கறவை மாடுகள் திட்டத்தின் தோல்வி!

By அன்பு செல்வம்

அரசின் திட்டங்களுக்கும் நடைமுறைகளுக்கும் எப்போதும் பெரிய இடைவெளி இருக்கிறது.

தேர்தல் வாக்குறுதியாக இலவசத் திட்டங்களைக் கேட்கும்போதும், நிதிநிலை அறிக்கையில் நலத்திட்டங்களாக அறிவிக்கப்படும்போதும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. ஆனால், நடைமுறை என்று வரும்போதுதான் அவற்றின் உண்மையான முகங்கள் நம்மைச் சங்கடத்துக்குள்ளாக்கிவிடுகின்றன. தமிழக அரசின் கறவை மாடு வழங்கும் திட்டம் ஞாபகத்தில் இருக்கிறதா?

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தலித் மக்களில் 56%-க்கும் மேலானோர் கிராமப்புறங்களில் வாழக் கூடியவர்கள். இதில் 62% தலித்துகள் நிலம் மற்றும் விவசாயம் சார்ந்து வாழக்கூடியவர்கள். இவர்களில் 36%-க்கும் மேலானோர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்கிறார்கள். இது தேசிய சராசரியான 21.12%-ஐக் காட்டிலும் மிக அதிகம் என்கிறது திட்டக் குழு அறிக்கை. இப்படிப்பட்ட சூழலில்தான் மத்திய - மாநில அரசுகள் தலித் மற்றும் பழங்குடி மக்களின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, ‘விலையுள்ள - விலையில்லாத’ நலத்திட்டங்களை அறிவிக்கின்றன‌.

தணிக்கைத் துறை சொல்வதென்ன?

ஜூலை 2011 - ல் தமிழக அரசால் தொடங்கப்பட்ட ‘இலவசக் கறவை மாடுகள் வழங்கும் திட்டம்’ இதற்கு ஒரு நல்ல‌ உதாரணம். கிராமப்புற மற்றும் தலித், பழங்குடிப் பெண்களுக்காகத் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் தொடர்பான அறிவிப்பு, கிராம மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. ஆனால், திட்டம் செயல்படுத்தப்பட்டதற்குப் பிந்தைய அனுபவம், அவர்கள் முகத்தைக் கறுக்கவைத்திருப்பதைச் சொல்கிறது இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறையின் 2014-ம் ஆண்டறிக்கை.

கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறையின் கீழ் இயங்குகிற‌ இந்த ஒரு திட்டம் மட்டுமல்ல; இது போன்று விவசாயம், கூட்டுறவு, சிறு - குறு தொழில் என இன்னும் பல திட்டங்களையும் அது மதிப்பீடு செய்து, பல குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியுள்ள‌து.

மாநிலத்தின் பால் உற்பத்தியைப் பெருக்கவும், கிராமப்புறப் பெண்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கவும் ‘இலவசக் கறவை மாடுகள் வழங்கும் திட்டம்’ அறிவிக்க‌ப்பட்டது. ஆண்டொன்றுக்கு 12,000 வீதம் 2011 - லிருந்து 2016 வரை ஐந்தாண்டுக்குள் 60,000 ஜெர்ஸி மற்றும் ஹோல்ஸ்டீன் பிரிசியன் வகைக் கறவை மாடுகளை வழங்குவது இதன் நோக்கம். எந்தெந்த மாவட்டங்களில் பால் உற்பத்தி மற்றும் பால் கூட்டுறவுச் சங்கங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதோ, எந்தெந்த மாவட்டங்கள் வருவாய் கிராமங்களின் எண்ணிக்கையில் குறைவாக உள்ளதோ அந்த மாவட்டங்களில் உள்ள பயனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.

ஒரு பசு வாங்க 30,000 என அரசு அறிவித்த‌து. அதன் அடிப்படையில் 2011 - 12 முதல் 2012 - 13 வரை பசுக்களின் விலை, போக்குவரத்து, காப்பீடு மற்றும் இதர செலவு என 24,000 பசுமாடுகள் வாங்க இதுவரையிலும் ரூ. 84.28 கோடி செலவிடப்பட்டுள்ளது.

இதில் முக்கியமாக‌க் கவனிக்கப்பட வேண்டிய அம்சம், இதன் பயனாளிகள் யார் என்பதுதான். பெண் களைக் குடும்பத் தலைவராகக் கொண்ட வீடுகளில், 60 வயதுக்கு உட்பட்டவர்கள், தங்கள் பெயரிலோ - குடும்ப உறுப்பினர் பெயரிலோ ஒரு ஏக்கருக்கு மேல் நிலம் இல்லாதவர்கள், பசு மாடோ - எருமை மாடோ சொந்தமாக இல்லாதவர்கள், அதிலும் குறிப்பாக 30% எஸ்.சி/எஸ்.டி பிரிவினராக இருக்க வேண்டும் என்பது வரை பயனாளிகளைத் தேர்வு செய்வதற்கான வரையறை. இந்த வழிகாட்டும் நெறிமுறைகள் அரசின் பெரும்பாலான திட்டங்களுக்குப் பொருந்தும். ஆனால், நடைமுறையில் அது பின்பற்றப்படுகிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

திட்டத்தின் குறைபாடுகள்

கறவை மாடுகள் வழங்கும் திட்டம் சரியாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பதை இந்தியக் கணக்காயரின் தணிக்கைத் துறை 21 மாவட்டங்களின் 136 கிராமப் பஞ்சாயத்துக்களில் விரிவான ஓர் ஆய்வை மேற்கொண்டது. கடந்த ஆண்டு வெளியிட்ட‌ அந்த‌ அறிக்கையைப் பார்த்தால் மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. அதாவது, அருகில் உள்ள சந்தைகளில் பசுக்கள் வாங்காமல், ஜெர்சி பசு வாங்குவதற்கு ஏற்ற இடமாக இல்லாத‌ ஆந்திராவின் புங்கனூர், பலமனேர் மற்றும் பீலேறு சந்தைகளில் வாங்கியதால் தரம் குறைந்த - வயதான, பால் சுரப்பற்ற பசு மாடுகளை, திட்ட அறிவிப்புக்காக மிக அவசரமாக அரசு வாங்கியுள்ள‌து. அது மட்டுமல்ல; பயனாளிகளைத் தேர்வுசெய்வதில் வெளிப்படையான தன்மை எதுவும் பின்பற்றப்படாமல் தகுதியற்ற பயனாளிகளைத் தேர்வுசெய்துள்ளனர்.

ஒரு கிராமத்தில் குறைந்தது 50 பேராவது தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அது பின்பற்றப்படாமல் விண்ணப்பிக்கப்பட்ட நியாயமான பல விண்ணப் பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. ஒரு ஏக்கருக்கு அதிகமானவர்களுக்கும், ஏற்கெனவே கால்நடை வைத்திருப்பவர்களுக்கும்கூட மாடுகள் வழங்கப் பட்டுள்ளன.

136 கிராம எஸ்.சி/எஸ்.டி பஞ்சாயத்துக்களை ஆய்வு செய்து, சில கிராமங்களில் 1 - 10% சில கிராமங்களில் 11 - 20 % இன்னும் சில கிராமங்களில் 0% (அதாவது, எஸ்.சி/எஸ்.டி பெண்களே இல்லையாம்) என பயனாளிகள் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். இதில் வழிகாட்டும் நெறிமுறை சொல்கிற 30% தலித் - பழங்குடியினப் பெண்கள் ஒரு கிராமத்தில்கூடத் தேர்வு செய்யப்படவில்லை. அவர்களுக்குக் கறவை மாடுகளும் வழங்கப்படவில்லை. இது போக, எச்சசொச்சமாகக் கொடுக்கப்பட்ட பசுக்களுக்குத் தீவனம் எங்கிருந்து பெறுவது என்பதைப் பற்றியோ, கொள்ளை நோய்க் காலத்தில் பாதிக்கப்பட்டால் இழப்பீடு பெறக் காப்பீடு வழங்கப்படுவதுகுறித்தோ உத்தரவாதம் எதுவும் இல்லை.

எஸ்.சி/எஸ்.டி-க்களுக்கான திட்டங்களால் யாருக்குப் பயன்?

ஒவ்வொரு கிராம வளர்ச்சியையும் கணக்கிட்டுப் பார்த்தால், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கும் இட ஒதுக்கீடு அடிப்படையிலான விகிதாச்சார அரசியல் உரிமைகளுக்கு அப்பாற்பட்டு, ஒடுக்கப்பட்ட ஒரு சமூகக் குழுவின் நேரடிப் பொருளாதார மேம்பாட்டை வளர்க்கும் திட்டங்களாக இவை இருக் கின்றன. ஆனால், நடைமுறையில் பார்த்தால், இந்த 27 திட்டங்களிலும் நான்கு அல்லது ஐந்து திட்டங்கள் மட்டுமே ஒடுக்கப்பட்ட தலித் மற்றும் பழங்குடியினர் சார்ந்ததாக இருக்கின்ற‌ன.

அப்படி இருக்கும்போது, அறிவிக்கப்படும் குறைந்தபட்சத் திட்டங்கள்கூடப் பயனாளிகளுக்குப் பயன்படவில்லை என்றால், எதற்காக இந்தத் திட்டங்கள் அறிவிக்கப்பட வேண்டும்? தங்களுக்கு எவ்வளவு, மக்களுக்கு எவ்வளவு என்று கணக்குப் போடுவதற்கு மட்டும்தானா திட்டங்கள்? இயற்கை வளங்களையும், பொது மூலாதாரங்களையும் சுரண்டும்‌ தனியார் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் திட்டங்கள் மட்டும், அதீத மதிப்புடனும் தாராளமயத்துடனும் இங்கே மேற்கொள்ளப்படுகின்றன. மாறாக, ஏழை எளிய மக்களின் திட்டங்கள் என்றால், அதிகாரிகளும் அரசியல் கட்சிகளும் உதாசீனப்படுத்துவதே தொடர்ந்து நிகழ்கிறது.

சமூகப் பாகுபாட்டைச் சரிசெய்ய வேண்டியது மட்டும் ஓர் அரசின் கடமையல்ல. இது போன்ற திட்டங்களால் மக்களைப் பாகுபடுத்தாமல் இருப்பதும் அரசின் கடமையே.

- அன்புசெல்வம், கட்டுரையாளர், ஆய்வாளர், எழுத்தாளர்,
தொடர்புக்கு : anbuselvam6@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்