தமிழகத்தின் நிகழ்த்துக் கலை மரபில் முக்கியமான இந்த நாடகம் புத்துயிர் பெற்றிருக்கிறது.
கி.பி.1634 முதல் 1673 வரை ஆட்சிபுரிந்த தஞ்சை நாயக்க மன்னரான விஜயராகவ நாயக்கர், 32-க்கும் மேற்பட்ட நாட்டிய நாடகங்களை எழுதியவர். தான் வாழும் காலத்திலேயே பெரும் பாலான நாடகங்களை மன்னார்குடியில் உள்ள ராஜகோபாலசுவாமி கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் நடிக்கச் செய்துள்ளார். அவர் எழுதிய நாடகங்களில் பிரகலாத நாடகமும் ஒன்று. ஒடிசா, ஆந்திரம், கேரளம், கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் பிரகலாத நாடகம் இன்றளவும் நிகழ்த்தப்பட்டுவருகிறது.
நாயக்கர்களின் கலைத்தொண்டின் தடயங்களாக மெலட்டூர், சாலியமங்கலம் போன்ற ஊர்களில் ‘பாகவத மேளா’ என்று இந்த நாடகம் ஆண்டுதோறும் தெலுங்கு மொழியில் நடத்தப்பட்டுவருவது பிரபலமான ஒன்று. இவ்வகையில், ஆண்டுதோறும் நரசிம்ம சுவாமி வழிபாடாகத் தமிழிலும் பிரகலாத நாடகம் பல ஊர்களில் பல்வேறு சமுதாயங்களால் வெகு விமர்சையாக நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் கூத்து, நடனம், நாடகம் என்று பல மரபு நிகழ்த்துக் கலைகள் வெறும் கேளிக்கையாக மட்டும் இல்லாமல், ஒரு வழிபாட்டுச் சடங்காகவும் காலம்காலமாக இருந்துவருகின்றன. வடதமிழ்நாட்டில் இன்றளவும் விமர்சையாக நடத்தப்படும் பாரதக் கூத்துபோல் திருவாரூரில் நடத்தப்படும் மனுநீதிசோழன் நாடகம், திருசெங்காட்டங்குடியில் நடத்தப்படும் சிறுத்தொண்டர் நாடகம் போன்றவை அவ்வகையிலானவை. அவற்றுள் மிகவும் பிரபலமானதும், பல இடங்களில் நடிக்கப்படு வதும் பிரகலாத சரித்திரம் எனப்படும் இரணியன் நாடகம்.
நரசிம்ம வழிபாட்டின் தொன்மை
பரிபாடல், சீவகசிந்தாமணி ஆகிய இலக்கியங்களில் காணும் குறிப்புகளாலும், பல்லவர் கால சிங்கவேள் கடவுளின் கோயில்கள் மற்றும் புராணச் சிற்பங்கள் வாயிலாகவும், ஆழ்வார் பாசுரங்களாலும் தமிழகத்தில் நரசிம்ம வழிபாட்டின் தொன்மையை அறியலாம். கம்பராமாயணத்தின் இரணிய வதைப்படலம் மூலம் இரணியன் கதை பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து தமிழ் மக்களால் போற்றப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.
தமிழில் நடத்தப்படும் பிரகலாத சரித்திரம், மராட்டிய போசல மன்னர்களின் காலத்தில் எழுதப்பட்ட பாடல்கள் கொண்டு நிகழ்த்தப்படுகின்றன என்பதைச் சில ஊர்களின் நாடகப் பிரதிகளின் மூலம் அறிய முடிகிறது. இந்த நாடகப் பிரதிகளில் கம்பராமாயணப் பாடல்களும் இடம் பெறுகின்றன.
சமூகத்தினர் நடத்தும் நாடகங்கள்
கும்பகோணம் அருகே உள்ள அய்யம்பேட்டை, திருவாரூர் அருகே உள்ள அம்மையப்பன் தெங்கால், அம்மையப்பன் இளங்குடி, மேலத்திருபுவனம் ஆகிய ஊர்களில் சௌராஷ்டிரா சமூகத்தினர், சருக்கை அக்கரைப்பூண்டியில் மூப்பனார் சமூகத்தினர், ஆர்சுத்திப்பட்டு, நார்த்தேவன்குடிக்காடு, வடக்கு நத்தம் ஆகிய ஊர்களில் கள்ளர் சமூகத்தினர் மற்றும் நாயுடு சமூகத்தினர், தேப்பெருமாநல்லூரில் ஸ்மார்த்த பிராமண சமூகத்தினர், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பகத்தூர் மற்றும் வெள்ளிக்குப்பம் பாளையம் ஆகிய ஊர்களில் ஹொகலிக கவுடர் சமூகத்தினரும் இந்த இரணியன் நாடகத்தை வழிவழியாகத் தமிழில் நடத்திவருகின்றனர். மேலும் துவரங்குறிச்சி, பனயக்கோட்டை, அரசூர் ஆகிய இடங்களில் இந்த நாடகம் நடந்துவந்ததற்கான தடயங்களும் உள்ளன. அனைத்து ஊர்களிலுமே இரணிய நாடகம், ஒரு சமுதாய நாடகமாக, தொழில் முறை சாராத உள்ளூர் மக்களே வேடமேற்று, நரசிம்ம வழிபாடாக நிகழ்த்தப்படுவது தனிச்சிறப்பு.
ஒரே பாத்திரம், இரட்டை நடிகர்கள்!
பாரதக் கூத்தைப் பொறுத்தவரை ஊரே அரங்காகும். இரணிய நாடகமோ தெரு அடைத்து மேடை அமைத்து நிகழ்த்தப்படுகிறது. பங்கேற்பவர்களுக்குப் பெரிய பாகவதர் அல்லது வாத்தியாரால் சில வாரங்கள் முன்னதாகவே பயிற்சி வழங்கப்படுகிறது. நடிப்பு, பாட்டு, வசனம் என அனைத்துப் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. மிகவும் பெரிய கதாபாத்திரங்கள், அனுபவத்தால் தேர்ச்சி பெற்ற கலைஞர்களாலும் ஏனைய பாத்திரங்கள் புதியவர்களாலும் நடிக்கப்படுகின்றன. வேண்டுதல், வழிபாடு காரணமாக மக்கள் பெரும் ஆர்வத்துடன் நடிக்க வந்தாலும் இரணியன், லீலாவதி, பிரகலாதன் ஆகிய முக்கியக் கதாபாத்திரங்களை அனுபவம் மிக்கவர்களே செய்ய இயலும்.
அனைத்து ஊர்களிலும் ஆண்களே பெண் வேடங் களில் நடித்தாலும் ஆர்சுத்திப்பட்டு கிராமத்தில் மட்டும் பத்து வயதுக்குக் குறைந்த சிறுமியர் பெண் வேடத்தில் நடிக்கின்றனர். மேடையில் ஒரே சமயத்தில் இரட்டையாகப் பாத்திரங்கள் தோன்றுவதும் ஆர்சுத்திப் பட்டு, நார்தேவன்குடிக்காடு உள்ளிட்ட சில ஊர்களுக்கே உரிய சிறப்பாகும். ஒரே காட்சியில் இரண்டு இரணியன், இரண்டு பிரகலாதன் என இரட்டையாக நடிப்பது இவ்வூர்களின் தனித்தன்மை.
அத்தி மரத்தால் செய்யப்பட்ட சிங்கமுகக் கடவுளின் திருமுகம் இந்த நாடகத்தின் முக்கிய அங்கம். நரசிம்ம சிரசு (நரசிம்ம முடி) என ஊர்க் கோயிலில் வைத்து வழிபடப்பட்டுவரும் இந்தத் திருமுகம், வழிபாட்டுச் சடங்குகளுடன் உரிய நேரத்தில் மட்டுமே மேடைக்கு எடுத்துவரப்படும். நாடகம் நடத்த வசதி இல்லாதபோது, மண்டகப்படி என்று நரசிம்ம சிரசின் முன் பள்ளையம் இட்டு நாடகப் பாடல்களைப் பாடி வழிபடுவர். சருக்கை அக்கரைப்பூண்டியில் புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் நாடகப் பாடல்கள் பாடி வழிபடுகிறார்கள்.
திருவண்ணாமலை மாவட்டம் அசனமாப்பேட்டையில் செங்குந்த முதலியார் சமூகத்தினரால் பஜனைக் கோயிலில் வைத்து நரசிம்ம முடி சனிக்கிழமைகளில் வழிபடப்பட்டு வருகிறபடியாலும், வேலூர் மாவட்டம் பனப்பாக்கத்தில் வேளாள முதலியார் சமூகத்தினரால் புரட்டாசி சனிக் கிழமைகளில் நரசிம்ம சிரசு அணிந்து ஊர்வலம் வரும் மரபு இன்றளவும் காணப்படுவதாலும், தருமபுரியில் கிடைக்கப்பெற்ற நாடகச் சுவடியாலும் வட மாவட்டங்களிலும் இரணிய நாடகம் இருந்துள்ளதை அறியலாம்.
வைகாசி மாதம் சுக்கில சதுர்தசியும் சுவாதி நட்சத்திரமும் அமையும் நரசிம்ம ஜெயந்தி அன்று சிங்க முகக் கடவுளின் வழிபாட்டின் ஒரு அங்கமாகவே நாடகம் நடத்தப்படுகிறது. எனினும் சில ஊர்களில் வைகாசி முதல் ஆடி வரை வசதிக்கேற்ப நாள் பார்த்து நடத்தப்படுவதும் உண்டு. சிறுமுகை அருகே உள்ள பகத்தூர், வெள்ளிக்குப்பம் பாளையம் ஆகிய இடங்களில் தை முதல் நாள் தொடங்கி இரு நாட்களுக்கு நடத்தப்படுகிறது.
இரவு பத்து மணி அளவில் தொடங்கி விடிய விடிய நடக்கும் இந்த நாடகம் கோணங்கி அவை வணக்கம், விநாயகர் துதி, இரணியாக்கதன் வராஹத்தால் வதம் செய்வதில் தொடங்கி, இரணியன் - பிரகலாதன் கதை முழுவதுமாக நடிக்கப்பட்டு இறுதி நாள் விடியற்காலையில் நரசிம்ம அவதாரம், சம்ஹாரம் மற்றும் பிரகலாதன் முடிசூடலுடன் நிறைவுறும். பின்னர், மாவிளக்கு வழிபாடுகளும் சடங்குகளும் உண்டு
தற்காலத்தைப் பேசும் கோணங்கி
புராணக் கதை எனினும் கதை நிகழும் காலத்துக்கும் தற்காலத்துக்கும் பாலமாய் கோணங்கி அல்லது பஃபூன் என்று அழைக்கப்படும் சூத்திரதாரரின் வசனங்கள் அமைவது நமது நாடக மரபின் தனிச்சிறப்பு. ‘வந்தனமாம் வந்தனம் வந்த ஜனம் குந்தணும்’என்று தொடங்கி, நடிப்பவர், சீன் செட் வாடகை கம்பெனி, காபி சிற்றுண்டி வழங்குபவர் என அனைவரையும் வரவேற்கும் கோணங்கி, பிரகலாதன் பள்ளிக்கூடத்தில் சேர்வதை இன்று உள்ள கல்வி மையங்களின் சிக்கல்களுடன் ஒப்பிடுவது, இரணியன் லீலாவதியைக் கலந்து ஆலோசிப்பதில் பெண்ணுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியதை வலியுறுத்துவது, மருத்துவச்சி, பாம்புப் பிடாரர், ஒட்டர், செம்படவர், யானைப் பாகர், மல்லர் எனப் பல தொழில்சார் கதாபாத்திரங்களுடன் அவரவர் தொழிலின் இன்றைய பிரச்சினைகளையும் அவற்றால் ஏற்படும் இன்னல்களையும் நகைச்சுவையுடன் கேலிப் பேச்சாக விவாதிப்பதில் இவ்வகை நாடகங்கள் மூலம் சமுதாயம் தன்னைத் தானே பரிசீலனை செய்து கொள்கிறது, மேலும் சில தீர்வுகளும் காண்கிறது.
இந்த வருடம் ஆர்சுத்திப்பட்டில் இரணிய நாடகம் இன்று தொடங்கி மே 1 வரையிலும் இரவு நாடகமாக நடக்கிவிருக்கிறது. மே 2, அதிகாலை 5 மணி அளவில் நரசிம்ம அவதாரமும் பிரகலாத பட்டாபிஷேகமும் நடக்கவிருக்கிறது.
(ஆர்சுத்திப்பட்டு கிராமம், தஞ்சாவூர் - நாகப்பட்டினம் சாலையில் சாலியமங்கலம் அருகில் அமைந்துள்ளது.)
- பாலாஜி ஸ்ரீநிவாசன், காந்தி பாலசுப்ரமணியன் இருவரும் கள ஆய்வாளர்கள்,
தொடர்புக்கு: sthanuhu@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago