சந்திரகுப்த மௌரியர் முதல் லாலு வரை...

By எஸ்.சாந்தினி

ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் கடைசி மகள் ராஜலட்சுமியுடன், உத்தரப் பிரதேசத்தை ஆளும் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவின் பேரன் தேஜ்பிரதாப் சிங் யாதவின் திருமணம் இன்று டெல்லியின் அசோகா ஓட்டலில் நடைபெறுகிறது. இந்த இரு அரசியல் தலைவர்களின் குடும்பத்துத் திருமண உறவு, உத்தரப் பிரதேசத்திலும் பிஹாரில் சில அரசியல் லாபக் கணக்குகளை அடிப்படையாகக்கொண்டே நடத்தப்படுவதாக சர்ச்சை எழுந்திருக்கிறது.

பிஹாரில் அதிகமாக இருக்கும் யாதவர் சமூகத்தின் வாக்குகளை அங்கு போட்டியிடும் முலாயம் சிங் கட்சியினர் பிரித்துவிடுவதாகவும், இதனால் ஒவ்வொரு தேர்தலிலும் லாலுவின் கட்சியினருக்குப் பெருத்த இழப்பு ஏற்படுவதாகவும் தெரியவந்துள்ளது. இதுபோல், அரசியல் ஆதாயங்களுக்காக நடத்தும் திருமணங்களுக்கு நம் நாட்டின் மன்னர் ஆட்சிகளிலும் பல முன்னுதாரணங்கள் உள்ளன.

கிரேக்க-இந்திய உறவு

கிரேக்க அரச வம்சங்களுக்கும் இந்திய அரச வம்சங்களுக்கும் இடையிலும் கி.மு. நான்காம் நூற்றாண்டிலேயே திருமண உறவுகள் இருந்ததாக வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன. கிரேக்க மன்னன் செல்யூகஸ் நிகேடாரின் மகள் கரோலினாவுடன் மௌரியப் பேரரசர் சந்திரகுப்த மௌரியர் திருமண உறவு ஏற்படுத்திக்கொண்டார். இதன் காரணமாக கிரேக்க நாட்டிலிருந்து, மெகஸ்தனிஸ் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டு ‘இண்டிகா’எழுதினார். கிரேக்க-இந்தியத் திருமண உறவால் உருவான இந்த நூலால்தான் இன்று மௌரியப் பேரரசின் வரலாற்றை ஆதாரத்துடன் நாம் அறிந்துகொள்ள முடிகிறது. குப்த மன்னர்கள் அண்டை நாடுகளுடன் செய்துகொண்ட திருமணங்களாலும் தங்கள் நாட்டின் பரப்பை விரிவுபடுத்தினார்கள். இத்தகைய, நன்கு திட்டமிடப்பட்ட அரச திருமணங்கள் உலகத்தின் பல பகுதிகளிலும் சாதாரணமாக நடைபெற்றதுண்டு. ஆனால், எல்லா நேரங்களிலும் அவை நன்மையை மட்டும் கொடுக்கவில்லை. சில காலங்களில் பகைமையையும் வளர்த்த வரலாறு உண்டு.

சேர-சோழ சம்பந்தம்

நம் தென்னகத்திலும் இப்படிப்பட்ட திருமணங்கள் ஏற்பட்டன. பிற்காலச் சோழ மன்னர்களும் திருமண அரசியலை நடத்தினார்கள். ஒன்பதாம் நூற்றாண்டில் ஆட்சிபுரிந்த முதலாம் ஆதித்திய சோழன் கர்நாடகப் பகுதியை ஆண்ட ராஷ்டிரகூட மன்னர் இரண்டாம் கிருஷ்ணனின் மகள் மற்றும் சேர மன்னர் ஒருவரின் மகளையும் மணந்தார் (அந்தச் சேர மன்னர் மிகவும் பிரபலம் இல்லாதவர் என்பதால் அவரது பெயர் வரலாற்றில் இல்லை). அவருக்குப் பின் அரசாளும் உரிமை கிட்டாததால் ஏமாற்றமடைந்த ஆதித்திய சோழனின் மகன் தன் பாட்டனாரான இரண்டாம் கிருஷ்ணனிடம் சென்றுவிட்டார். இவருக்குப் பதவி பறிபோனதன் தாக்கம் நீண்ட காலம் நீடித்தது.

விட்டகுறை தொட்டகுறையா?

சேரர் பரம்பரை வழி வந்த பராந்தக சோழன், ஆதித்ய சோழரின் வாரிசாக ஆனதுடன் மீண்டும் சேர இளவரசியை மணந்தார். இதற்குப் பின், இரண்டாம் கிருஷ்ணன் சோழ அரசின் மீது படையெடுத்தார். இந்த இரு அரசுகளுக்கு இடையிலான பகை சுமார் இரண்டு நூற்றாண்டுகள் நீடித்தன. இருவரும் மாறி மாறிப் படையெடுத்துத் தாக்கிக்கொண்டார்கள். இதனால், பயிர்கள் நாசமடைந்தன, பெண்களும் குழந்தைகளும் அதிக எண்ணிக்கையில் பலியானார்கள், நாட்டின் செல்வமும் புனிதத்தலங்களும் சூறையாடப்பட்டன. ராஷ்டிரகூடர்களுக்குப் பின் அரசாண்ட மேலை சாளுக்கியரும் சோழருடன் பகைமை பாராட்டினார்கள். இதன் விட்டகுறை தொட்டகுறைபோல இன்றும் கர்நாடகத்துக்கும் தமிழகத்துக்கும் இடையே காவிரிப் பிரச்சினை போலச் சில பிரச்சினைகள் அவ்வப்போது தலையெடுப்பதும், பதற்றம் நிலவுவதும் நிகழ்கிறது.

இதை அரசியல் திருமணத்தின் மோசமான விளைவாக எடுத்துக்கொள்ளலாம் எனில், இது போன்ற திருமணத்தின் காரணமாக நல்விளைவும் ஏற்படுவதுண்டு. சோழர் பரம்பரையில் ஏற்பட்ட மண உறவால் ஏற்பட்ட நல்விளைவையும் வரலாறு பதிவுசெய்திருக்கிறது.

சோழப் பேரரசும் வேங்கி வாரிசும்

சோழ மாமன்னர் முதலாம் ராஜராஜன் தன் மகள் குந்தவையை, வேங்கி மன்னன் விமலாதித்தனுக்கு மணமுடித்தார். இதனால், ராஜராஜன் தனது தேசத்தின் வடகிழக்கு எல்லையில் அமைதியை நிலைநிறுத்த முடிந்தது. பின்னர், முதலாம் இராஜேந்திரன் தன் மகளை, தன் தங்கை குந்தவையின் மகன் ராஜராஜனுக்கு மணமுடித்தார். இவர்களின் வாரிசும், தாய்வழிப் பாட்டனின் பெயரையும் கொண்டவரான ராஜேந்திரன், பிற்காலத்தில் முதலாம் குலோத்துங்கன் என்ற பட்டப் பெயருடன் சோழப் பேரரசை ஆண்டார். சோழப் பேரரசின் முடிவு வரையும் வேங்கி நாட்டு வாரிசான ராஜேந்திரனின் வம்சமே ஆட்சிபுரிந்தது.

இந்த அரசியல் ஆதாயங்களுக்கான திருமணங்கள், முகலாயப் பேரரசக் குடும்பங்களிலும் இடம்பெறத் தவறவில்லை. இதில், அக்பர் செய்த ஒரு திருமணம் மிகவும் கவனிக்கப்பட வேண்டியது. முகலாயப் பேரரசரான அவர், ராஜபுதன வம்சத்தின் ஒரு பெண்ணை மணமுடித்தார். தாம் ஒரு இஸ்லாமியராக இருந்தும் இந்து மதத்தைச் சேர்ந்த பெண்ணை மணமுடித்த அக்பரின் செயல் மதநல்லிணக்கத்தின் சான்றாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், ராஜபுதனப் பகுதியை ஆள்வதற்கான அக்பரின் அரசியல் ஆதாயமும் இதன் பின்புலத்தில் ஒளிந்திருக்கிறது என்றும் விமர்சனங்கள் உண்டு. இதுபோன்ற ராஜதந்திர வரலாற்றின் தொடர்ச்சியாகவே லாலு-முலாயம் குடும்பத் திருமணத்தைப் பார்க்க வேண்டும்.

- எஸ். சாந்தினிபீ,

வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம். தொடர்புக்கு: chandnibi@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

8 days ago

கருத்துப் பேழை

8 days ago

கருத்துப் பேழை

8 days ago

கருத்துப் பேழை

9 days ago

கருத்துப் பேழை

12 days ago

கருத்துப் பேழை

12 days ago

கருத்துப் பேழை

12 days ago

கருத்துப் பேழை

15 days ago

கருத்துப் பேழை

15 days ago

கருத்துப் பேழை

15 days ago

கருத்துப் பேழை

22 days ago

கருத்துப் பேழை

22 days ago

கருத்துப் பேழை

22 days ago

மேலும்