ஊடகங்களுக்கு ஏதேனும் கிறுக்குப் பிடித்து விட்டதா என்று கேட்டார் நண்பர் ஒருவர். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் என்பது ஒரு குட்டித் தேர்தல். இந்தியாவின் ஒட்டுமொத்த வாக்காளர்கள் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால், டெல்லி வாக்காளர்களின் விகிதம் 1.5%-க்கும் குறைவு. அதுவும் இது சட்டப்பேரவைக்கான தேர்தல். இந்த வெற்றி - தோல்விகளை எப்படி தேசிய அளவில் ஒப்பிட முடியும், பிரதமர் மோடிக்கும் பாஜகவுக்கும் பின்னடைவாகக் கருத முடியும் என்பது அவருடைய வாதம்.
ஒட்டுமொத்த இந்தியாவுடன் ஒப்பிடும்போது, டெல்லியின் வாக்குப் பங்களிப்பு சொற்பம் என்பது ஒருபக்கம் இருக்கட்டும். டெல்லியின் பெரும்பான்மை அதிகாரங்கள் மத்திய அரசிடமே இருக்கின்றன. அதிகாரத்துக்கு மிக முக்கியமானது நிலம். ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது பள்ளிக்கூடம் கட்ட வேண்டும் என்றால்கூட, அதற்கான நிலத்துக்கு டெல்லி அரசு, மத்திய அரசிடம்தான் கேட்க வேண்டும். டெல்லியைப் பொறுத்தவரை நிலம் மத்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது. அடுத்து, நிதி. இதற்கும் மத்திய அரசின் ஒப்புதல் பெற வேண்டும். அப்புறம், சட்டம் - ஒழுங்கு. டெல்லி காவல் துறை மத்திய உள்துறை அமைச்சக அதிகாரத்துக்கு உட்பட்டது. அர்விந்த் கேஜ்ரிவாலே முன்னர் ஒருமுறை சொன்னதுபோல, “டெல்லி முதல்வர் என்பது அதிகாரம் இல்லாத அரியணைதான்.”
கேள்வி என்னவென்றால், இவ்வளவு துச்சமான ஒரு பதவிக்கான தேர்தலை வசமாக்க பிரதமர் நரேந்திர மோடியும் பாஜக தலைவர் அமித் ஷாவும் ஏன் இவ்வளவு துடித்தார்கள் அல்லது ஏன் டெல்லி தேர்தல் அவர்களுக்கு அத்தனை முக்கியமானதாக இருந்தது? இந்தக் கேள்விக்கான பதிலில்தான் அர்விந்த் கேஜ்ரிவாலின் டெல்லி வெற்றிக்கான முக்கியத்துவம் இருக்கிறது.
இரு சுலோகங்கள்
நரேந்திர மோடி தொடர்பாக குஜராத்தில் புகழ்பெற்ற இரண்டு சுலோகங்கள் உண்டு.
1. மோடி எதையும் மறக்கவும் மாட்டார், மன்னிக்கவும் மாட்டார். 2. மோடி, எதிரிகள் இருப்பதையே விரும்ப மாட்டார்.
குஜராத்தில் மோடி நிகழ்த்திய / வெளி உலகுக்கு அதிகம் தெரிய வராத முக்கியமான சாதனைகளில் ஒன்று, அங்கு வலுவான எதிர்க் கட்சி என்று ஒன்றையே இல்லாமலாக்கியது. இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே முதன்முறையாக எதிர்க் கட்சித் தலைவர் இல்லாத நாடாளுமன்றத்தின் பிரதமராக அவர் இருக்கிறார் என்பதும் இங்கு பொருத்திப் பார்க்கக் கூடியது.
ஜனநாயகத்தில் எதிரிகளை இல்லாமலாக்கத் தேர்தலைவிடவும் சிறந்த வழி ஏது? மோடிக்கு இத்தனை நெருக்கமானவராக அமித் ஷா இருக்க இதுவும் முக்கியக் காரணம். “ஷா அமைச்சராக இருந்தபோது, அவர் வசம் 12 துறைகளை மோடி கொடுத்திருந்தது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஷா பதவியில் இல்லாதபோதும் அவர்வசம் இருந்த துறை தேர்தல்கள். அந்த அளவுக்குத் தேர்தல்களில் அவர் கில்லாடி; மோடிக்கு அவர் மீது நம்பிக்கை” என் கிறார்கள் குஜராத்திகள். ஷா தன் சொந்தத் தொகுதிகளை எப்படிக் கையாண்டிருக்கிறார் என்பது ஓர் உதாரணம். 1997-ல் தன்னுடைய முதல் தேர்தலில் சர்கேஜ்ஜில் நின்றபோதே 56% ஓட்டுகளை வாங்கியிருக்கிறார் ஷா. அதற்குப் பிந்தைய 4 தேர்தல்களிலுமே 65%-க்கும் குறையாத ஓட்டுகளை வாங்கியிருக்கிறார். கடைசியாக, 2012 தேர்தலில் அவர் வாங்கிய ஓட்டுகள் 69%.
வெற்றிக்குத் தூரமாக இருப்பவர்கள் மோடிக்கு நெருக்கமாக முடியாது. ஷா இதை உணர்ந்தவர். அதனால் தான் ஒருமுறை சொன்னார்: “என்னால் செய்ய முடிந்ததைச் செய்தால் நான் சிறந்தவன். ஒருவேளை வேறு ஒருவர் அதைச் செய்தால், அவர் மோடியின் வலதுகரமாக இருக்கக் கூடியவர்.”
வெளியே பலரும் நினைக்கிறபடி, பாஜக தலைவர் பதவி ஷாவின் கடந்த காலச் செயல்பாடுகளுக்கான பரிசு மட்டும் அல்ல; மோடியின் எதிர்காலத் திட்டங்களுக்கான கட்டுமானத்துக்கான கருவி. நாட்டின் மிகப் பெரிய கட்சி என்பது அந்தக் கனவில் நமக்குத் தெரியும் நுனி; நாட்டின் ஒரே கட்சி என்பது நமக்குத் தெரியாத கடலடி பனிமலையாக இருக்கலாம்.
மோடியலை எனும் மந்திரம்
நாம் கொஞ்சம் பின்னோக்கிச் சென்றால், டெல்லியின் வியூக சூட்சமத்தைப் பிடித்துவிடலாம். பொதுத்தேர்தல் முடிந்து 8 மாதங்கள் ஆகின்றன. இன்னும் மோடியலை எனும் வார்த்தை இளஞ்சூட்டோடு துடிப்பாக இருக்கிறதே, எப்படி?
அந்த வார்த்தை ஒரு மந்திரம். இந்த மாபெரும் கனவைச் சென்றடைவதற்கான மந்திரம். பொதுத்தேர்தல் வெற்றி என்பது பொதுத்தேர்தலோடு முடிந்த கதை அல்ல; அது இந்தியா முழுவதற்கும் தொடரக்கூடிய ஒரு தொடர்கதை எனும் பிம்பத்தை உயிரோடு வைப்பதற்கான மந்திரம். அந்த மந்திரம் உயிரோடு இருக்க, தோல்விகள் தவிர்க்கப்படுவது முக்கியம்; மாற்றுகள் கண் முன் தெரியாமலிருப்பது முக்கியம்; எதிரிகள் இல்லாமலிருப்பது முக்கியம்.
மாபெரும் கனவில் டெல்லி பொத்தல் போட்டுவிட்டது போலத்தான் தெரிகிறது. தேர்தல் முடிவு தொடர்பாக உமர் அப்துல்லா அடித்திருக்கும் ட்விட் இது: “இந்தத் தேர்தல் முடிவு வெளிப்படுத்தும் பாடம் ஏதாவது உண்டென்றால் அது, நீங்கள் கடுமையாகப் போராடினால் மோடியும் பாஜகவும் வெல்லப்பட முடியாதவர்கள் அல்ல; அவர்களுடைய தவறு களுக்காகக் காத்திருக்க வேண்டியதில்லை என்பதுதான்.’’
மோடிக்கும் ஷாவுக்கும் டெல்லி அவ்வளவு முக்கியமானதாக இருக்கக் காரணம் எதுவோ, அதுவே அர்விந்தின் வெற்றியின் முக்கியத்துவத்துக்கான காரணமாக இருக்கிறது!
- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago