பன்றிக் காய்ச்சல்: மக்களைக் கைவிடுகிறதா அரசு?

By டி.எல்.சஞ்சீவி குமார்

இது ‘H1N1 இன்ஃபுளுயென்சா வைரஸு’க்கும் மனிதர்களுக்குமான வாழ்வா, சாவா போராட்டம். கடந்த 2009-ல் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், தற்காப்புக்காக ஆண்டுதோறும் தன்னைத் தகவமைத்துக்கொண்டுவருகிறது. இப்படியாக 5 ஆண்டுகளில் அதன் வீரியம் பல மடங்கு பெருகிவிட்டது. அதன் மரபணு மாற்றத்தின் வேகமும் அதிகரித்துவிட்டது. பரிணாம வளர்ச்சியின் நியதி இது. ஆனால், அதை எதிர்கொள்ளும் வகையில் நமது அரசு இயந்திரம் பரிணாமம் அடைந்திருக்கிறதா என்றால், நிச்சயம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

புள்ளிவிவரங்கள் ஏமாற்றுகின்றனவா?

ஏழை மக்களின் மீது அலட்சிய மனோபாவம் கொண்ட அரசு மருத்துவ அமைப்புகளைக் கொண்ட நம் நாட்டில், வேகமாகப் பரவிவரும் பன்றிக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல், எலிக் காய்ச்சல் இவற்றையெல்லாம் எதிர்கொள்ளத் திராணியில்லாமல் ஏழைகள் தவிக்கிறார்கள். தினம் தினம் பன்றிக் காய்ச்சலால் இறப்பவர்களின் எண்ணிக்கை நாடு முழுவதும் உயர்ந்துகொண்டே போகிறது. “தனியார் மருத்துவமனைகளில் டெங்கு, பன்றிக் காய்ச்சல், எலிக் காய்ச்சல் ஆகியவற்றால் ஒருவர் இறந்தால், இறப்புக்குக் காரணமாக அதைக் குறிப்பிடக் கூடாது என்று உள்ளூர் நிர்வாகங்கள் வாய்மொழி உத்தரவிட்டிருக்கின்றன” என்கிறார் தனியார் மருத்துவமனை நிர்வாகி ஒருவர். இப்படியான சூழலில் அரசு தரும் புள்ளிவிவரங்களை நம்புவது அபத்தமாகவே அமையும். ஆகவே, பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் 16,235 பேர்; இறந்தவர்கள் 926 பேர் என்று அரசு தெரிவிக்கும் புள்ளிவிவரங்களை நாம் நம்பிவிட முடியாது. உண்மையான எண்ணிக்கை இதைவிடப் பல மடங்கு அதிகமாக இருக்கும் என்றே தெரிகிறது.

கடும் தட்டுப்பாட்டில் தடுப்பூசிகள்!

இவ்வளவு ஆபத்தான நிலையிலும்கூட பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பூசிகளுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. அமெரிக்காவின் நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மையத்தின் பரிந்துரையின் பேரில், அந்த நாடு 2009, செப்டம்பர் மாதத்திலிருந்தே சீரான இடைவெளிகளில் இதற்கான தடுப்பூசிகளை நான்கு மாதம் முதல் ஆறு வயது வரையுள்ள குழந்தைகள், 50 வயதுக்கு மேற்பட்டோர், இதய நோயாளிகள், நீரிழிவு நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் ஆகியோருக்கு விநியோகித்துவருகிறது. ஐரோப்பிய நாடுகளும் இதைக் கடைப்பிடிக்கின்றன. ஆனால், 2009-ம் ஆண்டு முதலே இந்தியாவில் பன்றிக் காய்ச்சலில் கணிசமான உயிரிழப்பு ஏற்பட்டாலும், இன்றைய தேதியில் உடனடியாக உயிர் காக்க ஒரு தடுப்பூசியை வாங்கிவிட முடியாது என்பதே முகத்தில் அறையும் உண்மை.

இங்குள்ள சொற்ப நிறுவனங்களின் தயாரிப்புகள் மொத்த நோயாளிகளுக்கும் போதுமானதாக இல்லை. சொல்லப் போனால், தமிழகத்தில் மேற்கண்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர் களுக்கே தடுப்பூசி கிடைப்பதில்லை என்கின்றன மருத்துவ வட்டாரங்கள். பணம் செலுத்தி முன்பதிவு செய்தால் ஒரு வாரத்தில் கிடைக்கலாம். புணேவைச் சேர்ந்த ஒரு தனியார் தடுப்பூசி நிறுவனம், இப்போதுதான் 65 ஆயிரம் ‘வீரியம் குறைக் கப்பட்ட நுண்ணுயிரி மூவகைத் தடுப்பூசி’களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. சுமார் ரூ. 800 விலை கொண்ட இதுவும் மார்ச் மாதம் இறுதியில்தான் விற்பனைக்கு வரும். அதுவரை நோயாளிகளின் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது.

ஏழைகளின் ‘ரத்தம் உறிஞ்சும்’ பரிசோதனை!

சில நாட்களுக்கு முன்பு வரை நாடு முழுவதும் தனியார் பரிசோதனைக் கூடங்கள், மேற்கண்ட நோய்களின் பரிசோதனைகளுக்கு ஏகபோகமாகக் கட்டணம் (ரூ.10 ஆயிரம் வரை) வசூலித்தன. சில நாட்களுக்கு முன்புதான் அரசு, டெல்லியில் ரூ. 4,500, தமிழகத்தில் ரூ. 3,750 என்று கட்டணத்தை நிர்ணயித்திருக்கிறது. சரி, தனியார் நிறுவனங்கள் எந்தக் காலத்தில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டும் வசூலித்திருக்கின்றன? எங்கே செல்வார்கள் ஏழைகள்?

அரசு மையங்களில் ரத்தப் பரிசோதனை இலவசம்தானே என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், எத்தனை அரசு மையங்கள் இருக்கின்றன என்பதுதான் கேள்வி. 32 மாவட்டங்களும் 12 மாநகராட்சிகளும் கொண்ட தமிழகத்தில், ஆறு பரிசோதனை மையங்கள் மட்டுமே அரசு மையங்கள். மீதமுள்ள 13 தனியார் வசம். (பார்க்க: பெட்டிச் செய்தி). அவையும் பெருநகரங்களில் மட்டுமே இருக்கின்றன. எங்கோ ஒரு மூலையிலும் மலைக் கிராமங்களிலும் வசிப்போர் எங்கே செல்வது?

என்னதான் தீர்வு?

இதுகுறித்து மருத்துவர் ரெக்ஸ் கூறும்போது, “எனக்குப் போட்டுக்கொள்ள தடுப்பூசிக்காகப் பதிவுசெய்து இரண்டு நாட்களாகிவிட்டன. எப்போது வரும் என்று தெரியவில்லை. மருத்துவரான எனக்கே இந்தக் கதி என்றால், பொதுமக்களின் கதி? அரசை நம்பிப் பலன் இல்லை. இதன் வீரியம் குறையும் வரை மக்கள் பயணங்களைத் தவிர்க்கலாம். அதிகமாகக் கூட்டம் கூடும் பொதுஇடங்களைத் தவிர்க்கலாம். விழாக்களைக் குறைத்துக்கொள்ளலாம். அப்படியே செல்வதாக இருந்தாலும் பிரத்தியேக முகமூடிகள் (சுமார் ரூ.50) அணிந்துகொண்டு செல்லுங்கள்.மேற்கண்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்கச் சென்றால், ‘என் 95’ ரக முகமூடி (ரூ. 200 - 225) அணிந்து கொள்ள வேண்டும். வீட்டுக்குள் நுழையும் முன்பு கை, கால்களைச் சுத்தமாகக் கழுவிவிட்டுச் செல்ல வேண்டும்” என்றார்.

சுவாசக் கருவிகள் பற்றாக்குறை- மருத்துவர் ரவீந்திரநாத்

பன்றிக் காய்ச்சலால் 2009-ம் ஆண்டு தொடங்கி, இந்தியாவில் ஆண்டுக்குச் சராசரியாக 600 பேர் வரை உயிரிழக்கிறார்கள். ஆனால், அரசு முடிந்த வரை உண்மையான புள்ளிவிவரங்களை மறைப்பதிலேயே முனைப்பாக இருக்கிறது. தமிழக அரசு 2014-ம் ஆண்டு தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலால் ஓர் இறப்புகூட இல்லை என்ற தகவலை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது. இப்போதும் ‘9 பேர் மட்டுமே இறந்துள்ளனர்; நிலைமை கட்டுக்குள் இருக்கிறது’ என்றே அரசு கூறிவருகிறது. இங்கு அரசு மருத்துவமனைகளில் சுவாசக் கருவிகள் கூட பற்றாக்குறையாக உள்ளன.

எங்கெல்லாம் பரிசோதனை செய்யலாம்?

அரசு: கிண்டி கிங்ஸ் இன்ஸ்டிடியூட், சென்னை மருத்துவக் கல்லூரி, கோவை மருத்துவக் கல்லூரி, மதுரை மருத்துவக் கல்லூரி, நெல்லை மருத்துவக் கல்லூரி, திருச்சி மருத்துவக் கல்லூரி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி.

தனியார்: சென்னை - பாரத் பரிசோதனை மையம், ஹைடெக் டயக்னாஸ்டிக் மையம், ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி, லிஸ்டர் மெட்ரோபாலிக் லேப் அண்ட் ரிசர்ச் சென்டர், டயக்னாஸ்டிக் சர்வீசஸ், ஸ்டார் பயோடெக் சொலுஷன், பிரிமியர் ஹெல்த் சென்டர்.

கோவை - மைக்ரோ பயாலஜி லேப்.

நாகர்கோவில் - விவேக் லேப்.

வேலூர் - கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி.

திருச்சி - டாக்டர்ஸ் டயக்னாஸ்டிக் சென்டர்.

மறைக்க நினைக்கும் மத்திய அரசு- மருத்துவர் புகழேந்தி

பன்றிக் காய்ச்சலுக்கான வைரஸ் கிருமியின் டி.என்.ஏ-வில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்று இந்திய மருத்துவ ஆய்வுக் கழகத்தின் (ஐ.சி.எம்.ஆர்) விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். ஆனால், சுகாதார அமைச்சரகம் அப்படி ஏற்படவில்லை என்கிறது. ஆனால், கிருமியின் வீரியம் கூடிவிட்டதை மட்டும் மத்திய அமைச்சரகம் ஏற்றுக்கொள்கிறது. டி.என்.ஏ-வில் மாற்றம் ஏற்படாமல் கிருமியின் வீரியம் அதிகரிக்காது என்பது அடிப்படை உண்மை. ஆனால், இதுதொடர்பாக இந்திய அரசு விரிவான ஆய்வுகளை மேற்கொள்ளவில்லை என்பதே உண்மை. சென்னையில் மட்டுமே 18 இடங்களில் பன்றிக் காய்ச்சல் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆனால், அரசு 4 என்று மட்டுமே சொல்கிறது. சமூக அக்கறை கொண்ட தனியார் அமைப்புகளுடன் அரசு நிர்வாகம் இணைந்து விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். முடிவுகளை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அப்போதுதான் இதற்கான தீர்வு காண முடியும்.

தாமதமாகிவிட்டது!- மருத்துவர் கு.கணேசன்

நோயாளியின் மூக்கு, தொண்டையிலிருந்து சளியை எடுத்துச் செய்யப்படும் ‘ரியல் டைம் பி.சி.ஆர்.’ பரிசோதனையும் ‘வைரஸ் கல்ச்சர்’ பரிசோதனையும் பன்றிக் காய்ச்சலை உறுதிசெய்கின்றன. ஆனால், இவை நவீன மருத்துவமனைகளில் மட்டுமே சாத்தியம். அதேபோல் டாமிஃபுளூ மாத்திரைகள் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே உள்ளன. தனியார் மருத்துவமனைகள் இவற்றை அரசு மருத்துவமனைகளிடம் கேட்டு வாங்கிப் பயன்படுத்த வேண்டும். ஆனால், தனியார் மருத்துவமனைகள் இதில் ரிஸ்க் எடுப்பதில்லை. நோயின் மூன்று நிலைகளில் முதல் நிலையில் மட்டுமே சித்தா, ஆயுர்வேதம் தீர்வளிக்கும். அடுத்தடுத்த நிலைகளில் இருப்பவர்களுக்கு அலோபதி மட்டுமே தீர்வு. தடுப்பூசியைப் பொறுத்தவரை மழைக் காலம் தொடங்குவதற்கு முன்பே போட்டால்தான் பயன் தரும். பன்றிக் காய்ச்சல் பரவிய பிறகு போடுவது முழுமையான பலன் தராது. செலுத்தப்பட்ட மூன்று வாரங்கள் கழித்தே இதன் தடுப்பாற்றல் வெளிப்படும்.

- டி.எல். சஞ்சீவிகுமார், தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்