ஆவணப்படத்தால் அல்ல, நம் சமூகத்தின் ஆணாதிக்க மனத்தால்தான் நமக்குத் தலைக்குனிவு!
கிளேட்டன் வீட் வில்லியம்ஸ் என்ற அமெரிக்கத் தொழிலதிபர் 1990-ல் டெக்ஸாஸ் மாகாணத்தின் ஆளுநர் தேர்தலுக்கான போட்டியில் ஒரு பெண்ணை எதிர்த்து நின்றார். அவருக்கு இருந்த பணபல செல்வாக்கில் நிச்சயம் வென்றிருப்பார். தேர்தலுக்கு முன்பு எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில்கூட 20 புள்ளிகள் முன்னணியில் இருந்தார். ஆனால், பிரச்சார நாட்களின்போது அவரது நாக்கில் சனி வந்து அமர்ந்தான். தனது பண்ணையில் சிலருடன் பேசும்போது, மோசமான பருவநிலையைப் பாலியல் பலாத்காரத்துடன் ஒப்பிட்டார். “நம்மால் ஆகக் கூடியது ஒன்றுமில்லை என்றால், (பாலியல் பலாத்காரத்தைப் போல) சும்மா படுத்து அதை அனுபவிக்க வேண்டியதுதான்!” என்றார். பெண்ணியவாதிகளும் பொதுஜனங்களும் கண்டனக் குரல் எழுப்ப, உள்ளூர் பத்திரிகைகள் அவரை ‘சைத்தான் வில்லியம்ஸ்’ என்று கேலிச்சித்திரங்கள் வரைந்தன. ‘ஹாஸ்யம்’ என்று நினைத்த திமிர் பிடித்த வார்த்தைகளால் தேர்தலில் தோற்றார்.
கிளேட்டன் சொன்ன வாக்கியம் இன்று மீண்டும் எனக்கு நினைவுக்கு வருவதற்குக் காரணம், கிட்டத்தட்ட இதே போன்ற கருத்தை நிர்பயா பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டு மரணதண்டனையை எதிர்நோக்கியிருக்கும் முகேஷ் சிங் என்ற குற்றவாளி (குற்றம்சாட்டப்பட்ட ஆறு பேர்களில் ஒருவர்) சொல்லியிருக்கிறார். லெஸ்லீ உத்வின் என்ற பிரிட்டிஷ் ஆவணப்பட இயக்குநர் ‘இந்தியாவின் மகள்’ (இண்டியா’ஸ் டாட்டர்) என்ற தலைப்பில் இயக்கியிருக்கும் ஒரு ஆவணப்படத்தில்தான் முகேஷ் சிங் இப்படிச் சொல்லியிருக்கிறார்.
எல்லோரும்தான் செய்கிறார்கள்!
மார்ச் 8-ம் தேதி வெளியிட இருந்த அந்த ஆவணப் படத்துக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. “பாலியல் பலாத்காரத்துக்கு அந்தப் பெண் எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருந்திருக்க வேண்டும். முட்டாள் பெண் சும்மா இருந்திருந்தால் (அதாவது, இணங்கியிருந்தால்) நாங்கள் கொன்றிருக்க மாட்டோம்” என்று ஆரம்பித்து, கொஞ்சமும் குற்றவுணர்வில்லாமல் பேசிக்கொண்டே போகிறார். மரண தண்டனை விதிக்கப்பட்ட ஐவர் உட்பட, குற்றம்சாட்டப்பட்டவர் எல்லோருக்குமே தாங்கள் செய்தது தவறு என்று தோன்றியதற்கான அடையாளம் கொஞ்சமும் இல்லை என்கிறார் லெஸ்லீ.
‘நாங்கள் மட்டும்தான் இப்படிப்பட்ட குற்றங்களைச் செய்திருக்கிறோமா? எல்லோரும்தான் செய்கிறார்கள்” என்றிருக்கிறார்கள் நிர்பயா வழக்கில் தண்டிக்கப் பட்டிருக்கும் மற்றவர்கள்.
அவர்கள் பேச்சிலிருந்து ஒன்று புரிந்தது என்கிறார் லெஸ்லீ. “அவர்களின் மதிப்பீட்டில் பெண்கள் ஒரு பொருட்டே இல்லை. ஆண்கள் விதித்திருக்கும் கோட்பாடுகளைப் பெண்கள் மீறினால், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.” அவர்களுக்காக வாதாடும் வக்கீல் சர்மாவும், பாலியல் வன்முறைக்கு ஆளான நிர்பயாவே குற்றவாளி என்கிறார். “இரவு 9 மணிக்கு மேல் ஒரு பெண் ஏன் வெளியில் செல்கிறாள்? அதுவும் ஒரு சிநேகிதனுடன்? பெற்றோர்கள் ஏன் கண்டிக்கவில்லை?” என்கிறார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் (2012- டிசம்பர் 16) டெல்லியில் மிகவும் பயங்கரமான பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு நிர்பயா என்று பெயர் சூட்டப்பட்டது, ‘பயமற்றவள்’என்கிற பொருளில். அந்தப் பெயரே பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட/ பாதிக்கப்படும் பெண்களுக்கான குறியீடாக ஆனது.
பாலினத் திமிர்
அமெரிக்கத் தொழிலதிபரும் அரசியல்வாதியுமான கிளேட்டன் வீட் வில்லியம்ஸின் திமிர்ப் பேச்சுக்கும் வேலைவெட்டி இல்லாத ஏழை இளைஞன் முகேஷ் சிங்கின் பேச்சுக்கும் அதிக வித்தியாசமில்லை. இருவருக்குள்ளும் இருப்பது பொதுவான பாலினத் திமிர்தான். இந்திய ஆண்கள் மட்டுமே குற்றவாளிகள் என்றோ இந்தியப் பெண்களே இலக்காகிறார்கள் என்றோ சொல்வதற்கில்லை. இந்தப் படத்தை எடுக்க நினைத்ததற்குக் காரணமே லெஸ்லீ உத்வின்னும் இதே போன்ற பாலியல் வன்முறைக்கு 18 வயதில் ஆளானதும், அதை வெளியில் சொல்ல வெட்கப்பட்டு வாய்மூடி இருந்ததால் ஏற்பட்ட, இதுநாள் வரை அனுபவித்த குற்றவுணர்வுமேதான். நிர்பயா சம்பவத்தையொட்டி இந்தியத் தலைநகரில் ஏற்பட்ட பிரம்மாண்டமான எதிர்ப்பும் கோபமும் அவரை உலுக்கிவிட்டதாகச் சொல்கிறார். உடனடியாக இதைப் பற்றியும், பாலியல் வன்முறையாளர்களின் உளவியலையும் ஆய்வுசெய்யும் நோக்கத்துடன் அவர்களைச் சந்தித்து அதை ஆவணமாக்க வேண்டும் என்கிற ஆவேசத்துடன்தான் இந்தியா வந்ததாகச் சொல்கிறார்.
எவ்வளவு கேவலம்!
இந்த ஆவணப்படம் தயாரிக்கும்போது தனக்குள் மாபெரும் மாற்றம் ஏற்பட்டதாகச் சொல்கிறார். “விஷயம் என்னைவிட முக்கியமானது என்று உணர்ந்தேன். நான் அதுநாள் வரை அனுபவித்த அவமானம் எனக்கல்ல; நான் கவுரவமாகத் தலை நிமிர்ந்து நிற்கலாம் என்று புரிந்தது.” தனக்கேற்பட்ட கொடுமையான அனுபவம் காரணமாக, திஹார் சிறையில் குற்றவாளிகளைச் சந்திக்கும்போது கோபத்தில் வெடித்துவிடுவோமோ என்று அவர் பயந்தார். ஆனால், அவர்களுடன் உரையாடியபோது மிதமிஞ்சிய பரிதாபம் ஏற்பட்டதாகச் சொல்கிறார். பரிதாபம் அவர்களைக் கண்டல்ல. நாம் வாழும் சமூகத்தில் பெண்ணின் நிலை எவ்வளவு கேவலமாகிப்போனது என்கிற துக்கம்தான் அவரை ஆட்கொண்டது.
மார்ச் 8-ல் மட்டும்தான் கண் தெரியுமா?
மீண்டும் மீண்டும் அந்த விஷயம் விவாதப் பொருளாகிறது. மிக முக்கியமாக, மார்ச் 8-ம் தேதி நெருங்கிவிட்டால், அப்போதுதான் பெண் என்கிற ஒரு ஜீவன் கண்ணில் தென்படுவதுபோலவும் அவளுக்கு இழைக்கப்படும் மிக மோசமான வன்முறைகள் நினைவுக்கு வருவதுபோலவும் பேசப்படுகிறது. நமது கலாச்சார, தார்மிகக் கோட்பாடுகளை இன்றைய சூழலோடு பொருத்திப் பார்க்க வேண்டிய , அவற்றைப் புரட்டிப்போட வேண்டிய அவசர காலகட்டத்தில் இருப்பதை சமூகம் உணரவில்லை. பள்ளிகளில் ‘பாலினம்குறித்த விழிப்புணர்வு’ என்ற விஷயத்தைத் துல்லியமாக உணர்த்தக்கூடிய பாடம் இதுவரை இணைக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட பெண், சமூகத்தின் எந்தத் தட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், குற்றத்தின் கொடூரம் ஒன்றேதான். ஆகவே, குற்றவாளி யாராக இருந்தாலும், துரிதமாகத் தண்டிக்கப்பட வேண்டும். இதுதான் எல்லாவற்றையும்விட முக்கியம்.
ஒருவகையில், பாலியல் வன்முறை நிகழ்வுகளுக்கு அதிக வெளிச்சம் கிடைப்பதும், அதைப் பற்றி விவாதம் நடப்பதும் நல்லதுதான். நமது சமூகம் பாசாங்குத்தனம் மிக்கது. இந்த ஆவணப்படத்தை வெளியிட இந்திய அரசு தடை விதித்திருப்பதும் அதன் வெளிப்பாடுதான். இந்தியாவுக்குச் சங்கடமாம். நமது பண்பாட்டுக்கு இழுக்காம்! நமது பண்பாடும் மானமும் கவுரவமும் காக்கப்பட வேண்டிய பொறுப்பு பெண்கள் கையில் மட்டும்தான் என்று நம்பும் ஐதீகம் இருக்கும் வரை, மாற்றம் வருவது சாத்தியமில்லை.
- வாஸந்தி, மூத்த பத்திரிகையாளர், தொடர்புக்கு: vaasanthi.sundaram@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago