பாஜக: உலகின் மாபெரும் கட்சி!

By வெ.சந்திரமோகன்

அதிக எண்ணிக்கை என்னும் அடிப்படையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் எப்போதுமே கடுமையான போட்டி உண்டு. சமீபத்திய புள்ளிவிவரத்தின்படி, சீனாவின் மக்கள்தொகை 136.8 கோடி. உலகின் மொத்த மக்கள்தொகையில், 18.9% சீனர்கள். 2-வது இடத்தில் இருக்கும் இந்தியாவின் மக்கள்தொகை 126.8 கோடி (மொத்த மக்கள்தொகையில் 17.5% நம்மவர்கள்!). 2013-ல் ஐநா வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி, இந்தியா 2028-ல் 145 கோடியை எட்டி, மக்கள்தொகையில் சீனாவைச் சமன்செய்து பின்னர் சில ஆண்டுகளில் பின்னுக்குத் தள்ளும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. மக்கள்தொகை விஷயத்தில் எப்படியோ, அரசியல் செயல்பாட்டில் சீனர்களை முறியடித்துக்காட்டியிருக்கிறார்கள் இந்தியர்கள். அதாவது, பாஜக-வின் உறுப்பினர்களாகியிருக்கும் இந்தியர்கள்.

சீனாவின் ஆளுங்கட்சியான சீன கம்யூனிஸ்ட் கட்சியை (சி.பி.சி) விட அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களைக் கொண்டிருப்பதாகவும், அதன் மூலம் உலகின் மிகப் பெரிய கட்சி என்னும் அந்தஸ்து சீன கம்யூனிஸ்ட் கட்சியிடமிருந்து தன் வசம் வந்திருப்பதாகவும் பெருமிதத்துடன் தெரிவிக்கிறது, இந்தியாவின் ஆளும் கட்சியான பாஜக. அதாவது, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையான 8.6 கோடியைத் தாண்டி, 8.8 கோடி உறுப்பினர்களைப் பெற்றிருப்பதாக பாஜக தலைவர்கள் மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார்கள். மார்ச் 31-க்குள் (அதாவது இன்றைய தேதிக்குள்!) 10 கோடியை எட்டுவது என்பது பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் இலக்காக இருந்தது. காலக்கெடுவைத் தாண்டிவிட்டாலும் விரைவில் அந்த இலக்கை எட்டிவிடுவோம் என்கிறார்கள் அந்தக் கட்சியின் தலைவர்கள்.

இந்த மாபெரும் எண்ணிக்கையை எட்ட பல்வேறு வழிமுறை களைக் கையாண்டது பாஜக. அவற்றில் முக்கியமானது, குறிப்பிட்ட எண்ணுக்கு ‘மிஸ்டு கால்’ கொடுப்பவர்கள் கட்சி உறுப்பினர்களாகச் சேர்க்கப்படுவார்கள் என்பது. இதற்காக, டெல்லியில் இயங்கும் மையம், மிஸ்டு கால் கொடுப்பவர்களின் செல்பேசி எண்ணுக்குத் திரும்ப அழைத்து, அவர்களைப் பற்றிய விவரங்களைக் கேட்டறிந்து, அவற்றைக் கட்சியின் மாநிலப் பிரிவுக்கு அனுப்பும். உறுப்பினர் சேர்க்கை தொடர்பான நடவடிக்கைகளை அந்தந்தப் பிராந்திய கட்சித் தலைவர்கள் எடுப்பார்கள் என்கிறது பாஜக வட்டாரம். ஆனால், பாஜக-வில் உறுப்பினர்களாகியிருக்கும் 8.8 கோடிப் பேரில் எத்தனை பேர், ‘மிஸ்டு கால்’ அளவிலேயே இருக்கிறார்கள் என்பதோ, எத்தனை பேருக்கு உரிய முறைகள் பின்பற்றப்பட்டு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டிருக்கிறது என்பதோ தெளிவாகத் தெரியவில்லை. கட்சியில் புதிதாகச் சேர்ந்தவர்கள், உண்மையிலேயே அக்கட்சியின் தலைவர்கள், கொள்கை, மத்திய அரசின் செயல்பாடு ஆகியவற்றால் கவரப்பட்டுக் கட்சியில் சேர்ந்தார்களா என்பதுகுறித்து எந்தத் தகவலும் இல்லை.

சீனாவில் என்ன நிலை?

சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 10 லட்சம் அதிகரிப்பதாக, 2011-ல் வெளியான புள்ளிவிவரம் கூறுகிறது. அந்த ஆண்டு கணக்குப்படி அக்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 8.2 கோடி. அதாவது, அந்நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 6% பேர் சி.பி.சி. உறுப்பினர்கள். ஆனால், இப்படி கட்சியில் சேர விருப்பம் காட்டுபவர்கள், தங்கள் சுய லாபங்களைக் கருத்தில் கொண்டேதான் கட்சியில் சேர்கிறார்கள் என்றும், கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையை அநாவசியமாக அதிகரிப்பது சரியல்ல என்றும் சீன அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகிறார்கள். அரசின் சட்டதிட்டங்கள், விதிமுறைகள் கடுமையாகப் பின்பற்றப்படும் சீனாவில் ஆளுங்கட்சியில் (அதாவது இருக்கும் ஒரே கட்சியில்) இணைந்துகொள்வது தங்களுக்குப் பல வகையில் அனுகூலமாக இருக்கும் என்று சீன மக்களில் பெரும்பான்மையானோர் கருதுகிறார்கள். இத்தனைக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராகச் சேர்வது சுலபமான காரியமல்ல. உலகளாவிய அளவில் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை, கட்சியின் ஊழியர்களுக்கு மாதச் சம்பளம் வழங்கப்படுவதுபோல், கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் கட்சிக்குச் சந்தா கட்ட வேண்டும். சீன கம்யூனிஸ்ட் கட்சியிலும் இதே நடைமுறைதான்.

இந்த நிலையில், உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் உலகின் மிகப் பெரும் கட்சியாக, பாஜக அறிவித்துக்கொண்டிருக்கிறது. அக்கட்சிக்கு 8.8 கோடி உறுப்பினர்கள் இருக்கிறார்களா இல்லையா என்பது அடுத்து வரும் தேர்தல்களில் தெரிந்துவிடும்!

- வெ. சந்திரமோகன்,

தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்