வடஇந்தியத் தொழிலாளிகளின் நரகம்

பெரும்பாலான தமிழகத் தொழிற்களங்கள் வடஇந்தியர்களைக் கொத்தடிமைகளாகவே நடத்துகின்றன!

தமிழ்நாட்டில் வடஇந்தியத் தொழிலாளர்களின் வருகை கடந்த 10 ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்திருக்கிறது. பிழைக்க வழியின்றித் தங்கள் சொந்த மாநிலங்களை விட்டுப் புலம்பெயர்ந்து தமிழ்நாட்டில் பணிபுரிகிறார்கள். தங்களுக்கு அந்நியமான ஊரில் பணிபுரியும் இவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம். அதுவும் தோல் தொழிற்சாலைகளில் இவர்களுக்கு ஏற்படும் துயரங்கள் வலி நிறைந்தவை. நம் மனங்களை உருகச் செய்பவை. இதுபற்றிய கள ஆய்வில் அவர்களுடன் நடத்திய உரையாடலில் இவர்களின் பிரச்சினைகளை நேரடியாக நம்மால் அறிந்துகொள்ள முடிந்தது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 90-களின் இறுதியில் கட்டுமானப் பணிகள், சென்னை மாநகரின் ஓட்டல்கள், சாலை அமைத்தல், பொதுப்பணித் துறை சார்ந்த பிற வேலைகள் போன்றவற்றில் முதன்முதலாக உத்தரப் பிரதேசம், பிஹார் மற்றும் மேற்கு வங்கத்தைச் சார்ந்த தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். குறைந்த கூலி, அதிக நேர வேலை, கடுமையான பணிச் சூழல், எல்லா விதமான வேலைகளையும் செய்யத் தயாராக இருத்தல் போன்றவற்றுக்குத் தமிழகத் தொழிலாளர்கள் தயாராக இல்லாததால், வடஇந்தியா விலிருந்து இம்மாதிரியான வேலைகளுக்கு ஆட்கள் வரவழைக்கப்பட்டனர். இதற்காக சென்னை உட்பட தமிழகம் எங்கும் இடைத்தரகர்கள் இருக்கிறார்கள். மனிதவள ‘ஏஜென்ஸி’களும் உண்டு. கட்டுமானப் பணிகளில் தொடங்கிய இந்த வடஇந்தியப் பணியாளர் களின் இறக்குமதி, படிப்படியாகப் பிற துறைகளுக்கும் பரவியது. தோல் தொழிற்சாலையும் அவற்றில் ஒன்று.

தோல் பதனிடுதலில் வடஇந்தியர்கள்

தோல்பதனிடும் தொழிற்சாலைகளில் இவர்களின் வருகை கடந்த 5 ஆண்டுகளாக அதிகரித்திருக்கிறது. உள்ளூரில் தலைமுறை மாற்றம் மற்றும் பாதுகாப்பற்ற பணிச்சூழல் காரணமாக ஏற்பட்ட பற்றாக்குறை வடஇந்தியத் தொழிலாளர்களை இதில் ஈடுபட வைத்திருக் கிறது. இவர்களின் பணிச்சூழலும் பாதுகாப்பும் தற்போதைய சூழலில் மிகவும் ஆபத்தானதாக மாறியிருக்கிறது. தமிழ்நாட்டுத் தொழிலாளர்களைவிட அதிக நேரம் வேலை செய்வார்கள். எவ்வளவு குறைந்த கூலி கொடுத்தாலும் கவலை இல்லை. தங்குவதற்குப் புறாக்கூடு போன்ற இடத்தை அளித்தால் போதும். கைகளையும் கால்களையும் மடக்கிக்கொண்டு சுருண்டு படுத்துவிடுவார்கள். உணவுகூட அவர்களே பார்த்துக் கொள்வார்கள். இப்படியான கொடூரமான பணிச் சூழலை அளிப்பதில் தோல்தொழிலும் விதிவிலக்கல்ல.

கழிவுநீர் சுத்திகரிப்பில் பாதுகாப்புக் குறைபாடு

கடந்த மாதம் கழிவுநீர்த் தொட்டி உடைந்து 10 பேர் பலியானதன் துயரத் தழும்புகள் இன்னும் அவர்கள் மனதை விட்டு அகலவில்லை. பலர் இம்மாதிரியான சம்பவங்கள் நாளை எங்களுக்கு நேரிடக்கூடும் என்கிறார்கள். எந்த நேரமும் எதுவும் நிகழலாம் என்ற அச்சம் அவர்களிடம் காணப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் விபத்து நடந்த பொதுச் சுத்திகரிப்பு நிலையத்துக்குப் பக்கத்தில் உள்ள தோல் தொழிற்சாலை ஒன்று, தங்களின் கழிவுத்தொட்டியை அவசர கதியில் சுத்தம் செய்யத் தொழிலாளர்கள் சிலரைப் பணித்ததால் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்தார். இந்த நிகழ்வு அதிகம் கவனம் பெறவில்லை. ஏற்கெனவே இந்தப் பகுதியில் இதுபோன்ற சில நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. ‘கழிவுநீர்த் தொட்டிகளில் மனிதர் களை இறக்கி வேலை செய்யக் கூடாது, இயந்திரங் களைக் கொண்டே சுத்தம் செய்ய வேண்டும்’ என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஏற்கெனவே உத்தர விட்டிருந்தபோதும், தோல் தொழிற்சாலைகள் பல அந்த உத்தரவை அலட்சியப்படுத்துகின்றன. மனித உயிர்கள் விலைமதிப்பற்றவை என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை.

தோல் தொழிற்சாலைகளின் கழிவுநீர்த் தொட்டிகளில் ஹைட்ரஜன் சல்பைடு, அம்மோனியா போன்ற விஷவாயுக்கள் உருவாகின்றன. தொட்டியில் மனிதர்கள் இறங்கினால், அவை நேரடியாக மனிதர்களின் மூளையைத் தாக்கி உடனடியாக மரணத்தை ஏற்படுத்தும். அவ்வளவு கொடிய விஷவாயுக்கள் வெளிப்படும் தொட்டியில் மனிதர்களை இறங்க நிர்ப்பந்திக்கின்றன இந்தத் தொழிற்சாலைகள். உள்ளூர் தொழிலாளர்கள் செய்ய மறுக்கும் இந்த வேலையை, வடஇந்தியத் தொழிலாளர்களைக் கொண்டு செய்ய வைக்கிறார்கள். போதிய பாதுகாப்பு உபகரணங்கள் எதுவுமின்றி அவர்கள் வேலை செய்வதால், நாளடைவில் நுரையீரல் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். அதிலிருந்து அவர்களால் எளிதில் மீள முடியாது.

தோல் பதனிடுதலில் பாதுகாப்பற்ற முறை

கழிவுநீர் சுத்திகரிப்பைத் தவிர்த்து, தோல் பதனிடும் முறை அதிக ஆபத்து நிறைந்ததாக இருக்கிறது. டையிங் எனப்படும் முக்கியமான பதனிடுதல் செயல் பாட்டில் அதிகமும் வடஇந்தியத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இந்தச் செயல்முறையில் அதிக அபாயம் நிறைந்த வேதிப்பொருட்கள் பயன்படுத்தப் படுவதால் இதில் அதிகப் பாதுகாப்பும் கவனமும் தேவைப்படுகிறது. தொழிலாளர்களின் பாதுகாப்பு கருதி அவர்களுக்குத் தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டிய தொழிற்சாலை நிர்வாகங்கள் அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு செலவுசெய்யத் தயங்கு கின்றன. அதனால், தொழிலாளர்கள் பலருக்கு வேதிப்பொருட்களின் தாக்கம் காரணமாகக் கால்களில் வெடிப்பு ஏற்பட்டிருக்கின்றன. கைகள் புண்ணாகியிருக்கின்றன. மருத்துவப் பரிசோதனைகள் செய்யும்போதுதான் அவர்களுக்கு எம்மாதிரியான நோய்கள் உருவாகியிருக்கின்றன என்பதை அறிய முடியும். மேலும், அதிக சத்தம் எழுப்பும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதால் பலருக்கும் செவித்திறன் குறைந்திருக்கிறது. வேதிப்பொருட்கள் கலந்த சாயக் கழிவுநீர் கண்களில் அடிப்பதால் பார்வை பாதிக்கப்பட்டவர்களும் உண்டு. இப்படியான சோகக் கதைகளைக் கள ஆய்வில் அறிய முடிந்தது.

தொழிலாளர்களின் சமூகப் பிரச்சினைகள்

வடஇந்தியாவிலிருந்து வறுமை காரணமாகப் புலம்பெயரும் தொழிலாளர்கள் பலருக்குத் தங்களின் சட்டப்படியான உரிமைகள்பற்றி அறவே தெரியவில்லை. மாதம் வெறும் 5,000 ரூபாய் சம்பளத்துக்கு அழைத்து வரப்படும் இவர்கள், காலம் முழுவதும் மனரீதியாகக் கொத்தடிமையாகவே மாறிவிடுகிறார்கள். மேலும், தொழிற்சாலையினுள் தொழிலாளர்களைத் தங்க வைக்கக் கூடாது என்ற சட்டவிதியை எல்லாத் தோல் தொழிற்சாலைகளும் மீறுகின்றன. 10 பேர் பலியானதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம். மேலும், அவர்கள் தங்கும் கூடாரங்கள் பல நிறுவனங்களில் புறாக்கூண்டு மாதிரி இருக்கின்றன. உற்பத்திப் பிரிவுக்கு மிக அருகிலேயே தங்கும் இடத்தை அமைப்பதால் அதுவும் இவர்களைப் பாதிக்கிறது. அதிகாரிகள் இதை யெல்லாம் கண்டுகொள்ளாததால் பெரும்பாலான தொழிற் சாலைகளில் இது தொடர்கதையாகிவருகிறது.

அதுமட்டுமா? பலரும் அளவுக்கு அதிகமாக மிகை நேரப் பணியை (ஓவர் டைம்) செய்கிறார்கள். தொடர்ந்து 10 ஆண்டுகள் இப்படி வேலை செய்தால், அந்த உடல் எதற்கும் பயனற்றுப் போய்விடுகிறது. முதுமை மிகவும் இளம் வயதிலேயே ஏற்பட்டுவிடுகிறது. மேலும், தொழிலாளர் சட்டப்படியான சேமநல நிதி மற்றும் பணியாளர் காப்பீடு போன்ற பலன்கள் இவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. அப்படியான பலன்கள் இருப்பதே பல தொழிலாளர்களுக்குத் தெரியவில்லை. பல நிறுவனங்கள் பதிவேடுகளில் வருகைப்பதிவைக் குறைத்துக்காட்டி, சேமநல நிதியில் பல முறைகேடுகளைச் செய்வது பெருங்கொடுமை. தொழிலாளர் நலத் துறைக்கு இது நன்றாகத் தெரிந்தும் ஒழுங்கான நடவடிக்கைகளை எடுப்பதில்லை. சட்டப் படியான விடுமுறைகளை அளிப்பதில்லை. ஒருநாள் வராவிட்டால்கூடச் சம்பளம் பிடித்தம் செய்யும் தொழிற்சாலைகள் இருக்கின்றன. மேலும், தங்கள் சொந்த மாநிலங்களுக்கு விடுமுறையில் செல்லும் தொழிலாளர்களுக்கு இந்த நிறுவனங்கள் சம்பளம் அளிப்பதில்லை. இதனால், பலர் முன்பணம் வாங்கிக் கொண்டு சொந்த ஊர்களுக்குச் செல்கிறார்கள்.

தொழிலாளர் நலத் துறை

தோல் தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளில் தலையிட்டுத் தீர்வுகாண வேண்டிய தொழிலாளர் நலத் துறையும் உரிய முறையில் தொழிற்சாலைகளை ஆய்வு செய்வதில்லை. அவ்வப்போது தொழிற்சாலைகளுக்கு வருகைபுரிந்து அவர்களின் பிரச்சினைகள்குறித்து ஆய்வுசெய்து, அதை நிவர்த்திசெய்ய உத்தரவிடுவதில்லை. தொழிலாளர் சட்டம் மற்றும் சுற்றுச்சூழல் சட்டங்களில் தெளிவான விதிகள் இருந்தும் அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக இந்தத் தொழிற்சாலைகள் விதிமீறலில் ஈடுபடுகின்றன. இந்நிலையில், தொழில்வளர்ச்சி என்பது தொழிற்சாலை சுற்றுச்சூழல், பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் நலன் இந்த மூன்றும் இணைந்த ஒன்றின் மூலம் மட்டுமே சாத்தியம். அரசுத் துறைகள் இந்தப் பொறுப்புகளை உணர்ந்து வேகமாகச் செயல்பட வேண்டிய நேரம் இது.

- இஜாஸ் அகமது, சமூக-அரசியல் விமர்சகர், தொடர்புக்கு: ijaz_ahmed@outlook.com

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE