நேபாளத்தில் கடந்த 25 அன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பின்னதிர்வுகள் நீடித்துக்கொண்டிருக்கின்றன. சுருங்கச் சொன்னால், வடக்கு நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் இந்தியத் துணைக் கண்டம் நேபாளத்தின் அடிநிலப் பாறைகள் மீது செலுத்திவரும் நெருக்குதல் காரணமாகவே நேபாளத்தில் நிலநடுக்கம் நிகழ்ந்துள்ளது. அப்படியானால், இந்தியத் துணைக் கண்டம் நகர்கிறதா? அது எப்படிச் சாத்தியம் என்று கேட்கலாம். இதுபற்றி விளக்க பூர்வ கதைக்குச் சென்றாக வேண்டும்.
நாடுகளைக் காட்டும் அட்லஸ் படத்தை நீங்கள் கவனித்தால் இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா எங்கோ தொலைவில் இருப்பது புலப்படும். ஆப்பிரிக்காவும் அப்படித்தான். பனி மூடிய அண்டார்க்டிகா கண்டமோ இன்னும் தொலைவில் இருப்பதை அறிய முடியும். ஆனால், சுமார் 20 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் தென் அமெரிக்கக் கண்டமானது ஆப்பிரிக்கக் கண்டத்தின் மேற்குப் புறத்தில் இணைந்திருந்தது. ஆப்பிரிக்காவின் கிழக்குப் புறத்தில் இந்தியத் துணைக் கண்டம், ஆஸ்திரேலியா, அண்டார்க்டிகா ஆகியவை இணைந்திருந்தன. இவை அனைத்தும் சேர்ந்து ஒரே கண்டமாக விளங்கின. விஞ்ஞானிகள் இதற்கு கோண்டுவானாலாந்து என்று பெயர் வைத்துள்ளனர்.
உயரும் இமயம்
கோண்டுவானாலாந்துக்கு வடக்கே லௌராசியா என்ற கண்டம் இருந்தது. வடஅமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா, சீனா முதலியவை ஒன்றிணைந்து இவ்விதம் ஒரே கண்டமாக விளங்கின. அப்போது உலகில் மனித இனம் கிடையாது. சுமார் 12 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் கோண்டுவானாலாந்து உடைய ஆரம்பித்தது. கண்டங்கள் விலகிச் செல்ல ஆரம்பித்தன. இந்தியத் துணைக் கண்டம் வடக்கு நோக்கி நகர ஆரம்பித்தது. இதற்குள் லௌராசியாவும் உடைய ஆரம்பித்தது. இந்தியத் துணைக் கண்டமானது சுமார் 4 கோடி ஆண்டு களுக்கு முன்னர் ஐரோப்பா, ரஷ்யா, சீனா ஆகியவற்றை உள்ளடக்கிய யுரேசியாவுடன் தென்பகுதியில் வந்து ஒட்டிக்கொண்டது. மோதியது என்றும் சொல்லலாம். இந்த மோதலின்போது விளிம்புகள் மேல் நோக்கிப் புடைத்துக்கொண்டன. இப்படியாக இமயமலை உண்டாயிற்று. இந்தியத் துணைக் கண்டம் தொடர்ந்து நெருக்குவதால் இமயமலை இன்னமும் உயர்ந்து வருகிறது.
கடலில் மிதந்து செல்லும் கப்பல்கள் அல்ல கண்டங்கள். அவை எப்படி இடம் மாறும் என்று கேட்கலாம். சிதறு காய் போடுவதுபோல ஒரு தேங்காயை ஓங்கித் தரையில் அடிக்கிறீர்கள். அது பல துண்டுகளாகச் சிதறும். இவ்விதம் சிதறிய சில்லுகள் அனைத்தையும் பொறுக்கி ஒன்றோடு ஒன்று பொருத்தி மறுபடியும் அதை முழுத் தேங்காயாக ஆக்குகிறீர்கள். இப்போது அந்தத் தேங்காய் பல சில்லுகளால் ஆனதாக இருக்கும். பூமியின் மேற்புறமானது இவ்விதம் பல சில்லுகளால் ஆனதே. மொத்தம் ஏழு எட்டுச் சில்லுகள் உள்ளன. சிறிய சில்லுகள் பல உள்ளன. பூமியின் மீதான இந்தச் சில்லுகள் மீதுதான் கண்டங்களும் கடல்களும் அமைந்துள்ளன. இந்தச் சில்லுகள்தான் நகர்கின்றன. ஆங்கிலத்தில் இவை பிளேட்ஸ் எனப்படுகின்றன. சில்லுகள் இடம்பெயர்வதை பிளேட் டெக்டானிக்ஸ் என்கிறார்கள். பூமியின் உட்புறத்தில் மிக ஆழத்தில் ஏற்படும் நிகழ்வுகளால் சில்லுகள் நகர்கின்றன. பொதுவில் சில்லுகள் சந்திக்கும் இடங்களில் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.
இந்திய - ஆஸ்திரேலியச் சில்லு
இந்தியத் துணைக் கண்டம், ஆஸ்திரேலியா இந்து மாக்கடல் ஆகிய அனைத்தையும் சேர்த்து இந்திய - ஆஸ்திரேலிய சில்லு என்று குறிப்பிடுகின்றனர். இந்தியச் சில்லு பல கோடி ஆண்டுகளாக யுரேசிய சில்லுக்கு அடியில் அதாவது, நேபாளத்துக்கு அடியில் செருகிக்கொண்டு வடக்கே நகருகிறது. ஆகவேதான் மேற்குக் கோடியிலிருந்து கிழக்குக் கோடி வரை இமயமலை அடிவாரம் நெடுக அவ்வப்போது நிலநிடுக்கங்கள் நிகழ்கின்றன. இந்தியச் சில்லு நெருக்குகிறது என்றால் வாரா வாரம், தினம் தினம் ஏன் நிலநடுக்கம் நிகழ்வதில்லை என்று கேட்கலாம். ரயில் வண்டியில் செல்லும்போது இரவு இரண்டு மணி வாக்கில் பார்த்தால் எதிர் பெஞ்சில் பச்சை சட்டை போட்டவர் தமக்கு அருகே அமர்ந்துள்ள மஞ்சள் சட்டைக்காரர் மீது மெல்லச் சாய்வார். தொடர்ந்து மேலும் மேலும் சாய்வார். ஒரு கட்டத்தில் ‘விலுக்’ என்று இருவருமே விழித்துக்கொள்வர். அதுபோல இந்தியத் துணைக் கண்டத்தின் நெருக்குதல் மேலும் மேலும் சேர்ந்துகொண்டே போகும்போது ஒருகட்டத்தில் ‘விலுக்’ ஏற்பட்டுக் கடும் நிலநடுக்கம் நிகழும். ஏப்ரல் 25-ம் தேதி ஏற்பட்ட கடும் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.9 என்று அளவிடப்பட்டுள்ளது. இந்த ரிக்டர் அளவுகோலில் குறிப்பிடத்தக்க அம்சம் ஒன்று உண்டு. ரிக்டர் அளவில் 6 என்று சொல்லப்படுகிற நிலநடுக்கத்தைவிட, ரிக்டர் அளவில் 7 என்ற நிலநடுக்கமானது 30 மடங்கு கடுமையானது. ரிக்டர் அளவில் 8 என்பது அதைவிட 30 மடங்கு கடுமையானது.
தெரியாத ரகசியம்
ஓரிடத்தில் நிலநடுக்கம் ஏற்படுமா என்று முன்கூட்டி அறிந்துகொள்ள இதுவரை வழி கண்டுபிடிக்கப்பட வில்லை. எனினும், பிராணிகள் முன்கூட்டி அறிந்து கொள்கின்றன. ஓரிடத்தில் நிலநடுக்கம் ஏற்படப்போகிறது என்றால் ஏராளமான தவளைகள், பாம்புகள் ஆகியவை பல மணி நேரத்துக்கு முன்பே வெளியேறிவிடுகின்றன. இதன் ரகசியத்தை நம்மால் அறிய முடியும் என்றால், ஏராளமான உயிர்களைக் காக்க இயலும். ஆனால் ஒன்று, நிலநடுக்கங்கள் மனிதர்களைச் சாகடிப்பதில்லை. கட்டிடங்கள்தான் மனித உயிர்களைப் பலி கொள்கின்றன என்று சொல்வதுண்டு. அது பெருமளவுக்கு உண்மை.
நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்பு அடிப்படையில் இந்தியா ஐந்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இமயமலை அடிவாரத்தில் உள்ள மாநிலங்கள் உட்பட அசாம், பிஹார், இமாசலப் பிரதேசம் முதலியன ஐந்தாவது மண்டலத்தில் இடம்பெற்றுள்ளன. அதாவது, கடும் நிலநடுக்க வாய்ப்பு உள்ள இடங்கள் என்று பொருள். முதல் மண்டலம் என்பது நிலநடுக்க வாய்ப்பு அனேகமாக இல்லாதது. அடுத்து, இரண்டாவது மண்டலம். தமிழகம் முன்பு இரண்டாவது மண்டலத்தில் இருந்தது. ஆனால், இப்போது சென்னை மற்றும் கோவையை அடுத்த பகுதி ஆகியன மூன்றாவது மண்டலத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. ஓரளவு நிலநடுக்க வாய்ப்பு உள்ளது என்பது இதன் பொருள். கட்டிடங்களைக் கட்டும் விஷயத்தில் எந்தெந்த மண்டலத்தில் எவ்விதமான வழிமுறைகள் பின்பற்ற வேண்டும் என விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த விதிமுறைகள் வெறும் ஏட்டளவில்தான் உள்ளன. ஆகவேதான், நிலநடுக்கம் ஏற்படாமலேயே அடுக்கு மாடிக் கட்டிடங்கள் இடிந்து விழுகின்ற நிலைமை உள்ளது.
எச்சரிக்கை விளக்குகள்!
இந்தியாவில் வீடுகளைக் கட்டி விற்கும் நிறுவனங்கள், தங்களது விளம்பரங்களில் இந்த வசதி உண்டு, அந்த வசதி உண்டு எனப் பிரமாதமாக வர்ணித்துக்கொள்கின்ற அதே நேரத்தில், நிலநடுக்கத்தைத் தாங்கி நிற்கும் வகையில் கட்டப்பட்டவை என்ற வாசகத்தைச் சேர்ப்பதே கிடையாது. ஏன்? உண்மையில், நிலநடுக்கத்தைத் தாங்கி நிற்கின்ற வகையில் 50 மாடிக் கட்டிடங்களையும்கூடக் கட்ட முடியும். அமெரிக்காவிலும் ஜப்பானிலும் இப்போது நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிலநடுக்கத்தைத் தாங்கி நிற்கின்ற வகையில் அடுக்கு மாடிக் கட்டிடங்களைச் சர்வ சாதாரணமாகக் கட்டிவருகின்றனர். நிலநடுக்கம் ஏற்பட்டால் இவ்விதக் கட்டிடங்கள் முன்னும் பின்னுமாக லேசாக அசைகின்றன. ஆனால், கட்டிடத்தில் விரிசல் கிடையாது. தகர்ந்து விழுவதும் கிடையாது. உலகில் பெரும் ஜனநெருக்கடி மிக்க நாடுகளில் ஒன்றான இந்தியா, கட்டிடக் கட்டுமான விஷயத்தில் கண்டிப்புடனும் தொலைநோக்குடனும் புது விதிமுறைகளை வகுத்து அமல்படுத்துவது அவசியம். ஒருவகையில், இதுபோன்ற சம்பவங்கள் நம்க்கான எச்சரிக்கை விளக்குகள்!
- என். ராமதுரை, மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: nramadurai@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago