ஞாயிற்றுக்கிழமையும் இங்கிலாந்து லெட்டரும்…

By மானா பாஸ்கரன்

ஞாயிற்றுக்கிழமையை விடுமுறை தினமாக முதன் முதலில் அறிவித்தவருக்கு நோபல் பரிசு தரவேண்டும். “இன்றைக்கு உங்க வீட்டுல என்ன சண்டே ஸ்பெஷல்?” என்று கேட்பவருக்கு “இந்த நாளே ஸ்பெஷல்தானே…” என்றே பதில் சொல்லத் தோன்றும்.

அன்றைக்கு மட்டும் அப்படி ஒரு தூக்கம் எப்படித்தான் வருமோ தெரியாது. எட்டு மணியைத் தாண்டியும் தூங்கிக் கொண்டிருக்கும் என்னைப் பார்த்து, “டேய் ரெட்ட மண்ட எந்திரிடா…’’ என்று அப்பா குரல் கொடுப்பார். ரெட்ட மண்ட என்பது என் ‘தல’ புராணம். “பள்ளிக்கோடந்தான் கெடையாதே… தூங்கட்டும் புள்ள’’ என்று அம்மா சப்பைக்கட்டு கட்டுவதும் அரைகுறையாகத் தூக்கத்திலேயே காதில் விழும். பித்தாகரஸ் தேற்றத்தையும் ‘பி.என்.ஆர்/ ஹண்ட்ர’டையும் மறந்து ‘அப்பாடா! இன்னைக்கு லீவுடா…’ என்கிற முதல் நினைப்பே முதுகில் தட்டிக்கொடுத்து மேலும் தூங்க வைக்கும். அந்த அளவுக்கு, ஞாயிற்றுக்கிழமை என்பது பள்ளிக்கூடத்திலிருந்து ஜாமீனில் வந்ததுபோல இருக்கும்.

தஞ்சாவூர் ஜில்லாவில் முடிகொண்டான் கிராமத்தில் இருக்கிற வரை வருஷத்துக்கு ஒரு தடவை பேதிக்குச் சாப்பிடும் வழக்கம் இருந்தது. எங்கள் அண்ணன்களும் அக்காவும் வார நாட்களில் ஏதோ ஒரு கிழமையில் பேதிக்குக் கொடுக்கும்படி அம்மாவிடம் வற்புறுத்துவார்கள். பள்ளிக் கூடத்துக்கு டிமிக்கிக் கொடுக்க நாங்கள் போடும் திட்டத்தைப் புரிந்துகொள்ளும் அம்மா, ஞாயிற்றுக்கிழமையைத்தான் தேர்ந்தெடுப்பார். விளக்கெண்ணெயில் நீராகாரம் கலந்து தரும் அந்த மருந்து விடியலிலேயே எங்களுக்குப் புகட்டப்பட்டுவிடும். அப்புறமென்ன, அந்த ஞாயிற்றுக்கிழமை முழுக்கச் சொம்பும் கையுமாக அலைய வேண்டியதுதான்.

ஐடியா மணி

மற்ற நாட்களில் நம்பியாரைப் போல அடிக்கடி முறைக்கிற சிநேகிதர்கள் எல்லாம் ஞாயிற்றுக்கிழமை மட்டும் எம்ஜிஆரைப் போலத் தெரிவார்கள். நான், மணிவண்ணன், கிட்டான், கதிரேசன் எல்லாம் தோள் மேல் கையைப் போட்டுக்கொண்டு திரிவோம். இன்னைக்கு எங்கே போய் விளையாடலாம் என்று தீவிரமாகத் திட்டம்தீட்டுவோம். கிட்டான்தான் எங்களின் ‘ஐடியா’ மணி. புதுப் புது ‘ஐடியா’வாக அள்ளிவிடுவான்.

அப்படி ஒரு ஞாயிற்றுக்கிழமை அவன் கொடுத்த ஐடியாதான், பாப்பம்மா வீட்டுக் கொல்லைக்குப் போய் மாங்காய் அடித்து, உப்புத் தொட்டுத் தின்பது. மணிவண்ணன் வீட்டிலிருந்து உப்பு டப்பியைத் தூக்கி வந்துவிட்டான். நான் என் பங்குக்கு இட்லி மிளகாய்ப் பொடியை ஜவ்வுத்தாளில் மடித்து எடுத்துக்கொண்டுபோனேன். பாப்பம்மா வீட்டுக் கொல்லைக்கு யாராவது வருகிறார்களா என்று வேவு பார்க்கிற வேலையை எனக்குக் கொடுத்தார்கள். மணி வண்ணன் மாங்கா அடிக்க, கிட்டானும் கதிரேசனும் அதை பொறுக்கிக்கொண்டு வந்தார்கள். நான்கைந்து மாங்காய் தேறியது. எடுத்துக்கொண்டு, குஸ்தி வாத்தியார் வீட்டுக்குப் போய் உட்கார்ந்துகொண்டோம். குஸ்தி வாத்தியாரும் அவர் சம்சாரமும் வயல் வேலைக்குப் போயிருந்தார்கள். கிட்டான் மாங்காயை உடைக்க முயற்சித்தான், அது உடையவில்லை. அந்த மாங்காயைக் கையில் வாங்கி, குஸ்தி வாத்தியார் வீட்டுப் பூட்டு தொங்கிய நாதாங்கியில் உடைத்தான் கதிரேசன். மாங்காயை உடைத்த வேகத்தில் பூட்டு திறந்துகொண்டுவிட்டது. மாங்காயைத் தின்னாமலே எங்களுக்கு அது புளிக்க ஆரம்பித்துவிட்டது.

“இப்போ என்னடா செய்யறது…” என்றேன் நான். “இப்படியே விட்டுட்டுப் போயிடுவோம்டா” என்றான் கிட்டான். “டேய்… இப்படியே விட்டுட்டுப் போனா, பூட்டு திறந்திருக்குன்னு யாராச்சும் பூந்துட மாட்டாங்களா?’’ என்று எங்கள் பயத்தில் இன்னும் புளிப்பை ஏற்றினான் கதிர். “மாங்காயை உடைச்சப்ப பூட்டு திறந்துட்டுன்னு உண்மையைக் கக்கிடுவோம். குஸ்தி வாத்தியார் ஒண்ணும் சொல்ல மாட்டாருடா…’’ என்று உண்மை விளம்பியானான் மணிவண்ணன். அந்த ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் வரைக்கும் திறந்துகிடக்கும் பூட்டையே பார்த்துக்கொண்டு தேவுடு காத்திருந்தோம் நாங்கள். வாத்தியார் வந்ததும் மணிவண்ணன் தைரியமாக உண்மையைக் கக்கினான். “கை வெச்சதும் திறந்துக்கும்டா அந்தப் பூட்டு. சும்மா ஒரு லந்துக்குத்தான் அந்தப் பூட்டை மாட்டிவெச்சிருந்தோம்” என்றார் குஸ்தி வாத்தியார். ஒருநாள் முழுவதும் பயத்திலேயே கரைந்த அந்த ஞாயிற்றுக்கிழமை இன்றைக்கும் ஞாபகத்தில் புளிக்கிறது.

குளத்துக்குக் குலைநடுங்கும்

இன்றைக்கு சென்னைப் பெருநகரத்தில் ஒரு வாளித் தண்ணீரில் காக்காய்க் குளியல் போடும்போதெல்லாம், ஞாயிற்றுக்கிழமைகளில் எங்களூர் தட்டான் குளத்தில் கும்மாளம் போட்டது நினைவில் நீச்சலடிக்கிறது. எவ்வளவு நேரம் குளித்தோம் என்பதை, கரையேறித் தலை துவட்டும்போது கம்யூனிஸ்ட் ஆக மாறிய கண்களே சொல்லிவிடும். மணிக் கணக்காகத் தண்ணீரில் கிடப்போம். குளத்தில் பூத்திருக்கிற அல்லிப் பூவைப் பறிக்கப் போட்டி போடுவதும், தண்ணீருக்குள்ளேயே முங்கு நீச்சல் போட்டுக்கொண்டுபோய் ஒருத்தன் டவுசரை இன்னொருத்தன் கழட்டுவதும், அல்லித் தண்டைப் பறித்து அதைக் குழாய் மாதிரி வாயில் வைத்துக்கொண்டு தண்ணீரை உறிஞ்சிப் பக்கத்தில் குளிப்பவனின் மேலே துப்புவதுமாக ஞாயிற்றுக்கிழமைகளில் நாங்கள் செய்யும் அதகளத்தால் எங்களைக் கண்டு அந்தக் குளத்தின் ‘ஈர’க்குலையே நடுநடுங்கும்.

இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமை அன்று தபால் ஆபீஸ் நடத்திய முதல் தலைமுறையே நாங்கள்தான். “டேய்… இன்னிக்குத் தபாலாபீஸ் வெளாட்டு வெளாடலாமா?” - ஐடியா மணி ‘சுவிட்ச்’போட, எங்களுக்குள் சந்தோஷ பல்பு எரிய ஆரம்பித்துவிடும். நாட்டாமைக்காரர் வீட்டுத் திண்ணைதான் எங்களின் ஞாயிற்றுக்கிழமை தபால் ஆபீஸ். வார இதழ் ஒன்றைக் கிழித்துத் தாள்களை அடுக்கி, கடிதங்களாக்கிக்கொள்வோம். பழைய மஞ்சள் கல்யாணப் பத்திரிகைதான் ‘இங்கிலாந்து’ லெட்டர். எங்களுக்கு ‘இன்லாண்ட்’ என்று சொல்ல வராது, எல்லோருக்கும் ‘இங்கிலாந்து லெட்டர்’தான்! ஒரு டப்பி மூடியில் வண்டி மசையை வழித்து வைத்துக்கொள்வோம். முனை நறுக்கப்பட்ட கோவைக்காய்தான் முத்திரை. அந்த முத்திரையை வண்டி மசையில் தொட்டுக் கடிதங்களுக்கு முத்திரை குத்துவோம். வாய், கை, சட்டையெல்லாம் வண்டி மசை அப்பி… அதுவே, எங்கள் ஞாயிற்றுக்கிழமையின் அங்க அடையாளமாகும்.

அதன் பிறகான என் காலண்டர்களில் எத்தனையோ ஞாயிற்றுக்கிழமைகள் கிழிக்கப்பட்டுவிட்டன. ஆனால், மனச்சுவரில் பால்யத்தின் ஞாயிற்றுக்கிழமைகளை மட்டும் தாங்கிக்கொண்டு தொங்கிக்கொண்டே இருக்கிறது, தேதி கிழிக்கப்படாத ஒரு பழைய காலண்டர்!

- மானா பாஸ்கரன், தொடர்புக்கு: baskaran.m@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்