ஒரு காந்தியின் வருகையும் ஒரு காந்தியின் புறப்பாடும்

By சமஸ்

நூறு வருடங்களுக்கு முன்பு 1915-ல் தென்னாப்பிரிக்காவிலிருந்து மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி இந்தியா திரும்பியபோது அவருக்கு வயது 45. அப்போது காங்கிரஸ் கட்சிக்கு வயது 29. பம்பாய் கோகுல்தாஸ் தேஜ்பால் சம்ஸ்கிருதக் கல்லூரியில், 1885 டிசம்பர் 28 அன்று 72 பேருடன் கூடிய அகில இந்திய காங்கிரஸின் முதல் மாநாட்டுப் புகைப்படம் காந்திக்கு முந்தைய காங்கிரஸின் வரலாற்று முகத்தை ஒரு நொடியில் சொல்லிவிடக் கூடியது. பிரிட்டிஷ் இந்தியாவின் படித்த, உயர்குடி இந்திய வர்க்கத்தின் அதிகாரக் கனவுக்கான மேடை அது.

ரொம்பக் காலம் அது அப்படித்தான் இருந்தது. இந்தியாவின் மேற்கில் கொஞ்சம், கிழக்கில் கொஞ்சம், தெற்கில் கொஞ்சம் என்று பம்பாயிலும் கல்கத்தாவிலும் சென்னையிலும் நகரங்களில் ஆங்கிலம் பேசும் உயர்குடி வர்க்கத்தின் இயக்கமாகவே காங்கிரஸ் வளர்ந்தது. கூடவே, அன்றைய இந்தியாவின் இந்துத்துவ – ஆதிக்க சாதிய சக்திகளுக்கும் அதுவே மேடையாக இருந்தது. கோபால கிருஷ்ண கோகலே போன்றவர்கள் தலை யெடுக்க ஆரம்பித்தபோது, விடுதலை இயக்கத்தைப் பற்றி காங்கிரஸ் வலுவாகப் பேச ஆரம்பித்தது. காந்தி – ஜின்னா இருவருக்குமே ஆதர்சமாக விளங்கிய கோகலே காங்கிரஸில் நிறைய மாற்றங்களுக்காகக் கனவு கண்டவர்; குறிப்பாக, 1905-ல் அவர் காங்கிரஸ் தலைவரான பிறகு. ஆனாலும், காங்கிரஸை ஒரு சின்ன மேட்டுக்குடி கும்பலிட மிருந்து மீட்டு, மாபெரும் மக்கள் இயக்கமாக உருமாற்ற காந்தி வர வேண்டியிருந்தது.

காந்தியும் கோகலேவும்

கோகலேவுக்கும் காந்திக்கும் இடையே ஓர் அற்புதமான உறவு இருந்தது. பரஸ்பர ஆளுமையும் மதிப்பீடுகளும் விழுமியங்களும் உருவாக்கிய மரியாதைக்குரிய உறவு அது. தென்னாப்பிரிக்க இந்தியர்களின் போராட்டத்தை இங்குள்ள இந்தியச் சமூகத்தின் கவனத்துக்குக் கொண்டுவர காந்தி முயன்றபோது, கோகலே அதற்குப் பெரும் ஆதரவாக இருந்தார். அந்நாட்களில் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்குப் பயணம் வந்த காந்தி, கோகலேவுடன் தங்கினார். இந்தியச் சமூகவியலில் கோகலேவுக்கு இருந்த புரிதலாலும் அரசியலில் மிதமான நிலைப்பாட்டுடன் எல்லோரையும் அரவணைக்கும் ஆற்றலாலும் அவர் வசம் ஈர்க்கப்பட்டார். பின்னர், தென்னாப்பிரிக்கா திரும்பிய பின், அங்கு கோகலேவை காந்தி அழைத்திருந்தார். அங்குள்ள ஆட்சியாளர்களிடம் இந்தியத் தரப்பில் கோகலேவைப் பேச வைத்தார். கோகலே – காந்தி உறவில் இந்த இரு பயணங்களும் முக்கியமான அத்தியாயங்கள் என்று சொல்ல வேண்டும். தென்னாப்பிரிக்காவில் 21 வருஷங்கள் இருந்த காந்தியிடம் இருந்த அசாத்தியமான போராளியை கோகலே சரியாக அடையாளம் கண்டார். காந்தியைச் சந்தித்துவிட்டு வந்த பிறகு, 1912-ல் பம்பாயில் நடந்த ஒரு கூட்டத்தில் கோகலே பேசுகிறார்: ‘‘காந்தியிடம் அற்புதமான ஒரு ஆன்மிக சக்தி இருக்கிறது. அதனால், அவர் தன்னைச் சுற்றியுள்ள சாதாரணர்களையும் பெரும் வீரர்களாகவும் தியாகிகளாகவும் மாற்றிவிடுகிறார்.’’

காந்தி இந்தியா திரும்பும் வரலாற்று விதி ஆட்டத்தில் கோகலே முக்கியக் கண்ணியாக இருந்தார். காந்தியின் தென்னாப்பிரிக்கத் தேவை முடிந்துவிட்டதையும் இந்தியாவுக்கு அவர் திரும்ப வேண்டியதையும் அவர் தொடர்ந்து வலியுறுத்தினார். காந்தியை விட மூன்று வயது மூத்தவர் கோகலே. காந்தியோ தன் வழிகாட்டி யாகவே அவரை மதித்தார். கோகலேவின் வார்த்தைக்கு காந்தியிடம் அவ்வளவு செல்வாக்கு இருந்தது. ‘‘இந்தியப் பொதுவாழ்க்கை எனும் கொந்தளிப்பான கடலில் பயணிக்க சரியான மாலுமி ஒருவர் எனக்குத் தேவைப்பட்டார். கோகலேவை அத்தகைய மாலுமியாகக் கொண்டுவந்ததோடு, அவர் இருக்கப் பயமில்லை எனும் துணிவோடும் இருந்தேன்’’ என்று ‘சத்திய சோதனை’யில் குறிப்பிடுகிறார் காந்தி.

மாலுமி காட்டிய மகத்தான வழி

அப்படிப்பட்ட ‘மாலுமி’ கோகலே, இந்திய அரசியலைப் புரிந்துகொள்ள காந்திக்குச் சொன்ன வழி இது: ‘‘காதைத் திறந்துகொண்டு, வாயை மூடிக்கொண்டு இந்தியாவை ஒரு வருஷம் சுற்றுங்கள்!’’

காந்தி இதை வேதவாக்காக எடுத்துக்கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும். ‘‘இந்தியாவில் சத்தியாகிரகத்தை நடத்தும் ஒரு சந்தர்ப்பம் நேரும் என்று நினைக்கிறீர்களா?’’ என்று கேட்ட அவருடைய நண்பர் ஆண்ட்ரூஸிடம் காந்தி சொல்கிறார்: ‘‘இதற்குப் பதில் சொல்வது சிரமம். கோகலே என்னிடம் ஒரு வாக்குறுதி வாங்கியிருக்கிறார். அனுபவம் பெறுவதற்காக இந்தியாவை நான் சுற்ற வேண்டும். அதுவரை பொது விஷயங்களில் நான் எந்த அபிப்ராயமும் கூறக் கூடாது என்பது அவர் வாங்கிய வாக்குறுதி. அந்த ஓராண்டுக்குப் பின்னும்கூட நான் அவசரப்படப்போவதில்லை. ஆகையால், ஐந்தாண்டுகளுக்கோ அதற்குமேலும்கூட சத்தியாகிரகம் ஏற்படும் சந்தர்ப்பம் உருவாகும் என்று நான் நம்பவில்லை.”

காந்தி இந்தியாவை புரிந்து கொள்ளத் தொடங்கிய புகழ்பெற்ற நீண்ட பயணம் இப்படித்தான் தொடங்கியது. அவர் தனக்கே உரிய பாணியில், அந்தப் பயணத்தை ஏழைகளோடு ஏழையாக மூன்றாம் வகுப்பு ரயில் பயணமாகவும் அமைத்துக்கொண்டார். காந்தியை இந்தியாவுக்கு அழைத்து வரும் உத்தரவுக்காகக் காத்திருந்தது மாதிரி, காந்தி இங்கு வந்த மறு மாதமே, தன் 48-வது வயதிலேயே காலமானார் கோகலே. ஆனால், அவர் வழிகாட்டிய பயணக் கல்வியை வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தார் காந்தி. சுதந்திர இந்தியாவின் வரைபடம் அவரது காலடித் தடங்களிலிருந்து உருவானது. இந்த நீண்ட பயணத்தில் அவர் கற்றுக்கொண்டதும் பெற்றதும் கொடுத்ததும் ஏராளம். அவற்றில் ஒன்றுதான் 1921 மதுரைப் பயணத்தின்போது, அவர் தரித்துக்கொண்ட அரையுடை - தமிழக உழவர்களிடமிருந்து உள்வாங்கிக் கொண்டது.

கோகலேவுக்கு வாக்களித்தது போல, பொது விஷயங்களில் கொஞ்ச காலம் காந்தி வாய் மூடி இருந்தார். ஆனால், தனி விஷயங்களில் அவரால் அப்படி இருக்க முடியவில்லை. நாடு திரும்பியதும் அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்புக் கூட்டங்களிலேயே அவர் இங்குள்ள போலித்தனங்களையும் பாசாங்குத்தனங்களையும் தோலுரிக்க ஆரம்பித்துவிட்டர். பம்பாயில் உயர்குடி குஜராத்தி வர்க்கம் அவருக்கு அளித்த வரவேற்பில், எல்லோரும் அவரை ஈர்ப்பதற்காக ஆங்கிலத்தில் பேச, அவரோ தன் பதிலுரையை குஜராத்தியில் தொடங்கினார். ‘‘குஜராத்திகள் கூடியிருக்கும் ஒரு சபையில் ஆங்கிலத்தில் பேசத் தேவை என்ன?’’ என்று கேட்டார். விருந்தினராகச் சென்ற இடங்களில், கட்டிலைக்கூடத் தவிர்த்துவிட்டுத் தரையில் படுத்தார். தன் கழிவுகளை மட்டுமல்லாமல் தன்னோடு உடனிருந்தவர் கழிவுகளையும் சுத்தப்படுத்தச் சென்றார். 1916-ல் காசியில் அன்னிபெசன்ட்டும் மாளவியாவும் நிர்வகித்துவந்த இந்து பல்கலைக்கழக மத்தியக் கல்லூரி திறப்பு விழாவுக்கு பேசச் சென்றார். இந்தியா செல்ல வேண்டிய பாதையையும் இந்தியத் தலைவர்களிடமிருக்கும் போலித்தனத்தையும் நேருக்கு நேராகப் போட்டு உடைத்தார்.

வைஸ்ராயும் மகாராஜாக்களும் ராணிகளும் பிரபுக்களும் கூடிய விழா அது. காந்தி பேசினார்: “இங்கே தலைமை வகித்த மகாராஜா இந்திய வறுமையைப் பற்றிப் பேசினார். மற்றவர்களும் அதையே பேசினார்கள்… இந்தப் பிரபுக்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். உங்கள் ஆடம்பர அணிகலன்களையெல்லாம் நீங்கள் உதறிவிட வேண்டும். இந்தச் சொத்துக்களையெல்லாம் நம் இந்திய நாட்டுமக்களுக்குப் பணிபுரியும் தர்மசொத்தாகப் பரிபாலிக்க வேண்டும். இல்லையென்றால் கதிமோட்சம் இல்லை.”

மேடையில் இருந்தவர்கள் அவரது பேச்சை ரசிக்க வில்லை. ஆனால், அவர் விடவில்லை. இந்தியாவின் சுயராஜ்ஜியத்துக்காக ஒரு மக்கள் இயக்கம்/ காங்கிரஸ் போக வேண்டிய திசையை அவர் சூசகமான, ஆனால் உறுதியான பிரகடனமாக வெளியிட்டார்: “இந்தியாவின் எந்த நகரிலும் ஒரு பிரமாண்ட மாளிகை எழும்போது எனக்குள் பொறாமை எழுகிறது. ‘ஆஹா… இவ்வளவும் நம் விவசாயிகளிடமிருந்து வந்த பணம் அல்லவா?’ விவசாயிகளின் உழைப்பின் பலனைப் பறித்துக் கொண்டாலும் சரி, பிறர் பறிக்க இடம்கொடுத்தாலும் சரி நம்மிடம் உண்மையான சுய ஆட்சி உணர்வு இருக்க முடியாது. குடியானவர் களால்தான் நமக்கு விடுதலை ஏற்பட வேண்டும். பணக்கார மிராஸ்தாரர்களோ, மருத்துவர் களோ, வழக்கறிஞர்களோ அதைப் பெற்றுத்தரப் போவதில்லை.”

கூட்டத்தில் இருந்த ராஜாக்களும் பிரபுக்களும் கோபத்தோடு வெளியேறினார்கள். பலர் அவரை வைதார்கள். அவருக்கு முன்னே இன்றைக்குப் போல ஏராளமான ஊடகங்கள் இல்லை. அவர், அசரடிக்கும் பேச்சாளரும் இல்லை. சாதாரணக் குரலில் மென்மையாகப் பேசினார். ஆனால், அதில் இருந்த சத்தியம் இந்நாட்டின் கோடானுகோடி மக்களிடம் அவருடைய செய்தியைக் கொண்டுசென்றது. இந்நாட்டின் சகலத்திலும் விளிம்பில் ஒடுக்கிவைக்கப்பட்டிருந்த அடித் தட்டு மக்களை அரசியலை நோக்கி இழுத்தது. முக்கியமாக, லட்சக் கணக்கான பிற்படுத்தப்பட்ட/ தாழ்த்தப்பட்ட/ முஸ்லிம் மக்களை அரசியலில் இணைத்தது. பெண்களையும் பொதுவெளிக்குக் கொண்டுவந்தது. காங்கிரஸை, உலகின் மாபெரும் ஜனநாயக இயக்கமாகக் கட்டியெழுப்பியது. இந்தியாவுக்கு வந்து வெறும் 32 வருஷங்களில் சுதந்திரத்தை அவர் நம் கையில் அளித்தார்.

காந்தி செய்த மாயம் என்ன?

காந்தி யுகத்தில் ‘காந்தி வேறு... காங்கிரஸ் வேறு அல்ல’ என்று சொல்வார்கள். ஆனால், காந்தி எத்தனை ஆண்டு காலம் காங்கிரஸ் தலைவராக இருந்தார் என்பதைக் கேட்டால் பலர் ஆச்சரியம் அடைவார்கள். ஒரே ஒரு ஆண்டு மட்டுமே அவர் தலைவராக இருந்தார் (1924). அவர் செய்த மகத்தான சாதனைகளுள் ஒன்று தன்னைப் பின்னிழுத்துக்கொண்டு சரியானவர்களை முன்னுக்கு விட்டது. முதன்முதலில், ஆங்கில ஆதிக்கத்தையும் மத்திய ஆதிக்கத்தையும் ஒழித்து மாநிலங்களில் அவரவர் மொழி வழியே கட்சியைக் கட்டியமைத்தார். ஒவ்வொரு மாநிலத்திலும் மக்கள் செல்வாக்குள்ளவர்களைத் தளபதிகளாக்கினார். ஒவ்வொருவருடைய ஆளுமையும் அவரவர் விருப்பங்களுடன் கைகோத்துப் பணிபுரிய வழிவகுத்தார். நேருவின் வசீகரத்தைப் பொதுக்கூட்டங்களுக்கு அனுப்பிப் பயன்படுத்திக்கொண்டார். படேலின் நிர்வாகத் திறனைக் கட்சிக் கட்டமைப்பை நிர்வகிக்கப் பயன்படுத்திக்கொண்டார். ஜே.சி. குமரப்பாவின் இயற்கை பொருளாதார அறிவை கிராமப்புற இந்திய மேம்பாட்டுச் சிந்தனைக்குப் பயன் படுத்திக்கொண்டார். இப்படி ராஜாஜிக்கு, அபுல் கலாம் ஆசாதுக்கு, கிருபளானிக்கு என்று ஒவ்வொரு ஆளுமைக்கும் அவரவர் கண்ணியத்தோடு பணியாற்றும் வாய்ப்பைக் கொடுத்தார். எல்லாவற்றுக்கும் மேல் என்றென்றைக்கும் மக்களோடு ஒருவராக, யாரும் அணுகக்கூடியவராக இருந்தார்.

பின்னோக்கி நிற்கும் காலச்சக்கரம்

சரியாக 100 ஆண்டுகளுக்குப் பின் காலச்சக்கரம் பின்னோக்கிப் போய் அதே இடத்தில் நிற்கிறது. 1915-ல் காந்தி வருகைக்கு முன் எந்த மேல்தட்டு ஆதிக்க/ஆங்கிலம் பேசும் கும்பலின் களமாக இருந்ததோ அதே இடத்துக்கு 2015-ல் திரும்பியிருக்கிறது காங்கிரஸ். ராஜாக்கள், இளவரசர்கள் இடத்தில் இன்றைக்கு முன்னாள் மந்திரிகள், அவர்களின் வாரிசுகள், பிரபுக்கள் இடத்தில் தொழில் முதலைகள், வழக்கமான இடத்தில் பண்ணையார்கள்.

நாட்டின் பெரிய கட்சி எனும் மதிப்பிழந்து, பிரதான எதிர்க்கட்சி எனும் தகுதியைக்கூட எட்ட முடியாமல் தோல்வி மேல் தோல்வி கண்டு நிற்கிறது. 2015-ல் தன்னுடைய 45-வது வயதில் இந்திய அரசியலின் மையத்துக்கு வருமுன் தனக்கான ‘ஞானத்தைப் பெற’ பயணம் புறப்பட்டிருக்கிறார் ராகுல் காந்தி. பெயர் வெளியிடப்படாத வெளிநாட்டுக்கு, முதல் வகுப்பு விமானப் பயணத்தில். வரலாற்றில் 100 ஆண்டுகள் இடைவெளியில் திரும்ப அதே நிலைக்குக் கட்சி வந்தடைந்திருக்கும் இடமும், அன்றைய - இன்றைய காந்திகளின் பயண முடிவுகளும் அணுகுமுறைகளும் நேருக்கு நேராகப் பொருத்திப் பார்க்கக் கூடியவை. காந்திக்கு கோகலே சொன்னதை விடவும், காந்தி காசியில் பேசியதை விடவும் காங்கிரஸுக்கும் அதன் தலைவர்களுக்கும் என்றென்றைக்கு மான பாடம் இருக்க முடியுமா?

வரலாறு அறிவிக்கும் உண்மை

காங்கிரஸும் ராகுலும் புரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான உண்மை இதுதான்: 1915-ல் தொடங்கி அடுத்த 33 ஆண்டுகளில் காந்தி எதை காங்கிரஸின் மூலாதாரச் சொத்தாக மாற்றினாரோ, நேரு அதற்குப் பின் 16 ஆண்டுகளில் எதை முழுக்கக் கை நழுவிவிடாமல் பார்த்துக்கொண்டாரோ... அந்த அடித்தட்டு மக்கள் ஆதாரத்தைக் கட்சி படிப்படியாக இழந்துவிட்டது. அடித்தட்டு மக்களை உதறி எறிந்துவிட்ட இயக்கமாக அது நிற்கிறது. மீண்டும் அவர்களை நோக்கிச் செல்வதைத் தவிர கட்சிக்கு வேறு வழி இல்லை.

தியாகங்கள் நீண்ட காலம் துரோகங்களை விட்டு வைப்பது இல்லை. வரலாறு உங்களை அடிக்கிறது; கதற வைக்கிறது. ஒரு ஆண்டுக்கு முன்பு வரை பெருநிறுவனங்களுக்காக ஆட்சி நடத்திக்கொண்டிருந்தவர்களை ‘நிலம் கையகப்படுத்தும் மசோதா’ மூலம் விவசாயிகளை நோக்கித் தள்ளுவது எது? ப. சிதம்பரத்தையெல்லாம் பெருநிறுவனங்களுக்கெதிராகக் கதறவைப்பது எது? இனியும் நீங்கள் மக்களை ஏமாற்றவோ, உங்களை ஏமாற்றிக்கொள்ளவோ முடியாது. காந்தி அன்றைக்குச் சொன்னதுதான்: “குடியானவர்களால்தான் உங்களுக்குக் கதிமோட்சம். பணக்கார மிராசுதாரர்களோ, மருத்துவர்களோ, வழக்கறிஞர்களோ அதை ஒருபோதும் பெற்றுத்தரப்போவதில்லை.”

- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்