ஜி.டி.பி. என்பது, ஒரு நாட்டில், ஓர் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட இறுதிப் பொருட்களின், பணிகளின் ரூபாய் மதிப்பு
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (ஜி.டி.பி.) கணக்கிடும் முறையை மையப் புள்ளியியல் அலுவலகம் மாற்றியமைத்ததால் நம் நாட்டுப் பொருளாதார வளர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது. இந்தப் புதிய புள்ளிவிவரங்களை ஏற்றுக்கொள்வதா என்பதில் குழப்பங்கள் நீடிக்கும் வேளையில், இந்த வார இறுதியில் மத்திய அரசு தாக்கல்செய்யவுள்ள நிதிநிலை அறிக்கை, இதன் அடிப்படையில் இருக்குமா என்ற கேள்வியும் எழுகிறது.
ஜி.டி.பி. என்றால் என்ன?
ஜி.டி.பி. என்பது, ஒரு நாட்டில், ஓர் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட இறுதிப் பொருட்களின், பணிகளின் ரூபாய் மதிப்பு. இதில் உள்ளீட்டுப் பொருட்கள், இடைநிலைப் பொருட்களின் மதிப்பு சேர்க்கப்படுவதில்லை. ஏனெனில், அந்த மதிப்புகளெல்லாம் இறுதிப் பொருளின் மதிப்பில் உள்ளடக்கம்தான். உற்பத்தியை ரூபாய் மதிப்பில் பெற நாம் சந்தை விலையைப் பயன்படுத்த வேண்டும். இதில் நிலையான விலை, தற்போதைய விலை என்ற இரண்டு முறைகள் உள்ளன. ஒரு பொருளின் விலை பணவீக்கத்தால் அதிகரிக்கும் என்பதால், ஓர் அடிப்படை ஆண்டைத் தேர்ந்தெடுத்து, அந்த ஆண்டில் நிலவிய விலையில் ஜி.டி.பி. மதிப்பிடப்பட்டால் அது ‘நிலையான விலை’ எனப்படும். அதற்குப் பதில் தற்போதைய விலையில் ஜி.டி.பி. மதிப்பிடப்பட்டால் அது ‘தற்கால விலை’ என்றும் கூறப்படும். ஒரு நாட்டின் உண்மை வளர்ச்சியை அறிய நிலையான விலையில்தான் ஜி.டி.பி. மதிப்பிடப்பட வேண்டும்.
ஜி.டி.பி. என்பது ஒரு மதிப்பீடுதான்
ஒரு நாட்டில் உற்பத்தியாகும் லட்சக் கணக்கான பொருட்கள் அனைத்தையும் எடுத்து ஜி.டி.பி-யை மதிப்பிடுவது சாத்தியமில்லை. எனவே, ஒவ்வொரு துறைபற்றியும் மாதிரிக் கணக்கெடுப்பொன்று செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் நாட்டின் ஜி.டி.பி. மதிப்பிடப்படும். நம் பொருளாதாரத்தின் தன்மை, கட்டமைப்பு எல்லாம் அவ்வப்போது மாறிவருகின்றன. எனவே, ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை மாதிரிக் கணக்கெடுப்பொன்று நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் ஜி.டி.பி. மதிப்பிடும் முறையும் மாற்றப்படுகிறது. இவ்வாறான மாதிரிக் கணக்கெடுப்பு 2011-12-ல் நடத்தப்பட்டதால், அந்த ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்டு, ஜி.டி.பி. மதிப்பிடும் முறை இப்போது மாற்றப்பட்டுள்ளது. இதனை 2011-12 தொடர் என்பார்கள்.
2011-12 புதிய மதிப்பீட்டுத் தொடர்
இந்த 2011-12 புதிய தொடரில் இரண்டு முக்கிய மாற்றங்கள் உள்ளன. ஒன்று, இதுவரை ஜி.டி.பி-யை உற்பத்திச் செலவில்தான் மதிப்பீடு செய்துவந்தோம். ஆனால் இப்போது, ஜி.டி.பி-யை சந்தை விலையில் மதிப்பீடு செய்கிறோம். எல்லா நாடுகளும் சந்தை விலையில் மதிப்பீடு செய்வதால், ஒப்பீடு செய்ய ஏதுவாக இந்த மாற்றம் செய்யப்பட்டது.
இரண்டாவது மாற்றம், பெருநிறுவனங்களின் உற்பத்தி பற்றியது. இதுவரை சில ஆயிரம் பெருநிறுவனங்களின் உற்பத்தி மட்டுமே மாதிரிக் கணக்கில் கொண்டு, எல்லாப் பெருநிறுவனங்களின் உற்பத்தி மதிப்பீடுகளும் செய்யப்பட்டுள்ளன. ஆனால், இப்போது மாதிரிப் பெருநிறுவனங்களின் எண்ணிக்கை சில லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, பெருநிறுவனங்களின் உற்பத்தி மதிப்பை இன்னும் சரியாகக் கணக்கிட இது உதவுகிறது. இவை மட்டுமல்லாமல் வேறு சில சிறிய மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. முறைசாரா நிறுவனங்களின் உற்பத்தி மதிப்பு இன்னும் சிறப்பாகக் கணக்கிடப்படுகிறது. அதே போல் உள்ளாட்சி அமைப்புகள், தன்னாட்சி நிறுவனங்களின் பங்களிப்பும் விரிவாகச் சேர்க்கப்பட்டுள்ளன.
பழைய / புதிய தொடர்கள் ஒப்பீடு
2011-12 தொடருடன் இதற்கு முன்னால் இருந்த 2004-05 தொடரை ஒப்பிட்டுப் பார்த்தால்தான் நாட்டின் உற்பத்தி மதிப்பீட்டில் செய்துள்ள மாற்றங்களின் பாதிப்பு தெரியும்.
அட்டவணை 1: நாட்டின் உற்பத்தி மதிப்பீட்டின் ஒப்பீடு (ரூ. லட்சம் கோடி)
2004-05 தொடருடன் ஒப்பிடும்போது, பொதுவாக எல்லா விதமான உற்பத்தி மதிப்புகளும் 2011-12 தொடரில் குறைவாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. ஆனால், அட்டவணை 2-ல் குறிப்பிடப்பட்டுள்ளதுபோல 2011-12 தொடரில் வளர்ச்சி விகிதங்கள் அதிகமாக உள்ளன.
அட்டவணை 2 : வளர்ச்சி விகிதங்கள்
இந்த அதிக வளர்ச்சி விகிதங்கள்தான் இப்போதைய சர்ச்சையின் மையப்பொருள். இரண்டு தொடர்களையும் ஒப்பிடும்போது, 2011-12 ஆண்டின் உற்பத்தி மதிப்பைப் புதிய தொடரில் மிகக் குறைவாக மதிப்பீடு செய்து (-2%) மற்ற ஆண்டுகளில் இந்த வேறுபாட்டை குறைத்ததால் வளர்ச்சி விகிதங்கள் அதிகமாக உள்ளன. இது ஒரு புறம் இருக்க, 2011-12-ல் உற்பத்தி மதிப்பைக் குறைத்தும், மற்ற ஆண்டுகளில் அதிக வளர்ச்சியைக் காட்ட என்ன காரணங்கள்?
புதிய ஜி.டி.பி. தொடரில் உள்ள சிக்கல்கள்
“புதிய ஜி.டி.பி. எண்கள் என்னைக் குழப்புகின்றன” என்று நிதி அமைச்சகத்தின் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். இந்தப் புள்ளிவிவரங்களை மிகக் கவனமாக ஆராய வேண்டும். அதன் பிறகே பொருளாதாரக் கொள்கை முடிவுகளுக்குப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். உதாரணமாக, 2013-14-ல் பொருளாதார வளர்ச்சி அதற்கு முந்தைய ஆண்டைவிட 1.9% அதிக வளர்ச்சியைக் கண்டிருப்பது, அதே காலத்தில் இந்தியப் பொருளாதாரத்தின் மற்ற கூறுகளுடன் ஒத்துப்போகவில்லை என்று அவர் கூறினார். இந்தக் காலத்தில் நாட்டிலிருந்து முதலீடு வெளியேறியுள்ளது, வட்டி விகிதம் குறையவில்லை, அரசு நிதிப் பற்றாக்குறை குறைக்கப்பட்டது, இந்தச் சூழலில் அதிக வளர்ச்சி எவ்வாறு சாத்தியம்? பொருளாதார வளர்ச்சியுடன் இறக்குமதியும் வளர வேண்டும். ஆனால், 2013-14-ல் வளர்ச்சி அதிகரித்தாலும் இறக்குமதி 10% வரை குறைந்தது. மேலும், விலைவாசி அதிகமாக இருந்த இந்த ஆண்டில் பணவீக்கம் குறைவாக இருந்ததாக இந்தப் புள்ளிவிவரம் காட்டுகிறது என்று பல சந்தேகங்களை அரவிந்த் முன்வைக்கிறார்.
இதே போல் ஆர்.பி.ஐ-யின் கவர்னர் ரகுராம் ராஜன் “இந்தப் புள்ளிவிவரங்கள் எனக்குப் புரியவில்லை” என்று கூறுகிறார். ராஜன் அண்மையில் எழுதிய கட்டுரையில், இந்தியா இன்னும் பொருளாதார மந்தநிலையை விட்டு வெளியே வரவில்லை என்ற கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்கிறார்.
வேறு பல பொருளாதார விமர்சகர்கள் சில நுணுக்கமான விவரங்களைக் கூறுகிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக மத்திய-மாநில அரசுகள் நிதிப் பற்றாக்குறையைக் குறைக்க முயற்சிக்கின்றன. அதே நேரத்தில், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ஆர்.பி.ஐ. வட்டி விகிதத்தை அதிக அளவில் வைத்திருந்தது. இந்தச் சூழலில், தனியார் மற்றும் அரசு நுகர்வு செலவுகள் வேகமாக அதிகரித்துள்ளதாக இந்தப் புள்ளிவிவரங்கள் காட்டுவதை நம்ப முடியவில்லை. கடந்த இரண்டு வருடங்களில் பெருநிறுவனங்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளதாகக் கூறும் இந்த ஜி.டி.பி. மதிப்பீடு, இதே காலத்தில் பெருநிறுவனங்களின் ஆண்டு அறிக்கைகளில் தங்கள் வியாபாரம் பெருகியுள்ளதாகக் காட்டவில்லை, பெருநிறுவனங்களின் வரி வருவாயும் உயரவில்லை. எனவே, பெருநிறுவனங்கள் தொடர்பான இந்த மதிப்பீடும் சந்தேகத்தை உருவாக்குகிறது.
இதற்கிடையில் இந்த வருடம் 2014-15-ல் ஜி.டி.பி. 7.5% ஆகவும் 2015-16-ல் 8% ஆகவும் வளர்ச்சி அடையும் என்று மத்திய அரசு கூறுகிறது. இவ்வாறு வளர்ச்சியை உயர்த்திக் காட்டுவதால் எதிர்மறையான இரண்டு பிரச்சினைகள் வரும். ஒன்று, வளர்ச்சி அதிகமானால் ஆர்.பி.ஐ. வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைக்க முடியாது. இதுவரை இந்த அரசின் கோரிக்கைக்கு ஆர்.பி.ஐ. செவிசாய்க்கவில்லை. இரண்டாவது, உற்பத்தி மதிப்பை அதிமாகக் காட்டினால், அந்த அளவுக்கு அரசு அதிகக் கடன் வாங்கலாம். இது அரசுக்கு எதிர்கால வட்டிச் சுமையை அதிகமாக்கும். இப்படிப் பல வழிகளில் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது இந்த புதிய ஜி.டி.பி. மதிப்பீட்டு முறை. தொடர் விவாதங்கள்தான் இதற்கு விடை அளிக்கும்.
- இராம. சீனுவாசன், இணை பேராசிரியர், சென்னைப் பல்கலைக்கழகம், தொடர்புக்கு: seenu242@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
3 hours ago
கருத்துப் பேழை
3 hours ago
கருத்துப் பேழை
3 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago