளைத் துன்புறுத்தும் ஆயுதம். நாடுகளுக்கு இடையிலான எல்லையில் சரக்குகளையும் கூலிக்கு வேலை செய்வோரையும் மட்டும் அனுமதிப்பதே நாடுகளின் ‘எல்லைப் பாதுகாப்புப் பணி'யாக இருக்கிறது. இப்படி வெளிநாட்டவர்களை உள்ளே வர அனுமதித்துவிட்டு, பிறகு அவர்களைச் ‘சட்டவிரோதமாகக் குடியேறியவர்களாக' மாற்றிவிடுகின்றன அரசுகள். ஒரு நாட்டைக் கட்டியெழுப்பும் வேலையில் ஈடுபடும் இவர்கள் வெறும் பகடைக்காய்களாகப் பயன்படுத்தப்படுகிறார்கள்.

உலகம் முழுக்க நாடற்ற அகதிகளின் எண்ணிக்கை குறைந்தபட்சம் 120 லட்சமாக இருக்கும் என்று ஒரு மதிப்பீடு தெரிவிக்கிறது. நாடற்றவர்கள் என்று அழைக்கப்படுவோரில் அகதிகளும் அரைக்குடியுரிமை பெற்றவர்களும் அடங்குவர். அவர்களை அடையாளம் காண்பதும் கணக்கெடுப்பதும் மிகமிகச் சிரமம். ஆண்கள், பெண்கள், சிறுவர் - சிறுமியர் என்று கலந்து வாழும் இந்த மக்கள், தேசிய அரசுகளால் ஒதுக்கப்பட்டவர்கள், அந்த நாடுகளின் சட்டங்களால் சட்டவிரோதக் குடிமக்களாக ஆக்கப்பட்டவர்கள். “இந்த மக்கள் மீது இரக்கம் காட்டத் தேவையில்லை. அப்படிக் காட்டுவது அறிவுஜீவிகளின் வெட்டிவேலை” என்று பாரதிய ஜனதாவும் அவர்களைப் போன்ற சிந்தனை உள்ள கட்சிகளும் நினைக்கக்கூடும். ஆனால், மனித உரிமைகளை மதிக்க வேண்டும், பிற நாடுகளை, மதத்தைச் சேர்ந்தவர்களையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்ற நற்சிந்தனை உலகில் பல்வேறு மக்களிடையே நிலவுவதால்தான் இந்துக்களும் இந்தியர்களும் பிற நாடுகளில் அகதிகளாக மாறும் நிலைமை யிலும் கண்ணியமாக நடத்தப்படுகின்றனர்.

இனம், மதம், நாடு ஆகியவற்றை அடையாளம் காட்டி, திரிக்கப்பட்ட வரலாறுகளின் அடிப்படையில் மக்களை விரோதி களாகக் கற்பிதம்செய்துகொண்டு வெறுக்கும் கும்பல்களின் ஆதரவைத் தேர்தல் காலத்தில் பெற்றுவிட அரசியல் கட்சிகளும் இந்த அப்பாவிகளைப் பலிகடாவாக்குவது தொடர்ந்து நடைபெறுகிறது. தேர்தல் முடிந்துவிட்டால் இந்த அகதிகளையே மிகவும் கடினமான - சில வேளைகளில் உயிருக்கு ஆபத்தான - வேலைகளில், எந்தவித நஷ்ட ஈடும் தர வேண்டியிராத ஒப்பந்தங்களின் அடிப்படையில், குறைந்த கூலி கொடுத்து கசக்கிப் பிழிந்து தங்களுடைய வீடுகளிலும் தொழில்நிறுவனங்களிலும் கட்டுமானத் தளங்களிலும் வேலை வாங்குகின்றனர் முழு குடியுரிமை பெற்ற சட்டபூர்வக் குடிமக்கள்!

சும்மா உட்கார்ந்து சாப்பிடுவதில்லை

ஒரு நாட்டில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என்று குற்றம்சாட்டப்படும் மக்கள் யாரும், தாங்கள் குடியேறிய நாடுகளில் சும்மா உட்கார்ந்துகொண்டு மூன்று வேளையும் சாப்பிடுவதில்லை. காரணம், அப்படிச் சாப்பிட அவர்களுக்கு வாய்ப்பே இல்லை. நம்மில் பெரும்பாலானவர்களைப் போலவே அவர்களும் தாங்கள் புகுந்த நாடுகளில் கடுமை யாக உழைக்கின்றனர். தாங்கள் வாழுமிடத்தில் எப்படி நடத்தப்பட்டாலும் உள்ளூர் மக்களிடம் அன்பாகவும் நட்புடனும் பழகுகின்றனர். அந்தந்த ஊர்களையே அவர்களுடைய சொந்த ஊர்களாகக் கருதுகின்றனர். அந்த ஊர் மக்கள் பேசும் மொழியைக் கற்றுக்கொண்டு அதையே பேசுகின்றனர்.

தங்களுடைய முழு உழைப்பை அளிக்கின்றனர். நகர்ப்புறங் களில் வேலை தேடிக் குடியேறுவோர் குடிநீர், கழிப்பிடம், மின்சார வசதி, பாதை என்று அடிப்படை வசதி எதுவும் இல்லாத சேரிப் பகுதியில் எவர் கண்ணிலும் படாமல் வாழ்கின்றனர். மனிதர்களாக வாழ அவர்களுக்கு நாம் எந்த வசதியும் செய்துகொடுக்காதபோதும், அவர்கள் நமக்காக உழைத்து வாழ்கின்றனர். ஆனால், அரசியல் கட்சித் தலைவர்களோ அவர்களை அந்த இடத்திலிருந்து விரட்டிவிட்டு, அந்த இடத்தையும் நிலங்களையும் நமக்கு மீட்டுத்தருவதாக மேடை களில் முழங்குகின்றனர்.

வங்கதேசத்தில் ‘பிகாரிகள்' என்று அழைக்கப்படுகிற உழைக்கும் மக்களும், ஐக்கிய அரபு சிற்றரசில் ‘சட்டவிரோதக் குடியேறிகள்' என்று பட்டம் கட்டப்பட்டவர்களும், அமெரிக் காவில் உள்ள இந்திய டாக்சி டிரைவர்களும் இப்படித்தான் அந்தந்த நாடுகளின் பொருளாதாரம் வளம்பெறக் கடுமையாக உழைத்துவருகின்றனர். பாஸ்போர்ட்டுகள் வாங்கவும் அடையாள அட்டை பெறவும் பொதுச் சேவைகளைப் பெறவும் அவர்களுடைய குழந்தைகளுக்கு நல்ல கல்வி கிட்டவும் மிகக் குறைந்த கூலி அல்லது சம்பளத்துக்கு வேலைசெய்துகொண்டு அவர்கள் படாதபாடு படுகின்றனர். ‘நீ யார்?', ‘எங்கிருந்து வந்தாய்?', ‘உனக்கு இங்கென்ன வேலை?' என்று இடைவிடாமல் தன்னை நோக்கித் தொடுக்கப்படும் கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல், தான் வாழும் நாடு எதுவோ, எந்த நாட்டுக்காக ரத்தமும் வியர்வையும் சிந்தி வேலை செய்கிறோமோ, அதுதான் என் நாடு என்று பதிலாக அல்ல - வரலாறாகப் பதிவுசெய்துகொண்டிருக்கிறார்கள்.

மனிதாபிமானமுள்ள அரசுகள் தேவை

உயிரை உருக்கும் வறுமையிலிருந்து தப்பிக்கவோ, பாரபட்சமாக நடத்தும் அரசின் நடவடிக்கைகளிலிருந்து தப்பிக்கவோ எல்லை கடந்துவரும் மக்கள், தங்களுக்கென்று இருந்த சில உடமைகளையும் சலுகைகளையும் உரிமைகளையும் அங்கேயே உதறிவிட்டுத்தான் வருகிறார்கள். அவற்றைச் சட்டென்று கையை நீட்டிப் பறித்தோ, மோடியைப் போல ஓர் அறிவிப்பு செய்தோ பழைய நிலைக்கு அவர்களைக் கொண்டுபோய் நிறுத்த முடியாது. சுதந்திரம் அடைந்த பிறகு, நம் நாட்டின் மேற்கிலும் கிழக்கிலும் லட்சக் கணக்கான மக்கள் தங்களுடைய சொந்த ஊரைவிட்டு வேறு ஊர்களுக்குக் குடிபெயர்ந்தபோது ஏற்பட்ட ரணங்களும் வலிகளும் இன்னும் மறையவில்லை. மீண்டும் அதே போன்ற துயரங்கள் தொடர வேண்டுமா? இதைச் செய்துதான் நம் நாட்டில் வளர்ச்சியைக் கொண்டுவரப்போகிறோமா? அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும்படியான மனித உரிமைகள் என்ற கருத்துக்கு, பா.ஜ.க-வின் “குறைந்தபட்ச அரசு - நிறைந்த நிர்வாகம்” என்ற கோஷம் எட்ட முடியாத தொலைவில் இருக்கிறது.

(கட்டுரையாளர் ‘மனித உரிமைகள், சுற்றுச்சூழல் நீதி' ஆய்வு மாணவர்.)
‘தி இந்து' (ஆங்கிலம்), தமிழில்: சாரி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE